
கமல்ஹாசனின் சூட்சுமமே, பார்ப்பனீயம்தான்.
அநேகமாக தீபாவளி விளம்பரத்துக்கு நடித்த காலம் தொடங்கி கல்லா கட்டுவதை மட்டுமே பிரதானமாக்கிக் கொண்டார் கமல். பிறகு பிக்பாஸ். சொந்தமாக கதர் ஆடை நிறுவனம். அதற்கு ராகுலை வைத்து விளம்பரம் பேச வைத்தது என தனக்கான தனிச் சலுகைகள் எல்லாவற்றையும் வைத்து பணம் பண்ணுவதை நோக்கி ஓடிக் கொண்டிருந்தார்.
பிறகு விக்ரம் படம் வந்தது. அநேகமாக கமலின் வாழ்க்கையிலேயே மிக எளிமையாக பெரும் அளவுக்கு பணம் பார்க்க முடிகிற சாத்தியத்தை அப்படம் கையளித்தது. பிறகு ரஜினி உள்ளிட்ட எல்லா நாயகர்களும் Pan India என்கிற ரக படங்களில் ஏகப்பட்ட நடிகர்களை போட்டு தனக்கான screen space குறைவாக இருந்தாலும் மையமாக இருக்கும் கதையைக் கொண்டு ஆயிரக்கணக்கான தியேட்டர்களில் ரிலீஸ் செய்து பணம் கல்லா கட்டும் தொழில்முறை வந்தது பலருக்கும் பெரும் வரமாக இருந்தது. கமலுக்கு அது பெரும் வாய்ப்புகளை திறந்து விட்டது.
அடுத்த தலைமுறை நடிகர்கள் மீது invest செய்து படம் தயாரிப்பது என்ற திட்டத்துக்குள் இறங்கினார். சினிமாவுக்குள் அவர் மீது இளம் தலைமுறைக்கு இருக்கும் மரியாதையையும் பணம் ஆக்கிக் கொள்வதென முடிவெடுத்தார். அதன் முதல் கட்டம்தான் அமரன்!
இந்திய அளவில் எப்போதும் safe bet ராணுவப் படங்கள்தான். குறிப்பாக இன்று Pan India படமாக வேண்டும் எனில் Pan India அரசியல்தான் உதவும். Pan India அரசியல் என்பது இந்துத்துவம். குறிப்பாக இஸ்லாமிய எதிர்ப்பு. இன்னும் பாஜகவுக்கு குளுமையாக இருக்க வேண்டுமெனில் சமீபத்தில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட காஷ்மீரில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது நியாயம் என சித்தரிக்கக் கூடிய வகையிலான படம் எடுப்பது.
இந்திய அளவில் ஒரு மாஸ் ஹீரோவை வைத்து படம் எடுக்க, ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநரை விட வேறு யார் சரியாக இருப்பார்? பிக் பாஸை இயக்கும்போது கமலுடன் நட்பாகி, அவரது தயாரிப்பில் ராஜ்குமார் படம் இயக்குவதாக நிலை உருவானது. அச்சமயத்தில் ஷிவ் அரூர் எழுதிய India’s Most Fearless புத்தகம் தெரிய வந்து, அதிக முகுந்த் பற்றி படித்து அப்புத்தகத்தின் உரிமையை வாங்கி விடுகிறார். கமலிடம் அதைப் பற்றி சொல்ல, கமல் அது போன்ற இந்திய தேசியக் கதைகளில் திறன் பெற்றவர் என்பதால் ஒப்புக் கொள்கிறார்.
படத்தின் திரைக்கதை எழுதியது இயக்குநர் ராஜ்குமார். ஜெய் பஜ்ரங்பலி கோஷம் முதல் காஷ்மீர் விடுதலைப் போராட்ட வீரர்களை தீவிரவாதிகளாக காட்டியது வரை அவரின் பங்கு அளப்பரியதாக இருக்கும். இந்திய ராணுவம் (சட்டப்பூர்வமாகவெனும்) மதச்சார்பற்றது. ஆனால் அங்கு ‘ஜெய் பஜ்ரங் பலி’ கோஷம் உண்டு என அத்தாட்சிப்பூர்வமாக கொண்டு வந்து பேசுபவர்கள், தெரிந்தோ தெரியாமலோ செய்வது ஒரு விஷயத்தைதான். “மதச்சார்பற்றது எல்லாம் இல்லை. மதச்சார்பு கொண்டதுதான்” எனதான் நிறுவுகிறார்கள். எவ்வளவு நுட்பமாக இயக்குநர் ஆய்வு செய்து, ராணுவத்திலுள்ள யதார்த்தத்தை காட்சிப்படுத்தி இருக்கிறார் என ‘பஜ்ரங்பலி’ கோஷத்துக்கு ஆதரவு சேர்ப்பவர்கள், அடிப்படையில் பாஜகவின் இந்துத்துவத்துக்குதான் காவடி தூக்குகுறார்கள்.
இந்துமத சார்பு கொண்ட ராணுவம்தான் இருக்கிறது என்கிற பட்சத்தில், காஷ்மீர் மட்டுமின்றி உலகின் எந்த பகுதி தீவிரவாதத்தையும் இஸ்லாமிய தீவிரவாதம் என சுட்டும் தார்மிகத்தை (அப்படியொரு தார்மிகமே அடிப்படையில் இருக்கக் கூடாது என்றாலும் கூட) இழக்கிறது இந்தியா. இந்து மத ராணுவத்தை வைத்திருப்பவர்கள், எப்படி இஸ்லாம் மத ராணுவத்தையோ கிறித்துவ மத ராணுவத்தையோ வைத்திருப்பவர்களை குறை சொல்ல முடியும்?
படிக்க: தி காஷ்மீர் ஃபைல்ஸ் சொல்ல மறந்த கதைகள்
இந்திய ராணுவத்துக்குள் உண்மையில் இந்துத்துவம் புரையோடி போயிருக்கிறது. லடாக்கில் நாங்கள் சென்றிருந்தபோது பார்த்தபோதே, ராணுவ தளங்களில் இந்துத்துவக் கொடிதான் பறக்கக் கண்டோம். இந்திய தேசியவாதம் என்பது இந்து பெரும்பான்மை தேசியவாதம்தான். அதை தடுக்கும் ஒரே விஷயம் இந்திய அரசியல் சாசனம் முன் வைக்கும் மதச்சார்பற்றதன்மை. எனவேதான் அதைக் கொண்டு, இந்திய ராணுவத்தில் எழுப்பப்படும் பஜ்ரங்பலி கோஷத்தை கேள்வி கேட்பது நம் கடமை ஆகிறது.
ட்ரெயிலரில் This is the face of Indian Army என சிவகார்த்திகேயன் கத்தியபோதே இப்படத்தை பார்ப்பதில்லை என முடிவெடுத்து விட்டோம். இந்து பெரும்பான்மைவாத பாசிசம் புரிந்தவனாக, இந்திய ராணுவத்தின் கொட்டம் அறிந்தவனாக, அண்மையிலுள்ள ஈழத்தில் இந்திய ராணுவம் ஆடிய ஆட்டத்தின் மீது கோபம் கொண்டவனாக ‘இந்திய ராணுவத்தின் குரூர முகத்தை’ மிகச் சரியாகவே அறிந்திருக்கிறேன்.
ஆனால் படம் வெளியானதில் இருந்து பல இஸ்லாமிய தோழர்கள், தங்களின் வருத்தத்தை தனிபட்ட முறையிலும் பொதுவெளியிலும் பதிவு செய்தனர். அநேகமாக இப்படக் குழு, இப்படத்தை போட்டுக் காட்டாத அரசியல் கட்சிகள், இடதுசாரி கட்சிகள் மற்றும் விசிக போன்றவை மட்டும்தான் என நினைக்கிறேன். இடதுசாரி கட்சிகள் பொருட்படுத்தப்பட வில்லையா அல்லது அழைக்கப்பட்டு தவிர்த்து விட்டார்களா என தெரியவில்லை. எது நடந்திருந்தாலும் நல்ல விஷயம்தான். இத்தகைய ரத்தத்தில் நம் கைகள் கறைபட வேண்டியதில்லை.
படிக்க: கண்ணீரை வற்ற வைக்கும் காஷ்மீர் படுகொலைகள்! தீர்வு என்ன?
இந்திய நாடு உருவாக்கம் தொடங்கி அமைப்புப்பூர்வமாக தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வருபவர்கள் இஸ்லாமியர். அதிலும் காஷ்மீர் மக்களுக்கு இந்தியா இழைத்தது பச்சை துரோகம். உதவவென ஒரு வீட்டுக்கு சென்றுவிட்டு, அந்த வீட்டையே தனக்கு உரிமையாக்கிய ரவுடி வேலையைத்தான் இந்தியா செய்தது. உதவி கேட்டு அழைத்தவன், வீட்டை ஆக்கிரமித்த ரவுடியை வெளியேறும்படி சொல்வதைத்தான் இந்தியா, தீவிரவாதம் என அழைக்கிறது.
காஷ்மீர் தொடங்கி இந்தியாவிலுள்ள எல்லா இஸ்லாமியரும் தங்களின் இந்திய தேசப் பற்றை உறுதி செய்து கொண்டே இருக்கும்படி கோரும் இந்திய அரசு, விடுதலைப் போராட்டம் தொடங்கி இந்தியப் பொருளாதாரம் வரை இஸ்லாமியரிடமிருந்து பெற்றதும், பெற்றுக் கொண்டிருப்பதும் மிகவும் அதிகம். இருந்தும் அவர்களை அச்சுறுத்தியே வைத்திருக்கும் வதைத்துறுத்து மோகிக்கும் வேலையை தன்னுடைய இந்திய தேசிய அறிஞர்கள் மற்றும் கலைஞர்களை கொண்டு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
கமல்ஹாசன், ராஜ்குமார், முருகதாஸ் போன்றோர் எல்லாம் அத்தகைய மானங்கெட்ட அறிவுபுலத்துக்கு தமிழ்நாடு அளித்தக் கொடை.
தன் பெயரிலுள்ள ஹாசன் என்கிற வார்த்தை காங்கிரஸ்காரரான தன்னுடைய தந்தை சிறையில் இருக்கும்போது உதவிய ஓர் இஸ்லாமியரின் நினைவில் தந்தை தனக்கு சூட்டியதாக கமல்ஹாசன் ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்திருந்தார். தந்தைக்கு உதவிய அந்த இஸ்லாமியருக்கும் சரி, அவரது நினைவை போற்ற விரும்பிய தந்தைக்கும் சரி எந்த நியாயமும் செய்யாமல், நேர்மையும் கொள்ளாமல், பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தன் பார்ப்பனிய அலகுகளை கொண்டு கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார் கமல்ஹாசன்.
கமல் சேர்க்கும் அந்த ரூபாய் நோட்டுகளில், காஷ்மீர் தேசிய இன விடுதலைப் போராட்டங்களிலும் இந்தியாவின் இந்துத்துவ கலவரங்களிலும் பறிக்கப்படும் இஸ்லாமியரின் ரத்த வீச்சமே மிகுந்திருக்கும்.
- ராஜசங்கீதன்
அனைவரும் படித்து காஷ்மீர் பற்றிய முழு உண்மையை புரிந்து கொள்ள வேண்டிய – அம்பலப்படுத்தலுடன் கூடிய கட்டுரை இது! பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!!