இந்தியா

இந்தியாவில் ஐந்து வயது நிறைவதற்குள் , குறிப்பாக 2015-ல் மட்டுமே  13 லட்சம் குழந்தைகள் இறந்துபோயிருக்கின்றன.  இதுதான்  2015-ல்  உலகிலேயே அதிக அளவென்று  ‘ தி லாஜிக் இண்டியன் ‘ ( The Logic Indian ) வலைத்தளம் அறுதியிட்டுச்  சொல்கின்றது. அப்படியானால் முதலிடம் ஆஃப்கானிஸ்தான், இரண்டாமிடம் பாகிஸ்தான், மூன்றாமிடம் இந்தியா எனும் புள்ளிவிவரம்  உண்மையில்லையா?   ஆம், அதில் மாற்றமில்லை.  இக்குறிப்பிட்ட  ஆண்டின் விவரம் இந்தியாவும்  முதலிடத்துக்கு விரைவில் போய்ச்சேர்ந்துவிடும் என்பதற்காகவே அப்படிக் குறிப்பிடுகிறது.

புள்ளிவிவரங்கள் சொல்வதென்ன ?

” உலக அளவிலான நோய்கள் பிரச்சினைச் சுமை , 2015 ”  என்ற ஆய்வினை  ‘ தி லான்செட் ‘ ( லான்செட் என்றால் ‘ நுணுக்கமான அறுவைக் கத்தி ‘ என்று பொருள் ) வெளியிட்டது.  1990 முதல் 2015  வரை குழந்தை இறப்புகள் உலக அளவில் பாதி அளவாகக் குறைந்துவிட்டது என்று ஆய்வு சொன்னாலும்  2015-ல் மட்டும் இந்தியாவில் 13 லட்சம், நைஜீரியா 7.3 லட்சம், பாகிஸ்தான் 3.4 லட்சம் என்று 5 வயதுக்குக் கீழே இறப்புகள்  30%  அளவுக்கு தெற்காசியாவிலேயே  நடந்துள்ளன ;  அதாவது, மூன்றாம் உலக நாடுகளிலேயே இது மிகக் குறிப்பான பகுதி  என்பதைக் கவனத்தில் வைக்கவும்.

மொத்த இறப்பு அளவில், பிறந்த முதல் மாதம் மட்டும் நிரம்பிய ( இதை நியோநேட்டல் என்பார்கள்)  குழந்தை இறப்பு  உலக அளவில்– 1990-ல் 46 லட்சம்  என்றும் 2015-ல்  26 லட்சம் என்றும் சொல்லப்படுகிறது ; குறைந்துபோய்விட்டது என்று  சமாதானம் சொல்லப்பட்டாலும்  இறப்பது குழந்தைகள் என்று நாம் பதட்டப் படவேண்டும். நம்வீட்டில் ஒருகுழந்தை இறந்தால் எத்தனைச் சோகம் கவ்வியிருக்கும் என்று வைத்து ஒப்பிட்டுப் பாருங்கள்.

போராடும் குழந்தை நோயாளிகள்

நூற்றாண்டின் இலக்கு என்று ஒன்றைக் குறித்துவிட்டு அதைக் கவனிக்கச் சொல்கிறார்கள்,  கட்டளை போடுகிறார்கள். இதை நம்பவேண்டாம், இவை போலிகள் என்று நான் சொன்னால் ” குரூரமான  ( சினிக் ) அவநம்பிக்கைக் காரன் ” என்று என்னை நீங்கள் குற்றம் சொல்லக் கூடும். இலக்கு 4.4%, தோராயமாக 3% அளவு குறைத்துவிட்டோம்  என்று அவர்கள் மார்தட்டுகிறார்கள்.

யாரோ மக்கள் சார்பாக  அப்படிச் சொல்லவில்லை, முதலாளித்துவ  ஏஜெண்ட்டுகள் அப்படிச் சொல்கிறார்கள். இவர்களே இன்னொன்றையும் சேர்த்துச் சொல்கிறார்கள். அதாவது,  முழு இலக்கு எட்டப்பட்டிருந்தால் உலகமுழுதும் ஒருகோடி நாற்பது லட்சம் குழந்தைகள் காப்பாற்றப்பட்டிருக்குமாம். இவ்வளவு துல்லியமாக நான் ஏன் மண்டையைக் கசக்குகிறேன் சொல்லுங்கள் ? ஒவ்வொரு குழந்தையும் நாளைய உலகின் மதிப்புள்ள உயிர், நாளைய உலகத்தின் அடித்தளம். அப்படி ஓர் இலக்கை வைத்தவர்கள் அதற்காக என்ன செய்தார்கள் ? அதற்காகப் போராடாததால் ஒன்றரைக் கோடி குழந்தைகளைக் காப்பாற்றமுடியவில்லையாம்.  தவறிவிட்டோமே என்று சின்ன பதற்றம், குற்ற உணர்வுகூட இல்லை.

ஐ.நா. என்ற வெற்றுமடத்தில்  அறிக்கை மட்டும் போடுகிறார்கள். அமெரிக்காவுக்கு வக்காலத்து வாங்கி அது ஈராக் போரை நடத்தி பொய்சொல்லி சதாம் உயிரைக்குடித்து பல்லாயிரம் கொலைகள் செய்து பேரழிவுக்கு வித்திட்டது அதே  ஐ.நா. மடம்தான்.

உலக அளவில் என்ன காரணங்கள் சொல்கிறார்கள் ?

பிறக்கும்போதே  எழக்கூடிய சிக்கல்கள் — அதாவது, ஒன்று, குறைமாதப் பிரசவம். 8 மாசம் முன்பே பிறந்துவிடுவது, இதை  கெஸ்டேஷன் கட்டம் என்று  சொல்கிறார்கள். இரண்டாவது, உடலுக்குத்  தேவைப்படும்  ஆக்சிஜன் அனேகமாகக் கிடைக்காமல்  போய்விடுவது, இதை ஆஸ்ஃபிக்சியா என்று சொல்வார்கள். ஆக்சிஜன் அரிதாகக் கிடைக்கும் தண்ணீருக்கடியில், குறை ஆக்சிஜன் உள்ள பூமிப் பகுதிகளில், ஆகாய வழிகளில், வெற்றிடத்தில் என்று நான்கு நிலைகளைக் குறிப்பிடுகிறார்கள். இதைத் தவிர, சுற்றுச்சூழல் மாசுபாட்டால், புகைமண்டலம்  போடப்படும்  இடங்களில் காற்றில் ஆக்சிஜன் அரிதாகிவிடுகிறது.

இவைதவிர, மூச்சுக் குழலின் கீழ்ப்பகுதியில் தொற்று ஏற்படுவது மூன்றாவது காரணமாக இருக்கிறது. கிட்டத்தட்ட 16% குழந்தை இறப்புகள் இப்படித்தான் ஏற்படுகின்றன ; வயிற்றுப் போக்கினாலும்  ( பேதி ) மேலும் 9% இறப்புகள் ஏற்படுகின்றன.  தொற்றாத, எளிதில் பரவாத ( non-communicable ) நோய்கள் பெரும் அளவுக்குச் சவாலாக உள்ளன என்றும் ஆய்வுகள்  சொல்கின்றன ; இயற்கைப் பேரிடர்களான  நில நடுக்கம், வெள்ளம் இரண்டாலும்  அதிக இறப்புக்கள் ஏற்பட்டன .  2004 முதல் 2010 வரை இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் 74,700 பேர் இறந்துவிட்டார்கள்; நேபாளத்தில்  நில நடுக்கத்திலும்  இந்தியாவில் வெள்ளத்திலும்  நிறையச் சாவுகள் ஏற்பட்டன.

அதில் குழந்தைகள், பெண்கள் எவ்வளவு பேர் என்பது அலட்சியப் படுத்தப்படுகிறது. இது சமூகம் வளர்ச்சி அடையாததையே காட்டுகிறது.

இந்தியாவின் அதிகார வர்க்கம் நடக்கின்ற அழகில் எத்தனைப்பங்கு உண்மை என்பதைக் கொஞ்சம் நிதானித்தால்  மட்டுமே  நாம் பார்க்கமுடியும்.

போராடும் குழந்தை நோயாளிகள்

உலக அளவில் பல ஆயிரம் குழந்தைகள் இறக்கின்றன ; அது செய்தி வியாபாரிகளுக்குத் தலைப்புச் செய்தியாக இல்லை. இப்படி ஆழமாகப் பார்க்கும்போதுதான் உள்நாட்டுக் கார்ப்பொரேட் முதலாளிகள் நடத்தும் பத்திரிக்கைககள் தமக்கு வேறு மதிப்பீடுகளும் அளவீடுகளும்  வைத்திருப்பது தெரிகிறது.

கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்னால் பிறப்பும் அதிகம், இறப்பும் அதிகம். பிறந்து 5 வருசத்துக்குள் 25% குழந்தைகள் மரித்தன என்றே எழுதுகிறார்கள்;  பருவம் அடைவதற்குள் 50% மரித்தன. சமூகம் கவனம் எடுத்து மக்களைப் பராமரித்து வளர்த்ததாகச் சொல்லி அதற்கு ‘ நவீன சமூகப்புரட்சி என்றும் பெயரிட்டார்கள். இவை துல்லியமான கணிப்புகள் அல்ல; உண்மையில் இந்த முதலாளித்துவ மாற்றத்தையே தோராயமாக  ‘ புரட்சி ‘ என்பார்களானால், முழுச் சமூகம் பற்றியும் கவலைப்படும் மக்களே ஆளும், மக்கள் கமிட்டிகளே ஆளும் ஆட்சியில் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் நடக்கும், கொஞ்சம் சிந்தியுங்கள். இதுவே  உண்மையான மக்கள் புரட்சி. இதுவே மக்களுக்கான உண்மைப் பராமரிப்பு.

ஆனால், 200 ஆண்டுகளுக்கு  முன்  ஒரு  குடும்பத்தில் 10 குழந்தைகள் கூடப் பிறக்கும் ;  அதில்  50% நோய்களால், ஆரோக்கியமற்ற வாழ்க்கைச் சூழலால் செத்தும் போகும். ஆறே ஆண்டுகள் முன்னால் , 2017-ல் மட்டுமே  உலகில் சுமார் 54 லட்சம் குழந்தைகள்  ஐந்தே வயது நிரம்புவதற்குள் இறந்தன ; அதற்கு முன்னால் 1990-ல் பதிவான இறப்பு  126 லட்சம் என்பதிலிருந்து  50%  குறைந்துவிட்டது என்பது  சிறு முயற்சி மட்டுமே. என்றாலும்  உலகில் மருத்துவ வளர்ச்சிக்க்ப் பிறகுமா இந்தக் கொடுமை என்று கேக்கத் தோன்றுகிறது.  2017 கணக்குப்படி இந்தியாவில் 10 லட்சம், நைஜீரியாவில் 7 லட்சம், பாகிஸ்தானில் 4 லட்சம், காங்கோவில் 3 லட்சம், எத்தியோப்பியாவில் சுமார் 2 லட்சம் என்று பதிவாகியுள்ள இறப்புகள் ஏழைநாடுகளின் அவலமான பொருளாதார – சமூக – பண்பாட்டு   நிலையையே  சுட்டிக் காட்டுகின்றன.

பாட்டாளிகளின் புதிய ஜனநாயகப் புரட்சி முடிந்து  சுமார் 30 ஆண்டுகள் வளர்ந்தபிறகு மீண்டும் முதலாளித்துவத்துக்குச் சரிந்துபோன  சீனாவில் சுமார் 1-1/2 லட்சம் குழந்தைகள் இறந்தன. பின்தங்கிய சோமாலியா,   சாட் , மத்திய ஆப்பிரிக்கா, சியர்ரா லியோன், நைஜீரியா, மாலி போன்ற நாடுகளில்  சமூகநிலையின் பிரதிபலிப்பாக வரவிருக்கும் சில பத்தாண்டுகளில் இறப்புவிகிதம் கூடும் என்கின்றன ஆய்வுகள்.

எனவே, சமூகமாற்றம் நிகழ்வது மட்டும் அல்ல, தொடர்ந்து  நிலைநிறுத்தப்படுவதால்  மட்டுமே குழந்தைச் சாவுகளைத்  தடுக்கமுடியும் என்பதையே இந்த ஒப்பீடுகள் காட்டுகின்றன.

இந்தியநிலைமை என்ன ?

ஆப்கன், பாகிஸ்தான் பற்றி என்ன ஆய்வுகளை சென்ற இரு பகுதிகளில் பார்த்தோமோ அவற்றை —நிமோனியா, மூச்சுக் குழாய்ப் பாதிப்பு, வயிற்றுக் கோளாறுகள் ஆகியவற்றையே  இந்தியாவுக்கும் பார்க்கப் போகிறோம்;  இந்தியாவின் சமூக-அரசியல்-பொருளாதாரச் சூழலைக் கணக்கில் கொள்ளாமல் ஆய்வை  நிறைவுசெய்யவும் முடியாது.

அமெரிக்க ஒற்றைத்துருவ வல்லரசு உலகை ஆதிக்கம் செய்வது போலவே இந்தியாவையும் ஆதிக்கம் செய்கிறது ; இதற்குச் சவாலாக வரும் சில போக்குகளையும் ஒருசிறு அளவில் மட்டுமே இந்தியா  நடைமுறையில் பயன்படுத்திக் கொள்கிறது.  உலகில் மறுகாலனியாக்கக் கொள்கை அறிமுகமாவதற்கு முன்பிருந்தே மக்கள் நல்வாழ்வுத்துறை புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது,  இப்போதும் அவ்வாறுதான்.

ஒரு எடுத்துக்காட்டைப் பாருங்கள் புரியும் .  மோடி ஒன்றிய அரசு அண்மையில் ” ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணித்  ” துறையில் ஒப்பந்தப் பணியாளர்கள் 350 பேர் வேலையைப் பறித்து  குழந்தைகள் நலத்துக்கான மேற்பார்வைப் பணியை  ஒழித்துவிட்டது. இது திடீரென நடக்கவில்லை ;  தொடர்ந்து பல ஆண்டுகளில் நிதி ஒதுக்கீடு குறைக்கப் பட்டுக் கொண்டேவந்து  இப்போது மொத்தமாகப் பணியாளர்கள்  நீக்கப்பட்டிருக்கிறார்கள். நாடுமுழுக்க எத்தனை லட்சம் பேர்  தூக்கி எறியப் பட்டார்கள் என்பதும்  கணக்கில்லை. ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு வேலை என்பது மோடியின் வாய்ச் சவடால்.  கார்ப்பொரேட்டுகளுக்கு லட்சக்கணக்கான கோடி சலுகை வாரிக் கொடுக்கத் தெரிந்த  அவருக்கு , 350 பேருக்கு அவசியமான ஊதியம் தருவதற்கு கஜானாவில் காசு இல்லையாம்!

” ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் ” செய்தவர்களை மோடி ஒன்றிய அரசு வேலையிலிருந்து நீக்கியது.

மொத்த இந்தியாவிலும் கார்ப்பொரேட்–காவிப் பாசிசம் விஷமாகப் பரவிவரும் இந்த நேரத்தில்  அரசின்  மருத்துவத்துறை அழிக்கப்படும் அபாயத்தை எல்லோரும் நேரில் கண்டபிறகும் மௌனமாகக் கடந்துபோவது தான்  அவலமாக இருக்கிறது !

வழியில் ஒருநாள்   தனியாரின் பல்துறைச் சிறப்பு மருத்துவமனை ஒன்றைப் பார்த்தேன். ஒரு துறைக்கு  “குழந்தை வளர்ச்சிக்கான மருத்துவம் ” ( டெவலப்மெண்ட்டல் பேடியாட்ரிக்ஸ் ) என்று பெயர். இன்னமும்கூட ஒழுங்காகச் சாலை வசதி இல்லாத கிராமங்கள், வசதிகளே இல்லாத அரசுமருத்துவ மனைகள், பக்கமாக மகப்பேறு மருத்துவமில்லாமல் 12, 15 கி.மீ நடந்து சென்று தாய்மார்கள் குழந்தை பெற்றெடுக்கிறார்கள். வடக்கே மட்டுமல்ல, வடதமிழ்நாட்டு ஆற்காட்டிலும் இதுதான் நிலைமை.

( ஜூலை  8 , பிபிசி, தமிழ்ச் செய்திகள் ). ஒரு பக்கம் கார்ப்பொரேட்டுகளின் அசாதாரண வளர்ச்சி ;  மற்றொருபுறம் வளர்ச்சி மறுக்கப்பட்ட  கிராமங்கள் ;  புறக்கணிக்கப்படும்  அடித்தள  மருத்துவ இல்லங்கள், பரிதவிக்கும் ஏழைத் தாய்மார்கள் வாழ்க்கை. மலைக்கும் மடுவுக்குமான இடைவெளி என்பார்களே அது  இதுதான் !

இந்தியாவில் உள்ள பிரச்சினைகளை இனி விவாதிப்போம்!

முக்கியமான  மூன்று பிரச்சினைகள் விவாதிக்கப் படுகின்றன. அ.து., நிமோனியா, வயிற்றுப் போக்கு, மலேரியா.

நிமோனியா :: சத்துணவு போதாமை, காற்று — சுற்றுச்சூழல் மாசுபடுதல், கரியமிலவாயு காற்றில் கூடுவது ஆகியவை முக்கியக் குறைபாடுகள். நிமோனியா எளிதில் பரவாதவை என்றாலும் நெருக்கமாக மக்கள் வாழும் இடங்களில் காற்றில் துளிகள் மூலம்  பரவுகின்றன. நுரையீரலில் சீழும் சளியுமாக நிரம்புவதால் ரத்தஓட்டத்துக்குத் தேவையான அளவு  ஆக்சிஜன்  கிடைக்காமல்  போகிறது, இதுவே அபாயம்.

வயிற்றுப்போக்கு : இது மற்றொரு தொற்று.  தூய்மையான காற்று, ஆரோக்கியமான வாழிடம் —  இவையே அடிப்படை நிவாரணங்கள்.

மூன்றாவது, மலேரியா ::  இது மரணப் பேரபாயமாக இல்லை.  இருப்பினும்  அபாயம்தான். 5 வயதுக்குள் பாதிக்கப்பட்டு  மரணம்  அடைந்தவர்கள் 55000 பேர். தூய்மையான மற்றும் அடைசல், தேங்கும் அழுக்கு நீர் ஆகியவை கவனிக்கவேண்டியவை. மேலும் நோய் எதிர்ப்புச் சக்திகுறித்து முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்கள்.  தடுப்பூசி மிக முக்கியம்.  இத்துடன் உள்மருந்துகளும் எடுக்கப்படவேண்டும். R21/ மேட்ரிக்ஸ்-M- 77% குணப்படுத்தவல்ல தடுப்பூசி என்பர் ; இது RTS/S தடுப்பூசியைவிட ஆற்றல் கொண்டது.

மருத்துவம் என்னென்ன?

நோய்பற்றி  ” நோய்நாடி, நோய்முதல்நாடி, அதுதணிக்கும் வாய் ( வழி ) நாடி ” என்ற குறள் வழி அக்கறைப்படுவது முதன்மையானது. அடுத்து ஒவ்வொரு நோயாகப் பார்ப்போம்.

நிமோனியா தொற்றாமல் இருக்க,ஆரோக்கியமான ஆக்சிஜன் நிரம்ப உள்ள வாழுமிடம் முக்கியம். அதை அடுத்து சத்துணவும் தடுப்பூசியும் முக்கியம்.தடுப்பூசி மாதங்கள்  2 – 4 – 6 –  மற்றும் 12 முதல் 15-க்குள் என்று 4 டோஸ்கள் போடப்படவேண்டும். காய்ச்சலுக்கு அமாக்சிசிலின் சிறந்த மருந்து என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

வயிற்றுப் போக்கு வராமலும் பரவாமலும் தடுக்க, தேங்கும் அழுக்குநீர் இல்லாமல் சுற்றுப்புறம் தூய்மையாக இருக்கவேண்டும். தூய்மையான குடிநீர் அவசியம் தேவை. நோய் வந்தபிறகு ஓஆர்டி  ( ORT ) எனப்படும் வாய்வழி கரைசல் கொடுத்து உடலில் ஏற்படும் நீர்ச்சத்து வறட்சியை உடனுக்குடன் போக்கவேண்டும்; துத்தநாகம் ( ZINC ) கரைசல்  உள்ளுக்குக் கொடுக்கப்படுவதும் அவசியம் ; ரோட்டாவைரஸ் ( Rota Virus Vaccine ) தடுப்பூசி நோய்க் கடுமையைக் குறைக்கும். தவிர,  இத்துடன் சத்துணவு  தொடர்ந்து  கொடுக்கப்பட்டால் நிவாரணம்  கிடைக்கும்.

மலேரியா  என்பது தொற்றால் வருவது ;  கொசுக்களால் பரவுவது.  இதைத் தடுப்பதற்கு சுற்றுப்புறத் தூய்மை முக்கியம் ; மலேரியா தடுப்பூசி நிவாரணம் தரும். ஆப்பிரிக்காவில் ‘ சாபம் ‘ என்னும் அளவுக்கு  மக்கள் மலேரியா என்றால் அச்சப்படுகிறார்கள்.  இந்தியாவிலும் ஒடுக்கப்பட்ட மக்களை, பழங்குடி மக்களை, ஏழைகளை வாட்டிவதைக்கும் கொடிய நோயாகவே  மலேரியா நோய் நீடிக்கிறது.

இதையும் படியுங்கள்:

மேலே சொன்ன மூன்று தவிர, காலரா, குடல் கிருமி ஷிஜெல்லா, நுண்கிருமிகளால் வரும் கிரிப்டோஸ்போரிடையோசிஸ் போன்ற நோய்களிலிருந்தும் இளம் குழந்தைகள் காப்பாற்றப்பட வேண்டும்.

மருத்துவ ஆராய்ச்சியில் நீண்டகாலம் ஈடுபடும் களத்தில் உள்ள துறை ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் இந்தியா போன்ற நாடுகளுக்கான பொதுவான தீர்வை விவாதித்தபோது, உலகச் சுகாதார நிறுவனத்தைச் ( WHO ) சேர்ந்த , ” குடும்பம், மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதாரத்துறை துணை மேலாண்மை இயக்குனரான ஃப்ளாவியாபஸ்டெரோ இப்படி விமரிசிக்கிறார் : ” குறைந்த செலவுள்ள தீர்வுகள் பற்றி இவர்களிடம் போதிய கவனம் இல்லை .”

அவர் சுட்டிக் காட்டுவது சரிதான்.  ஆனால் சமூக–பொருளாதார ஏற்றத்  தாழ்வும், பெண்கள்–குழந்தைகள் பற்றிய சமூக  அலட்சியமும்தான்  முக்கியக் காரணங்கள் என்று  சொல்லவேண்டும்.

வாய்வீச்சு வீசும் ஒன்றிய மோடி அரசு செய்ததை மேலே பார்த்தோம்.  ”  பணம் செலவாகிறது  ” என்று பல லட்சம் பேரை வேலையை விட்டு நீக்கியது என்ன  வகை சமூக நீதி ?  ” பணம் செலவாகிறது ” என்று வருங்கால இளந்தளிர்களின் ஆரோக்கிய, பொதுநலத் துறையைக் கை கழுவுவது  மக்கள் விரோத அரசு அல்லாமல் வேறு என்ன ?

தீர்வு என்ன?

பிரச்சினைகளை ஒவ்வொன்றாக விவாதிக்கும்போது சமூகவிமரிசனங்களைச் சேர்த்தே நாம் மேலே பரிசீலித்தோம். மக்கள் நல ஜனநாயக அரசு அமைவதே நிரந்தரத்  தீர்வாக முடியும். இடையே, மக்கள்விரோத மோடி அரசு தடையாக நிற்பதால் அதை அப்புறப்படுத்தாமல் எவ்வளவு பாடுபட்டாலும் பலன் இருக்காது.

எதற்கெடுத்தாலும்   “சோசலிசம்  வழியாகக்  கம்யூனிசமே தீர்வு,  இடையே  எப்பாடுபட்டாவது  ஜனநாயகம் கட்டிப்  போராடவேண்டும் என்கிறீர்களே ! “ என்று ஒருவர் கேட்கலாம். முன்னோக்கி முதலடி எடுத்து வைக்கும்போதே இலக்கு  இல்லாமலா போகிறோம். அதுபோல மக்களின் எதிர்காலத்துக்காக, மக்கள் திட்டங்களை நிறைவேற்ற, மக்களே நிர்வாகத்தைச் செயல்படுத்தவேண்டும். எங்கேயோ குளிரூட்டப்பட்ட வண்டிகளிலேயே நகர்வலம் வரும்  அதிகாரவர்க்கம்  ஒருநாளும் மக்களின் சுகாதாரம் பற்றியும் சரி, குழந்தைகளின் உயிர்கள் பற்றியும் சரி கவனிக்காது. அதனால்தான் மக்கள் சீனத்தில் இலக்குகளை  அறிவித்துப் போராடி ஒவ்வொன்றாக நிறைவேற்றினார்கள்.

மக்கள் சீனத்தில் நாட்டுப்புறத்திற்கும் கொண்டுசெல்லப்பட்ட எளிய, சுகாதாரமான அறுவைச்சிகிச்சை மையங்கள்.

மக்கள் சீனத்தில் உள்ளூர் மக்கள் கமிட்டிகள் மூலம் நிர்வாகத்தை நடத்தினார்கள். அந்தச் சமூக முறைக்கு எதிரிகளாக யார் நின்றார்களோ அவர்கள்தான்  மக்கள் -அதிகாரத்தின்  உயிர்  தங்கியிருந்த  மக்கள் கம்யூன்களை அழித்து உருக்குலைத்து  சமூகத்தையும்  முதலாளித்துவமாக மாற்றிவிட்டார்கள். ஆனால்,  முன்பு அங்கே மக்கள் கமிட்டிகளின் அதிகாரம்  செயல்பூர்வமாக  அதிகாரம் செலுத்திவந்தபோது , சீனக் கலாச்சாரப் புரட்சியின் பகுதியாகத்  தொடங்கப்பட்ட சீன வட்டாரச் சுகாதாரத் துறையினர் ” அலங்காரங்கள் இல்லாத எளிய வெறுங்கால் மருத்துவர்களுக்கு ” ( Barefoot Doctors ), 10 லட்சம் பேருக்குப் பயிற்சி கொடுத்து கிராமங்களுக்கே அனுப்பி மருத்துவம் செய்யவைத்தார்கள். அது, சமூக அக்கறை கொண்ட மாவோ என்ற கம்யூனிஸ்ட் தலைமையில் அரசும் அரசாங்கமும்  செய்த மிகப்பெரிய  சிறந்த ஏற்பாடு.

மக்கள் மருத்துவரோடு ஆலோசிக்கும் தோழர் மாவோ.

மக்கள்  தாங்கள் விவாதித்துப் பொறுப்பேற்று நிறைவேற்றுபவை தான்   எதார்த்தமான தீர்வுகள் என்று  நிரூபித்தார்கள் . இப்போது சொல்லுங்கள், சரிதானே ?

ஆசியாவில் : சாவை எதிர்நோக்கியிருக்கும்  குழந்தைகள்! என்ற தொடர் கட்டுரை இந்த மூன்றாம் பாகத்துடன் முடிவடைகிறது.

ஆக்கம் : இராசவேல்

ஆதாரங்கள் :

*The Logical Indian,  10.10.2016.

* ncbl.nlm.nih.gov.

* bbc தமிழ்ச் செய்திகள்.

* bbc.com.tamil.global.

* மக்கள் அதிகாரம்.காம், புமாஇமு-தமிழ்நாடு

ஆர்ப்பாட்டம், அறிவிப்பு.

* ourworldindata.org.

* blogforumias.com, 14.1.23.

* Barefoot Doctorsand Health Care in Mao Era.,

Facts and details.com.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here