பாரதிய ஜனதா கட்சியில் இருந்து “ஆசீர்வாதம்” பெற்றுக் கொண்டு வெளியேறிய அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ என்ற புதிய இயக்கத்தின் முதல் மாநில மாநாடு கோவை பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் நடைபெற்றது. அதன் அருமை பெருமைகளை பார்ப்பன தினமலர் விலாவாரியாக எழுதியுள்ளது.

முதல் மாநாடு!

‘போதையில்லா தமிழகம்’ என்ற தலைப்பில் நடந்த அந்த மாநாட்டு திடலில், 25,000 இருக்கைகள் நிரம்பி, பலர் நின்று கொண்டு இருந்தனர் என்கிறது தினமலர். அம்மாநாட்டின் தலைப்பும், மாநாட்டில் நிறைவேற்றியுள்ள தீர்மானங்களையும் பார்க்கும் பொழுது அண்ணாமலை எப்படி பாஜகவுக்கும் வலிக்காமல், பாஜகவின் உத்தரவுக்கு இணங்கியாடும் தவெகவுக்கும் உறுத்தாமல், இக்கட்சிகளின் எஜமானவர்களாக இருக்கும் கார்ப்பரேட் முதலாளிகளை எங்குமே அம்பலப்படுத்தாமல்  எச்சரிக்கையுடன் கம்பு சுற்றுகிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அது பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.

மாநாட்டில் அண்ணாமலை பேசியதாவது: ஒரு அமைப்பு உருவாகிய ஒன்றரை மாதத்தில், 19 லட்சம் பேர் இணைந்தது சாதாரண நிகழ்வு அல்ல. அரசியல் கட்சியினர் மட்டுமல்ல, முன்னாள் எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களுடன் டாக்டர், பேராசிரியர், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் இணைந்து உள்ளனர்.இன்னும் ஒரு வாரத்திலோ, ஒரு மாதத்திலோ, 50 லட்சம் பேர் இணையலாம். நம் அமைப்பில், இளம் தலைமுறையினர் 14 சதவீதமாக உள்ளனர். அதேபோல், 40 வயதுக்குட்பட்டோரின் சதவீதமும் அதிகம். அவர்களால் தான், 2026ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அடுத்து, 2031ல், ஒரு ஆட்சி மாற்றம் வரும்” என்று கணித்துள்ளார். அதை இலக்கு வைத்துதான் தனிக்கட்சியை தொடங்கியுள்ளார் என்பது சொல்லாமலேயே புரிகிறது. இவர் சொல்லி உள்ள உறுப்பினர் கணக்கெல்லாம் பாஜக மிஸ்டுகால் கொடுத்து சேர்த்த அதே பாணியிலானது என்பதை அவர் சொல்லாமலேயே நாம் நம்பலாம்தான்.

படிக்க:

 “ஆத்தா வையும்” அண்ணாமலையின்! அழுகுணி கண்ணீர் அரசியல்.!

 தமிழகத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் அண்ணாமலையின் பாதயாத்திரை!

ஜாதி மதம் பார்க்காத மாஜி RSS !

அண்ணாமலை மேலும்  “பா.ஜ.,வையோ, பிரதமர் மோடியையோ விமர்சிக்கவில்லை என்பதால், என்னை ‘பா.ஜ., பி டீம்’ என்கின்றனர். பா.ஜ.,வில் இருந்து வெளியேறியதும், ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பை ஒப்படைத்து விட்டேன். மத்திய அரசு அதை இன்னும் திரும்பப் பெறவில்லை. நான், அடிப்படையில் ஒரு ஹிந்து. வீட்டில் வழிபடுகிறேன். வெளியில் வந்ததும் பொதுவானவன் ஆகிறேன். ஜாதி, மதத்தின் பெயரால் அரசியல் செய்வது என் நோக்கம் அல்ல” என்றும் கூறியுள்ளார்.

ஜாதி மதத்தின் பெயரால் அரசியல் செய்யும் ஆர்எஸ்எஸ் பாஜகவின் பின்னால் சென்று அவர்களுடன் கூடிக் குலவி விட்டு, அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதத்தையும் வாங்கிக் கொண்டு தனிக்கட்சி ஆரம்பித்துவிட்டு, இப்பொழுது திடீரென்று அவருக்கு ஞானோதயம் எங்கிருந்து வந்தது? சாதி மதம் எல்லாம் பார்க்க மாட்டேன் என்று எதற்காக திடீர் நாடகம் ஆடுகிறார்.

அண்ணாமலையின் ஆஸ்தான தலைவர்களின் பாதை!

உண்மையில் சாதி மதத்தை வைத்து அரசியல் செய்வதும், ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த பின் அதையே சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சாதி மத வெறியை தூண்டி வருவதும் கேடானது என்று அண்ணாமலை வெளிப்படையாக ஒத்துக் கொண்டுள்ளாரா இதுவரை இல்லை.  மக்களை பிளவுபடுத்தி மோதவிட்டு ஒடுக்கி குளிர்காய்வதும் எவ்வளவு கீழான அரசியல் என்று வெளிப்படையாக இதுவரை கண்டித்து இருக்கிறாரா? அப்படி எதுவும் இல்லை.

மோடி – அமித்சாவின் குஜராத் படுகொலைகளும், யோகி ஆதித்யநாத்தின் உத்தரப் பிரதேச படுகொலைகளும் இவருக்கு இன்று வரை உறுத்தியதே இல்லை என்றால் இவரின் பேச்சு எவ்வளவு கபடத்தனமானது. இவரின் மாநாட்டு முழக்கங்கள், தீர்மானங்கள் எவ்வளவு விஷமத்தனமானது.

படிக்க:

♦ தெரிந்தே புளுகும் RSS, BJP அண்ணாமலை பின்னால் ஓடாதே!

♦ அண்ணாமலையின் உண்ணாவிரதம்: நம்பி ஏமாறிட  தற்குறிகளா தமிழர்கள்?

தீர்மானம் 1: போதைக்கெதிரான நமது இயக்கத்தின் அடிப்படைக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு ஒவ்வொரு ஜூலை மாதமும் ‘ஒயிட் பேண்ட் மாதமாக’ கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

போதைக்கெதிரான இம்மாதத்தில் ‘நான் ஒரு போதும் போதைப்பொருளைப் பயன்படுத்த மாட்டேன்; மற்றவர்களையும் போதைப்பொருளைப் பயன்படுத்துவதிலிருந்து காப்பேன்’ என்ற உறுதியோடு செயல்படுவோம். என்கிறது.

போதை பொருளை உற்பத்தி செய்பவர்களுடன், மொத்த சில்லறை விற்பனை வியாபாரிகளுடன் உறவு வைத்துக் கொள்ள மாட்டோம்; அவர்களை சமூக விலக்கம், அரசியல் விலக்கம், கட்சியிலிருந்து விலக்கம் செய்து ஒதுக்கி வைப்போம்; சட்டப்படி தண்டிக்க நடவடிக்கை எடுப்போம் என்றெல்லாம் மறந்தும் கூட மூச்சு கூட விடவில்லை.

தீர்மானம் 2: தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், ஆன்மிக வழிபாட்டுத் தளங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் 717 டாஸ்மாக் கடைகள் மட்டுமே செயல்படுவதாகக் கூறி அவை மூடப்பட்டுள்ளன.

ஆனால் நாம் தலைநகரான சென்னையின் சில பகுதிகளில் நடத்திய கள ஆய்வில், பல கடைகள் கல்வி நிறுவனங்கள், ஆன்மிக வழிபாட்டுத் தளங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் தடையின்றி டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. தமிழக அரசு மீண்டும் ஒரு முறை ஆய்வு மேற்கொண்டு, இது போன்ற டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி இந்த மாநாடு தீர்மானம் நிறைவேற்றுகிறது.

தமிழகத்தில் செயல்படும் மதுபான ஆலைகளை நிரந்தரமாக மூடுவோம்; வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டிலிருந்தும் செய்யப்படும் மதுபான இறக்குமதிக்கு தடை கோரி போராடுவோம் என்று மறந்தும் கூட திருவாளர் அண்ணாமலை வாயை திறக்கவில்லை.

தீர்மானம் 3: பள்ளி மற்றும் உயர்கல்வித் துறைகளில் போதைப்பொருள் எதிர்ப்பு குழுக்கள் உருவாக்கும் அரசாணை கடந்த 2025-இல் வெளியிடப்பட்டது. தற்போது செயல்பாட்டில் இருக்கும் போதைப்பொருள் எதிர்ப்புக் குழுக்களைக் கண்டறிந்து, அரசு உயர்கல்வித் துறையின் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். இது முறையாகச் செயல்படுத்தப்பட்டதா என அரசு ஆராய்ந்து, அதன் செயல்பாட்டு நிலை, அதன் தாக்கம் பற்றிய தகவல்களை விளம்பரப்படுத்த வேண்டும்.

போதைப்பொருள் எதிர்ப்புக் குழுக்கள் இல்லாத பள்ளி மற்றும் கல்லூரிகளில் அடுத்த 3 மாதங்களில் போதைப்பொருள் எதிர்ப்புக் குழுக்களை உருவாக்கி, அதன் செயல்பாட்டை அரசு உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கிறது.

இத்தகைய குழுக்களுக்கு யாரையாவது கைது செய்யவோ, வழக்கு போடவோ அதிகாரம் உண்டா? இல்லை என்றால் அதிகாரம் கொண்டவர்களையும் இணைத்து குழு கட்டுவதும், அதையும் தாண்டி விற்பனை நடந்தால், அத்தகைய அதிகாரம் கொண்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதையும் சேர்த்து பேச வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்த முடியாது என்றால் அத்தகைய துறை எதற்கு? அதற்கு அமைச்சர்தான் எதற்கு? என்றும் போராட்டத்தின் இலக்கை வரையறுத்து இருக்க வேண்டும். இதையெல்லாம் செய்ய “வீ  த லீடர்” தயாராக இல்லை. இவரின் கட்சிக்கு நிதி தரும் புரவலர்கள் யார் என்பதும் இதுவரை தெரியவில்லை.

தீர்மானம் 4: வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், தினக்கூலி பணியாளர்கள் மற்றும் இளைஞர்கள் காலை நேரத்திலேயே மதுபானம் அருந்துகிறார்களாம். அதைத் தடுக்க வேண்டும் என்கிறது.

சம்பளம் கைக்கு கிடைத்தவுடன் வேறு எந்த இன்பங்களையும் நுகர முடியாமல், போதையை மட்டுமே தேடி ஓடும் நிலைக்கு அவர்களை யார் மாற்றுகிறார்கள்? அதைப் பற்றி எல்லாம் இந்த அரசியல் தலைவருக்கு அக்கறை துளியும் இல்லை.

திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் கார்ப்பரேட்டுகளால் ஈவிரக்கமின்றி உடல் ரீதியாக கசக்கி பிழியப்படும் தொழிலாளர்கள் சனி இரவு சம்பளம் வாங்கியவுடன் டாஸ்மாக்கில் குடியேறுவதைய அல்லது மும்பை, பெங்களூர், சென்னை போன்ற நகரங்களில் ஐடி நிறுவனங்கள் நம் நாட்டின் ஐடி ஊழியர்களை அப்ரைசல், பெஞ்சில் உட்கார வைப்பதன் மூலம் மிரட்டி, கொடூரமாக மூளை உழைப்பில் ஈடுபடுத்தி, சனிக்கிழமை ஆனால் வீக் எண்டு பார்ட்டிக்கு நெட்டி தள்ளி வருவதையோ கண்டிப்பதற்கு அண்ணாமலைக்கு கண்ணோட்டமும் இல்லை. துணிவும் இல்லை.

இப்படி ஒரு மாநாட்டை நடத்தி தீர்மானங்களை  நிறைவேற்றியதன் மூலம் பாஜகவுக்கும் நோகாமல், ஆளும் தவெக அரசுக்கும் வலிக்காமல், பொதுப்படையாக ஒரு முழக்கத்தை வைத்து தீர்மானங்களை நிறைவேற்றி தனது அரசியல் அக்கப்போரை தொடங்கியுள்ளார் திருவாளர் அண்ணாமலை.

சினிமா கோமாளி விஜய்யையே மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டனர்; நிஜ  போலீசாக, ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்துள்ள நம்மையும் ஏற்க மாட்டார்களா? என்ற அசட்டு துணிச்சலில் ஆட்டத்தை ஆரம்பித்து உள்ள அண்ணாமலையை தமிழக மக்கள் தான் ‘பொருத்தமாக’  வரவேற்று, மரியாதையும் செய்ய வேண்டும். நேரடியாக தாமரை மலராத சூழலில், அதற்கான குட்டையைத் தயார் செய்யும் வீ  த லீடர்ஸ் கட்சியை பொருத்தமாக அம்பலப்படுத்தவும் வேண்டும்.

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here