
மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம் (Ministry of Tribal Affairs) வன உரிமைச் சட்டம், 2006 (Forest Rights Act – FRA) குறித்தான திட்டங்களுக்கு ‘கிராம சபையின் ஒப்புதல்’ (Gram Sabha Consent) பெறுவது கட்டாயமில்லை என்ற புதிய மற்றும் முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளது.
மின்சக்தி அமைச்சகம் மற்றும் தேசிய நீர்மின்சக்தி கழகத்துடன் (NHPC) நடைபெற்ற ஆலோசனைகளின் போது இந்த அதிகாரப்பூர்வத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன நிலங்களை பிற திட்டங்களுக்காகப் பயன்படுத்த அனுமதிக்கும் இரண்டாம் கட்ட வன அனுமதியின் போது (Stage-II forest clearance), கிராம சபையிடம் இருந்து 100% கட்டாய ஒப்புதல் பெற வேண்டும் என்பதற்கு வன உரிமைச் சட்டம் 2006 மற்றும் அதன் விதிகளில் எந்த ஒரு குறிப்பிட்ட பிரிவோ அல்லது விதியோ இல்லை என பழங்குடியினர் விவகார அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
முதுகில் குத்தும் துரோகம்!
கிராம சபை ஒப்புதல் தொடர்பான இத்தகைய விவகாரங்கள் மற்றும் நடைமுறைகள் தங்களது அமைச்சகத்தின் (MoTA) அதிகார வரம்பிற்குள் வரவில்லை என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
வனங்களில் திட்டமிட்டு குறுக்கீடு செய்யும் எந்த ஒரு நிகழ்விலும், பழங்குடியினரையும், வனவாழ் உயிரினங்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் இருந்தால் பழங்குடியினர் விவகார அமைச்சகமும் ஒன்றிய மோடி அரசும் இப்படி கருத்து தெரிவிக்குமா? தமது இருப்பையே கேள்விக்கு உள்ளாக்கும்படியான ஒரு புதிய சட்டம் (வன உரிமைச் சட்டம் 2006) அமல்படுத்தப்படும் போது வாயை மூடிக் கொண்டு அமர்ந்திருந்து விட்டு, இன்று சட்டப்படி தனக்குதில் தலையிட உரிமையில்லை என்று கைவிரிப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.
படிக்க:
♦ பழங்குடி மக்களின் தலைவராக பிர்சா முண்டாவிற்கு அடுத்து உருவாகியுள்ள ஹிட்மா.
♦ சத்தீஸ்கர் வனக்காடுகள் அதானிக்கு! உயிர்பலி பழங்குடிகள் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு!
பல்வேறு அரசு உள்கட்டமைப்பு மற்றும் நீர்மின் திட்டங்கள், கிராம சபைகளின் 100% ஒப்புதல் பெற வேண்டும் என்ற விதிமுறையால் தாமதமடைந்து வந்த நிலையில், இந்த முக்கிய விளக்கம் அமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ளது.
பழைய சட்டம் என்ன சொன்னது?
1980 ஆம் ஆண்டின் வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ள இந்த வழிகாட்டுதல்கள், வன உரிமை கோர வாய்ப்புள்ளவர்களை அடையாளம் காண்பது, பொருந்தக்கூடிய இடங்களில் அவர்களின் உரிமைகளை அங்கீகரிப்பது, இந்த உரிமைகளை அவர்களுக்கு வழங்குவது, பின்னர் குறிப்பிட்ட நோக்கத்திற்காக அந்த வன நிலத்தைத் திசைதிருப்புவதற்கான முன்மொழிவு குறித்து சம்பந்தப்பட்ட கிராம சபைகளிடமிருந்து தடையில்லாச் சான்றிதழை (NOC) பெறுவது ஆகியவற்றை வன உரிமைச் சட்டத்தின் கீழ் கட்டாயமாக்கியுள்ளன.
கிராம சபைகளிடமிருந்து தடையில்லாச் சான்றிதழைப் பெறும் இந்த நடைமுறையே, வனத்தை அழிப்பதற்கான கிராம சபை ஒப்புதல் நடைமுறை என்று பொதுவாக அறியப்படுகிறது. இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பழங்குடியினர் விவகார அமைச்சகமே முதன்மைப் பொறுப்புள்ள அமைச்சகம் என்று வன உரிமைச் சட்டம் வெளிப்படையாகக் குறிப்பிடுகிறது. இச்சட்டத்தை 2006 இல் திருத்திவிட்டு இன்று தனக்கு உரிமையில்லை என கைகழுவுகிறது பழங்குடியினர் நல அமைச்சகம்.
ஈரத்துண்டை போட்டு கழுத்தை அறுப்பது!
பொதுத்துறை நிறுவனங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவும், எம்.பி. பைஜயந்த பாண்டே தலைமையிலான குழுவும் பழங்குடியினரின் மீது ஈரத்துண்டை போர்த்தி கத்தவிடாமல் கழுத்தை அறுக்க களமிறங்கியுள்ளன. (கோழி, சேவலை ஈரத்துணியால் சுற்றி வைத்தால் அது கூவாது)
NHPC லிமிடெட் குறித்து பொதுத்துறை நிறுவனங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஆகஸ்ட் 3 அன்று அளித்த அறிக்கையைத் தொடர்ந்து, மத்திய மின்சார அமைச்சகத்திற்கும் பழங்குடியினர் விவகார அமைச்சகத்திற்கும் இடையேயான ஆலோசனைகள் தொடங்கப்பட்டன.
இந்த அறிக்கையில், NHPC அதிகாரிகளுடனான கலந்துரையாடல்களின் அடிப்படையில், கட்டுமானத்தில் உள்ள திட்டங்களுக்கான வன அனுமதி பெறுவதற்கு சராசரியாக 106 மாதங்கள் ஆவதாகவும், மேலும், திட்டங்களுக்குத் தேவைப்படும் வன நிலத்தை மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து கிராம சபைகளும் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையே “மிக முக்கியமான ஒற்றைத் தடையாக” மாறியுள்ளதாகவும், “சிறு எண்ணிக்கையிலான கிராம பஞ்சாயத்துகளின் ஒப்புதல் நிலுவையில் இருப்பதால், டீஸ்டா-IV நீர்மின் திட்டம் போன்ற திட்டங்கள் காலவரையின்றி முடங்கியுள்ளன” என்றும் அக்குழு குறிப்பிட்டிருந்தது.
பாஜக எம்.பி. பைஜயந்த பாண்டா தலைமையிலான குழு, தனது அறிக்கையில், “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பெரிய நீர்மின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு, பாதிக்கப்பட்ட கிராம சபைகளில் 70-75% பேரின் ‘தகுதிவாய்ந்த பெரும்பான்மை ஒப்புதல்’ போதுமானது” என்ற தேசிய நீர்மின் ஆணையத்தின் (NHPC) பரிந்துரையை விமர்சித்துள்ளது.
படிக்க:
♦ அடிப்படை வசதிகள் ஏதுமற்ற பழங்குடி மக்கள் வாழ்க்கையும், அவர்களின் மீதான தாக்குதலும்!
♦ NEOM நகரத்திற்காக கொல்லப்படும் சவுதி அரேபியா பழங்குடிகள்!
எனவே, அத்தகைய ஒரு முன்மொழிவின் “சாத்தியக்கூறுகள்” குறித்து மின்சார அமைச்சகம், பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகத்துடன் விவாதிக்க வேண்டும் என்று அக்குழு பரிந்துரைத்திருந்தது. “100% ஒப்புதல் தேவை என்பது சமூக ரீதியாக நல்ல நோக்கம் கொண்டதாக இருந்தாலும், நடைமுறையில் இது சில சமயங்களில் குறிப்பிட்ட பங்குதாரர் பிரிவுகளால் ஏற்படும் திட்டமிடப்பட்ட கால அட்டவணை மாற்றங்களுக்கு வழிவகுத்து, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களின் கால அட்டவணையைப் பாதிக்கிறது” என்றும் அக்குழு கூறியுள்ளது.
அரசியலைமைப்பு சட்டம் உதவாது!
பாசிச மோடி – அமித்ஷா மூலம் கைதேர்ந்த கிரிமினல்களான கார்ப்பரேட்டுகளும், கேடுகெட்ட அரசியல்வாதிகளும், அமைச்சக அதிகாரிகளும் ஒன்றிணைந்து சட்டப்படியே பழங்குடியினரின் உரிமைகளை பறிக்கிறார்கள். உழைக்கும் மக்களின் எதிரிகளான கார்ப்பரேட்டுகளுக்கு உதவும் அரசியலமைப்பை வைத்துக்கொண்டு எப்படி பிரச்சினைக்கு தீர்வு காண்பது?
இந்த அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றும் திசையில், அரசு அதிகாரத்தை கைப்பற்றும் திசையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். குறைந்த பட்சம் கார்ப்பரேட் – காவி பாசிசத்தை ஆட்சி அதிகாரத்திலிருந்து இறக்கியாக வேண்டும். முழுமையாக வீழ்த்த முதலில் ஒரு எழுச்சியும், அதன் தொடர்ச்சியான புரட்சியும் தேவைப்படுகிறது. இந்த தேவையை உணர்த்தி பழங்குடியினரை பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியில் அணிதிரட்ட வேண்டும்.
இளமாறன்






