
இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 65 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் 35 வயதுக்குள் குறைவான மாணவர்கள் இளைஞர்கள் என்பதால் இந்திய சமூக அமைப்பு இவர்களின் அரசியல் முன் முயற்சி மற்றும் போராட்ட குணம் ஆகியவற்றை நம்பியே உள்ளது.
கடந்த 12 ஆண்டுகளாக ஆட்ட முடியாது; அசைக்க முடியாது என்று இறுமாப்புடன் திரிந்துக் கொண்டிருந்த பாசிச மோடி ஆட்சியையும், ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலையும் இந்த மாணவர்கள் இளைஞர்களின் போராட்ட உணர்வும், எழுச்சியும் படிப்படியாக பணிய வைத்து வருகிறது.
நீட் தேர்வு மோசடியில் முன்னிலை பங்கு வகித்த அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று முன்வைத்த கோரிக்கையும், அதை ஒட்டி இந்திய ஒன்றியத்தின் தலைநகரில் திரண்ட லட்சக்கணக்கான மாணவர்கள் இளைஞர்கள் நடத்திய போராட்டமும் ஜனநாயக விழுமியங்களுக்கும், நாட்டு குடிமக்களின் போராட்டங்களுக்கும் அடிபணியாத பாசிச இறுமாப்புடன் திரிந்துக் கொண்டிருந்த பாசிச மோடி அரசை பணிய வைத்தது. இறுதியில் தர்மேந்திர பிரதான் பதவி விலகி வீட்டுக்குச் சென்றார்.
“அகங்காரம் கொண்டவர்கள் மோதலை விட ஏளனத்திற்கே அதிகம் அஞ்சுவார்கள்; ஏனெனில், வன்முறையின்றி சிறுமைப்படுத்தப்படுவதை விட வேறு எதுவும் அகந்தையை அதிகம் அசைக்காது” என்ற பழமொழியை உறுதிப்படுத்தும் வகையில் பாசிச மோடி கும்பலை அவர்களின் ஈரல் குலை நடுங்கும் அளவு சமூக வலை தளங்கள் மூலமாக கேள்வி எழுப்பியும், மீம்ஸ்கள், ரீல்ஸ்கள், சிறு வீடியோக்கள் மூலமாக சிறுமைப்படுத்தியும், அவர்களின் ஆணவத்தை தவிடு பொடியாக்கியுள்ளனர்.
தேர்தல் ஆணையாரான மோசடி மன்னன் ஞானேஷ் குமாரின் மூலமாக சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் நாட்டில் உள்ள 13 கோடி வாக்காளர்களின் வாக்குரிமையை பறித்துள்ளது பாசிச ஆர்எஸ்எஸ்-பாஜக. அரசியலமைப்புச் சட்டத்தின்படி அவர்களே முன்வைக்கின்ற, ஜனநாயக உரிமைகளையும், கடமைகளையும், அதாவது ‘வாக்குரிமையை’ குழி தோண்டி புதைத்துள்ளதை எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்தரிலும், மும்பை சிவாஜி பார்க்கிலும் மூன்றாம் நாளாக போராடி வருகிறார்கள் மாணவர்கள் இளைஞர்கள்.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களும், மாணவர் அமைப்புகளும் இந்த போராட்டங்களில் முன்னிலை வகிக்கின்றனர் என்பது மட்டுமின்றி பாசிச மோடி கும்பலின் அரசு பயங்கரவாத வெறியாட்டங்களுக்கு அடிபணியாமல் துணிவுடன் நேருக்கு நேர் நின்று போராடுகின்றனர். இத்தகைய போர்க்குணமும், போராட்ட உணர்வு தான் கார்ப்பரேட் காவி பாசிசக் கும்பலை நாட்டிலிருந்து விரட்டியடிக்கும் என்பதை நாம் உறுதிப்பட கூற முடியும்.
உலகில் பல்வேறு நாடுகளில் நடத்த புரட்சிகளை எழுச்சிகளுக்கு மாணவர் இளைஞர்களின் சக்தி தான் தூண்டுகோலாகவும், முக்கிய சக்தியாகவும் திகழ்ந்தது என்பதை சீனப் புரட்சியின் அனுபவத்திலிருந்து நாம் கண்டுள்ளோம்.
“உலகம் உங்களுடையது! அதுபோல எங்களுடையதும் தான், ஆனால் இறுதியாக ஆராய்ந்து பார்த்தால் உங்களுடையது தான். இளைஞர்களாகிய நீங்கள் உத்வேகமும், உயிராற்றலும் நிறைந்தவர்கள். வாழ்வின் ஆரம்பத்தில் இருக்கிறீர்கள். காலை 8 மணி அல்லது 9 மணியளவில் காணும் சூரியன் போல் இருக்கிறீர்கள். நம்பிக்கை முழுவதும் உங்கள் மீது வைக்கப்பட்டிருக்கின்றது” என்றார் தோழர் மாவோ.
படிக்க:
🔴 இந்தியாவின் கரப்பான்பூச்சிகள் அதிகார வர்க்கத்தை நடுங்க வைத்தது எப்படி?
கடந்த பத்தாண்டுகளாக உலகம் முழுவதும் நடைபெற்று வரும் ஜென் Z இளைஞர்களின் போராட்டம் அந்தந்த நாட்டில் உள்ள அரசு கட்டமைப்புக்கு எதிராகவும், அதிகார வர்க்கத்தின் திமிர்த்தனத்திற்கு எதிராகவும் குறிப்பிட்ட அளவிற்கு அசைவுகளை உருவாக்கியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. அதே சமயத்தில் இத்தகைய போராட்டங்கள் நாட்டின் அடித்தளத்தை மாற்றுகின்ற வகையில் அதாவது ஏகாதிபத்தியங்களையும், உள்நாட்டில் உள்ள பிற்போக்கு சக்திகளையும் பாதுகாத்து வருகின்ற அரசு கட்டமைப்புகளை தகர்த்தெறிகின்ற வகையில் முன்னேறவில்லை என்பது மற்றொரு உண்மை.
“சமுதாயத்தில் இளைஞர்களே மிகவும் உள்ள மிக உயிர் துடிப்புள்ள சக்தி ஆவர். படிக்கும் ஆர்வம் மிகுந்தவர்கள். தமது சிந்தனையில் பழமைப்பற்று மிகவும் குறைந்தவர்கள். சோசலிச சகாப்தத்தில் இது மேலும் உண்மையாகும். பல்வேறு இடங்களிலும் உள்ள வட்டார, கட்சி அமைப்புகள், இளைஞர் சங்க நிறுவனங்களுக்கு உதவி செய்து, அவற்றுடன் ஒன்றாக உழைத்து குறிப்பாக நமது இளைஞர்களின் ஆற்றலை முற்றாக பயன்படுத்தும் பிரச்சனை பற்றி கவனமாக ஆராயும் என்றும் நாம் நம்புகிறோம். கட்சி அமைப்புகள் அவர்களுடைய விசேட குணாம்சங்களை புறக்கணித்து எல்லோரையும் போல அவர்களை நடத்தக்கூடாது.” என்பதை எமது வேலைமுறையாக கொள்வோம்.
இந்திய ஒன்றியத்தின் தலைநகரான ஜந்தர் மந்தரிலும், மும்பையிலும் மாணவர்கள் இளைஞர்கள் நடத்திவரும் முன்னுதாரணமிக்கப் போராட்டங்கள், புரட்சிகர சமூக மாற்றத்திற்கு முக்கியமான பங்களிப்பையும் உத்வேகத்தையும் உருவாக்குகின்றது என்ற வகையில் இளைஞர்களின் போராட்ட உணர்வை ஊக்குவிப்போம். அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டு போர்க்குணமிக்க முறையில் நாடு முழுவதும் உள்ள பாசிச எதிர்ப்பு சக்திகளை ஒன்றிணைப்போம். பாசிஸ்டுகள் தனது அரசியல் அதிகாரத்தில் இருந்து இறங்கி பின்னங்கால் பிடரியில் பட ஓடுகின்ற வரை போராடுவோம்! இறுதியில் வெற்றி பெறுவோம்.
ஜனநாயக கூட்டரசு ஒன்றின் மூலம் மீண்டும் அவர்கள் தலையெடுக்காத வண்ணம் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குகின்ற திசைவழியில் முன்னேறி செல்வோம்!.
மாசாணம்
புதிய ஜனநாயகம் தினசரி






