வீட்டுக்கு வெளியே அடிமை சேவகம் செய்ய சூத்திரர்கள். வீட்டுக்கு உள்ளே அடிமை சேவகம் செய்ய பெண்கள். பார்ப்பனீயத்தின் அடிப்படை இதுதான். சுற்றி இருப்பவர்களை கடவுளின் பெயரால் அடிமைப்படுத்தி, தாங்கள் அடிமைப்பட்டு கிடக்கிறோம் என்ற உணர்வே வராமல் தங்களுக்கு சேவை செய்ய வைப்பது.
அந்த வகையில், பெண்களை அடிமைப்படுத்தும் விதத்தில் பார்ப்பனர்கள் தங்கள் சாஸ்திரங்களிலும், புராணங்களிலும் என்னென்ன கருத்துக்களை புகுத்தினார்கள் என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம்.
குழந்தைத் திருமணம்
பெண் குழந்தைக்கு மிகவும் இளம் வயதிலேயே திருமணம் செய்து வைப்பது, அவளை அடிமைப்படுத்த எளிமையான வழி. அவள் தனது வாழ்வில் எடுக்க வேண்டிய முக்கியமான முடிவு தன் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது. அந்த முடிவையே அவளிடமிருந்து பறிக்க என்ன வழி? தானே சிந்தித்து முடிவெடுக்கும் வயதை அவள் எட்டுவதற்குள், தங்கள் முடிவை அவள் மேல் திணிப்பது! யாராவது எதிர்த்தால் என்ன செய்வது? சாஸ்திரத்திலேயே இருக்கிறது என்று காட்டி விடலாம் என்று முடிவெடுத்த பார்ப்பனர்கள், அதை ஒன்று விடாமல் எல்லா சாஸ்திரங்களிலும் எழுதி வைத்தார்கள். எல்லா புராண கதைகளிலும் எழுதி வைத்தார்கள். அதிலிருந்து சிலவற்றை இப்போது பார்ப்போம்
பெண் குழந்தைகளை பருவமடைவதற்கு முன்பே திருமணம் செய்து கொடுத்து விட வேண்டும் என்று கவுதம தர்ம சாஸ்திரம், 18ஆம் அத்தியாயம் 21ஆம் சுலோகம் கூறுகிறது. அவ்வாறு செய்யாவிட்டால் பெண்ணின் தந்தைக்கு பாவம் வந்து சேரும் என்றும் எச்சரிக்கிறது. அந்த பெண் குழந்தை, ஆடைகளை அணியும் வயதுக்கு வரும் முன்பே திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்றும் கூறுகிறது.
பவுதாயன தர்மசாஸ்திரத்தின் 4ஆம் காண்டம், முதல் அத்தியாயம், 11ஆம் சுலோகமும் அவ்வாறே கூறுகிறது. பருவமடைந்த பிறகு பெண் குழந்தை வீட்டிலேயே வைத்திருக்க கூடாது என்று எச்சரிக்கிறது.
மனுஸ்ம்ரிதி சுலோகம் 9.94 இவ்வாறு கூறுகிறது. “30 வயது ஆண், 12 வயது பெண்ணை திருமணம் செய்யலாம். 24 வயது ஆண், 8 வயது பெண்ணை திருமணம் செய்யலாம்”
மகாபாரதம் அனுசாசன பர்வம், அத்தியாயம் 44, சுலோகம் 14: “30 வயது ஆண், 10 வயது பெண்ணை திருமணம் செய்ய வேண்டும். 20 வயது ஆண், 7 வயது பெண்ணை திருமணம் செய்ய வேண்டும்”
இந்த மொழிபெயர்ப்பு பாஜக கட்சி வலைத்தளத்தில் இருக்கிறது.
தேவி பாகவதம், சுலோகம் 3.27.40: ஒரு தந்தை, தன் மகள் 10 வயதை தாண்டி விட்டதாகவும், திருமண வயதை கடந்து விட்டதாகவும் புலம்புவதாக வருகிறது .
ஸ்கந்த புராணம், சுலோகம் 3.3.18.4: மனைவியை இழந்த ஒரு பார்ப்பனருக்கு, தனது 12 வயது மகளை ஒரு தந்தை கொடுத்ததாக வருகிறது.
ராமனுக்கும் சீதைக்கும் திருமணம் நடக்கும் போது, ராமனின் வயது 12 என்றும், சீதையின் வயது 6 என்றும் சாஸ்திரிகள் இந்த காணொளியில் கூறுகிறார்.
இந்த தகவல், வால்மீகி இராமாயணத்தில் நேரடியாக சொல்லப்படவில்லை. இரண்டு இடங்களில் சொல்லப்பட்ட தகவல்களை வைத்து, திருமணத்தின் போது அவர்களின் வயது என்ன என்பதை புரிந்து கொள்ளலாம். முதலில், ஆரண்ய காண்டம், 47ஆம் சர்கம், 4ஆம் சுலோகத்தில், தான் அயோத்தில் 12 ஆண்டுகள் வாழ்ந்ததாக சீதை சொல்வது வருகிறது.
அடுத்ததாக, 10 மற்றும் 11ஆம் சுலோகங்களில், அயோத்தியை விட்டு காட்டுக்கு செல்லும் போது, ராமனுக்கு 25 வயது என்றும், தனக்கு 18 வயது என்று சீதை கூறுகிறாள்.
12 ஆண்டுகள் அயோத்தியில் வாழ்ந்ததாகவும், 18 வயதில் அயோத்தியில் இருந்து காட்டுக்கு கிளம்பியதாகவும் சீதை சொல்வதை வைத்து, அவள் 6 வயதில் திருமணம் முடிந்து அயோத்திக்கு வந்தாள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
மேலே உள்ள சுலோகங்களை இந்த வலைப்பக்கத்தில் காணலாம் https://valmikiramayan.net/utf8/aranya/sarga47/aranya_47_frame.htm
அண்ணலும் நோக்கினார், அவளும் நோக்கினாள் என்ற வரிகளை கேட்கும் போது, நாம் இருவரையும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக கற்பனை செய்திருப்போம். ஆனால் ஒரு 12 வயது சிறுவனும், 6 வயது சிறுமியும் அந்த இடத்தில் இருந்தார்கள் என்பது கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அசிங்கம்.
ஸ்ரீமத் பாகவதத்தில், கிருஷ்ணன் ருக்மணியை கடத்தி சென்று திருமணம் செய்த நிகழ்வு வருகிறது. அதிலும் இதே கதைதான். கடத்தி செல்லப்படுவதற்கு முன்பு, ருக்மணியின் அழகை வர்ணிக்கும் வரிகளில், அவர் பருவ வயதை கூட எட்டவில்லை என்ற செய்தியும் சொல்லப்படுகிறது.
12 வயது கூட நிரம்பாத ஒரு பெண் குழந்தையை கடத்தி சென்று திருமணம் செய்ததை வீரதீர சாகசம் போல கதாகாலட்சேபம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த சிறுமியின் அழகில் மயங்கி சுற்றி நின்றவர்கள் அவளை ஆசையோடு பார்த்ததாக 53ஆம் சுலோகம் கூறுகிறது.
56ஆம் சுலோகத்தில், சுற்றியிருந்த ஓநாய்களிடமிருந்து தன் இரையை பிடிங்கி செல்லும் சிங்கத்தை போல, ருக்மணியை கிருஷ்ணன் திருடி சென்றான் என்று இருக்கிறது.
மேலே பகிரப்பட்ட புத்தகத்தை இந்த வலைப்பக்கத்தில் படிக்கலாம் https://archive.org/details/in.ernet.dli.2015.142278/page/n223/mode/1up
இதுவரை பகிரப்பட்ட தரவுகளின் மூலம், குழந்தை திருமணம் என்பது ஏதோ சமூகத்தில் ஒரு சிலர் அறியாமையால் செய்த தவறு அல்ல என்பதும், அது தர்ம சாஸ்திரங்கள் மற்றும் புராணங்களின் மூலம் சமூகத்தில் புகுத்தப்பட்டது என்பதும் தெரிய வருகிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சமூகம் அதை ஆதரித்தது, இப்போது யார் அதையெல்லாம் ஆதரிக்கிறார்கள் என்ற கேள்வி எழலாம். இன்னமும் அதை ஆதரிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சிகரமான தகவல்.
இந்த காணொளியில் பிரம்மஸ்ரீ பரணீதர சாஸ்திரிகள் 8 வயதில் பெண் குழந்தைக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
காஞ்சி சங்கராச்சாரியாரின் தெய்வத்தின் குரல் நூலில், எப்படி சிறுவர்களுக்கு 8 வயதில் உபநயனம் என்கிற பூணூல் அணிவிக்கும் சடங்கை செய்கிறோமோ, அதே போல பெண் குழந்தைகளுக்கு 7 வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்கிறார். திருமணமே பெண்களுக்கான உபநயனம் என்கிறார்.
இதற்கு அவர் சொல்லும் காரணங்கள்தான் அதிர்ச்சிகரமானது. பெண்கள் சிந்தித்து கேள்வி கேட்கும் வயது வருவதற்கு முன்பே ஒருவனை காட்டி “இவன்தான் உன் குரு. இவன்தான் உன் தெய்வம்” என்று மனதில் பதிய வைத்து விட வேண்டுமாம். வளர்ந்த பிறகு அவர்கள் சிந்திக்க துவங்கி விட்டால் அதை செய்வது கடினமாகி விடுமாம்!
பெண்களுக்கு மட்டும்தான் 8லிருந்து 12 வயதுக்குள் மணம் முடித்து விட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. ஆனால், ஆண்களுக்கு அவர்கள் உபநயனம் முடிந்து, குருகுல கல்வி முறையில் பிரம்மச்சரியத்தை கடை பிடிக்க வேண்டும் என்று தர்மசாஸ்திரங்கள் கூறுகிறது. ஆகவே ஆண்களுக்கு திருமணம் பெரும்பாலும் 16 வயதுக்கு மேலேயே நடந்து வந்தது. எடுத்துக்காட்டாக, ராமகிருஷ்ண பரமஹம்சர் தனது 23ஆம் வயதில், 5 வயது சாரதா தேவியை மணம் முடித்த செய்தி அவரது வாழ்க்கை வரலாறாக எழுதப்பட்ட The Gospel Of Sri Ramakrishna என்ற நூலில் இருக்கிறது.
https://www.ramakrishnavivekananda.info/gospel/introduction/marriage.htm
அப்படியென்றால் ஆண்கள் மட்டும்தான் குருகுலத்தில் சென்று கல்வி கற்க அனுமதி இருந்ததா? பெண்களுக்கான கல்வி எப்படி இருந்தது?
பெண்களுக்கு கல்வி கூடாது! சுதந்திரம் கூடாது!
பார்ப்பனர்களை பொறுத்தவரை கல்வி என்பது வேதக்கல்வி மட்டுமே. அந்த வகையில், சூத்திரர்கள் மற்றும் பெண்களுக்கு வேதக்கல்வி கூடாது என்று ஆதிசங்கரர் எழுதிய தைத்திரிய உபநிஷத் உரையில் இருக்கிறது. அதன் மொழிபெயர்ப்பு நூலின் 462ஆம் பக்கத்தில் காணலாம்.
இந்த நூலை தரவிறக்கம் செய்ய https://drive.google.com/file/d/1WmXyoxFuHBikEbADn4MqJjY1ggGkZyZW/view
இந்த வலைப்பக்கத்தில் இருந்தும் படிக்கலாம் https://www.wisdomlib.org/hinduism/book/the-taittiriya-upanishad/d/doc79819.html
பெண்களை படிக்க வைத்தால் அவர்களது மார்க்கம் மாறிப் போய் விடும் என்று வேத விற்பன்னர் ஒருவர் கூறுகிறார் கேளுங்கள்.
பெண்கள் வீட்டு வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும் என்பதுதான் இவர்களின் சட்டம். அவர்கள் சுதந்திரமாக இருக்கக்கூடாது, வேலைக்கு சென்று சம்பாதிக்க கூடாது, ஆணுக்கு அடிமையாக வீட்டில் இருக்க வேண்டும் என்பதே இவர்கள் விருப்பம். இதை காஞ்சி சங்கராச்சாரியார் தனது தெய்வத்தின் குரல் நூலில் இவ்வாறு கூறுகிறார்.
மேலே குறிப்பிட்ட பகுதியை காஞ்சி சங்கர மடத்தின் வலைத்தளத்தில் படிக்கலாம் http://www.kamakoti.org/tamil/3dKK52.htm
இன்னும் ஒரு படி மேலே சென்று, “சித்த விகாரங்களை தூண்டி விடுகிற சூழ்நிலையில்” பெண்களை பெற்றோர் வேலைக்கு அனுப்புகிறார்கள் என்றும், அவர்களுக்கு “குளிர் விட்டு விட்டது” என்றும் “விவஸ்தை கெட்டு விட்டது” என்றும் கூறுகிறார்.
பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுதும் இன்னொருவரை நம்பியே வாழவேண்டும் என்பதுதான் சாஸ்திரங்களும், புராணங்களும், மடாதிபதிகளும் கூறும் நீதி. பெண் திருமணத்துக்கு முன் தன் தந்தையின் பாதுகாப்பில் இருக்க வேண்டும், திருமணத்துக்கு பிறகு கணவனின் பாதுகாப்பில் இருக்க வேண்டும், கணவனுக்கு பிறகு மகனின் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்று அனைத்து பார்ப்பன நூல்களும் கூறுகிறது. அவர்களை பொறுத்த வரையில் பெண் என்பவள் ஒரு பொருள்தான் என்பது இந்த கருத்தின் மூலம் விளங்கும். நாங்கள் பெண்ணை பாதுகாக்கிறோம் என்று அவர்கள் திரும்ப திரும்ப கூறுவது பெண் தன்னை பாதுகாத்துக்கொள்ள வலிமையில்லாதவள் என்ற கருத்தை வலியுறுத்தவே.
இந்த காணொளியில், பெண்கள் தங்கள் பெயரில் வங்கிக்கணக்கு கூட வைத்துக்கொள்ளக் கூடாது என்று இவர் கூறுவதை கேளுங்கள்.
இஸ்கான் நிறுவனர் சுவாமி பிரபுபாதா, அதே கருத்தை வலியுறுத்துகிறார். பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கூடாது என்பதுதான் இவர்கள் அனைவரின் கருத்தும்.
காஞ்சி சங்கர மடத்தின் பரணீதர சாஸ்திரிகள், பெண்கள் சுதந்திரமாக எப்போதும் இருக்கக்கூடாது என்று கூறும் காணொளி.
மனுஸ்ம்ரிதியின் சுலோகம் 9.3: பெண்கள் பருவ வயதை எட்டும் வரை தந்தையின் பாதுகாப்பில் இருக்க வேண்டும். திருமணத்துக்கு பிறகு கணவனின் பாதுகாப்பில் இருக்க வேண்டும். முதுமை அடைந்த பிறகு மகன்களின் பாதுகாப்பில் இருக்க வேண்டும். அவர்கள் சுதந்திரமாக இருக்கக் கூடாது.
(தொடரும்…)
நன்றி: பூதம் Blogs