ஆடியைப் பீடை என்றான்
புரட்டாசியே கூடாதென்றான்
மார்கழியை மட்டமென்றான்
இப்படி,
ஆண்டின் கால்வாசியை
நம்மிடமிருந்து
பிடுங்கிக் கொண்டான்!

மாதத்தில்
பாதி நாளை
தேய்பிறை என்று
திருடிக் கொண்டான்
வளர்பிறைதான்
வளர்ச்சி என்றான்

அதிலேயும்
திங்களும் செவ்வாயும்
வியாழனும் விளங்காதென்றான்
சனி கூட சங்கடமென்றான்
மீதம் இருப்பதோ
ஞாயிறு புதன்
வெள்ளி மட்டுமே!

அதிலேயும்,
பொழுது சாஞ்சிருச்சி – என
பாதி நாளை
எடுத்துக் கொண்டான்.
இந்தப் பாதியிலும் பாதியை
எமகண்டம், குளிகை,
இராகு காலம் என
எடுத்துக் கொள்ள – சில மணித்துளிகளை மட்டுமே
நமக்கு விட்டு வைத்தான்!

இவை தவிர
அஷ்டமி நவமி என
நம்மை நடுங்க வைத்து
அந்தத் துளிகளையும்
வழித்துக் கொண்டான்.
கழித்துப் பாருங்கள்
வழித்தது போக
இருப்பது எவ்வளவு என்று?

இதில்தான்,
பருவம் எய்தபின்
இணை தேட,
அதுகுறித்துப் பேச-சந்திக்க
பிறகு,
கை நனைக்க
நிச்சயம் செய்ய
முகூர்த்தப் புடவை,
தாலி எடுக்க என
நேரம் காலம் பார்க்க வைத்தான்!

அவன் வகுத்த நாளிலும்
அவன் குறிக்கும் நேரத்திலும் மட்டுமே
மணம் முடிக்கனும்
முதலிரவைக்கூட கூட
அவன்தான் குறிப்பான்
அதையும் வெட்கம் இன்றி அவனிடம்தான் கேட்கிறோம்!

கருவுற்றால் தோஷம் என்றான்
வளைகாப்பே அதை
போக்கும் என்றான்
அதற்கும்
அவனே நாள் குறித்தான்!

சூரியன்-சுக்கிரன்
சந்திரன்-லக்னம் என்றான்
ராகு-கேது,
செவ்வாய் தோஷம் என்றான்
பயபீதி நம்மைத்
தொற்றிக் கொள்ள
வேண்டிய ராசி-நட்சத்திரத்திற்காக
தாயின் கருவறையில்
கை நுழைத்து
பச்சிளம் சிசுவை
குறுதி சொட்டச் சொட்ட
இழுத்துப் போட்டான்!

தவழும் மழலையை
தொட்டிலில் போட
அதற்கும் கூட
அவனைத்தான் தேடுகிறோம்
நாள் நேரம் குறிக்க!
பிறகு,
பெயர் வைக்க
பெண் பூப்பெய்தால்
அதையும் தீட்டாக்கி
அதைக் கழிக்க
பூப்புனித நீராட்டு என்றான்
இதற்கும் அவனைத்தான் நாடுகின்றோம்!

பிறகு
இணை தேட
மீண்டும் முதலிலிருந்து…

இவை மட்டுமா?
துன்ப காலத்தில்
கை நீட்டி கடன் வாங்க,
சொத்து-நகை வாங்க
மனை வாங்கி பதிவு செய்ய
பூமி பூஜை போட
வாசக்கால் பதிக்க
முடிந்தபின் குடி புக
என
எல்லாவற்றிற்கும் அவன்தான் ‘அத்தாரிட்டி!’
இவை எல்லாம் போதாதென்று
வீட்டைப் பூட்ட
வாசலைத் தாண்ட
பயணம் தொடர என
இந்தப் பட்டியல்
சிந்துபாத்தையே விஞ்சுகின்றன!

நல்ல வேளை
பேளுவதற்கு மட்டும்
அவனை நாம் நாடவில்லை
நாடினால்
நமக்குப் பாடைதான் மிஞ்சம்!

பார்த்தீர்களா,
காலநேரம்தான் எத்தனைக் கொடியது?
நாமும்தான் என்ன செய்வோம்? துன்பங்களும் துயரங்களும் நம்மைத்
துரத்தத் துரத்த
அதற்கான
காரணங்களையும்
களையும் வழிகளையும்
காண முடியாமல்
காலத்தையும் நேரத்தையும் தேடி அவனை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம்?

  • தமிழ்மணி

2 COMMENTS

  1. மனிதனின் பிறப்பு, திருமணம், வளைகாப்பு முதல் வாசல் தாண்டுவது வரை அனைத்திற்கும் போலி நேரங்களைக் குறித்து, காலத்தை அடகு வைக்கும் மூடத்தனத்தைச் சாடுகிறது இக்கவிதை. உடலின் அடிப்படை இயக்கங்களான உட்கிரகித்தலும் கழிவு வெளியேற்றமும்தான் உயிர் வாழ்வதற்கான நிஜமான அஸ்திவாரம். பசி, தூக்கம், மலம் கழித்தல் போன்ற இயற்கையான உடலியல் தேவைகள் எந்த ஒரு ஜோதிட நேரத்திற்கும், மனிதன் வகுத்த நல்ல நேரத்திற்கும் கட்டுப்பட்டவை அல்ல. இயற்கைக்கு ‘இப்போது’ என்பது மட்டும்தான் ஒரே கட்டளை. அதை விடுத்து, நல்ல நேரம் வரட்டும் என்று தள்ளிப்போட்டால் சில மணி நேரங்களிலேயே உடலில் நச்சுக்கள் ஏறி உயிர் பிரிந்துவிடும். மனிதன் உருவாக்கிய சடங்குகளை விட இயற்கையின் விதிகளே முதன்மையானவை என்பதை இக்கவிதை நறுக்கென்று உணர்த்துகிறது. நல்ல வேளை, கழிவுகளை வெளியேற்ற மட்டுமாவது மனிதன் இன்னும் சோசியனை நாடாமல் இருக்கிறான்; நாடியிருந்தால் மனித இனமே பாடை ஏறியிருக்கும். துன்பங்களுக்கான நிஜக் காரணங்களை ஆராயாமல் போலி நம்பிக்கைகளைத் தேடி ஓடும் மனிதர்களின் அவல நிலையை மாற்றப் பகுத்தறிவே ஒரே வழி என்பதை உணர்த்தவே இக்கவிதை.

  2. மிகச் சிறப்பு.

    மூடநம்பிக்கைகளை தோலுரிக்கும் கவித்துவமான படைப்பு இது. மக்கள் இவற்றிலிருந்தெல்லாம் மீளாமல் விடியலைக் காண்பதென்பது முயற் கொம்பே…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here