சிதம்பர ரகசியங்கள்

எத்தனைச் சுற்றுக்களில் இந்தப்போர் நடந்தாலும்
தொடக்கப் புள்ளி ஒன்றே
” சிதம்பரம் கோயில் யார் சொத்து?
ஊர்சொத்தா, தீட்சிதர் சொத்தா? ”

ஊர்சொத்தென்றால் அக்கிரமங்களை எல்லாம்
ஊர்கேட்கும், கேட்டது
தீட்சிதர் சொத்தென்றால் ஆதாரம் கேட்கும்,
உண்மையான செப்புத்தகடு எங்கே?
ஊர்கேட்கும், கேட்டது.

கூடுதல் ஒன்று —
அது சிவன்சொத்து என்றாலும் — இப்போ
ஊர் கேட்கும், கேட்கிறது சிவன்சார்பாக — அதுசரி,
எந்தக்காலத்தில் சிவன் பேசினான்?

000

நாங்கள் செய்வது வீண்சர்ச்சை என்கிறாய்,
பேசுவது அநாகரிகப் பேச்சு என்கிறாய்
அநாகரிகச் சொத்துபற்றி ‘ சர்ச்சை ‘ மட்டுமல்ல
கலகமே செய்வோம்.
தீட்சிதரே, உன்னிடம் பேசவில்லை ; வேண்டிய அளவு மட்டும்
அரசிடம் பேசுகிறோம்
இதற்கு சுந்தரும் தேவையில்லை,
” சூ, சாமி! “யும் தேவையில்லை.

இந்து அறநிலையத் துறை’ யிடம் பேசினோம்;
பெண் அதிகாரி வந்தார்,
வீண்சர்ச்சை செய்து அவரிடம்
அநாகரீகமாக நடந்தீர்கள்.

பிறகு
பிறகு, அரசு அமைதியாகிவிட்டது,
அது லட்சுமண ரேகைகளைத் தாண்டாது.
அரசு லிமிடெட் கம்பெனி என்பது
ஊருக்கே கொஞ்சம்போலத் தெரியும்.
நீ
உன்கும்பல்
வழக்கம்போல் தட்டுதூக்கி, உண்டியல் உடைத்து
சாமிநகை திருடிவிற்று, பொய்க்கணக்கெழுதி
தங்கத்தகடு சுரண்டிவிற்று
வந்துபோகும் அயல்நாட்டுப் பெண்களிடம் வம்புசெய்து
வளாகத்தின்வெளியே
பொழுதுபோக்குக்கு திருட்டுகள் செய்து
நொடிப்பொழுதில் நீ அழித்த கேசு பலஆயிரம்;

நீயோ — சாந்தசொரூபி,
நீயோ — வன்முறை அற்றவன்.
எங்களுக்கு உன் மூதாதை வரலாறே தெரியும்,
உன் சட்டமும் சடங்குகளும்
கொடூரம் பயங்கரம் நிரம்பியது என்று.
** கேள்விகேட்டு வாதாடும் எதிராளியை மிரட்ட
வைக்கோல்போர் மீது அமரவைத்து
தோற்றால் எரிந்துபோவாய் என்று
மிரட்டியவன் உன் மூதாதை தானே?
** வறுத்தெடுத்த வாதப்’போரில்’
தோற்றதால் மிரண்டுபோய்
” இதற்குமேல் கேள்வி கேட்டால்
உன்தலை தோள்மீது தங்காது ” என்று
ஞானப்பெண் கார்கியை மிரட்டியது
சாந்தசொரூபி யாக்ஞவல்கியன்தானே?
தங்கத்துக்கும் பெண்அடிமைகளுக்கும்
ஜொள்ளு ஒழுக ஊர்சுற்றி அலைந்த
காமுகன் யாக்ஞவல்கியன்தானே?
**உன் முன்னோரின் பேரன்புக்கு
சீர்காழிச் சான்று வேண்டுமா?
சமணப்பெண்டிரைக் கற்பழிக்க
ஈசன் திருவுள்ளம் அருளக்கோரும்
பிஞ்சிலேபழுத்த ஞானசம்பந்தனின்
தேவாரப்பதிகத்தைப் புரட்டிப் பார்!

** பெரீயபுராணத்தில்
பிள்ளைக்கறிகேட்ட சுத்தசைவம்
உனது ஸபாநாயகச் சிவாள்தானே?
** தெக்கே மதுரையில் ( கத்தியின்றி ரத்தமின்றி )
எண்ணாயிரம் சமணரைக் கழுவிலேற்றியது
உன் மூதாதைதானே?
** சிற்றம்பலத்துக்குள்ளே நுழைய
வாழ்நாள்முழுவதும் கனவுகண்ட
சிவனது சீடன்
எமது நந்தனை
உயிரோடு எரித்தது
நீ தானே?
** வாடியபயிரைக் கண்டபோதெல்லாம்
வாடிய வள்ளலாரை எரித்தது
நீதானே?
** சிற்றம்பலமேடையில்
தமிழில் பாடினாய் தீட்டு என்று
சிவனடியார் ஆறுமுகச்சாமி பெரியவரை
எத்தனைமுறை
அடித்துத் தூக்கி எறிந்தாய்?
ம.க.இ.க அதேமேடை ஏறி
தமிழில் பாடியபோது
(காவல் அதிகாரிகளையும் சேர்த்து)
மறித்து அடித்தது உன்கும்பல்தானே?
** “எல்லோர் சுகத்துக்காக நாங்கள்” என்று
யூடியூபில் வாய்டியூப் வழியாக உளறிக்கொண்டே
சிற்றம்பல மேடையில் நந்தனின் லட்சுமியை
அடித்து உதைத்து
வெளியேற்றியது நீதானே?

000

ஊசிநாறும் ஒத்தைப் பிரசாத உருண்டையில்
அத்தனையும் மறைத்தாய்,
“பூமத்திய ரேகைப் பீடம்”,
“பிரபஞ்ச நடனம்”, ” தீ, உடுக்கை , ஆகாசம், சித் அம்பர,ரகசியம் ” என்று நூல் திரித்து
“எல்லாம் ஈசன்செயல்” என்று ஓடிஒளிந்தாய்

000

எங்களுக்கு
கேள்விகேட்கத் தெரியும், கேட்கிறோம்.
உச்சிக்குடுமி மன்றத்தில் நீ
இருபாதமும் தூக்கி ஆடியது போக,
இப்போது மக்களுக்கு எதிராக–எங்களுக்கு எதிராக
போஸ்டர் அவதாரம் எடுத்துவருகிறாய்.
போஸ்டரில் கண்டிக்கிறாய்;
“வீரிய இதயத்துடன் ” கண்டிக்கிறாய்;
“கருணாமூர்த்தி கருணையுடன்” சின்னஎழுத்தில்
கண்டிக்கிறாய்;
அடடா என்ன நடிப்பு, என்ன நடிப்பு?
அதுசரி, பரமனையே கூப்பிடுகிறாய்,
அவனது “நெற்றிக்கண்ணைத்திறக்கச்”சொல்கிறாய்.
முதலில் சொல்மட்டுமே என்றாய்,
இப்போது எரிப்பதற்கு ஆளைக் கூப்பிடுகிறாயே.
அவன் வருவானா, வரமாட்டானா—
வரமாட்டான் என்று எங்களுக்கு நெருப்பாகத் தெரியும்.
உனக்கும் தெரியும்,நடிப்பாய்,
அதுவே உன் சரக்கும் இருப்பும்.
ஸபாநாயகன் நிச்சயமாக வரவே மாட்டான்.

000

அப்புறம் ,
வேறு என்னவோ கேட்டாயே….
” பதிவுசெய்திருக்கிறாயா உன் அமைப்பை ”
என்றுதானே கேட்டாய் ?
கோயிலுக்குள் கருவறையிலும் சுற்றுப்புறத்திலும்
வைத்ததே சட்டமென்று
கோயிலுக்கொரு ஆகமத்தைக் காட்டுகிறாய்
அதையெல்லாம்
முறைப்படி பதிவு செய்திருக்கிறாயோ?
உனக்கும் ரத்தச் சொந்தங்களுக்கும்
தீட்சித வாரிசுப் பரம்பரை உரிமை
கொண்டாடுகிறாயே
எந்தக்கோர்ட் உத்தரவு, எங்கே பதிவு?

000

கடைசியில் ஒரு கேள்வி
” ஐயன் வள்ளுவன் வாக்கின்படி
அந்தணர் என்போர் அறவோர்” என்று
கடைசி ஒற்றைவரி சேர்த்திருக்கிறாயே , முட்டாளே
எந்த அறவோனைச் சொன்னார் வள்ளுவர் ?
உன்னையா,உன் பரம்பரையையா,
உன் மூதாதையரையா
யாரை?
நீ யாரென்று சொல்ல மேலே உள்ள
வாதங்கள் போதாதோ?
இந்தா இன்னும் கொஞ்சம் வாங்கிக்க.
வள்ளுவருக்கு ஐயன் என்று பட்டம் சூட்டியது
ங்கொப்பனா
கலைஞர் அல்லவோ கொடுத்தார்?
அறவோர் என்று வள்ளுவரும் உன்னைச் சொல்லவில்லை,
குறளுக்கு உரை எழுதிய கலைஞரும்
அப்படிச் சொல்லவில்லை @ 1 @
துணிச்சலிருந்தால் தமிழ்ச்சமணர்
மணக்குடவர் எழுதிய உரையைப் படி@ 2 @
இல்லையா,
உங்க அக்ரகாரப் பரிமேலழகரைக்
கூடப்படித்துப்பார். @ 3 @
சீழ்வடியும் —உன்
சோத்துமூளைக்கு எங்கே உறைக்கும்?
அந்தணன் நீயல்ல, அறவோனும் நீயல்ல
உனக்கேது அருள், அன்பு, சாந்தம்?
அடியேய், நீ வள்ளுவருக்கு “ஐயன்” பேரை
இப்போ சேர்த்து எழுதியது ஏன்? ஏன்?
எதுக்காக உன் முன்குடுமி ஆடுதுன்னு
‘பதிவுசெய்யாத’ எங்களுக்கு
நன்றாகவே தெரியும்.
வரலாறு தெரிந்தவர்கள், நாங்கள் உழைப்பவர்கள்;
வரலாறு படைப்பதும் உழைப்பவரே!

000

’சிற்றம்பலம்’ அல்ல;
நாங்கள் கேட்பது முழு உரிமை.
இது வெத்து வீண்சண்டை அல்ல,
பார்ப்பனப்பண்பாட்டுப் படையெடுப்புக்கு
எதிரான போர்—
பெரிய அம்பலத்தில் நிற்கிறோம்,
சிற்றம்பலம் அல்ல;
உன்னைச்சுற்றி எத்தனை
ரகசியங்களைப் பின்னிவைத்தாலும்
எல்லா சிதம்பர ரகசியங்களையும் அறுத்தெறியவல்ல
குமுறும் மக்கள்பெருங்கடலோடு நிற்கிறோம் —இது
பெரிய அம்பலம்.

ஆக்கம் :
பீட்டர்.

அடிக்குறிப்புக்கள் :

@ 1 @ “அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார். — குறள்உரை : கலைஞர்.
@ 2 @ “எல்லா உயிர்க்கும் தட்பஞ் செய்தலை மேற்கொண்டு ஒழுகலான் அந்தணர் என்போரும் துறந்தவராகக் கொள்ளப்படுவார். இதனால் துறவாராயினும் பெரியார் உளர் என்று கூறினார்” துறவறத்தின் பெருமை கூறப்பட்டது.’ என்ற —குறள் உரை: தமிழ்ச்சமணர் மணக்குடவர்.
@ 3 @ ” அந்தணர் என்ற ஏதுப்பெயர் அவ்வருளுடையார்க்கு அன்றிச் செல்லாது.” —குறள் உரை : பரிமேலழகர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here