
மீண்டும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் புதியதலைமுறை நிர்வாகத்தை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
பணிநீக்க நடவடிக்கை உடனே கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
கடந்த ஆண்டு (2024) நவம்பர் மாதம் புதியதலைமுறை தொலைகாட்சி நிர்வாகம் பணிநீக்க நடவடிக்கையை தொடங்கியது. ஊழியர்கள் சிலரை அழைத்து, நிர்வாகம் பொருளாதார நெருக்கடியில் இருப்பதால் பணியிலிருந்த நீங்களே விலகிக்கொள்ள வேண்டும் என்று அவர்களை வற்புறுத்தியது.
இவ்வாறு பணிநீக்க நடவடிக்கைக்கு உள்ளான ஊழியர்கள் சிலர் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தை நாடியதைத் தொடர்ந்து, பணிவிலகல் கடிதம் கொடுக்க வேண்டாம் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதைத்தொடர்நது, பணிவிலகல் கடிதம் கொடுக்காதவர்களுக்கு நிர்வாகம் அதிகபட்சம் ஓராண்டு சம்பளம் வரை இழப்பீடாக கொடுத்தது. ஆனால், மற்றவர்களுக்கு பெரிய இழப்பீடு எதுவும் கொடுக்காமல் அவர்களிடமிருந்து தந்திரமாக பணிவிலகல் கடிதத்தைப் பெற்று அவர்களை பணிநீக்கம் செய்தது. அடுத்தகட்டமாக, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க சங்கம் முயற்பட்டபோது, ஆசிரியர் சமஸ் ஊழியர்கள் அனைவரையும் அழைத்து இனி பணிநீக்க நடவடிக்கை இல்லை என்று அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில், மீண்டும் பணிநீக்க நடவடிக்கையை தொடர்வதற்கு புதியதலைமுறை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இம்முறை, பணிநீக்கப் பட்டியலில் உள்ளவர்களை நேரில் அழைக்கும் மனிதவளத்துறை மேலாளர் சித்ரா, அந்த ஊழியர்களுக்கு ஒரு கடிதத்தை கொடுத்து வருகிறார். அந்தக் கடிதத்தில், அடுத்த மூன்று மாதத்திற்குள் அந்த குறிப்பிட்ட ஊழியர் செய்து முடிக்க வேண்டிய பணி பட்டியலிடப்பட்டு, அந்தப் பணியை செய்து முடிக்காவிட்டால் அவரை பணிநீக்கம் செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில் ஊழியர்களை நிர்பந்தித்து கையெழுத்தும் பெறப்படுகிறது.
புதியதலைமுறை தொடங்கப்பட்ட காலம் முதல் அதில் பணியாற்றிவரும் சில மூத்த பத்திரிகையாளர்களுக்கும் இந்த கடிதம் கொடுக்கப்படுகிறது. அதாவது, 13 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய மூத்த பத்திரிகையாளரை திடீரென்று அழைத்து, உங்கள் பணியில் எங்களுக்கு திருப்தி இல்லை, நாங்கள் கொடுக்கும் பணியை அடுத்த மூன்று மாதத்தில் நீங்கள் செய்து முடிக்காவிட்டால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிதும் கூச்சமில்லாமல் மனிதவளத்துறை மேலாளர் கூறிவருகிறார்.
கடந்தமுறை பணிநீக்கம் செய்தபோது நிர்வாகத்திற்கு பொருளாதார சுமை அதிகரித்திருப்பதாக நிர்வாகம் தரப்பில் ஊழியர்களிடம் கூறப்பட்டது. இதுதொடர்பாக, நமது சங்கத்தின் நிர்வாகிகள் ஆசிரியர் சமஸ் அவர்களை சந்தித்தபோது அவரும் இதையே நம்மிடம் தெரிவித்தார். ஆனால், ஒரு புறம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டு அதே இடத்திற்கு, பல ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு புதிய ஊழியர்களை வேலைக்கு எடுத்துள்ளது புதியதலைமுறை நிர்வாகம். இதன் மூலம் பொருளாதார சுமை என்று நிர்வாகம் கூறியது அப்பட்டமான பொய் என்பது அம்பலமாகியுள்ளது. இதே பொய்யைத்தான் சங்க நிர்வாகிகளிடமும் ஆசிரியர் கூறியுள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது.
தொழிற்தகராறு சட்டத்தின் (1947) பிரிவு 25F, ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கு முன் அவர்களுக்கு ஓரு மாதத்திற்கு முன் கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு, தொழிலாளர் நலத்துறைத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களின் ஒப்புதல் பெற வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், புதியதலைமுறை நிர்வாகம் இந்த சட்டத்தை அப்பட்டமாக மீறியுள்ளது.
படிக்க:
♦ மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.
அதேபோல், பிரிவு 25G, சட்டப்பூர்வமாக நடைபெறும் பணிநீக்கத்தின்போதும் கடைசியாக பணியில் சேர்ந்தவரைத்தான் முதலில் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கூறுகிறது. பிரிவு 25H, பணிநீக்கம் நடந்துள்ள நிறுவனத்தில் அடுத்து புதிதாக ஊழியர்களை சேர்க்க வேண்டுமென்றால், ஏற்கனவே பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களையே பணிக்கு அமர்த்த வேண்டும் என்பதை தெளிவாக கூறுகிறது.
ஆனால், இந்த சட்ட விதிகள் அனைத்தையும் மனிதவளத்துறை மேலாளர் காற்றில் பறக்கவிட்டு ஊழியர்களை பணிநீக்கம் செய்ததுடன், புதிய ஊழியர்களை பணியமர்த்தியுள்ளார்.
இவ்வாறு, தொடர்ந்து தொழிலாளர் நலச் சட்டங்களுக்குப் புறம்பாக செயல்பட்டு வரும் புதியதலைமுறை நிர்வாகம் தற்போது மீண்டும் சட்டத்திற்குப் புறம்பாக பணிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இந்த நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.
சட்டத்திற்குப் புறம்பாக, பணிநீக்க நடவடிக்கைக்கு உள்ளாகும் ஊழியர்கள் அதை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வதற்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் அனைத்துவகையிலும் பக்கபலமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது.
இந்த பணிநீக்க நடவடிக்கையை நிர்வாகம் கைவிடவில்லை என்றால், அதை தடுத்து நிறுத்த ஜனநாயகப்பூர்வமான அனைத்து வழிகளிலும் போராட்டம் நடத்தப்படும் என்றும் சட்டரீதியாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலளார்கள் சங்கம் நிர்வாகத்தை எச்சரிக்கிறது.