“ஜனநாயகன்” முதல்வர் விஜய் -ன் ஆட்சியில் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைப்பதற்கான வேலைகள் மிகவும் வெளிப்படையாக செய்யப்படுகின்றன. இந்த வாரத்தில் இதற்கான முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டது குறித்த செய்திகள் ஆதாரத்துடன் வெளிவந்து மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் முதலமைச்சர் ஆனதில் (இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைக்கு எதிராக) குழந்தைகளை விஜய் -க்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வைத்ததற்கு ஒரு முக்கியமான பங்கு உண்டு.
வீட்டில் உள்ள பெரியவர்களிடம் விஜய்க்கு ஓட்டு போட வேண்டும் என்று சிறார்களை தனக்கு ஆதரவாக பரப்புரை செய்ய வைத்த விஜய், வாக்களிக்கும் உரிமை உடைய கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும் தங்களது கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தக்கூடாது என்று உத்தரவு போட்டு தடுக்க முயற்சி செய்து அம்பலப்பட்டு போய் உள்ளார்.
“இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்பதை தடுக்கும் வகையில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம்” ஒன்றிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதற்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் (17-8-2026) அன்று கல்லூரி கல்வித்துறை ஆணையர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த அறிக்கை வெளியான அடுத்த நாளே (18-8-2026) போர்க்கால அடிப்படையில் – புயல் வேகத்தில் செயல்பட்ட திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குஜிலியம்பாறை வட்டாட்சியர்,
“குஜிலியம்பாறை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் கட்சியில் உள்ள நபர்களின் பெயர், முகவரி ஆகியவற்றை சேகரித்து வருவாய் ஆய்வாளர்கள் வட்டாட்சியரிடம் 18-8-2026 இன்று மாலைக்குள் நேரடியாக சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. அனைத்து கிராம உதவியாளர்களும் வருவாய் ஆய்வாளர்களுக்கு உதவிட இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது அறிக்கை அளிக்க தவறும் கிராம உதவியாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இது பொதுவெளியில் வெளியாகி கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் தற்பொழுது இந்த சுற்றறிக்கைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
தங்களது நியாயமான உரிமைகளுக்காக போராடுவதற்கு ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிமை உண்டு என்ற நிலையில் அந்த உரிமையை மறுத்து இப்படிப்பட்ட சுற்றறிக்கைகளை அனுப்புவதற்கான நோக்கம் என்ன?
மாணவர்கள், இளைஞர்களை போராட்டங்களில் பங்கேற்க விடாமல் தடுக்க வேண்டும் என்ற உத்தரவை பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் எந்த வழியில் அமுல்படுத்த முடியும்? போராட்டங்களில் பங்கேற்றால் டிசி-யை கிழித்து விடுவேன் அதாவது பள்ளி கல்லூரியில் இருந்து துரத்தி விடுவேன் என்று மாணவர்களை மிரட்ட வேண்டுமா? அதேபோல போராட்டத்தில் பங்கேற்க உள்ள இளைஞர்களை காவல்துறை என்ன சொல்லி மிரட்டி தடுக்க வேண்டும்?
சுற்றறிக்கை அனுப்பிய அன்று மாலைக்குள் சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ள வேலைகளை செய்து முடித்து அறிக்கை சமர்ப்பித்த விட வேண்டும் என்றும் அவ்வாறு செய்ய தவறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் (தீயாய் வேலை செய்ய வைக்க வேண்டும்) என்றும் அவசரப்படுவதற்கான காரணம் என்ன? என்பன போன்ற அடுக்கடுக்கான, நியாயமான கேள்விகள் எதற்கும் தவெக அரசிடமிருந்து பதில் இல்லை.
உயர்கல்வித் துறை அமைச்சர் கொடுத்த விளக்கத்தில் போராட்டங்களின் போது ஒழுங்கு குலைவதைத் தடுக்கவே இத்தகைய அறிவிப்பு வழங்கப்பட்டதாகக் கூறுகிறார்.
சாதிவெறிச் சங்கங்கள், மதவெறி அமைப்புகள், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். ஆனால் இடதுசாரிகள், கரப்பான்பூச்சி கட்சியினர் நடத்தும் போராட்டங்களில் கலந்து கொள்ளக் கூடாதா? காரணம் என்ன?
கல்வி வளாகங்களுக்கு வெளியில் நடக்கும் போராட்டங்களில் மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொள்வதைப் பள்ளி – கல்லூரித் துறையும் காவல்துறையும் நிர்வாகத் துறையும் இணைந்து தடுக்க வேண்டும் என்று எந்த மாநிலத்திலும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில்லை. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் கூட நடக்காத ஒரு விசயத்தை ‘தூய சக்தி’ விஜயின் ஆட்சி செய்யத் துணிந்திருக்கிறது.
மேலும் படிக்க: ஜனநாயகன் படத்துக்கு அனுமதி! நீட்டுக்கு எதிரான போராட்டத்துக்குத் தடை!
தங்களது உரிமைகளுக்காக போராடும் மக்களை போராட விடாமல் தடுப்பது, அதையும் மீறி போராடுபவர்களை அடித்து நொறுக்கி ஒடுக்குவது என்பது பாசிஸ்ட்டுகளின் நடைமுறை. அதே நடைமுறையை தான் விஜயின் அரசும் கைகொள்ள முயல்கிறது.
அமைச்சர்களுக்கு – முதல்வர் விஜய்க்கு தெரியாமல் அரசு அதிகாரிகள் இப்படிப்பட்ட சுற்றறிக்கை அனுப்பி விட்டார்கள் என்று பொறுப்பை தட்டிக் கழித்து விட முடியாது. அப்படி செய்வதற்கு அதிகாரிகளுக்கு தைரியம் வந்திருக்கிறது என்றால் முதல்வர் விஜய்யையும் அவரது அமைச்சர்களையும் அதிகாரிகள் எதற்குச் சமமாக மதிக்கிறார்கள்? என்ற கேள்வி எழுகிறது. ஜனநாயகனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இனிமேலாவது வரும் என்ற நம்பிக்கை ஜனநாயகனின் ரசிகர்களுக்காவது உள்ளதா?
– குமரன்







