ஆசான் காரல் மார்க்ஸ் பெர்லின் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருக்கும்போதே இளம் ஹெகலியர்களைப் பற்றி அறியலானார். பழைய பண்பற்ற மத வெறியர்கள், மிகவும் புனிதமாகக் கருதிய மத கோட்பாடுகளையும், தத்துவஞானக் கோட்பாடு
களையும் இளம் ஹெகலியர்கள் கடுமையாக விமர்சித்து வந்த காலம் அது.
அவர்களில் சிலரிடம் சிறந்த தீவிரமான அரசியல் கொள்கை பிடிப்பு, மனசாட்சி சுதந்திரம், பத்திரிக்கை சுதந்திரம் முதலியவை பற்றி அவர்களின் முற்போக்கான நிலை ஆகிய காரணங்களினால் அவரிடம் ஒரு சமயம் மார்க்ஸிற்கு மிகுந்த அனுதாபம் ஏற்பட்டது உண்டு. பெர்லினில் “டாக்டர் கிளப்” என்ற பெயருடன் இளம் ஹெகலியர்களின் குழு ஒன்று செயல்பட்டு வந்தது.அந்த உறுப்பினர்களுடன் மார்க்ஸ் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். அந்தக் குழுவிற்கு ஒரு பல்கலைக்கழக இறைமை நூல் தத்துவ விரிவுரையாளராக இருந்த ‘புருனோ பாயர்’ என்பவர் தான் உயிரும் ஆத்மாவும் ஆக இருந்தார்.
அதன் உறுப்பினர்களில் ‘காரல் பிரடரிக் கோப்பென்’ என்பவரும் ஒருவர். அவரோ ஒரு வரலாற்று ஆசிரியர். அவர் அறிவொளி இயக்கத்தின் பண்புத்திறன் போதகராகவும் அதன் மீது ஆழ்ந்த பற்று கொண்டவராகவும் இருந்தார். ஆக அவர்கள் இருவரும் மார்க்ஸின் நல்ல நண்பராயினர். ‘அடால்ப் ரூட்டன் பர்க்’ என்னும் புவியியல் ஆசிரியரும் அந்தக் குழுவில் ஒரு உறுப்பினரானார்.
மார்க்ஸோ விரைவில் அந்த ‘டாக்டர் கிளப்’பின் சிறந்த அறிவுத்துறை தலைவர்களில் ஒருவரானார். அவருடைய மிக விரிவான ஞானம், வலுவான வாதத்திறன், காரண காரிய ஆராய்ச்சியில் அவருடைய ஆழமும் உறுதிப்பாடும் அந்தக் கிளப்பில் நீண்ட கால உறுப்பினர்களாகவும், வயதில் பெரியவர்களாகவும் இருந்தவர்கள் உட்பட பலருடைய கவனத்தையும் கவர்ந்தது.
படிக்க: ஆசான் கார்ல் மார்க்ஸ் நினைவைப் போற்றுவோம்! மார்க்சியம் பயில்வோம்!
மார்க்ஸ் மீது பற்றும் மரியாதையும் வைக்கத் துவங்கினர். மார்க்ஸிற்கு சரிசம அந்தஸ்து கிடைத்தது என்பது மட்டுமல்ல; பலரும் இவருடைய மேலான தலைமைத் தன்மையையும் உணரத் தலைப்பட்டார்கள். ஒப்புக் கொள்ளத் தொடங்கினார்கள். கோப்பன் என்பவர் பெருமளவில் மார்க்ஸினுடைய செல்வாக்கிற்குட்பட்டார். அவர் 1840-ல் எழுதிய ‘பிரடரிக்டெர் கிராஸ் அண்ட் சின் வைடர் சாக்கர்” என்னும் நூலை மார்க்ஸிற்கு சமர்ப்பணம் செய்தார். அப்போது மார்க்ஸ் மாணவராகத்தான் இருந்தார்.
1841-ல் மோலஸ் ஹெஸ் என்னும் ஒரு பிரபலமான இளம் ஹெகலியர் தன்னுடைய நண்பர் ‘பெர்த்தோல்டு ஆர்பாக்’ என்பவருக்கு எழுதிய கடிதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.
“நீங்கள் ஒரு ஆக சிறப்புமிக்க – கூறப்போனால் அநேகமாக இன்று வாழும் ஒரே ஒரு உண்மையான தத்துவ ஞானியாக டாக்டர் மார்க்சை சந்திக்க தயாராகலாம். அவர் எனது பேரன்பிற்கும் வழிபாட்டுக்கும் உரியவர் அவர். இன்னும் ஒரு இளைஞர் தான் அவர். அவருக்கு அதிகமாக போனால் வயது 24 இருக்கும். அவர் மத்திய கால மதத்திற்கும், அரசியலுக்கும் இறுதி அடி கொடுக்கப் போகிறார். அவர் மிகுந்த தெளிவான தத்துவ ஞான மெய்யார்வத்தைக் கூரிய ஆர்வமிக்க நகைத் திறனுடன்
இணைக்கிறார்.
நீங்கள் சற்று கற்பனை செய்து பாருங்கள். ரூஷோ, வால்டேர், ஹோல் பாக், லெஸ்ஸிங், ஹீன், ஹெகல்… ஆகிய எல்லோரும் சேர்ந்த ஒரு மனிதராக இருந்தால் எவ்வாறு இருக்குமோ அத்தகைய ஒரு மகத்தான மனிதராக மார்க்ஸ் இருக்கிறார். இவர்கள் எல்லாம் ஒன்றாக இணைக்கப்பட்டவர் என்று சொல்லும் போது அவர் ஒரு வெறும் யாந்திரீகக்கலவை அல்ல – இது டாக்டர் மார்க்ஸைப் பற்றி ஓரளவு நீங்கள் புரிந்து கொள்ள உதவும்...”
இந்தக் கடிதத்தை எழுதியவர் மட்டுமல்ல; அக்காலத்தில் மார்க்ஸை ஓரளவேனும் அறிந்து வைத்திருந்தோர் பலரும் இத்தகைய கருத்தோட்டத்தைத் தான் கொண்டிருந்தனர் என்பதும் உண்மையாக இருக்கிறது.
அப்படியானால் மார்க்ஸ் தமது கல்லூரிப் பருவக் காலத்திலேயே எவ்வளவு தலைமைத்துவ – தத்துவார்த்தத்துவ தலைமைக்கு முற்றிலும் தகுதி படைத்தவராய் இருந்திருக்கிறார் என்பதனை நம்மால் அறிய முடிகிறதல்லவா? சட்டத்துறை, கலை விஞ்ஞானம், வரலாற்று துறை, தத்துவஞானத்துறை அனைத்திலும் முதுகலைப் பட்டத்தைப் பெற்று தமது 24-வது வயதில் டாக்டர் பட்டத்தையும் பெற்றவர் அல்லவா ஆசான் காரல் மார்க்ஸ்.
அந்தப் பட்டங்களைக் கொண்டும், தமது குடும்பத்திலிருந்த குறைந்தபட்ச வசதி வாய்ப்புக்களைக் கொண்டும் அவர் சுயநலவாத வாழ்க்கை முறையைத் தேர்வு செய்ய முற்றிலும் மறுதலித்து, உலகம் முழுமைக்குமுள்ள மக்களின் ஏற்றத்தாழ்வுகளை – வர்க்க முரண்களை அலசி ஆராய்ந்து உழைக்கும் மக்களுக்கான – விடியலுக்கான வரலாற்றுப் பொருள் முதல்வாத தத்துவத்தைப் படைத்து, அதற்காகவே எண்ணற்ற தியாகத் தழும்புகளை தான் மட்டுமல்லாது தன் குடும்பம் முழுவதும் ஏற்கத் தக்க வகையில் அமைத்துக் கொண்டவர் அல்லவா ஆசான் கார்ல் மார்க்ஸ்.
அத்தகைய ஆசான் கார்ல் மார்க்ஸின் 143-வது நினைவு நாள் (14-03-2026) வாரத்தில்
அவரின் தத்துவ நூல்களை – படைப்புக்களை – வழிகாட்டுதல்களை – நோக்கிப் பயணப்படுவோம்…! மேலும் மேலும் பயில்வோம்…!
அது ஒன்றே உலகம் முழுமைக்கும் உள்ள உழைக்கும் மக்களின் விடியலுக்கான ஒரே வழி என்பதையும் உணரத் தலைப்படுவோம்…!
“மனித குலத்திற்காக வாழ்நாளில் பெரும்பாலும் சேவை செய்வதற்கான வகையில் நமது வாழ்க்கையில் ஒரு நல் வாய்ப்பு நிலையை நாம் தேர்ந்தெடுத்து ஏற்பாடு செய்து கொண்டால் எத்தகைய சுமைகளும் பளுக்களும் நம்மை எதுவும் செய்து விட முடியாது. பணிய வைத்து விட முடியாது”
-ஆசான் காரல் மார்க்ஸ்.
“”””””””””””””””””””””
எழில்மாறன்
குறிப்பு:- முக்கியமான எடுத்துக்காட்டுகள் கார்ல் மார்க்ஸின் விரிவான வாழ்க்கை வரலாற்று நூலில் இருந்து…







