னரக இயந்திரங்களை இயக்குவது, எழுவூர்தியில் பறப்பது போன்ற செயல்களை பெண்கள் செய்யும் போது, அவர்களை பாராட்டும் விதமாக, ‘இனி பெண்களால் செய்ய முடியாத செயல்களே இல்லை’ என்று ஆண்கள் கூறுவார்கள். இந்தப் பாராட்டில் ஆணும் பெண்ணும் சமமல்ல எனும் கருத்து கண்ணுக்குத் தெரியாமல் இழையோடி இருக்கும். வரலாற்று வழியில் பார்த்தால் பெண்களை அடக்கி ஒடுக்கி சமமல்லாத நிலையை ஏற்படுத்தியவர்கள் ஆண்கள் தான் என்பதற்கு அண்மை எடுத்துக் காட்டாய் வந்திருப்பது தான் மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டம்.

கடந்த செப்டம்பர் 19ம் தேதி மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு வரைவு தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. (இரண்டு பேர் மட்டும் எதிர்த்து வாக்களித்தார்கள்)  பின்னர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதலுக்குப் பிறகு சட்டமாகவும் ஆகி விட்டது. ஆனால் இந்த சட்டம் இதுவரை கடந்து வந்த பாதையும் கடினமானது, இனி கடக்கப் போகும் பாதையும் கடினமானது.

“பெண்கள் ஒவ்வொரு துறையிலும் ஆண்களை வெளியேற்ற முயற்சிப்பார்கள். அதில் இருந்து ஆண்களுக்குச் சட்டரீதியாகப் பாதுகாப்பு வழங்க வேண்டும்” இப்படிப் பேசியவர் ரேணுகா ராய் எனும் பெண். அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன், நாடாளுமன்றமாக கருதப்படாத அன்றைய அரசியலமைப்புச் சபையில் உறுப்பினர்களாக இருந்த 389 பேரில் 15 பேர் பெண்கள், அந்த 15 பேரில் ஒருவர் தான் ரேணுகா ராய்.  பெண்களுக்கு இந்த சபையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது தான் அந்த சபையில் உறுப்பினராக இருந்த ரேணுகா ராய் இந்தக் கருத்தை பதிவு செய்திருக்கிறார். அன்றிலிருந்து அந்த எதிர்ப்பு தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு உரிய முதன்மை அளிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக பேசப்பட்டு வந்திருந்தாலும் 1992ல் தான் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களும் இடம்பெறும் வண்ணம் 33 விழுக்காடு இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இதற்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 96ல் தேவகவுடா பிரதமராக இருக்கும் போது முதன்முதலாக நாடாளுமன்றத்தில் 33 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் வரைவு கொண்டுவரப்பட்டது. ஆனால் அது தோற்கடிக்கப்பட்டது. தொடர்ந்து 1998,1999, 2002, 2003 ஆகிய ஆண்டுகளில் வாஜ்பேயி இருக்கும் போது கொண்டுவரப்பட்டு போதிய ஆதரவு இல்லாததால் வெற்றியடையவில்லை.

இப்படி கொண்டுவரப்படும் போதெல்லாம் அந்த வரைவு தோற்கடிக்கப்படுவதற்கு முன்வைக்கப்பட்ட காரணங்கள் இதுதான். அந்த வரைவில் பிற்படுத்தப்பட்டோருக்கான தனி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்ற நியாயமான காரணத்தினால் நிறைவேற்றப்படவில்லை. அதாவது, பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பதில் உயர்சாதியைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டும்தான் பங்களிக்கும் நிலை ஏற்படும். உள் ஒதுக்கீடாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு என்று தனி ஒதுக்கீடு செய்தால்தான் சட்ட வரைவை ஏற்றுக் கொள்வோம் என்று லல்லு பிரசாத் யாதவ், முலயாம் சிங் யாதவ், நிதீஷ் குமார் போன்ற தலைவர்கள் உறுதியாக இருந்ததனால் சட்டவரைவை நிறைவேற்ற முடியாமல் போனது.

பின்னர் 2008ல் மன்மோகன் காலத்தின் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு 2009ல் நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பட்டது. அதன் அறிக்கைக்குப் பிறகு 2010ல் அமைச்சரவையின் ஒப்புதலோடு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அப்போதும் இரண்டில் ஒரு பங்கு பெரும்பான்மை இல்லாததால் மக்களவையில் நிறைவேறவில்லை. அது தான் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது எடுத்துக் கொள்ளப்பட்டு இரண்டு பேரின் எதிர்ப்பைத் தவிர ஏனைய அனைவரின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மக்கட்தொகையில் சரிபாதியாக இருக்கின்ற பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை ஒப்புதல் அளவில் ஏற்றுக் கொள்ளவே 27 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.

இதையும் படிக்க:

 மோடியின் தெலுங்கானா டிராமா!

குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு இன்று சட்டமாக்கப்பட்டு விட்டாலும், அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் இந்த இடஒதுக்கீடு நடமுறைப்படுத்தப்படாது. அதற்கு அதிலிருக்கும் விதிகளே தடங்கலாக இருக்கின்றன. 2026 ஆம் ஆண்டுக்கு பிறகு வரும் மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுசீரமைப்பு செய்த பிறகு, அதிகரிக்கப்பட்ட தொகுதியின் எண்ணிக்கை அடிப்படையில் தான் இந்த பெண்கள் இட ஒதுக்கீட்டு சட்டம் நடைமுறைக்கு வரும் என்கிறது அந்த இடஒதுக்கீடு சட்டத்தின் விதி. ஆக நாடாளுமன்றத்தில்  சட்டமாக்கப்பட்டு விட்டாலும் இது நடைமுறைக்கு வருவதற்கு இன்னும் 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு பிறகும் நடத்தப்பட வேண்டிய மக்கட்தொகை கணக்கெடுப்பு கடந்த 2021ஆம் ஆண்டு நடத்தப்படவில்லை. கொரோனா ஊரடங்கு அதற்கு காரணமாக முன்வைக்கப்பட்டது. ஆனால் மெய்யான காரணம் அதுவல்ல. பாஜகவின் கூட்டணிக் கட்சிகளாக இருந்த சில கட்சிகளே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வற்புறுத்தின. ஜாதிவாரி கணக்கெடுப்பு தத்துவார்த்த அடிப்படையில் பாஜக, ஆர்எஸ்எஸ் ன் அரசியல் திசைவழிக்கு வேட்டு வைக்கும் கணக்கெடுப்பாக அமையும். அதனால் தான் மக்கட்தொகை கணக்கெடுப்பை முடிந்தவரை தள்ளிப் போட்டு வருகிறது. ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகான இந்த ஓராண்டுக்கும் அதிகமான இந்தக் காலத்தில் மக்கட்தொகை கணக்கெடுப்பை நடத்த எந்த முயற்சியையும் ஒன்றிய அரசு எடுக்கவில்லை என்பதே அதற்கான சான்று.

ஒருவேளை மக்கட்தொகை கணக்கெடுப்பு நடத்தி முடித்தாலும் அதற்கு அடுத்த மிகப்பெரும் சிக்கலாக இருப்பது தொகுதிகள் மறு சீரமைப்பு. ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கட்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகள் மறு சீரமைக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையில் 1952, 62, 72 ஆம் ஆண்டுகளில் தொகுதிகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டன. 76ஆம் ஆண்டு 2000 ஆண்டு வரை தொகுதி மறு சீரமைப்பு தள்ளி வைக்கப்பட்டது. காரணம் அப்போது நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை சில மாநிலங்கள் ஒழுங்காக கடைப்பிடித்து மக்கட் தொகை பெருக்கத்தை கட்டுக்குள் கொண்டு வந்தன. பல மாநிலங்கள் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை கண்டு கொள்ளாததால் அந்தந்த மாநிலங்களில் மக்கட்தொகை அதிகரித்தது. இதனால் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தொகுதிகள் மறு சீரமைப்பை மேற்கொண்டால் அவற்றின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். அதேநேரம் உபி, ம.பி, பீஹார் போன்ற மாநிலங்களில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்தச் சிக்கலின் காரணமாக தொகுதிகள் மறுசீரமைப்பு தள்ளிப் போடப்பட்டது.

2009-10களிலும் இந்த தொகுதிகள் எண்ணிக்கை குறைவதற்கு எதிரான எதிர்வினை தீவிரமாக இருந்ததால் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமல் எல்லையை மட்டும் சற்றே மாற்றி தொகுதி மறு சீரமைப்பை செய்து முடித்தார்கள். அப்போது காங்கிரஸ் தங்கள் கட்சிக்கு ஏற்ற முறையில் தொகுதிகளின் எல்லையை மாற்றியமைத்ததாக பாஜக குற்றம் சாட்டியது. இந்த சிக்கல்கள் காரணமாகவே 2026 வரைதொகுதிகள் மறுசீரமைப்பை தள்ளிப்போட்டு திருத்தம் கொண்டு வந்தார்கள். அந்த அடிப்படையில் 2026க்கு பிறகு நடக்கவிருக்கும் மக்கட்தொகை கணக்கெடுப்பைக் கொண்டே தொகுதிகள் மறுசீரமைப்பைச் செய்ய வேண்டும்.

எனவே, 2031ல் தான் மக்கட் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். இந்தப் பணி நிறைவடைந்து அலுவல் அடிப்படையிலான முடிவுகள் கிடைக்க 2 ஆண்டுகள் ஆகும். அதன் பிறகு தொகுதிகள் மறு சீரமைப்புக் குழு அமைக்க வேண்டும். கடந்த முறை சீரமைப்புக் குழு எண்ணிக்கையை மாற்றாமல் எல்லையை மட்டும் மாற்றி சீரமைப்பை முடிக்க சற்றேறக் குறைய ஐந்து ஆண்டுகள் ஆனது. தற்போது கடந்த முறையை விட மக்கட்தொகை அதிகம் என்பதால் இன்னும் அதிக காலம் பிடிக்கலாம். ஆகவே அலுவல் ரீதியாக இந்தப் பணிகள் முடிய தோராயமாக 2038 ஆகிவிடும். அதன் பிறகு நடக்கும் தேர்தலில் தான் பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும்.

இதையும் படிக்க:

♦ பட்ஜெட் 2022 : பெரும்பாலான மக்களை பாதிக்கும் பட்ஜெட்! கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகள் வழங்கும் பட்ஜெட்!

♦ ஓயாத மோடியின் வாய்சவடால்! சாதித்தது என்ன?

ஆனால், மக்களவை தொகுதிகள் குறைவதற்கு வாய்ப்பிருக்கும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிராக இப்போதே குரல் கொடுக்கத் தொடங்கி விட்டன. ஏற்கனவே 72ல் இரண்டு தொகுதிகளை இழந்த தமிழ்நாடு இந்தமுறை 8 தொகுதிகள் வரை குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே, மேற்கண்ட மாநிலங்கள் ஒருபோதும் தொகுதிகள் மறு சீரமைப்புக்கு ஒப்புதல் தெரிவிக்காது. ஆக, தொகுதிகள் மறு சீரமைப்பு மீண்டும் தள்ளிப்போகவே வாய்ப்பு இருக்கிறது. அப்படி என்றால் பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தின் நிலை மிகப்பெரிய கேள்விக் குறியாகும். இந்த வகைகளில் நின்று பார்த்தால், இப்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் பெண்கள் இட ஒதுக்கீடு சட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு வாய்ப்பு இல்லாத உள்ளடக்கத்தில் பெரும் ஓட்டைகளைக் கொண்டிருக்கும் உள்ளீடற்ற ஒன்றாகவே இருக்கிறது.

இந்த இடத்தில் இன்னொரு முதன்மையான கேள்வி எழுகிறது. நடைமுறைப்படுத்த முடியாத, நடைமுறைப்படுத்தினாலும் அதற்கு இன்னும் 15 ஆண்டுகள் ஆகும் ஒரு சட்டத்தை பாஜக இப்போது கொண்டுவரவேண்டிய தேவை என்ன? முதல் காரணம் தேர்தல் என்பது அனைவருக்கும் தெரியும். பாஜகவின் பொருளாதார, நிர்வாக ஆளுமை வட மாநிலங்களில் கூட பல்லிளித்து விட்டது வெளிப்படையாக தெரிகிறது. இந்து மதவெறி கூச்சல்கள் வடமாநிலங்களில் இன்னும் நிரலில் இருந்தாலும் பழைய காலங்களின் அளவுக்கு வீரியமாக இல்லை. தென் மாநிலங்களிலோ பாஜக நினைக்கும் அளவுக்கு எடுபடாது என்பது பாஜகவுக்கே தெரியும். இந்தியா கூட்டணியோ உடைவதாக தெரியவில்லை. எனவே தான் விஸ்வகர்மா போன்ற வேலைவாய்ப்பு திட்டங்கள், சந்திரயான் போன்ற அறிவியல் திட்டங்கள், எரிவளி உருளை விலை குறைப்பு போன்ற பொருளாதார பலன் கொடுக்கும் திட்டங்கள், பெண்கள் இடஒதுக்கீடு போன்ற கவர்ச்சி திட்டங்களை முன்வைக்கிறது. இவை போதுமான பயனளிக்காது என்பதை கணித்து ’இந்துத்துவா’ எனப்படும் பார்ப்பன மதவெறி அரசியல் மூலமாக தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளது..

எனினும் இந்த பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டுவருவதற்கு இன்னொரு முதன்மையான காரணமும் இருக்கிறது. ஜி20 கூட்டமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகித்தது. இது பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்டதால் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. ஆனால், இவ்வாறு விளம்பரப் படுத்தப்படாமல் யாருக்குமே தெரியாமல் பெண்கள் நிலை குறித்த ஐக்கிய நாடுகள் ஆணையம் (United Nations Commission on the Status of Women) எனும் அமைப்புக்கு 2021- 24 வரையிலான நான்கு ஆண்டுகளுக்கு இந்தியா தலைமை உறுப்பு நாடாக இருக்கிறது. தான் தலைமை உறுப்பு நாடாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில், பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தைக் கொண்டு வருவதன் மூலம் பன்னாட்டளவில் தங்களுக்கு மரியாதை கிடைக்கும் என பாஜக கருதுகிறது. மேற்கண்ட அரசியல் காரணங்களுக்காகத் தான் நடைமுறைப்படுத்துவதற்கு இன்னும் 15 ஆண்டுகள் ஆகும் என்று தெரிந்தும் அவசரமாக இந்த சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. ஆக, பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தை பாஜக கொண்டு வந்ததன் நோக்கம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது அல்ல என்பது தெளிவாகி விட்டது.

பன்னாட்டளவில் நாடாளும் உறுப்புகளில் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இடத்தின் அளவு கியூபாவில் அதிகம், சற்றேறக் குறைய 52 விழுக்காடு. பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷில் கூட இந்தியாவின் 15 விழுக்காடை விட அதிகம். இந்த நிலையில் செயல்பாட்டுக்கு உறுதியில்லாத ஓர் இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றிவிட்டு நம்மால் பெண்களை மதிப்பதாக கருதிவிட முடியுமா? 27 ஆண்டுகளாக இந்த திட்டத்துக்கு ஆண்கள் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதேநேரம் இந்த உரிமை குறித்து மக்களுக்கு என்ன புரிதல் இருக்கிறது? நாடாளும் இடத்தில் ஆண்களைப் போல் பெண்களுக்கும் உரிமை இருக்கிறது என்பதை மறுத்துக் கொண்டிருக்கும், அது குறித்த புரிதல் இல்லாமல் இருக்கும் நாம் தான் பெண்கள் பேரூந்து ஓட்டுவதை பெண்களால் எதையும் செய்ய முடியும் என்று கூறி பாராட்டுவதாய் நினைத்து ஆணாதிக்கத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இன்னொருபுறம் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டிருப்பதால் என்ன விளைவு ஏற்பட்டு விட்டது? என்று கேட்போரும் இருக்கிறார்கள். தொடக்கத்தில் பெண்களின் பெயரால் கணவரோ, அப்பாவோ தான் உள்ளாட்சி பொறுப்புகளில் ஆதிக்கம் செய்தார்கள். ஆனால், தற்போது அந்த நிலை மாறி வருகிறது. பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். என்பது மட்டுமல்லாமல் ஆண்களின் மிரட்டல்களையும் வெகு எளிதாக கையாள்கிறார்கள். இந்த நிலையில் இன்னமும் பழைய பாட்டை பாடிக் கொண்டிருப்பதன் பொருள் என்ன?

ஆர்எஸ்எஸ், பாஜகவின்  தத்துவார்த்த அடிப்படையில் பெண்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதை அதன் செயல்பாடுகளிலிருந்து கண்டு கொள்ளலாம். அதேநேரம், பிற கட்சிகளும் பெண்களுக்கு தகுந்த மதிப்பை அளிக்கின்றன என்று கூறி விட முடியாது. இந்த நிலை மாற வேண்டும் என்றால் பெண்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது காலக்கட்டாயம். இதை எவ்வளவு விரைவாக மக்களுக்கு புரியவைக்கிறோமோ, அந்த அளவுக்கு நாம் வெற்றி பெற்றவர்களாவோம்.

மனிதகுல வரலாற்றில் மிக நீண்ட காலம் சமூகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தி, அறிவியல், தொழில்நுட்பம், வேளாண்மை, மருத்துவம் உள்ளிட்ட கலைகளைக் கண்டறிந்து மனித குலத்தை உயர்த்தியவர்கள் பெண்கள். ஆனால் ஆணாதிக்க கொடுமைகளினால் வளர்சியும், முன்னேற்றமும் தடுக்கப்பட்டே வந்துள்ளார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. அதில் ஒரு சிறு உடைப்பை பெண்களுக்கான இடஒதுக்கீடு உருவாக்கும்.

  • செங்கொடி

புதிய ஜனநாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here