ஆராய்ச்சி படிப்பை (பிஎச்.டி) மேற்கொள்ளும் பெண்களுக்கு யுஜிசி-யால் வழங்கப்படும் சாவித்திரிபாய் ஜோதிராவ் பூலே கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கக் கடந்த இரண்டு ஆண்டுகளாக அறிவிப்பு வெளியாகாதது மாணவிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
குடும்பத்தில் ஒற்றைப் பெண் பிள்ளையாக இருப்பவர்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல்கலைக்கழக மானியக் குழுவால் (UGC) 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சாவித்திரிபாய் ஜோதிராவ் பூலே கல்வி உதவித்தொகை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் படி, முழு நேர ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் பெண்களுக்கு 5 வருடங்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
சமூக அறிவியல் பாடங்களில் பெண்களுக்கான கல்வியை ஆதரிப்பது, சிறு குடும்ப முறையை அங்கீகரிப்பது, சமூகத்தில் ஒற்றைப் பெண் குழந்தைகளை அங்கீகரிப்பது, ஒரு பெண் குழந்தை வழக்கம் மற்றும் சமூகத்தில் ஒற்றை பெண் குழந்தைகளை ஊக்குவிப்பது போன்ற உயரிய நோக்கங்களுடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டிற்கு இதற்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடத் துறைகளில் முழு நேர ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும், குடும்பத்தில் ஒரே பெண் பிள்ளையாக உள்ளவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவிகளுக்கு முதல் 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.31,000, அடுத்த 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.35,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டது. அதன்படி, முதல் இரண்டு வருடங்களுக்கு மாதம் ரூ.37,000, அடுத்த 3 வருடங்களுக்கு மாதம் ரூ.42,000 என நிர்ணயிக்கப்பட்டது.
சாவித்திரிபாய் ஜோதிராவ் பூலே கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் 2022-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி முதல் அக்டோபர் 10-ம் தேதி வரை பெறப்பட்டது. நாடு முழுவதும் இருந்து கல்வி உதவித்தொகைக்கு 1,144 மாணவிகள் விண்ணப்பித்த நிலையில், 1,129 மாணவிகள் இந்த திட்டத்தின் படி தேர்வு செய்யப்பட்டனர். அதுவே இந்த திட்டத்தில் செயல்படுத்தப்பட்ட கடைசி நடவடிக்கையாக உள்ளது. அதனைத்தொடர்ந்து, 2023-24 மற்றும் 2024-25 ஆகிய இரண்டு கல்வி ஆண்டிற்கும் இந்த திட்டத்தில் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு யுஜிசி-யால் வெளியிடப்படவில்லை.
மோடி அரசின் பெண்கள் இட ஒதுக்கீடு: தாகத்தை தணிக்க உதவாத கானல்நீர்!
யுஜிசி-யால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க மாணவிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காத்துக்கொண்டு இருக்கும் நிலையில், இதற்கான அறிவிப்பு வெளியாகவும் இல்லை, அதற்கான பதிலும் சரியான முறையில் வழங்கப்படவில்லை என்பது மாணவிகளின் புகாராக உள்ளது.
ஏன் வந்தது சாவித்ரி பாய் பூலே உதவித்தொகை?
வரலாற்றை ரீதியாக. பார்ப்பனர்கள் மட்டுமே கல்வி கற்கமுடியும் என்கிற பார்ப்பனிய ஒடுக்குமுறையினால், வேறு எந்த சாதியினரும் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. பள்ளிகள் உருவாவதற்கு முன்னர் இருந்த குருக்குலங்களிலும் கூட பார்ப்பனர் அல்லாத எவருமே சேர்த்துக் கொள்ளப்படவில்லை. அதிலும், பார்ப்பன ஆண்கள் மட்டுமே கல்வி கற்கிற உரிமையினைப் பெற்றிருந்தார்கள்.
இப்படியான சூழலில் தான் சாவித்ரிபாய் பூலேவைத் திருமணம் செய்திருந்த ஜோதிராவ் பூலே, தன்னுடைய மனைவிக்கு வீட்டிலேயே கல்வி கற்றுக்கொடுத்தார். அதுகுறித்து கேள்விப்பட்டதும், பார்ப்பனர்கள் தங்களது படைசூழ ஜோதிராவ் பூலேவின் வீட்டுவாசலில் வந்து நின்று, ஜோதிராவ் பூலேவின் அப்பாவிடம் சண்டையிட்டு, ஜோதிராவ் பூலேவையும் அவரது மனைவியான சாவித்ரிபாய் பூலேவையும் வீட்டைவிட்டே விரட்ட வைத்தனர். அதாவது, சொந்த மகனையும் மருமகளையுமே வீட்டை விட்டு துரத்தும் அளவிற்கு ஜோதிராவ் பூலேவின் அப்பாவிற்கு பார்ப்பனர்கள் நெருக்கடி கொடுத்தனர். எதற்காக? பார்ப்பனர்கள் அல்லாத ஒரு பெண் படிப்பதைத் தடுத்து நிறுத்துவதற்காக.
சூத்திரர்களும், பஞ்சமர்களும் வேதத்தின் படியும், புராண, இதிகாசங்களின் படியும், கல்வி கற்கவே முடியாது என்ற நிலையை மாற்றுவதற்கு இரண்டு, மூன்று நூற்றாண்டுகள் போராடி இந்த அளவிற்கு கல்வி கற்கும் உரிமையை பெற்றுள்ளோம். சாவித்திரிபாய் ஜோதிராவ் பூலே கல்வி உதவித்தொகை எந்த நோக்கத்தில் கொண்டு வரப்பட்டதோ அதற்கு முட்டுக்கட்டையாக மோடியின் அரசு செயல்பட்டுக் கொண்டு இருப்பதை நம்மால் உணர முடிகிறது. இதன்மூலம் உயர்கல்வி என்ற கனவை நோக்கிய பயணத்தில் இருக்கும் ஒற்றை பெண் பிள்ளைகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.
கல்வியை கார்ப்பரேட்மயமாக்கும் நோக்கில் மோடி அரசு பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சாதி, சிறுபான்மையினர், பெண்கள் எனப் பல்வேறு பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகைகளை ரத்து செய்யக் துடிக்கிறது.
பாசிச மோடி அரசின் இத்தகைய நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடிக்க மாணவர் அமைப்புகள், ஆசிரியர் சங்கங்கள், பெற்றோர்கள் என ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றிணைந்து போராடுவோம்.
- பரூக்