மிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 108 எம்எல்ஏக்கள், பிளஸ் திமுக கூட்டணி எம்எல்ஏக்கள் துணையுடன் ஆட்சி அமைத்த தவெக அந்நாள் முதல்  தீயாய் வேலை செய்து கொண்டிருக்கிறது. களத்தில் அல்ல, சமூக வலைதளங்களில்.

இதுநாள்வரை பேருந்து நிலையத்தின் கழிப்பிடங்களை பார்க்காதது போலவும், இப்போதுதான் பார்ப்பதை போலவும் தோற்றத்தை உருவாக்கி வீடியோ குழுவுடன் சென்று ஆய்வு செய்வது போல எடிட் செய்து அதனை சமூக வலைதளங்களில் பரப்பி, விசில் புரட்சி என ஆகா ஓகோ என்று கொண்டாடுகின்றனர். அதாவது விஜயின் தவெக ஆட்சி சமூக வலைதளங்களில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

தனிப்பெரும் கட்சியான தன்னை ஆட்சி அமைக்க விடாமல் அலைகழித்த கவர்னரை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாமல் மௌனம் காத்த விஜய்யும் தவெகவினரும், செய்தியாளர்கள் சந்திப்பில் எம்எல்ஏ அருண்ராஜிடம் கேள்வி எழுப்புகையில் நேரம் வரும்போது கேட்போம், பேசுவோம் (பாயிண்ட் வரட்டும்) என  இதுவரை அமைதி காத்து வருகிறார்கள்.

அதன் பின்பு முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இது பொதுவெளியில் எதிர்ப்பை உருவாக்கிய நிலையில் அதற்கு விளக்கம் அளித்த லாட்டரி புகழ் ஆதவ் அர்ஜூனா தமிழ் தாய் வாழ்த்து பின்தள்ளும் நோக்கம் எதுவும் இல்லை என்றும் நிகழ்ச்சி  நெறிமுறைகள் மற்றும் நடைமுறை காரணங்களால் அந்த வரிசை அமைந்ததாகவும் கூறினார். மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் மொழி வாழ்த்து பாடலுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு என்றும் விளக்கம் அளித்தார். இதுபோன்று நடைபெறுவது இதுதான் கடைசி எனவும் குறிப்பிட்டார்.

ஓ! பரவாயில்லையே. ரொம்ப தைரியமான ஆளா இருப்பார் போலயே. ‘பாயாசத்தை’ கொள்கை ரீதியாக துணிவோடு எதிர்த்து  நிற்பார்கள் போல, என மக்கள் எதிர்பார்த்த வேளையில், தற்போது மே 21, 2026 அன்று நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்க கூட்டத்தில் முன்பு போலவே வந்தே மாதரம் முதலில் இசைக்கப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து கடைசியில் தள்ளப்பட்டுள்ளது.

இப்போது முதலமைச்சர் புதிய விளக்கம்  அளித்துள்ளதாக சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளதை விகடன் வெளியிட்டுள்ளது. ‘ஏன் முதலில் வந்தே மாதரமும், கடைசியாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்படுகிறது?’ என முதலமைச்சரிடம் கேட்டோம். ‘ஆளுநர் பங்கேற்கிற நிகழ்ச்சிகளில் மட்டும் இத்தகைய நடைமுறையைத்தான் பின்பற்ற வேண்டும் என்பது மத்திய அரசின் உத்தரவு. அதை மாற்ற வேண்டுமென்ற முயற்சியை ஆளுநரோடு பேசி நாங்கள் மேற்கொண்டோம். ஆனால், ஆளுநர் அதை ஏற்க மறுத்துவிட்டார். மத்திய அரசின் பிரதிநிதி என்கிற முறையில் அவர்களின் உத்தரவைத்தான் நான் பின்பற்ற வேண்டும் என்று ஆளுநர் அவர்கள் தெரிவித்துவிட்டார். ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் இதனைத் தவிர்க்க முடியாமல் இருக்கிறது’ என்பதை முதலமைச்சர் எங்களிடம் தெரிவித்தார்.

படிக்க:

 தமிழகத்தில் தவெக ஆட்சி: மூன்றாம் இடத்தில் தமிழ்!

 கரூர் படுகொலை: தவெக தலைவர் விஜயை ‘Victim’ஆக சித்தரிப்பது அயோக்கியத்தனம்!

இது புதிய விளக்கம் என்பதை விட முனைவர் திருமாவளவன் கூறியதுபோல் “ஆர்.எஸ்.எஸ் குழந்தையான தவெக” பாஜகவின்  இந்துராஷ்டிரிய கொள்கைக்கு  பணிந்து போவதை அம்பலப்படுத்தியுள்ளது. தான் (கவர்னர்) கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் ஒன்றிய அரசு கொடுத்த வழிகாட்டுதல் தான் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் மேற்குவங்க பதவியேற்பு விழாவில் அது ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை. தவிர்க்க முடியாது பாடினாலும் கண்டனங்களையாவது தெரிவித்திருக்க வேண்டும். விஜய் அப்படி செய்யவில்லை. ஆர்எஸ்எஸ் பாஜக சொல்வதை மட்டுமே செய்கிறார். இனி தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்களிலும் கூட இப்படியான நடைமுறைகள் பின்பற்றப்படலாம். தமிழ்நாட்டில் மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு ஒன்றியத்தின் அடிமை பிராந்தியமாக தமிழ்நாடு மாறலாம்.

ஏற்கனவே திமுக ஆட்சியில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்த  தொடர்ந்து முயன்று வந்த பாஜக மக்கள் எதிர்ப்பு போராட்டத்தின் காரணமாக செயல்படுத்த முடியாமல் பின்வாங்கியது. ஆனால், திமுக அரசு புதிய கல்விக் கொள்கையில் உள்ள சில அம்சங்களை வேறொரு பெயரில் அமல்படுத்தியதை நாம் ஏற்கனவே அம்பலப்படுத்தியுள்ளோம். அதே நேரம் நவோதயா பள்ளிகள், பிஎம் ஸ்ரீ பள்ளிகள் உள்ளிட்ட ஒன்றிய திணிப்பை அமல்படுத்தாத காரணத்தால் பள்ளிக்கல்வித்துறைக்கு வர வேண்டிய ரூ.2152 கோடி நிதியை தராமல் நிறுத்தி வைத்தது பாசிச மோடி அரசு. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முடிவுக்கு பிறகு பிஎம்சி திட்டத்தில் கையெழுத்திட கோரி வந்த செய்திகளை பார்க்க முடிந்தது.

படிக்க:

 திருவாளர் விஜய் முன்வைக்கும் மாற்று குறித்த பித்தலாட்டங்கள்!

 தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் ஒரு மாற்று என்பது கலப்படமில்லாத மோசடி!

இந்த நிலையில், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பின் மாநில நிர்வாகிகள் நேற்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து பேசி உள்ளனர். அதில் முக்கியமாக ஒன்றிய அரசின் பிஎம்ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளனர்.

வெளியே செய்தியாளர்களை சந்தித்த ஏபிவிபி நிர்வாகிகள், “ஒன்றிய அரசின் நிதியுதவியோடு செயல்படும்  பிஎம்ஸ்ரீ திட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து உரிய முடிவெடுக்கப்படும் என முதலமைச்சர் விஜய் எங்களிடம் உறுதியளித்துள்ளார். மேலும் எங்களது கோரிக்கைகளில் 8 கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாக சம்மதித்துள்ளார்” என உற்சாகத்தோடு தெரிவித்தனர்.

சங்பரிவார் மாணவர் அமைப்பின் மனம் குளிர முதலமைச்சர் விஜய் நடந்துக் கொள்வது அவர்களுக்கு வேண்டுமானால் நமது பேச்சை கேட்கும் ஒருவர் தமிழ்நாட்டை ஆள்கிறார் என உற்சாகம் கொள்ளலாம். ஆனால் நமக்கு தமிழ்நாடு ஆர்எஸ்எஸ்  பாஜகவின் பிடியில் சிக்கியிருப்பதை அறிய முடிகிறது. “கழகமில்லா தமிழகம்” என்ற ஆர்எஸ்எஸ் பாஜகவின் திட்டம் நிறைவேறி விட்டது.  தமிழ்நாட்டை ஆள்வது பாஜகவாக இருந்தால் என்ன? தவெகவாக இருந்தால் என்ன? இரண்டும் ஒன்றுதான். இனி தமிழ்நாட்டை கவர்னர் அர்லேகரும், அமித்ஷாவும் பார்த்துக் கொள்வார்கள். தங்களது திட்டங்களை இடையூறு இல்லாமல் செயல்படுத்தும் தவெக ஆட்சியில் ஆர்எஸ்எஸ் – பிஜேபி ஹாப்பி தான்.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here