விக்ரம் லேண்டருக்கு ஒரு விண்ணப்பம்…

நெலாவுக்கு ராக்கெட் விட்டு
பத்திரமா தரையிறக்கி
பள்ளம் ஒன்னு கெடக்கதுன்னு
பவிசா தான் எறங்கி நின்னு
படமெல்லாம் அனுப்புறதா
பட்டியெல்லாம் பேச்சு இங்க…

முந்நூறு கோடி பட்ஜெட்
மூனு லட்சம் கிலோமீட்டர்
முனுமுனுக்குது டீவி எல்லாம்
மூலைக்கு மூலை படம் எடுங்க..,
முப்பத்து முக்கோடி தேவர்களில்
யாராவது ஒருத்தர பாத்தாலும்
உடனே எங்களுக்கு தகவல் சொல்லுங்க…

நெனவு தெரிஞ்ச நாள் முதலா
நாங்களும் தொழாவிட்டு தான்
கெடக்கோம்
மலக்குழியில..,
சாக்கடையில
பொணம் எரிக்கையில
மாடறுக்கையில
ஆனா, கடவுளைத் தான் காண்கல…
தூணுல துரும்புல இருக்குஞ்சாமி
எங்க சேரிப்பக்கம் அகப்படல…
போரு போட பள்ளம் தோண்டி
கொழந்தங்கள பொதைச்சிடுறோம்,
ஆழத்துல ஆண்டவன் இல்ல
ஆகாசத்துல பாத்திங்களா?

நெலாவுல சிவன் இருக்றதாவும்,
நெலாவே சிவன் தலையில இருக்றதாவும்
காலங்காலமா கத கேட்டோம்!
ராமன், சீதை, அனுமாரு
அல்லா, ஏசு, பெருமாளு
எல்லா சாமியும் வானத்துல
வாழுறதா சேதி பூமியில..

வானத்ல வாழுற சாமிக
நெலாப்பக்கமா யாராச்சும்
வந்தா எனக்கு சொல்லுங்களேன்
கேள்வி ஒன்னு கேக்கனும்…

நால்வர்ணம் எதுக்கு சாமி?
மாடு வெட்ட, பொணம் எரிக்க,
சாக்கடை, மலமள்ள ஒரு சாதி
படிக்க, எங்களை ஏய்க்க ஒரு சாதி?
பேரு மனுநீதி?
இது என்ன நீதி?

  • செல்வா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here