திண்டிவனத்து பண்ணையாரின் அன்புமணி ராமதாசுக்கு கல்தா கொடுக்கும் புதிய அறிவிப்பு!

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு சாதியை பயன்படுத்திக் கொண்டு  பதவியை அனுபவிப்பதும் தான் தொடர் கதையாகியுள்ளது., அதையே ’சமூக நீதி’ என்று மட்டையடி அடிக்கின்றனர் சாதிய பிழைப்புவாதிகள்.

திண்டிவனத்து பண்ணையாரின் அன்புமணி ராமதாசுக்கு  கல்தா கொடுக்கும் புதிய அறிவிப்பு!

”பாட்டாளி மக்கள் கட்சி எனும் அரசியல் இயக்கத்தைத் தொடங்கிய நிறுவனராகிய ச. ராமதாஸ் ஆகிய நான், நிறுவனர் என்பதுடன் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பொறுப்பையும் நானே எடுத்துக் கொள்கிறேன்.

தேர்தலின் வெற்றிக்காக அயராது உழைக்க வேண்டும் என்ற நோக்கில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவியில் பொறுப்பு வகித்து வரும் மருத்துவர் அன்புமணி ராமதாஸை, பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக நியமனம் செய்கிறேன்” என்ற அறிவிப்பை திண்டிவனத்து பண்ணையாரான ராமதாசு அறிவித்துள்ளார்..

பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் 1989 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த கட்சியானது அரசியலுக்கு வரும்போது அதனுடைய வர்க்க குணாம்சம் மற்றும் எந்த நோக்கத்திற்காக கொண்டுவரப்படுகிறது என்பதை பற்றி புதிய ஜனநாயகம் இதழில் எழுதி இருந்தோம்.

”வடமாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர் சாதியைச் சேர்ந்த மக்களை அடையாள அரசியலின் கீழ் கொண்டு வருவதற்கு என்று டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டவர்களால் உருவாக்கப்பட்டது தான் இந்த பாட்டாளி மக்கள் கட்சி என்பது பற்றியும், அதற்கு, ’பெரும்பான்மை வன்னியர்கள் பாட்டாளிகளாக உள்ளனர்’, எனவே பாட்டாளி மக்கள் கட்சி என்று பெயர் வைக்கலாம் என்று கல்யாணி போன்ற ’முன்னாள் புரட்சியாளர்கள்’ முன்வைத்த ஆலோசனையின் அடிப்படையில் தான் இந்த கட்சிக்கு பெயரும் வைக்கப்பட்டது என்றும் அம்பலப்படுத்தினோம்.

இட ஒதுக்கீடு என்ற கொள்கையை முன்வைத்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வன்னிய சாதி மக்களை களப்பலியிட்டு, அதன் மூலம் கிடைத்த அரசியல் செல்வாக்கு மற்றும் அதிகாரப் பதவி ஆகியவற்றை பயன்படுத்திக் கொண்ட திண்டிவனம் ராமதாசு குடும்பம் வன்னியர்களை சாதியின் பெயராலேயே உறிஞ்சி கொள்ளையடிக்கின்ற ஒட்டுண்ணியாக மாறியிருந்தார்.

சொந்த சாதி மக்களை நிறுவனமாக்கிக் கொண்டு இத்தனை சதவீதம் எனது மக்கள் உள்ளார்கள், அவர்களின் ஓட்டு உங்களுக்கு தான் என்று அதிமுக அல்லது திமுக, காங்கிரசு அல்லது பாஜக கட்சியிடம் பேரம் பேசுவதன் மூலம் ஒவ்வொரு தேர்தலிலும் குறைந்தபட்சம் 500 கோடி ரூபாய்க்கு மேல் சூட்கேஸில் பெற்றுக் கொள்கிறார் என்று வெளிப்படையான விமர்சனம் அவர் மீது வைக்கப்படுகிறது.

இத்தகைய சாதிய பிழைப்புவாத கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியின் உள்ளே தற்போது பகிரங்கமாகவே பதவிப்போட்டி வெடித்துள்ளது என்பதை தான் ராமதாசின் இன்றைய அறிவிப்பு நமக்கு தெரிவிக்கின்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாநில இளைஞரணி தலைவராக தனது மகள் வழிப் பேரன் முகுந்தனைக்  கொண்டு வந்து அன்புமணி ராமதாசுக்கு செக் வைத்த ராமதாஸ், தேர்தலின் போது குதிரை பேரம் நடத்துவதில், தனது மகன் ’ஒரு தத்தி’ என்பதை புரிந்துக் கொண்டு தானே நேரடியாக களத்தில் குதித்துள்ளார்.

உண்மையில் பெரும்பான்மை உழைக்கும் மக்களாக உள்ள வன்னிய சாதியினர் படித்து முன்னேறுவதற்கு அந்த சாதியிலேயே இருந்த ஒரு சில பணக்காரர்கள் எழுதி வைத்த சொத்து தமிழகம் முழுவதும் குவிந்து கிடக்கிறது என்று தமிழக அரசாங்கம் கண்டுபிடித்துள்ளது.

”வன்னியர் சமூகத்தில் உள்ள அறக்கட்டளை சொத்துக்கள் பல ஆயிரம் கோடி இருந்தும், சமூக மக்களுக்கு அது பயன்படவில்லை. ஒரு சில அறக்கட்டளை சொத்துகள் தான் பொது பயன்பாட்டின் கீழ் வருகிறது. ஆனால் அதுவும் முழுமையாக, இந்த மக்களுக்கு பயனளிக்கவில்லை. அது போன்ற ஒரு கட்டமைப்பை இந்த சமூகத்தின் ஜாதி கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி உருவாக்கி உள்ளது.

அதாவது அறக்கட்டளை சொத்துக்கள் முழுதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, அந்த வருமானத்தை அவரவர் பங்கு போட்டு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சமூக நன்மைக்காக அந்த காலத்தில் வாழ்ந்த நல்ல உள்ளங்கள் கொடுத்த கொடை தான் இந்த சொத்துக்கள். அவர்கள் நல்ல நோக்கத்திற்காக இந்த சொத்துக்களை, தனக்குப் பின்னால் இந்த சமூகம் பயனடைய வேண்டும் என்று எழுதி வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். ஆனால், அதை எல்லாம் பங்கு போட்டு வலிமை உள்ளவன், சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். வலிமையற்றவர்கள் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சட்டத்தின் மூலம் இதை ஒன்றும் செய்ய முடியவில்லை.

படிக்க:

சந்தி சிரிக்கும் அரசியல் வா(வியா)திகள் ராமதாசும்  அன்புமணியும்!

சாதி இந்திய சமூகத்தின் கொடிய நோய். அதுவே பாசிச பாஜகவின் அடித்தளம்!

அதே சமயம் எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ அப்போதுதான் இவர் இட ஒதுக்கீடு பிரச்சனை பற்றி பேசிக் கொண்டிருப்பார். தேர்தல் முடிந்ததும் மறந்து விடுவார். இப்படித்தான் இந்த கட்சியின் நிறுவனரான ராமதாசு கடந்த  40 ஆண்டு காலமாக செய்ததன் வரலாறு.

பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள் எத்தனை பேர் வெளிவந்திருக்கிறார்களோ, அவர்கள் அனைவரும் தனி கட்சியும், அமைப்பும் ஏற்படுத்திக் கொண்டு, ராமதாஸ் காட்டிய அதே வழியை பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதில் என்ன வேடிக்கை என்றால், சமுதாயம் தொடர்ந்து ஏமாறும் என்பதுதான் இவர்களுடைய கணக்கு. அது தவறாகிவிட்டது” என்று 2024 நாடாளுமன்ற தேர்தலின் போதே வன்னிய சாதியைச் சேர்ந்த சிலர் இணையத்தில் ராமதாசுக்கு எதிராக எழுதியிருந்தனர்..

இதனைத் தாண்டி வன்னிய அறக்கட்டளையின் சொத்துக்கள் பதிவு செய்யப்பட்ட போது பொது அறநிலைய பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள்கீழ் 23 பள்ளிகள், 7 கலை அறிவியல் கல்லூரிகள், 2 பொறியியல் கல்லூரிகள், ஒரு சட்டக் கல்லூரி, ஒரு பாலிடெக்னிக் கல்லூரி, 2 ஐடிஐ என மொத்தம் 36 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. வேலூர் வட ஆற்காட்டு வன்னியர் சங்கத்தின் மூலமாக அரசுப் பணிகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாகவே வன்னிய சாதி உழைப்பாளிகள் படித்து முன்னேறுகின்றனரே ஒழிய ராமதாசு உருவாக்கியுள்ள பாட்டாளி மக்கள் கட்சியால் அல்ல என்பதுதான் உண்மையாகும்.

வன்னியர்களது அறக்கட்டளைகள் குறித்து திமுக அரசினால் உருவாக்கப்பட்ட வன்னியர் அறக்கட்டளை சொத்துக்கள் கண்காணிப்பு வாரியத்தின் மூலமாக மாவட்டம்தோறும் ஆய்வு செய்ததில் 118 சொத்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. முதல்கட்டமாக பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கர், சேலம் எஸ்.கந்தசாமி கவுண்டர், திண்டிவனம் வன்னியர் கல்வி அறக்கட்டளை உள்ளிட்ட 63 அறக்கட்டளைகள் வாரியத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 14 அறக்கட்டளைகளின் சொத்துகள் புலம் வாரியாக தணிக்கை செய்யப்பட்டு  தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் இவையெல்லாம் அந்த சாதியின் பெரும்பான்மை மக்களான உழைப்பாளிகளுக்கு ஒரு துரும்பும் பயனளிக்கவில்லை.

தமிழகத்தில் மிகவும் கொச்சைப்படுத்தப்பட்ட சொல், ’சமூக நீதி’ என்பதாகும். ஒரு சிலர் தனது சாதி முன்னேறுவதற்கு என்ற பெயரில் சாதிய அடையாளத்தைப் பயன்படுத்திக் கொண்டு அரசாங்கத்தின் அதிகாரத்தில் போட்டி போடுவதும், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு சாதியை பயன்படுத்திக் கொண்டு  பதவியை அனுபவிப்பதும் தான் தொடர் கதையாகியுள்ளது., அதையே ’சமூக நீதி’ என்று மட்டையடி அடிக்கின்றனர் சாதிய பிழைப்புவாதிகள்.

ஆனால் சுமார் 1.5 கோடி எண்ணிக்கை கொண்ட வன்னியர்களில் பெரும்பான்மையினர் இன்றளவும் நிலமற்ற கூலி விவசாயிகளாகவும், கட்டிட வேலை செய்வது முதல் வாகன ஓட்டுனர் வேலை வரை செய்யும்  அரைப் பாட்டாளிகளாகவும் தான் வாழ்ந்து வருகின்றனர் இவர்களது வாழ்க்கை மிகவும் நெருக்கடியின் கீழும், கல்விக்கடன் துவங்கி வீடு கட்ட கடன், வாகனக் கடன் , சுய உதவிக் குழுக்கடன் போன்றவற்றினால் கடும் துன்பத்தின் கீழும் தான் உள்ளது என்பதும், அவர்களது முன்னேற்றத்திற்கும் திண்டிவனத்து பண்ணையார் நடத்துகின்ற பாட்டாளி மக்கள் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை அந்த மக்கள் மூலமாகவே ராமதாசுவின் முகத்தில் அறைந்து முன் வைக்க வேண்டும்.

அப்போதுதான் இது போன்ற சாதிய பிழைப்புவாத கும்பல் சொந்த சாதியின் பெயரால் மக்களை உறிஞ்சி கொள்ளையடிப்பதை தடுத்து நிறுத்த முடியும். அதுமட்டுமின்றி வன்னியர்கள் என்றாலே, ’கலவரக்காரர்கள்’, ’தேர்தலுக்கு தேர்தல் கட்சி மாறுகின்ற பச்சோந்திகள்’, ’பார்ப்பனக் கும்பலுக்கு விசுவாசமாக அடியாள் வேலை செய்பவர்கள்’ என்ற இழிவான நிலைமையை மாற்றவும் முடியும்.

இந்த கண்ணோட்டத்தில் அணுகாமல், ”அப்பா-மகன் மோதல், தலைவர் பதவிக்கு தன்னையே நியமித்துக் கொண்ட ராமதாசு, அன்புமணி தனிக்கட்சி துவங்குவாரா?, திமுகவுடன் ராமதாசு இணைவார், பாஜகவுடன் கூட்டு சேர அன்புமணி தடை” போன்ற அரசியல் கிசு கிசு மூலமாக பாமகவின் உண்மை முகத்தை மறைக்கும் ஊடக நரிகள், அரசியல் புலிகள் உருவாக்கும் புகை மூட்டத்திற்கு பலியாகக் கூடாது.

  • மனோகரன்

1 COMMENT

  1. பாட்டாளி மக்கள் கட்சி தனது சமூக மக்களை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவது இந்த மக்களை பலிகெடா ஆக்குவது தொடர்கதையாக உள்ளது என்ற கட்டுரை மிக சிறப்பாக உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here