சிவகங்கை மாவட்டம், மேலப்பிடாவூர் கிராமத்தில் ஒரு ‘தலித்’ இளைஞர் புல்லட் பைக்கில் பயணம் செய்தார் என்ற காரணத்திற்காக சில ஆதிக்க சாதி வெறியர்கள் அவரது கரங்களின் மீது அரிவாள் கொண்டு வெட்டிருக்கிறார்கள். இந்த 2025-லும்கூட இவ்வித இழிசெயலை தமிழ்நாடு கண்டு கொண்டுதான் இருக்கிறது! இந்த ‘ஈனச் சாதிக் குணம்’ மக்களிடமிருந்து துடைத்தெரியப்படும் வரை இவ்வித இழிவான செயல்கள் தொடரவே செய்யும்.
தமிழ்நாடு அரசு, அதன் காவல்துறை, நீதித்துறை, புரட்சிகர மற்றும் ஜனநாயக இயக்கங்கள்… இத்தகைய இழி பிறவிகள் மீது கடுமையான தாக்குதலையும், தண்டனைகளையும் வழங்காத வரை இதனை தடுத்து நிறுத்த முடியாது.
பல ஆண்டுகளுக்கு முன்பு நான் சிவகங்கை மாவட்ட ம.க.இ.க. அமைப்பாளராகப் பணியாற்றினேன். ஒருமுறை சிவகங்கை காந்தி வீதியில் உள்ள தனலெட்சுமி மஹாலில் “மாவீரன் பகத்சிங் நினைவு நாள்” அரங்கு கூட்டம் நிகழ்வுற்றது.
கூட்டம் & விருந்து நிறைவுற இரவு 10 மணி ஆகிவிட்டது.
சிவகங்கை அருகில் உள்ள சித்தலூர் கிராமத்தைச் சேர்ந்தவரும் “புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி” தோழரும், பட்டியலினத்தவருமான சின்னத்தம்பி கடைசி நகர்ப் பேருந்தில் ஏறி தனது கிராமத்திற்குப் பயணிக்கிறார். பேருந்தில் ஏகப்பட்டக் கூட்டம். எப்படியோ தோழர் பேருந்தில் ஏறி உட்கார இடமும் பிடித்து அமர்ந்து விடுகிறார். அதே பேருந்தில் சித்தலூர் ஆதிக்க சாதி வெறியன் (பெயர் நினைவுக்குக் கொண்டு வர இயலவில்லை) ஒருவனும் அதே பேருந்தில் உட்கார இடம் கிடைக்காமையால் நின்று கொண்டே பயணிக்கிறான். தமது ஊரின் பட்டியலின பு.மா.இ.மு. சின்னத்தம்பி இருக்கையில் அமர்ந்து இருப்பதைக் கண்ணுற்றதும் ஆதிக்க சாதி வெறியனுக்குக் கோபம் கொப்பளித்தது! ‘டேய்…லியப் பயலே, அய்யா மகன் நான் பஸ்ஸில கஷ்டப்பட்டு நின்னுக்கிட்டு வாறேன்; நீங்க பகுமானமா உட்கார்ந்துக்கிட்டு வாரீகளோ… அயோக்கிய நாயே…” என்று ஓங்காரமாக சப்தமிட்டு அந்த ‘தலித்’ தோழர் சின்னத்தம்பி யைப் பேருந்தில் வைத்தே கடுமையாகத் தாக்கி அந்தக் கும்மிருட்டு நேரத்தில் ஓடும் பேருந்திலிருந்து வாசல் வழியாகத் தலைகுப்புற தள்ளிவிட்டுச் சென்றுள்ளான். தோழருக்கோ முகம், கால், கை உட்பட பல இடங்களில் கடுமையான ரத்தக் காயம்.
பேருந்து ஓட்டுனரோ, நடத்துனரோ, பிற பயணிகளோ இந்த கொடூர அக்கிரமத்தை
நேரில் கண்ட பிறகும் ஒருவர்கூட ஆதிக்க சாதி வெறியனைக் கண்டிக்கவோ, தோழர் சின்னத்தம்பிக்குப் பரிந்து பேசவோ முன்வரவில்லை. அந்த அளவிற்கு மனித நேயம் மற்றும் கோழைத்தனம் இழிவாக பற்றிக் கொண்டிருந்தது அவர்களிடம்! நள்ளிரவில் ரத்தம் சொட்டச் சொட்டக் காட்டுப் பகுதியின் ஊடாக நடந்தே வந்து சிவகங்கை மஜீத் சாலையில் இருந்த என் வீட்டுக் கதவைத் தட்டுகிறார்.
அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த நான், கதவைத் திறந்து வெளியே பார்த்த போது ரத்தக் காயங்களுடன் தோழர் சின்னத்தம்பி நிற்பதைப் பார்த்து விவரம் அறிந்து மனம் துடித்துப் போனேன். உடனடியாக முதலுதவி மருத்துவத்திற்கு ஏற்பாடு செய்து விட்டு, அன்றைய சிவகங்கை மாவட்ட மனித உரிமைப் பாதுகாப்பு மைய செயலாளர் வழக்கறிஞர் அம்பேத்கரை அலைபேசி வாயிலாக வரவழைத்து நாங்கள் மூவரும் காவல் நிலையம் சென்று புகார் அளித்து முதல் தகவல் அறிக்கை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியச் செய்தோம்.
சம்பந்தப்பட்ட அயோக்கியன் மறுநாள் கைது செய்யப்பட்டான். விடாமல் அந்த ஆதிக்க சாதி வெறியனைத் தண்டித்தே ஆக வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் முனைப்புடன் செயலாற்றினோம். சிறையில் அடைக்கப்பட்டான் கயவன்.
சில மாதங்களுக்குப் பின்னர் பிணையில் வெளியில் வந்தவன் இரண்டு பேரை அழைத்துக் கொண்டு நேராக என் வீட்டிற்கே வந்து விட்டான். என் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு வழக்கை வாபஸ் பெறக் கோரி மன்றாடி கண்ணீர் வடித்தான். நானோ, ‘அமைப்பின் செயற்குழு மற்றும் பாதிக்கப்பட்ட தோழர் சின்னத்தம்பி இவர்களின் முடிவு அறிந்து தகவல் கூறுவதாக’க் கூறி அனுப்பி வைத்தேன்.
படிக்க:
🔰 மேல் சாதி என்று சொல்லிக் கொள்ளும் கயவாளிகள்!
🔰 சாதிய கட்டுமானத்தை அசைக்கும் போது நீதிபதி சுப்பிரமணியன் போன்றோர் கதறுகிறார்கள்!
பின்னர் பாதிக்கப்பட்ட தோழரே சம்பந்தப்பட்ட நபர் அமைப்பிடம் மன்னிப்புக் கோரினால் விட்டு தொலைக்கலாம் என்று கூறவே ஆதிக்க சாதி வெறியனை அமைப்பின் முன் மன்னிப்புக் கோரச் செய்து வழக்கை வாபஸ் பெற்றோம்.
இந்திய நாடு முழுமைக்கும் சாதி வெறி தலை விரித்தாடும் காலச் சூழலில், தந்தை பெரியார் பிறந்த மண் என்று பெயருக்குச் சொல்லிக் கொண்டாலும் ஆதிக்க சாதி வெறி இன்னும் அடங்கவில்லை என்பதையே சமீபத்திய சிவகங்கை மாவட்ட மேலாப்பிடாவூர் ஆதிக்க சாதி வெறியர்கள், புல்லட் வண்டியில் ‘தலித்’ இளைஞன் பயணிப்பதா என்ற வன்மத்தில் அவரது கரத்தை வெட்டி இருக்கிறார்கள்.
ஆம்! அன்றைய சித்தலூர் சம்பவமும், இன்றைய மேலப்பிடாவூர் சம்பவமும் வெவ்வாறானது அல்ல! முந்தையத்தின் நீட்சியே பிந்தையதுமாகும்.
இதற்கு நிரந்தர தீர்வு காண புரட்சிகர மற்றும் ஜனநாயக சக்திகள் தொடர்ந்து போராடுவதைத் தவிர வேறு வழி இல்லை.
மேலும் ஆதிக்க சாதி வெறி கொண்டு அலையும் இளைஞர்கள் மத்தியில் தகுந்த – பரந்த கல்வி அறிவைப் புகட்டுவதற்கும் நாம் போராட வேண்டும்.
- எழில்மாறன்