எங்கிருந்தாய் உடன்பிறப்பே?

பிறந்தது
விடியல் என்றார்கள்
ஆகஸ்டு 1947!

எங்கே பிறந்தது இந்தியா?
நேருவின் புத்தம் புதுச் சிகரெட் சாம்பலிலா,
பட்டேல் ராஜாஜியோடு தோள் உரசி நின்ற
உச்சிக் குடுமிப் பார்ப்பனரின்
விளங்கா மந்திர இரைச்சலூடே
நடுச்சாம டெல்லியில்
நாள் குறித்ததிலா?

மடிப்புக் கலையாத
கோட்டுச் சூட்டு ஜின்னாவின்
சுருட்டுச் சாம்பலிலா,
அவரோடு மொட்டுக்கைகள் குவித்த
முல்லாக்களின் மணி உருட்டலிலா
எங்கே பிறந்தது பாகிஸ்தான்?

பாக் – இந்தியா
எல்லைக் கோடு
ரத்தத்தால் போட்டபோதா?
எத்தனை உடன்பிறப்புக்களை
வெட்டிப் பிரித்தார்கள்?
எத்தனை லட்சம் பேர்?

பாகிஸ்தான் போன ரயிலில்
எத்தனைப் பிணங்கள்?
எண்ணும் நிலையிலா
மக்கள் இருந்தார்கள்?

மனம் வெந்தவர்
நட்புக் கழகம் வைத்து
ஆட்டுக் கறி கொதித்த
பருப்புக் குழம்பில்
இருநாட்டில் பல ஆண்டு
தேடியும்

பலர் பலருக்குத்
திரும்பக் கிடைக்கவேயில்லை,
இந்தியாவில் நின்றுவிட்ட
தங்கச்சியை மீண்டும்
பார்க்க முடியவில்லையே
அக்கா பாகிஸ்தானில் ஏங்கினாள்,
தவித்தாள்,
செத்தும் போனாள்.

பாகிஸ்தானில்
உள் பிரிவுகளை இணைக்க முடியவில்லையே,
ஓயாச்சண்டை.
ஓயாத ஆட்சிக் கவிழ்ப்புகள்,
இராணுவ ஆட்சிகள், படுகொலைகள்….
அவசர நிலைக் காலங்கள்;
கொந்தளிப்பும், கலவரமும்
தொழிலாளரைத் திரட்டிய
கம்யூனிசமும் ஓயாது போராடியதுதானே?

இந்தியா அல்ல, இந்துஸ்தான் மட்டுமே என்று
அரை இராணுவ ஆர்எஸ்எஸ்-ன் பிள்ளை கோட்சே
‘ஹேராமைச்’ சுட்டான்,
இந்துராஷ்டிரக் கனவுகள் விரிந்தன.
சனாதன மிச்சசொச்சம்
புழுத்துப் பூத்தது –
தொழிலாளர் – விவசாயக் கூட்டை முழக்கி
வசந்தத்தின் இடிமுழக்கமாய்
நக்சல்பாரி எழுந்து
இங்கும் தீயாய் மலர்ந்து
மணம் வீசத்தானே செய்தது.

இந்தியா – பாக் இடையே
ரத்த ரேகையைப் பலவந்தமாய்
அழுத்திப் போட இருபுறமும்
’பிரபுத்துவ – தரகு கும்பலின்’
பிண – பண அரசியலும்
உதைபந்தாடி
காலத்தைப் பின்னே இழுக்கப்
பெருமுயற்சி எடுத்தார்கள்.

லகச் சாவு வியாபாரி
யாங்கீ அங்கிள்
பொய்ப் போரை விதைத்து
இரண்டு கைகளாலும் வாரிவாரி
ஆயுதம் விற்றுக் கல்லா கட்டினான்!

மக்கள்
இருபுறமும் மக்கள் –
கோடி கோடியாய் மக்கள்
ஒன்று, பல அன்னிய கார்ப்பரேட்டுகளுக்கோ
உள்நாட்டு தரகர்களுக்கோ,
அல்லது, பல பிரபுக்களுக்கும் பணமுதலைக்குமோ
அவர்கள் மூட்டிய
மத – சாதி வக்கிர தீயில்
பகை வளர்த்து
தெருக்களில் சிதைக்கப்பட்டு
ஏந்திய கைகளில் நீரும் சோறும்
சேராமல்
அன்றாடங் காய்ச்சிகளாய்
சின்னாபின்னப்பட்டுப் போனார்கள்.
எத்தனையோ விதமாய் – டெல்லி
செங்கோட்டை சூரியன்கள்
எத்தனையோ விதமாய் – இசுலாமாபாத்
பள்ளிவாசல் பிறைகள்
வந்தன, போயின.

வேகமாய்க்
கூடியது செயற்கை வெஞ்சினம் மட்டுமே;
மாறியது,
மோடி – சேவக் சங்கின்
அரை டவுசர் மட்டுமே.

பிறந்தது
விடியல் அல்ல.
நாடுகளிடையே
குழிகளில் சூடுதணியாச் சாம்பலும்
சில்லிட்ட குஜராத் கல்லறைகளும் மட்டுமே.

விடியலைக் கீறிக் கொண்டு வருவோம் என
*பெயிஸ் அகமது பெயிஸைப்
போலிசெய்து பொல்லாச் சிறகு விரித்த
இந்திய எல்லைக் கவிச்சித்தர்கள்
துடித்து என்ன பயன்?
ஏக்கமும் கோபமும்
காத்தோடு போச்சு,
இருபுறமும்
இதயம் நசிந்தில்லோ போச்சு!

இதோ,
எரிமலையாய்க் குமுறி அழும்
இந்த விவசாயக் குடும்ப
உடன்பிறப்புக்களைப்
பாருங்கள் – உண்மை புரியும்.

74 ஆண்டுகள் கழித்து
பாகிஸ்தானில் உள்ள
பஞ்சாப் *கர்தார்பூர் சாஹிபில் இவர்கள்
சந்திக்கிறார்கள்.

மனித இதயங்களின்
இசைவை, இசையைக் கிழித்துக்
கோடு கீறினால்
எல்லையாகிவிடுமா?

காலங்கள் கடந்தும் – அவை
உலகெங்கும் பாயும்
இதயங்களைக் கீறிப்
பிரிக்கவில்லை தானே?

அவர்களின்
அழுது சிவந்த
கண்களைக் கேளுங்கள்;
கண்களைக் கேளுங்கள்!

000

  1. பெயிஸ் அகமது பெயிஸ்: பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்து, போராட்டங்களின் ஊடே வளர்ந்து, மக்களிடையே புகழ்மிக்க கவிஞராக பஞ்சாப் பகுதியில் வாழ்ந்தவர்: புரட்சிக் கவிதைகள் பாடிய சிறந்த பாடிய படிமக் கவிஞர்.
  2. கர்தார்பூர்: அன்பைப் போதித்த சீக்கிய தலைவர் குருநானக், வாழ்நாளின் கடைசி 17 ஆண்டுகளைக் கழித்த பாக் எல்லை பஞ்சாப்பில் உள்ள ஊர். அங்கே அவர் இறந்த பிறகு எல்லா மதத்துக்காரரும் அவரது உடலுக்குச் சொந்தம் கொண்டாடினர். கடைசியில் இசைவாக பேசி – சீக்கிய இசுலாமிய ‘இந்து’ முறை என்று 3 நினைவுக் கல்லறைகளைக் கட்டி பாதுகாத்தார்கள்: இன்றும் பாதுகாக்கிறார்கள். மத ஒத்திசைவின் அடையாளமே இந்த கர்தார்பூர்.

படம் : நன்றி– scroll.in.

ஆக்கம்: பீட்டர்.

https://scroll.in/video/1014906/watch-separated-brothers-meet-for-the-first-time-since-1947-in-tearful-reunion-at-kartarpur-sahib

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here