புதிய தலைமுறை தொலைகாட்சியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த சதீஷ் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், வேலையை விட்டு திடீரென்று நீக்கப்பட்டார். பணிநீக்கம் குறித்து அவர் நிர்வாகத்திடம் முறையிட்டும், நிர்வாகத் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து சதீஷ், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தை அணுகி தனக்கு நியாயம் பெற்றுத்தர கோரினார். முதற்கட்டமாக, இந்த பிரச்சனையை சுமுகமாக தீர்க்கும் வகையில், தொழிலாளர் நல ஆணையத்தில் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் வகையில் புகார் அளிக்க அமைப்பின் சார்பாக அவருக்குவழிகாட்டுதல் வழங்கப்பட்டது. அதன்பேரில், தொழிலாளர் நல ஆணையத்தில் சதீஷ் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் தொழிலாளர் நல ஆணையர் புதிய தலைமுறை நிர்வாகத்தை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். பேச்சுவார்த்தையின்போது சதீஷ் தரப்பில் தனக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், பேச்சுவார்த்தையில் முறிவு ஏற்பட்டது. ஆகவே, தொழிலாளர் நீதிமன்றத்தை அணுக அமைப்பின் சார்பாக வழிகாட்டப்பட்டது.

அமைப்பின் வழிகாட்டுதலின் பேரில், 2019ஆம் ஆண்டு இறுதியில் சதீஷ் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்திற்காக வழக்கறிஞர்கள் ரவி மற்றும் அவருடைய ஜூனியர் வழக்கறிஞர் இளங்கோ ஆகியோர் சதீஷ் சார்பாக ஆஜராகி வாதாடினர்.

கொரோனா தொற்று காரணமாக பல மாதங்களாக தடைபட்ட இந்த வழக்கின் விசாரணை இரண்டு வாரத்திற்கு முன்னர் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி சுஜாதா இன்று (26.10.21) தீர்ப்பு வழங்கியுள்ளார்.

அந்த தீர்ப்பில், புதிய தலைமுறை நிர்வாகம் சதீஷை பணிநீக்கம் செய்தது சட்டவிரோதம் என்று கூறியுள்ளது. ஆகவே, சதீஷை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இதுநாள் வரை (சுமார் 3 ஆண்டுகள்) சதீஷ்க்கு வழங்க வேண்டிய சம்பளத்தில் 50 சதவீதத்தை மொத்தமாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் வழிகாட்டுதலின் பேரில், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் உறுதியோடு போராடிய சதீஷ்க்கு அமைப்பின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

தொழிலாளர் உரிமைக்காக வழக்காடிய வழக்கறிஞர்கள் ரவி மற்றும் இளங்கோவிற்கு அமைப்பின் சார்பாகவும் அனைத்து பத்திரிகையாளர்கள் சார்பாகவும் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

சதீஷ் பெற்றுள்ள இந்த வெற்றி, சட்டத்திற்குப் புறம்பான பணிநீக்கத்தை எதிர்த்து போராடும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் ஒரு ஊக்கமாக அமையும் என்பதுடன் பத்திரிகை நிறுவனங்களுக்கும் இது ஒரு பாடமாக அமையும் என அமைப்பு உறுதியாக நம்புகிறது.

இதேபோல், கொரோனா உச்சத்தில் இருந்த சமயம், மனசாட்சியின்றி 170 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்த விகடன் குழுமத்திற்கு எதிராக, இந்திய பிரஸ் கவுன்சிலில் (Press Council of India) மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் நடத்தி வரும் வழக்கிலும் விரைவில் நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்த தருணத்தில், சதீஷ் பெற்றுள்ள இந்த வெற்றிக்கு தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களே காரணம் என்பதை நாம் அனைவரும் உணர்வோம். அந்த சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த உறுதியேற்போம்.

  • மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here