டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: CBIயைக் காப்பாற்றும் உயர்நீதிமன்றம்!

கீழமை நீதிமன்றம் நீண்ட நாட்கள் விசாரித்து வழங்கிய தீர்ப்பை ஒரே நாளில் கேள்விக்குள்ளாக்கியதன் மூலம் கீழமை நீதிமன்றங்களிலும் ஒன்றிய அரசின் அதிகார அத்துமீறலுக்கு எதிரான தீர்ப்புகள் வரக்கூடாது என்பதாக சமிக்ஜை கொடுக்கின்றன.

1

டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,  முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் பலர் மீது மதுபானக் கொள்கை வழக்கில் விடுதலை செய்ய உத்தரவிட்டிருந்தது என்பதை அறிவோம்.

ஊழல் எதிர்ப்பு மேடையாகத் தொடங்கிய ஆம் ஆத்மிக்கு இந்த விடுதலை மிகப்பெரிய நிம்மதியாக அமைந்தது. 150 நாட்களுக்கு மேலாக சிறைவாசத்துக்குப் பிற்கு விடுதலையான அரவிந்த் கெஜ்ரிவால் கண்ணீர் மல்க ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். இன்னொரு புறம், இந்த வழக்கு அதிகார வர்க்கத்தைக் கையில் வைத்துக் கொண்டு  எதிர்கட்சிகளை எப்படி ஒடுக்குகிறது என்பதற்கு மற்றொரு சான்றாக அமைந்தது.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள்   டெல்லி முதன்மைச் செயலாளர், லெப்டினன்ட் கவர்னர், CBI-யை மேற்பார்வை செய்யும் உள்துறை அமைச்சகம், மேலும் EDயை இயக்கும் நிதி அமைச்சகம் ஆகிய மத்திய அரசின் நிர்வாக அமைப்புகளுக்குக் கண்டனங்களைக் தெரிவித்தனர்.

முழு விசாரணையும் “முன்கூட்டியே திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சி” என்றும், வழக்கின் அடிப்படை “ஏற்றுக்கொள்ள முடியாத வதந்திகளின் மீது மட்டுமே அமைந்தது” என்றும் நீதிமன்றம் பதிவு செய்துள்ளது. ஒரு விசாரணை அமைப்பைப் பற்றி நீதிமன்றம் கூறக்கூடிய கடுமையான விமர்சனம் இதைவிட இருக்க முடியாது.

மேலும், விசாரணையை நடத்திய அதிகாரிகளுக்கு எதிராக துறைவாரியான விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பது, பாஜகவின் ஏஜென்ட்களாக செயல்படும் அதிகார வர்க்கத்துக்கு விழுந்த அடியாக இருந்தது.

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: CBIயைக் காப்பாற்றும் உயர்நீதிமன்றம்!

அந்த உத்தரவின் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் CBI தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு அடிப்படையிலேயே தவறானதாக தெரிகிறது என்று கருத்து கூறியதோடு, சிறப்பு நீதிமன்றம் CBI அதிகாரிகள் தொடர்பாக தெரிவித்த கருத்துகள், உத்தரவுகளையும் நிறுத்தி வைத்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உயர்நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றமும் PMLA வழக்குகளிலும், UAPA வழக்குகளிலும் எவ்வளவு அநீதியாக நடந்துகொள்கின்றன என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. தற்போது கீழமை நீதிமன்றம் நீண்ட நாட்கள் விசாரித்து வழங்கிய தீர்ப்பை ஒரே நாளில் கேள்விக்குள்ளாக்கியதன் மூலம் கீழமை நீதிமன்றங்களிலும் ஒன்றிய அரசின் அதிகார அத்துமீறலுக்கு எதிரான தீர்ப்புகள் வரக்கூடாது என்பதாக சமிக்ஜை கொடுக்கின்றன. கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு  CBI யின் தவறான விசாரணை அணுகுமுறையை பல விவரங்களுடன் அம்பலப்படுத்தியது. அதனை கீழே கொடுக்கிறோம்.

“South Group” என்ற வார்த்தைக்கு எச்சரித்த நீதிபதி:

சிறப்பு நீதிபதி ஜிதேந்திர சிங், உத்தரவு வாசிப்பதற்கு முன்பே, “South Group” என்ற சொல்லின் பயன்பாட்டைப் பற்றி கவலை தெரிவித்தார். “இத்தகைய சொல்லாடல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இதே குற்றப்பத்திரிகை சென்னை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தால், அது இவ்வாறு ஏற்கப்பட்டிருக்குமா?” என்று அவர் கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

CBI-யின் வழக்கின்படி, டெல்லி அரசின் ED அதிகாரிகள், கேஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் சிசோடியா மற்றும் பிறருடன் கூட்டு முயற்சியில், லாப விகிதங்களை மாற்றி, தகுதி விதிமுறைகளை தளர்த்தி, தொடர்புடைய நிறுவனக் கட்டுப்பாடுகளை குறைத்து, “South Group” என அழைக்கப்பட்ட மதுபான வியாபாரிகளின் ஒரு குழுவுக்கு சாதகமாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

“சட்டபூர்வமான ஆதாரம் எதுவும் இல்லாத போதிலும், இந்த பெயரை தொடர்ந்து பயன்படுத்துவது சரியான அணுகுமுறையின் பார்வையை பாதிக்கும். அது எதிர்பாராத பாகுபாட்டை ஏற்படுத்தி, தீர்ப்பளிப்பை வழிநடத்த வேண்டிய ஆதாரங்களிலிருந்து கவனத்தைத் திருப்புகிறது.” என்று நீதிபதிகள் “South Group” என்ற வார்த்தைக்கு கண்டனத்தையும் பதிவு செய்து சிபிஐ தரப்பிற்கு அறிவுறித்தியுள்ளார்.

படிக்க: அரவிந்த் கெஜ்ரிவால் கைது: எதிர்கட்சிகளை அழிக்கும் பாசிஸ்டுகளின் நடவடிக்கை!

மேலும், குற்றஞ்சாட்டப்பட்ட “South Group”, Indospirits என்ற தனியார் நிறுவனம் தலைமையில் செயல்பட்டதாகவும், அந்த நிறுவனம் ₹29.29 கோடி லாபம் ஈட்டியதாகவும், அந்த தொகை பின்னர் கிக்பேக்காக (மறைமுக லஞ்சமாக) பரிமாறப்பட்ட நிதியின் ஒரு பகுதியாக இருந்ததாகவும் அரசு தரப்பு தெரிவித்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த வித ஆதாரமும் நீதிமன்றத்தில் நிரூபிக்கபடவில்லை என்பது தான் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது. இது சிபிஐ யின் ஜோடித்த வழக்கு என்பது தான் பட்டவர்த்தனமாக தெரிகிறது.

எதிர்கட்சிகளை ஒழிக்கத் துணைபோகும் நீதித்துறை!

பாஜக ஆட்சியைப் பிடித்த உடன் தனது எதிர்க்கட்சி அல்லது எதிர் கூட்டணியினரின் மீது வழக்கு விசாரணை கைது நடவடிக்கைகளை முன்னெடுக்கவே செய்கின்றன.  டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா மற்றும் ஆம்ஆத்மி கட்சியில் பலர் இப்படித்தான் கைது செய்யப்பட்டார்கள். அந்த வரிசையில் தமிழகத்திலும் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

திமுக அமைச்சர் கே.என்.நேரு மீது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணிநியமனத்தில் ஊழல் செய்ததாக ஊழல் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் ட்ரையலுக்கே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யாரெல்லாம் தனக்கு கீழ்படிய மறுக்கிறார்களோ, யாரெல்லாம் தன்னை விமர்சிக்கிறார்களோ, யாரெல்லாம் தன்னை எதிர்த்துப் போராடுகிறார்களோ, அவர்களை எல்லாம் முடமாக்க அனைத்து ஆயுதங்களையும் ஏவி வருகிறது மோடி தலைமையிலான காவி கும்பல். அதிலும் அமலாக்கத்துறையும் சிபிஐயும் பாஜகவின் அரசியல் ஆயுதங்களாகவே செயல்படுகிறது.

படிக்க: டெல்லி தோல்வி! அரவிந்த் கெஜ்ரிவால் தலையில் மண்ணைப் போட்டது யார்?

பாசிஸ்டுகள் எப்போதும் ஏறித்தாக்கி முன்னேறி செல்லவே முனைகிறார்கள். காவிக் கும்பல் நடத்திவரும் தாக்குதலுக்கு மீண்டு வந்தவர்கள் சொற்பமே. ஜனநாயகம் குறித்து போலி பசப்புரைப் பேசி பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள், பத்திரிகையாளர்கள் என மோடியின் பாசிச கொடுங்கோன்மை ஆட்சியை விமர்சித்த பல நூறு பேரை, வருடக் கணக்கில் சிறைக் கொட்டடியில் அடைத்து வைத்துள்ளது மோடி தலைமையிலான அரசு. அதே போல, பாசிச பாஜகவின் ’ஊழல் ஒழிப்பு’ நடவடிக்கைகளும் எதிர்கட்சிகளை ஒழிக்கும் சதியே.

பாசிஸ்டுகளால் செல்லரிக்கப்பட்ட அமலாக்கத்துறை, சிபிஐ, தேர்தல் ஆணையம் ஆகியவற்றை தூக்கியெறிந்து புதியதொரு அரசு கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில்  ஜனநாயக சக்திகளும், எதிர்கட்சிகளும் ஒன்றிணைவதே தீர்வாக இருக்கும்.

  • பரூக்

1 COMMENT

  1. டெல்லி மதுபான கொள்கை வழக்கு !
    CBI யைக் காப்பாற்றும் உயர்நீதிமன்றம் !

    ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 150 நான் சிறைவாசம் அனுபவித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பாஜக அதன் தொங்கு சதையான CBI .ED. உள்துறை அமைச்சகம் நிதி அமைச்சகம். மூலம் பொய்யான வழக்கை சித்தரித்து அரவிந்த் கெஜ்ரிவால். மனிஷ் சிசோடியா. போன்ற தலைவர்களை சிறையில் அடைத்து டெல்லியின் அதிகாரத்தை தனக்கு சாதகமாக அமைத்துக் கொண்டது பாசிச பாஜக.

    ஆட்சியைப் பிடித்தவுடன் எதிர்க்கட்சிகளை முடக்குவது ஊழல் வழக்கு பதிவு செய்வது. பாஜகவை விமர்சனம் செய்தால் அவர்களை UPA சட்டத்தில் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைப்பது இது போன்ற கேடுகெட்ட இழி செயலை பாஜக செய்து வருகிறது. என இந்த கட்டுரை மூலம் தெரிந்து கொண்டேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here