மூன்று நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என அறிவிப்புகள் வந்த நிலையில், சற்றும் எதிர்பாராத வகையில், கொச்சியில் மேக வெடிப்பு கனமழை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒன்றரை மணி நேரத்தில் 10 சென்டி மீட்டர் மழைப் பொழிந்து மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.கோட்டயம் மற்றும் எர்ணாகுளத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இம்மழை இன்னும் இரண்டு நாளுக்கு நீடிக்கும் என்ற எச்சரிக்கையும் இன்று (29.05.24) விடப்பட்டுள்ளது.

பெருக்கெடுக்கும் வெள்ளம் பெரும்பாலும் ஒண்டுகுடித்தன காரர்களின் மொத்த வாழ்வாதாரங்களையும் வாரிசுருட்டி அழித்து விடும். அடுக்குமாடி குடியிருப்பில் மேல் தளங்களில் இருப்பவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட போவதில்லை; தமது சொகுசு கார்களை இழப்பதை தவிர.

தற்போதைய கனமழையில் கொச்சியின் காக்க நாடு வாழை சந்தை மூழ்கியுள்ளது. மீன், இறைச்சி கடைகளும் இவ்வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இப்படி அன்றாடம் உழைத்து பிழைப்பு நடத்தும் எளிய மக்களின் வாழ்வாதாரம் மொத்தமாக நாசமாகிவிட்டது. சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை தண்ணீரில் மூழ்கி நிற்கின்றன. புது வண்டியை வாங்கி மாத தவணைகளை சரியாக கட்டி முடிப்பதற்குள்ளேயே காயலான் கடைக்கு போட வேண்டிய அவலத்தில் மக்கள் .

மீண்டும்தொடர உள்ள கனமழையால், பெருக்கெடுக்கும் வெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டு, பாலங்கள் தகர்ந்து போய் மீட்பு நிவாரண உதவிகளும் கூட தடைப்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற சேதங்களை தீவிர கனமழை மற்றும் புயல் காலங்களிலும் கேரளா அனுபவித்து வந்துள்ளது.

இந்தியாவில் கடலோர நகரங்கள் வெள்ளங்களில் மூழ்குவது தொடர்கதை ஆகி வருகிறது. அவ்வப்போது மீட்பு நிவாரண உதவிகளை செய்துவிட்டு ஆட்சியாளர்கள் தமது வழக்கமான பணிகளை கவனிக்கப் போய் விடுகின்றனர். உழைக்கும் மக்களும் தமது குடும்பம் சந்தித்த பொருளாதார இழப்பிலிருந்து இருந்து மீண்டு வர வழக்கம்போல் கடுமையாக உழைக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

படிக்க:

♦ பேரழிவில் இமாச்சலப் பிரதேசம்: கனமழையால் 80 பேருக்கு மேல் பலி!

♦ லிபியா: அதிகரிக்கும் இயற்கை பேரழிவுகள்!

ஆனால் ஒவ்வொரு இயற்கை சீற்றமும், ஒவ்வொரு வெள்ளப்பெருக்கும் அடுத்தடுத்து குறுகிய இடைவெளிகளில் நடக்க ஆரம்பிக்கிறது. கடந்த நூற்றாண்டுடன் ஒப்பிட்டால் அறிதினும் அரிதாக நடந்த மேக வெடிப்பு தற்போது இயல்பானதாக, பேசு பொருளாக மாற்றப்பட்டு வருகிறது. இது யாரால்? எதனால்?

பேரழிவுக்கு காரணமான கூறுகளை அறிவியலாளர்கள் வானியலாளர்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தான் விளக்க முடியும். அவர்கள் விளக்குவது மட்டுமல்ல, உலக மக்களை, அரசுகளை எச்சரித்து கதறியும் பார்த்து விட்டார்கள். அவர்கள் நடத்தும் போராட்டங்களை யாரும் கண் கொண்டு பார்ப்பதில்லை. ஆய்வாளர்களின் கூக்குரலை காதை திறந்து கேட்பதில்லை. அதன் விளைவை இன்று உலகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. அதுதான் புவி வெப்பமயமாதல்.

நாமும் வழக்கம்போல் கேரள மக்களுக்கு அனுதாபத்தையும், சில நிவாரண உதவிகளையும் செய்துவிட்டு ஒதுங்கிக் கொள்ளப் போகிறோமா? இல்லை இத்தகைய பேரழிவுகளில் இருந்து புவியை காக்க உருப்படியாக திட்டங்களை முன்னெடுக்க அரசுகளை நிர்பந்திக்க போகிறோமா?

இளமாறன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here