இந்தியா என்பது ஒரு சமூக ஒப்பந்தம்: அருந்ததி ராய் பேட்டி


நாட்டின் மனசாட்சியைத் தட்டி எழுப்பும் பேச்சு – எழுத்துகளுக்குப் பெயர் பெற்றவர்களில் ஒருவரான அருந்ததிராயினுடைய சமீபத்திய பேட்டி. ‘தி வயர்’ இதழுக்காக கரன் தாப்பருக்கு அருந்ததி ராய் அளித்த விரிவான இந்தப் பேட்டியை இதன் முக்கியத்துவம் கருதி, ஐந்து அத்தியாயங்களாக இந்த வாரம் முழுவதும் வெளியிடுகிறது ‘அருஞ்சொல்’.

இந்திய அரசியலில் தற்போது காணப்படும் குழப்பங்களுக்கும் அலங்கோலங்களுக்கும் வெறுப்புச் சூழலுக்கும் நடுவில் ஒரு கேள்வி மட்டும் அதிகம் எழுப்பப்படாமலேயே இருந்துவருகிறது. அப்படியே எழுப்பப்பட்டாலும் அரிதினும் அரிதாகவே நேர்மையான பதில் கிடைக்கிறது: ‘எந்த மாதிரியான நாடாக நாம் உருவாகிக்கொண்டிருக்கிறோம்?’ நாம் இன்று அலசப்போகும் முக்கியமான வாதப்பொருள் இதுதான். அருந்ததி ராய் அவர்களே, நீங்கள் 2009இல் எழுதிய ஒரு கட்டுரையில் எழுப்பியிருந்த ஒரு கேள்வியிலிருந்து ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். இக்கேள்வி இன்று மேலும் அதிகப் பொருத்தப்பாடுடையதாக மாறியிருக்கிறது. “ஜனநாயகத்துக்கு நாம் இழைத்திருப்பது என்ன? அதனை எதுவாக நாம் மாற்றியிருக்கிறோம்? ஜனநாயகத்தைப் பொள்ளலாக்கிவிட்டு, அதன் நோக்கங்களை அர்த்தமிழக்கச் செய்துவிடும்போது என்ன நிகழும்? அதன் நிறுவனங்கள் எல்லாவற்றையும் உருமாற்றி அபாயகரமானவொன்றாக மாற்றிவிடுகையில் என்ன நடக்கும்? இன்றைய மோடியின் இந்தியாவை வைத்து உங்களுடைய இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்க முடியுமா?

2009 என்பது 13 வருடங்களுக்கு முந்தைய காலம். மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இதைப் பற்றி நம்மில் சிலர் கவலைப்பட்டுக்கொண்டிருந்திருக்கிறோம். இப்போதைய நிலையைப் பற்றி என்ன சொல்வது? ஒரு பெரிய புரட்சியே நடந்திருக்கிறது. மோடியின் அபிமான தொழிலதிபர் அவருடைய இரண்டாவது அபிமான தொழிலதிபரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் ஆகியிருக்கிறார். அதானியின் சொத்து மதிப்பு $ 88 பில்லியன். அம்பானியின் சொத்து மதிப்பு $ 87 பில்லியன்.

அதானியின் 88 பில்லியன் டாலர்களில், 51 பில்லியன் இந்தியாவில் பெரும்பாலோர் வறுமையிலும், பசியிலும், வேலையிழப்பிலும் அவதியுற்றிருந்த கடந்த ஒரு வருடத்தில் ஈட்டப்பட்டது. எனவே, உங்களுடைய கேள்விக்கு சற்று விரிவாகவே பதில் அளிக்க வேண்டி இருக்கிறது. இன்று பல்வேறு கிளைகளாகக் கிளைத்துச் சென்றுகொண்டிருக்கும் இந்த இருப்புப் பாதைகளுக்கு மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தடம் அமைத்துக்கொடுக்கப்பட்டிருக்கிறது.

அந்தக் கட்டுரையை நான் எழுதிய காலகட்டத்தில், வெறும் 100 பேரிடம் ‘மொத்த தேசிய உற்பத்தி’யில் (GDP) 25% இருந்தது. மோடி வந்ததும் ராட்சத வர்த்தகத்துக்கு ஆக்ஸிலேட்டரை அழுத்திவிட்டார். அந்த காலத்தில் – 2009இல் – குஜராத் படுகொலைகளை, குஜராத் வீதிகளில் முஸ்லீம்கள் நரவேட்டையாடப்பட்டதைப் பார்த்த பிறகும், ரத்தன் டாட்டாவும் அம்பானியும் நரேந்திர மோடியை வருங்காலப் பிரதமராக வருவதற்கு ஆதரவு அளித்துக்கொண்டிருந்தார்கள்.

இந்தியாவின் ஒட்டுமொத்த செல்வத்தில் 57.3 லட்சம் கோடி ரூபாய்கள் 100 பேரிடம் மட்டும் குவிந்திருக்கிறது. அதே நேரத்தில் மக்கட்தொகையில் 50% சதவீதத்தினரின் பங்கு வெறும் 6% மட்டும்தான்

இப்போது என்ன நடந்திருக்கிறதென்றால் – 2021ஆம் வருட ஆக்ஸ்ஃபாம் அறிக்கைதான் வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுகிறதே – ஏற்றத்தாழ்வு சகித்துக்கொள்ள முடியாத அளவுக்குச் சென்றிருக்கிறது (இந்தியாவின் ஒட்டுமொத்த செல்வத்தில் 57.3 லட்சம் கோடி ரூபாய்கள் 100 பேரிடம் மட்டும் குவிந்திருக்கிறது. அதே நேரத்தில் மக்கட்தொகையில் 50% சதவீதத்தினரின் பங்கு வெறும் 6% மட்டும்தான்). உத்தர பிரதேசத்தில் விவசாயி ஒருவர் மிகச் சரியாக வர்ணித்தார்: “இந்த நாட்டை நான்கே பேர்தான் நடத்திவருகிறார்கள். இரண்டு பேர் அதை விற்கிறார்கள், இரண்டு பேர் அதை வாங்கிக்கொள்கிறார்கள். இந்த நான்கு பேருமே குஜராத்திகள்.”

துறைமுகங்கள், சுரங்கங்கள், பெட்ரோகெமிகல்ஸ், ஊடகங்கள், இணையம் எல்லாமே இவர்கள் வசம்தான் இருக்கிறது. இதைப் போன்ற ஏகபோகத் தனியுடமையை முதலாளித்துவ நாடுகளில்கூட காண முடியாது. சமீபத்தில் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில், ‘அமீர் ஹிந்துஸ்தான், கரீப் ஹிந்துஸ்தான்’ (‘பணக்கார இந்தியா, ஏழை இந்தியா’) பற்றிப் பேசியதைக் கேட்டோம். அஸாசுதீன் ஓவைஸி, ‘மொஹப்பத் கி ஹிந்துஸ்தான், நஃப்ரத் கி ஹிந்துஸ்தான்’ (அன்பார்ந்த இந்தியா, வெறுப்பு மண்டிய இந்தியா) பற்றிப் பேசினார். இத்தகைய பகையுணர்வு சமீபத்தில்தான் தலையெடுத்திருக்கிறது என்று நினைக்கக் கூடாது. நெடுங்காலமாகவே ஊறிவந்திருப்பவைதான். ஏனென்றால், விலைபோகாத சரக்காக இருந்த இந்து தேசியத்தை ஆதரித்து சுவீகரித்துக்கொண்டிருப்பதே கார்ப்பரேட் வர்க்கம்தான். அவர்களுக்கான வங்கி உத்தரவாதம் அது.

ஐமுகூ ஆட்சியில் இருந்தபோதும் ஜனநாயக நிறுவனங்கள் சீரழிக்கப்பட்டிருக்கின்றன, கார்ப்பரேட்களின் பெரும் முதலீடுகள் பல இடங்களில் உள்ளே புகுந்து அரித்திருக்கின்றன. ‘பணம் இருந்தால் எதையும் வாங்க முடியும் என்பதே மிகச்சிறந்த ஜனநாயக அமைப்பு’ அல்லது ‘வாங்கும் சக்தி கொண்டவர்களுக்கு மட்டுமே ஜனநாயகம் என்பது கட்டுப்படியாகும்’ என்ற நிலைமையை நோக்கி அப்போது சென்றுகொண்டிருந்தோம்.

money wallet

ஆனால், இப்போது இந்த ஜனநாயக அமைப்புகள் எல்லாவற்றிலும், ஊடகங்களிலும் நீதிமன்றங்களிலும் உளவுத் துறையிலும் மட்டுமல்ல, பெரிதும் கவலையளிக்கும்படியாக ராணுவத்திலும், கல்வி நிலையங்களிலும் கூட இந்த இந்து தேசியம் ஊடுருவியிருக்கிறது அல்லது அதன் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

நாடாளுமன்றத்தை ‘மங்க்கி பாத்’ நிகழ்ச்சிபோல ஆக்கியிருக்கிறார்கள் – மேற்கண்ட வாக்கியத்தை நான் இந்தியில் சொன்னதாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும்! அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது, வேளாண் சட்டங்கள், குடியுரிமை சட்டத் திருத்தம் என லட்சக்கணக்கான இந்தியக் குடிமக்களின் வாழ்வு சீரழிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உச்சநீதிமன்றம் இச்சட்டங்கள் அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டதா அல்லது மீறியதா என்று இன்னும் யோசித்துக்கொண்டிருக்கிறது.

நாட்டின் பிரதமர் தனது அலுவலகத்தின் மாண்பையே குலைக்கிறார். திடீரெனத் தோன்றி, நாணய மதிப்பிழப்பை அறிவித்து நாட்டின் பொருளாதாரத்தையே நாசமாக்குகிறார்; வெறும் நான்கு மணி நேரம் அவகாசமளித்து நாடு முழுவதும் ஊரடங்கை அறிவித்தது, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது (வேளாண் சட்டங்களைப் பிரகடனம் செய்ததற்கு இணையான அவமதிப்பு அதைத் திரும்பப் பெற்றதிலும் இருந்தது), இவையெல்லாமே ஜனநாயகம் என்ற தத்துவத்தையே கேலிசெய்யும் போக்கு அல்லாமல் வேறென்ன?

இறுதியாக, என்ன நடந்திருக்கிறது என்றால், பாஜகவும் அதன் தலைவரும் தேசம் என்பதும் அரசு என்பதும் என்னவென்று புரிந்துகொள்ளாமல் அவை இரண்டையும் தம்மோடு சேர்த்து குழப்பிக்கொள்ளத் தொடங்கியிருப்பதுதான்; பாஜக செல்வச்செழிப்போடு இருக்கிறதென்றால் இந்தியாவும் செல்வச்செழிப்போடு இருக்கிறது; பாஜகவை நீங்கள் விமர்சித்தால் நீங்கள் தேச விரோதி. மிகவும் அபாயகரமான போக்கு இது.

ஜனநாயகம் என்பதே அழிந்துவிட்டதாகச் சொல்கிறீர்களா, அல்லது வலுவிழந்துவிட்டதாகச் சொல்கிறீர்களா, அல்லது அரித்து சிதைவுற்றிருப்பதாகச் சொல்கிறீர்களா? இம்மூன்றில் எது?

ஜனநாயகம் மிக மோசமாக அரிக்கப்பட்டு, அதன் அமைப்புகள் எல்லாமே அதனதன் இடங்களில் வெற்றுக்கூடுகளாக நின்றுகொண்டிருக்கின்றன என்கிறேன். ‘ஜனநாயகத்தின் கண்காட்சிப் பலகணி’யாக நாம் மாறிவிடும் அபாயத்தில் இருக்கிறோம்.

நாம்தான் உலகத்திலேயே மாபெரும் ஜனநாயகம் என்ற இந்தியாவின் நம்பிக்கை கேள்விக்குரியது என்கிறீர்களா?

நிச்சயமாக.

இன்று உருமாற்றமடைந்திருக்கும் நமது நாட்டின் சில அம்சங்களைப் பற்றி கேட்க விரும்புகிறேன். டிசம்பர் மாதம் ஹரித்வாரில் இன சுத்திகரிப்பு செய்யப்பட வேண்டும் என்று ரத்தத்தை உறையவைக்கும் வெறிக்கூச்சல் எழுந்தது. முஸ்லீம்களை முற்றிலுமாக அழித்தொழிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்கள். இந்திய அரசிடமிருந்து எந்தவோர் எதிர்வினையும் எழவில்லை. காதைச் செவிடாக்கும் மௌனம். நாட்டின் பிரதம மந்திரியோ, ஒரேயொரு அமைச்சரோ, பாஜகவைச் சேர்ந்த ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரோகூட இதைக் கண்டித்து ஒரு வார்த்தை சொல்லவில்லை. மதச்சார்பின்மை என்ற நமது அரசமைப்புக் கடப்பாட்டிலிருந்து நாம் விலகி, ஒரு பெரும்பான்மை இந்து நாடாக மாறிக்கொண்டிருக்கிறோம் என்பதற்கான அறிகுறியாக இதைப் பார்க்கிறீர்களா?

படிக்க:

♦ இன அழிப்புக்கு வெளிப்படையாகவே ஓர் அழைப்பு
இந்தியா இன அழிப்புக்கு தயாராகிறதா?

இந்த ‘தர்ம ஸன்ஸத்’துகள் ஏராளமாக இருக்கிறார்கள். வெளிப்படையாக இனப்படுகொலைக்குத் தூண்டிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்துக்கள் ஆயுதமேந்த வேண்டும் என்கிறார்கள். கிறித்துவர்கள் மீதும், தேவாலயங்கள் மீதும் நூற்றுக்கணக்கான தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. ஏசுநாதரின் சிலைகள் எரிக்கப்பட்டிருக்கின்றன. வெறுப்புப் பிரச்சாரகர்களில் முக்கியமானவரும், தாக்குதல்களை முன் நின்று நடத்தியவருமான யதி நரசிங்கானந்தை நீதிமன்றம் பிணையில் விடுவிக்கிறது.

யதி நரசிங்கானந்

ஆகவே, அரசாங்கம் மட்டுமல்ல, நீதிமன்றங்களும், அரசு இயந்திரமும் இதற்குத் துணை நிற்கின்றன. பேராசிரியர்களுக்கும், களப்பணியாளர்களுக்கும், கவிஞர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் ஜெயில்; இனப் படுகொலைக்கு அறைகூவல் விடுப்பவருக்கு பெயில்.

வேறு சில நிகழ்வுகளையும் பார்க்கிறோம்- கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சையைப் போல. இங்கும் நீதிமன்றம் இந்து பெரும்பான்மைவாதத்துக்கு ஆதரவாக நிற்கிறது. ஒருவேளை இது தற்காலிக நிலைப்பாடாகவே இருக்கக்கூடும். இந்து பெரும்பான்மைவாதம் என்ற பதம் சிக்கலானது. அதற்கு பின்னால் வருவோம்.

ஆனால், முஸ்லீம் பெண்கள் வகுப்பறைகளுக்கு ஹிஜாப் அணிந்து வருவது சரியல்ல என்றால், பிரதமரும், உத்தர பிரதேச முதல்வரும் காவியுடை அணிந்துகொண்டு காட்சி தருவது நியாயமா?

நமது நாட்டின் சட்டத் துறைக் கோட்பாடுகளும், சட்டங்களும் மிகவும் நுட்பங்களும் சிக்கல் சிடுக்குகளும் நிறைந்தவை. ஆனால், இச்சட்டங்கள் எவ்வாறு நிறைவேற்றப்படும் என்பது உங்களுடைய சாதி, உங்களுடைய மதம், உங்களுடைய பாலினம், உங்களுடைய இனம் ஆகியவற்றைப் பொறுத்தது. இது விஸ்தாரமாக கிளை விரித்துப் பரந்திருக்கும் மாபெரும் மரம் ஒரு மணற்பரப்பின் மீது நிற்க வைக்கப்பட்டிருப்பதற்கு ஒப்பானது.

பெரும்பான்மைவாத நாடாக மாறிக்கொண்டிருக்கிறோமா என்றால், அதுதான் ஆர்எஸ்எஸ்ஸின் இலக்கு என்று வெளிப்படையாகவே அறிவிக்கப்பட்டிருக்கிறதே! இந்தியா ஓர் இந்து நாடுதான் என்பது விவாதத்துக்கு அப்பாற்பட்டது என்றார் மோகன் பகாவத். நரேந்திர மோடி ஆர்எஸ்எஸ்ஸின் உறுப்பினர். அந்தத் திசையை நோக்கித்தான் நம்மை செலுத்திக்கொண்டு செல்கிறார்.

எனவே நாம் மதச்சார்பற்ற தன்மையிலிருந்து விலகிவிட்டோம், என்கிறீர்களா?

இல்லை. 19ஆம் நூற்றாண்டிலிருந்தே இந்த இந்துப் பெரும்பான்மைவாதம் கிளர்ந்துகொண்டிருக்கிறது. அரசியல்ரீதியாக இந்த இந்து பெரும்பான்மைவாதத்தை வளர்த்தெடுக்கும் முயற்சிகள் ஆரம்பித்துவிட்டன. முதலில் ‘ஜாட்-பாத் தோடக் மண்டல்’ (சாதிய வேறுபாடுகளைக் களையும் கழகம்) உண்டானது, பிறகு ஆர்எஸ்எஸ் வந்தது.

இந்துக்கள் பல்வேறு வகைப்பட்ட சமூகமாக இருப்பவர்கள். இச்சமூகத்தில் அடங்கியுள்ள ஜாதிகள் பெரும்பாலும் ஒன்றோடொன்று விரோதம் பாராட்டி சச்சரவிட்டுக்கொண்டிருப்பவை. இப்படிப்பட்ட சமூகத்தில் பெரும்பான்மைத்துவத்தை உருவாக்க முயல்வது வன்முறைகளில்தான் முடியும், தோல்வியடையும். தோல்வியடையத்தான் வேண்டும்.

நீங்கள் என் கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. நாம் ஒரு இந்து பெரும்பான்மைவாத நாடாக மாறிக்கொண்டிருக்கிறோமா?

ஆம்.

நம்மிடம் மதச்சார்பின்மை அழிந்துவிட்டிருக்கிறதா?

இந்த அரசு அந்த திசையை நோக்கித்தான் நம்மை நடத்திச் சென்றுகொண்டிருக்கிறது. அந்த இலக்கை அடைவதுதான் அதன் நோக்கம்.

இந்த அரசு இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக இருப்பதை விரும்பவில்லை; இந்து நாடாக மாற்றத்தான் விரும்புகிறது, என்கிறீர்களா?

வேறென்ன, இதுவொன்றும் ரகசியம் அல்ல. அவர்களே சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

உங்களுடைய ஜொனாதன் ஷெல் நினைவு உரையில் இவ்வாறு குறிப்பிடுகிறீர்கள்: “நாம் மதச்சார்பின்மையைக் கடைப்பிடித்துவருவதாக பாவனை செய்துவருவதுதான் – அது எவ்வளவுதான் பாசாங்காக இருந்தாலும் – இந்தியாவை ஒருங்கிணைத்திருக்கும் ஒரே பிணைப்பாக இருக்கிறது. எங்களிடம் உள்ள மிகச்சிறந்த பண்பு இந்தப் பாசாங்குதான். இது இல்லாவிட்டால் இந்தியா முடிந்துவிடும்.” நீங்கள் “இந்தியா முடிந்துவிடும்” என்று சொல்வதன் பொருள் என்ன?

யூகோஸ்லாவியா முடிந்ததைப் போல; சோவியத் யூனியன் எப்படி முடிவுக்கு வந்ததோ அதைப்போல.

அதாவது, உடைந்துவிடும் என்கிறீர்களா?

ஆம், இந்தியா என்பதே பல்வேறு மதங்கள், ஜாதிகள், இனக் குழுக்களுக்கு இடையிலான ஒரு சமூக ஒப்பந்தம்தான். இந்த நிலப்பரப்பில் 780 மொழிகள் பேசும் மக்கள் இருக்கிறார்கள். இது ஒரு சமூக ஒப்பந்தம். அவ்வாறிருக்க, இந்து தேசமாக மாற்றுவோம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே தேசம் என்று சமுத்திரத்தை ஒரு ‘பிஸ்லெரி’ பாட்டிலில் அடைக்க முயன்றுகொண்டிருக்கிறார்கள். பெரும் குலைவுகளுக்குக் கொண்டு செல்லும் முயற்சி இது.

நரேந்திர மோடியும் அவருடைய ஆட்களும் இப்போது செய்துகொண்டிருப்பது நாடெங்கிலும் டைனமைட்களைப் புதைத்து வைத்துவிட்டு அவற்றின் திரிகளைப் பிடித்துக்கொண்டிருப்பதுதான். இந்த அழுத்தம் மேலும் அதிகரித்தால் எல்லாமே வெடித்துச் சிதறிவிடும். இந்த தேசத்தின் அழகான அம்சங்கள் எல்லாவற்றின்மீதும் அமிலத்தைக் கொட்டி பொசுக்கிவிடுவற்கான முயற்சி இவர்களுடையது.

தெளிவுபடுத்திக்கொள்வதற்காகக் கேட்கிறேன். பல்வேறுபட்ட மக்கள், கலாச்சாரங்கள், மதங்கள், இனங்கள் கொண்ட ஒரு பெருங்கடலை பிஸ்லெரி பாட்டிலுக்குள் அடைக்க முயல்வதால் இந்த நாடு உடைந்துவிடும் என்கிறீர்கள், அப்படித்தானே?

ஆம், காலப்போக்கில் அதுதான் நடக்கும்.

இந்தியாவில் உண்மையிலேயே ‘பால்கனைசேஷன்’ (பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாடு இனவாரியாக தனித்தனி சுதந்திர நாடுகளாகப் பிரிந்துவிடுவது) நடந்துவிடும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

பால்கன் பிரிவினைகளைப் பற்றிப் படித்துக்கொண்டிருந்தேன். அந்த நாடுகள் சிதறுவதற்கு முன் நடந்த வன்முறைகளின் சாயல்கள் இங்கே தென்படுவதைப் பார்க்கும்போது உடல் நடுங்குகிறது. ஏராளமான வேறுபட்ட தன்மைகளை உள்ளடக்கியிருக்கும் விஸ்தாரமான ஒன்றை அழுத்திச் சுருக்கி, கெட்டியாக்கி தண்ணீருக்குள் அழுத்துகிறீர்கள். அது நிச்சயம் வெடித்துச் சிதறிவிடும்.

எவ்வளவு சீக்கிரத்தில் அது நடக்கும் என்று உங்களுக்குத் தோன்றுகிறது? காலவரம்பு எதேனும் உள்ளதா?

தெரியவில்லை. யோகி ஆதித்யநாத் பேசியதைக் கேட்டீர்கள்தானே? “உத்தர பிரதேசம் கேரளாவாக, வங்காளமாக, கஷ்மீராக மாறிவிடும்” என்கிறார். அதாவது ‘உங்களை மருத்துவ வசதிகள் இல்லாத, செல்வச் செழிப்பு இல்லாத, வேலைவாய்ப்புகள் இல்லாத இந்தக் குப்பைமேட்டிலேயே இருக்கவைத்திருப்போம். சில ரொட்டித் துண்டுகளை வீசியெறிவோம். ஆனால் கேரளாவைப் போல ஆகிவிடாதீர்கள்!” ஏனென்றால், அங்கே மருத்துவமனைகள் இருக்கின்றன, கல்வி நிலையங்கள் இருக்கின்றன, அங்கு படிப்பறிவு இருக்கிறது. இவையெல்லாம் மிகவும் அபாயகரமான விஷயங்கள்.

(உரையாடல் தொடர்கிறது…)

நன்றி
அருஞ்சொல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here