
2024 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் சென்ற அக்டோபர் 14 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டன. அதில், முதலாளித்துவ பொருளாதார வல்லுநர்களான சைமன் ஜான்சன், டாரன் அசோமோக்லு, ஜேம்ஸ் ராபின்சன் ஆகியோருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
“சமூக நிறுவனங்கள் எவ்வாறு உருவாகின்றன. இவற்றால் ஒரு நாட்டின் பொருளாதாரம் எவ்வாறு வளர்கிறது அல்லது பாதிக்கிறது என்றும், நாடுகளுக்கு இடையே ஏற்றத்தாழ்வு எவ்வாறு ஏற்படுகிறது” என்பதை பற்றிய ஆய்வுகளுக்காக இவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மூன்று பேரின் பொருளாதார ஆய்வும்! ஏகாதிபத்திய சார்பும்!
சமூகத்தின் அனைத்து மக்களுக்கும் நியாயமான பொருளாதார மற்றும் அரசியல் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட குடியேற்ற காலனிகள், தேர்தல், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி போன்ற மேற்கத்திய அமைப்புகள் நாட்டின் வளர்ச்சிக்கு உகந்தவை என்று வாதிட்டு இவைகளை உள்ளடக்கிய நிறுவனங்கள் என்றும் வரையறை செய்கிறார்கள்.
வளங்கள் மற்றும் உழைப்பின் குறுகிய கால சுரண்டலில் தீவிரமாக கவனம் செலுத்துகின்ற, பெரும்பாலும் ஒரு சிறிய குழுவிற்கு மட்டுமே அதிகாரம் வழங்கும் கொள்கை, ஊழல், அதிகாரக் குவிப்பு மற்றும் சுரண்டல் அமல்படுத்தும் சர்வாதிகார அமைப்புகள் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது என்றும் இவைகளை பிரித்தெடுக்கும் நிறுவனங்கள் என்றும் வரையறை செய்கிறார்கள்.
தங்களது ஆய்வில் “புரட்சியின் அச்சுறுத்தல் இருக்கும்போது, அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒரு இக்கட்டான நிலையை எதிர்கொள்கின்றனர். அவர்கள் அதிகாரத்தில் இருக்க விரும்புவார்கள். அதற்காக பொருளாதார சீர்திருத்தங்களை வாக்குறுதியளித்து மக்களை சமாதானப்படுத்த முயற்சிப்பார்கள்”.என்று முன் வைக்கின்றனர். ஆனால் நிலைமை சரியானதும் ஆட்சியாளர்கள் பழைய முறைக்கு திரும்ப மாட்டார்கள் என மக்கள் நம்புவதற்கு வாய்ப்பில்லை. இறுதியில், அதிகாரத்தை மாற்றுவதும், ஜனநாயகத்தை நிலைநாட்டுவதுமே ஒரே வழி என தெரிவித்து தாங்கள் நடுநிலைவாதிகள் என காட்டிக்கொள்ளவும் முயற்சித்துள்ளார்கள்.
உண்மையில் ஏகாதிபத்திய சார்பு தன்மையே அவர்களின் ஆய்வில் தெரிகிறது. அதாவது, உள்ளடக்கிய நிறுவனங்களை மேம்படுத்துவதற்கு காலனித்துவம் வழிவகுத்தது என்றும், அந்த நாடுகளில் வளர்ச்சி செழித்தது. அதே நேரத்தில் காலனித்துவ சாம்ராஜ்யத்தின் பிற இடங்களில் காலனித்துவம் பிரித்தெடுக்கும் நிறுவனங்களுக்கு வித்திட்டது. இதனால் அந்த நாடுகளின் வளர்ச்சி தீங்கு விளைவிப்பதாக மாறியது என்றும் தங்களது ஆய்வில் தெரிவித்து உள்ளனர்.
படிக்க: மனிதர்களின் வெப்பநிலை மற்றும் தொடுதல் உணர்வு ஏற்பி கண்டுபிடிப்பு: நோபல் பரிசு! யாருக்கு பலன்?
எளிமையாக சொன்னால், ஐரோப்பியர்கள் உலகின் பெரும்பகுதியை காலனித்துவ ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்த போது, ஐக்கிய மாகாணங்கள் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற இடங்களில், ஐரோப்பிய குடியேற்றவாசிகள் தங்கள் எதிர்கால சந்ததியினருக்கு நன்மை பயக்கும் வகையில் அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகளை உருவாக்கினர். காலப்போக்கில் இந்த உள்ளடக்கிய நிறுவனங்கள் நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் இறுதியில் செல்வத்திற்கான அடித்தளத்தை அமைத்தன.
இந்த மாற்றம் எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியாக நிகழவில்லை. சில இடங்களில், பூர்வகுடி மக்களை சுரண்டுவதும், காலனி ஆட்சியாளர் நலனுக்காக தாங்கள் ஆட்சி செய்யும் இடங்களில் இருந்து வளங்களை எடுத்துச் செல்வது முக்கியமாக நோக்கமாகவும் கொண்டிருந்தது. இந்த நாடுகளில் காலனித்துவவாதிகள் இன்றும் வளர்ச்சியைத் தொடர்ந்து தடுக்கும் பிரித்தெடுக்கும் நிறுவனங்களை அமைத்தனர். இந்த பிரித்தெடுக்கும் நிறுவனங்கள் அதிகாரத்தில் உள்ள சிலருக்கு ஆதரவாக இருந்தன, இது பொருளாதார சீர்திருத்தங்கள் வேரூன்றுவதை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக மாற்றும் ஒரு சுழற்சியை உருவாக்கியது, நாடுகளை குறைந்த வளர்ச்சி பொறிகளில் சிக்க வைத்தது என ஆய்வில் தெரிவித்து உள்ளனர்.
இதனை மேலோட்டமாக பார்த்தால் சரியாகக் கூறியுள்ளனர் என்பது போல் தோன்றும். ஆனால் இந்த முதலாளித்துவ பொருளாதார ஆய்வாளர்கள் மிக முக்கியமான ஒன்றை மறைத்து ஆய்வு செய்துள்ளனர். குறிப்பாக, காலனித்துவத்தால் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட தீவிர ஒடுக்குமுறை, உழைப்பு சுரண்டல், அந்த நாட்டின் அனைத்து வகையான வளங்களை கொள்ளையிட்டது ஆகியவை குறித்தும் அதற்கான காரணங்களாக ஏகாதிபத்திய முதலாளித்துவ சுரண்டல் முறை பற்றியும் தங்களது ஆய்வில் பேச மறுத்து தங்களது வர்க்கத் தன்மை ஏகாதிபத்தியத்தின் சார்பு என்பதை நிரூபித்து விட்டனர்.
விருது அறிவிப்பிற்கு பிறகு, ஆய்வாளர் அசோமோக்லு பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், “காலனித்துவம் நல்லதா? கெட்டதா? என்று கேட்பதற்குப் பதிலாக, வெவ்வேறு காலனித்துவ உத்திகள் காலங்காலமாக நிலைத்திருக்கும் வெவ்வேறு நிறுவன வடிவங்களுக்கு வழிவகுத்திருப்பதை நாங்கள் கவனிக்கிறோம்” என தெரிவித்துள்ளார். அதாவது ஏகாதிபத்திய முதலாளித்துவம் தனது இலாப வேட்டைக்கு நாடுகளை கொள்ளையிட காலனி – அரைகாலனி – நவீன காலனி போன்ற காலனியாதிக்க வடிவங்களுடன் புதிய வகையில் நாடுகளை மறுபங்கீடு செய்து சூறையாடவும் தனது செல்வாக்கு மண்டலங்களை உருவாக்கவும் மறுகாலனியம் என்ற வடிவத்தைக் மேற்கொண்டது. இதனால் காலனி மற்றும் மறுகாலனியாக்க நாடுகளின் வளம் சூறையாடப்படுவது பற்றி இவர்கள் கவலைப்படவில்லை. அதனால் தான் காலனித்துவம் நல்லதா? கெட்டதா? என்று பார்க்க தேவையில்லை. அது உருவாக்கும் நிறுவனங்களை மட்டும் பார்த்தால் போதும் எனக்கூறி தங்களது ஏகாதிபத்திய சார்பை அப்பட்டமாக வெளிப்படுத்தி விட்டனர்.
நோபல் பரிசு பெற்ற மூன்று ஆய்வாளர்கள் ஆய்வுக்கு ஆதரவும் – விமர்சனமும்!
நோபல் பரிசு பெற்ற மூன்று முதலாளித்துவ ஆய்வாளர்கள் இணைந்து இதுவரை பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளனர். அந்தக் கட்டுரைகளில் 2001 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் வெளியிட்ட கட்டுரைகளுக்கே தற்போது நோபல் பரிசு தரப்பட்டுள்ளது.
2001 ஆம் ஆண்டில், ஒப்பீட்டு வளர்ச்சியின் காலனித்துவ தோற்றம்: ஒரு அனுபவ விசாரணை’ என்ற தலைப்பில் சைமன் ஜான்சன், டாரன் அசோமோக்லு, ஜேம்ஸ் ராபின்சன் ஆகியோரின் ஆய்வை சுருக்கமாக அமெரிக்க பொருளாதார மதிப்பாய்வில் வெளியிடப்பட்டது. 2013 ஆம் ஆண்டில், அசோமோக்லு மற்றும் ராபின்சன் எழுதிய,” நாடுகளின் தோல்வி ஏன்: அதிகாரம், செழிப்பு மற்றும் வறுமையின் தோற்றம்” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
படிக்க: மோடியின் சொல்லும் செயலும்; நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி, வெங்கி-ராமகிருஷ்ணனின் நமட்டு சிரிப்பு பாகம் 1
இப்புத்தகம் வெளியான உடனேயே இந்தியாவில் உள்ள முதலாளித்துவ பொருளாதார அறிஞரான அரவிந்த் சுப்ரமணியன், ”இந்தியாவும், சீனாவும் அவர்களின் ஆய்வு முடிவுகளுக்கு பொருந்தவில்லை” என தனது கருத்தை பதிவு செய்தார். ”பரிசு பெற்றவர்கள் உலகின் பெரும் பகுதிகளின் ஐரோப்பிய காலனித்துவத்தை மட்டுமே ஆய்வு செய்துள்ளனர். குறிப்பாக, அரசியலமைப்புச் சட்டம், தேர்தல், நீதித்துறை என உள்ளடக்கிய நிறுவனங்கள் கொண்ட இந்தியா முன்னேறவில்லை. ஊழல், அதிகார குவிப்பு போன்ற பிரித்தெடுக்கும் நிறுவனங்கள் கொண்ட சீனா முன்னேற்றம் அடைந்து வருகிறது” என அவரது முதலாளித்துவ பார்வையில் இருந்து விளக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பரிசு பெற்றவர்களின் ஆய்வு கட்டுரைகள் பற்றி சமீபத்தில் இந்திய இடதுசாரி சிந்தனையாளர் பிரபாத் பட்நாயக் “முதலாளித்துவ வளர்ச்சி வறுமையை உருவாக்குகிறது. வளர்ச்சிக்கும், வளர்ச்சியடையாத நிலைக்கும் அல்லது ஒரு துருவத்தில் செல்வ வளர்ச்சிக்கும், மற்றொரு துருவத்தில் வறுமைக்கும் இடையே இருக்கும் இயங்கியலை (பொருளாதார உறவுகளை-கட்டுரையாளர்.) முழுமையாக அங்கீகரிக்க வில்லை என சுட்டிக்காட்டி உள்ளார்.
அதே நேரத்தில் இந்த மூவரின் ஆய்வுகளை அமெரிக்க பொருளாதார ஆய்வாளர்கள் பலர் வரவேற்று பேசி உள்ளனர். குறிப்பாக, உள்ளடக்கிய நிறுவனங்களைக் கொண்ட அமெரிக்கா போன்ற ஜனநாயக நாடுகள் வளர்ச்சி பெற்று உள்ளது என்பதையும், பிரித்தெடுக்கும் நிறுவனங்களைக் கொண்ட வட கொரியா, ஜிம்பாப்வே முகாபேயின் கீழ், சீனா மாவோவின் கீழ், சோவியத் யூனியன் அதன் முழு வரலாற்றிலும், அதன் சரிவுக்குப் பிறகு புடின் ஆட்சி வரை இந்த நாடுகளில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் அதிகாரம் குறுகியதாக இருந்தது, மேலும் அந்த அதிகாரம் அரசியல் உயரடுக்கை வளப்படுத்த பயன்படுத்தப்பட்டது, பின்னர் அவர்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தை மேலும் வலுப்படுத்த தங்கள் செல்வத்தை பயன்படுத்தினார்கள் என கம்யூனிச வெறுப்பை கக்கியுள்ளார்கள்.
”அதேபோல், வட மற்றும் தென் கொரியா பெரும்பாலும் உள்ளடக்கிய மற்றும் பிரித்தெடுக்கும் நிறுவனங்களின் முக்கியத்துவத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்கள். அதாவது, இந்த இரண்டு நாடுகளும் பொதுவான வரலாறு, கலாச்சாரம் மற்றும் இனத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. 1953 இல் இந்த நாடுகள் முறைப்படி பிரிக்கப்பட்டு வெவ்வேறு அரசாங்கங்களால் ஆளப்பட்டன. வட கொரியா பிரித்தெடுக்கும் நிறுவனங்கள் கொண்ட ஒரு சர்வாதிகார கம்யூனிச நாடாகும், அங்கு சொத்து உரிமைகள் மற்றும் இலவச மற்றும் திறந்த சந்தைகள் பெரும்பாலும் இல்லை மற்றும் சட்டத்தின் ஆட்சி ஒடுக்கப்படுகிறது. தென் கொரியாவில், உள்ளடக்கிய நிறுவனங்கள் புதுமை மற்றும் உற்பத்தித் திறனுக்கான வலுவான ஊக்கத்தை வழங்குகின்றன. இதன் விளைவு உலகின் ஏழ்மையான நாடுகளில் வட கொரியாவும், பணக்கார நாடுகளில் தென் கொரியாவும் உள்ளது” என கம்யூனிச எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய சார்பை நிலைநாட்டினர்.
நோபல் பரிசும்!
அமெரிக்க ஆதரவும்!
தற்போது நோபல் பரிசு பெற்ற மூன்று பேரில் இருவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள். ஒருவர் அமெரிக்காவில் பிறந்தவர். டேரன் அசெமோக்லு துருக்கியில் பிறந்து அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ், மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார். சைமன் ஜான்சன், இங்கிலாந்தில் பிறந்து, அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ், மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார். ஜேம்ஸ் ஏ. ராபின்சன் அமெரிக்காவில் பிறந்து, சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார். பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற மூவரும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள் என்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
கடந்த காலங்களில் நோபல் பரிசு பெற்றவர்கள் பெரும்பான்மையினர் அமெரிக்க உயரடுக்கு பல்கலைக்கழகங்களில் பொருளாதார பீடங்களை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வல்லுநர்கள். சுருங்க சொன்னால், பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்றவர்களில் ஏறக்குறைய 53% அமெரிக்கர்களே. 19% இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். அமெரிக்க ஆதரவு அல்லது அமெரிக்க அடிமையாக இருந்தாலே போதும் பொருளாதார மற்றும் அறிவியலுக்கான நோபல் பரிசு கிடைக்கும் என மாற்றி வருகின்றனர். இந்த ஆண்டு வழங்கப்பட்ட நோபல் பரிசு காலம் கடந்து வழங்கப்பட்டதாக சிலர் புலம்புகின்றனர். காரணம் பரிசுக்குரியவர்கள் சில நேரங்களில் அமெரிக்காவை விமர்சித்து தன்னை நடுநிலையாளனாக காட்டிக் கொண்டுள்ளனர். இதிலும் அவர்கள் ஏகாதிபத்திய முதலாளித்துவ சுரண்டல் தீவிரமடைந்தால் அதிகாரம் மாறிவிடும், அதாவது புரட்சிக்கு வழிவகுக்கும் என எச்சரித்து தனது வர்க்கப்பாசத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவே பார்க்க வேண்டியுள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகள் கடைபிடித்து வரும் ஏகாதிபத்திய பொருளாதாரம். தோல்வியை சந்தித்தது என்பதே நிதர்சனமான உண்மை. ஏகாதிபத்திய பொருளாதாரங்கள் மக்கள் நலனில் இல்லாமல் சுரண்டலை அடிப்படையாக கொண்டது. தற்போது தீர்க்க முடியாத நெருக்கடியில் சிக்கிக் கொண்டு முட்டுச் சந்தில் நிற்பதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். 19 -ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பிரிட்டனின் முதலாளித்துவ பொருளாதார மேதைகளான ஆடம் ஸ்மித, டேவிட் ரிக்கார்டோ போன்றவர்களால் முன் வைக்கப்பட்ட முதலாளித்துவ பொருளாதார தீர்வுகளின் தோல்வியை விமர்சித்துதான் மார்க்சிய பொருளாதாரமே பிறந்தது.
ஏகாதிபத்தியம் தனது தோல்வியை ஒத்துக் கொள்ள முடியாமல் மீண்டும், மீண்டும் பொய் பிரச்சாரங்கள், பொய்யான ஆய்வுகள், கட்டுரைகள் மூலம் தனது பொருளாதாரம் சிறந்தது என்பதை நிரூபிக்க பல வழிகளில் முயற்சித்து வருகிறது. அதற்காகவே அமெரிக்காவில் உள்ள 1737 பல்கலைக்கழகங்களில் பல கோடிகளை கொட்டி முதலாளித்துவ அறிவுஜிவிகளை உருவாக்கி வருகிறது. அவர்களின் ஏகாதிபத்திய சார்பு ஆய்வுகளை சிறந்த பொருளாதார வழிமுறை என நிரூபிக்க நோபல் பரிசையும் அளித்து வருகிறது.
ஏகாதிபத்திய முதலாளித்துவத்தால் உருவாக்கப்படும் இந்த முதலாளித்துவ அறிவுஜீவிகள் ஆரம்பத்தில் நடுநிலையாளர்கள் போல் தங்களை காட்டிக் கொள்கின்றனர். அதன் பிறகு தங்களது ஆய்வுகளில் சிறிது சிறிதாக ஏகாதிபத்திய கருத்துக்களை திணித்தும் கம்யூனிசத்தின் மீதான வெறுப்புகளை விதைத்தும் வருகிறார்கள். இதனால் இவர்களது ஆய்வு கட்டுரைகளை படிக்கும் குட்டி முதலாளித்துவ அறிவுஜிவிகள் புளகாங்கிதம் அடைவதும், மார்க்சிய ஆசான்களின் ஆய்வுகளை விட சிறந்தது என பிதற்றவும் செய்கின்றனர்.
உள்ளடக்கிய நிறுவனங்கள், பிரித்தெடுக்கும் நிறுவனங்கள் இரண்டில் எவை பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகின்றன என்பதல்ல இங்கு பிரச்சனை. இந்த நிறுவனங்கள் யார் நலனை முன்னிறுத்துகின்றன; நாட்டின் வளர்ச்சி யார் நலனுக்கானது; பொருளாதாரக் கொள்கைகள் யார் நலனை முன்னிறுத்துகின்றன என்பதே நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான பிரச்சனை. மக்கள் நலனுக்கான பொருளாதார கொள்கைகளே நாட்டையும் மக்களையும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும்.
அழிவு தரும் ஏகாதிபத்திய பொருளாதாரமும்!
செழிப்பு தரும் மார்க்சிய பொருளாதாரமும்!
உலகம் முழுவதுமான ஏற்றத்தாழ்வுகளுக்கு மிக முக்கியக் காரணமே சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட ஏகாதிபத்திய முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கைகளே. இவை வரலாற்று பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மூன்றாம் உலக நாடுகள் என்று அழைக்கப்படும் காலனிய நாடுகளில் புகுத்தப்பட்ட தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் உள்ளிட்ட மறுகாலனியாதிக்க பொருளாதாரக் கொள்கைகளால் பல நாடுகள் திவால் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இந்த பொருளாதார கொள்கைகளே நாடுகளின் ஏழ்மை நிலைக்கு முக்கிய காரணம். ஏகாதிபத்திய பொருளாதார கொள்கைகளை கடைபிடித்த வளர்ந்த நாடுகளும் கூட திக்கித் திணறி மூச்சுவிட முடியாமல் திவாலாகும் தருவாயில் இருக்கின்றன.
ஏகாதிபத்திய முதலாளித்துவத்தால் இந்த தோற்றுப்போன அரசமைப்புக்குள்ளேயே ஆலோசனை மற்றும் தீர்வை முன்வைக்கின்றன. இவை மக்களின் வாழ்வாதாரத்தை, நாட்டின் செழுமையை மீண்டும் மீண்டும் புதைக்குழிக்குள்ளேயே தள்ளுகின்றன. பொருளாதார நெருக்கடிகள் வெடித்து சிதறுகின்றன
இதற்கு முக்கிய காரணம் ஏகாதிபத்திய முதலாளித்துவ பொருளாதாரம் அதன் இயல்பிலேயே உழைப்பு சமூகமயம் – லாபம் தனிநபர் சுவீகரிப்பு என்பதால் ஒருபுறம் முதலாளிகள் சொத்துகள் குவித்து கொழுக்கவும் மறுபுறம் உழைக்கும் மக்களுக்கு பசி- பட்டினி வேலையில்லா திண்டாட்டம் – விலைவாசி உயர்வு என வறுமையையும் உருவாக்குகிறது.
ஆகவே, மக்களுக்கு சமத்துவம் வேண்டும். உழைப்பு சுரண்டல் முறை ஒழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தை உருவாக்க முடியும். மக்களின் வளர்ச்சியோடு தொடர்புடைய நாடுகளின் வளர்ச்சி இருக்க வேண்டும். இதற்கு உழைப்பு சுரண்டலை முற்றாக நிராகரிக்கும் மார்க்சிய பொருளாதாரமே நிரந்தர தீர்வாகும். இதனை முன் வைத்து போராடும் கம்யூனிஸ்டுகள் யாரும் ’நோபல்’ பரிசுகளை எதிர்பார்த்து முன் வைக்கவில்லை.
- லூர்துசாமி
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி