ஐக்கிய விவசாயிகள் முன்னணி
(சம்யுக்தா கிசான் மோர்ச்சா)

பத்திரிகை செய்தி

14 மார்ச் 2022

••• குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான (எம்எஸ்பி) உத்தரவாதத்தைக் கோரி, அடுத்த கட்ட இயக்கத்தை சம்யுக்தா கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது !

••• விவசாயிகள் ஏப்ரல் 11 முதல் 17 வரை MSP உத்தரவாத வாரத்தைக் கடைப்பிடிப்பார்கள் !

••• குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்கு எதிராகவும், லக்கிம்பூர் கேரியில் அப்பாவி விவசாயிகளை வழக்கில் இணைப்பதற்கு எதிராகவும் விவசாயிகள் போராட்டம் நடத்தப்படும்!

••• விவசாயிகள் இயக்கத்திற்கு அரசு அளித்த உறுதி மொழிகள், மூன்று மாதங்கள் ஆகியும் நிறைவேற்றப்படாதது, அரசின் விவசாயி விரோத நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது

சம்யுக்தா கிசான் மோர்ச்சா, நாடு தழுவிய தனது அடுத்த கட்ட பிரச்சாரத்தை அறிவித்துள்ளது. இன்று (14.03.2021), டெல்லியில் உள்ள காந்தி அமைதி அறக்கட்டளையில் (Gandhi Peace Foundation) நடைபெற்ற SKMல் அங்கம் வகிக்கிற அனைத்து அமைப்புகளின் கூட்டத்தில், அடுத்த மாதம் ஏப்ரல் 11 முதல் 17 வரை, “MSP சட்ட உத்தரவாத வாரம்” கடைப்பிடிக்கப்படுவதன் மூலம், நாடு தழுவிய பிரச்சாரம் தொடங்கப்பட வேண்டும் என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இந்தப் பி.ச்சார வாரத்தின்போது, சம்யுக்த கிசான் மோர்ச்சாவுடன் தொடர்புடைய அனைத்து உறுப்பு அமைப்புகளும், அனைத்து விவசாயிகளுக்கும் மற்றும் அனைத்து விளைபொருட்களுக்கும், சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைத்தபடி, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (C2+50%) சட்ட உத்தரவாதம் கோரி, தர்ணா, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்த வேண்டும்.

கூட்டத்தில், லக்கிம்பூர் கேரி வழக்கில் நடந்து வரும் சட்ட நடைமுறைகளை ஆய்வு செய்த பின்னர், காவல்துறை நிர்வாகமும், வழக்கறிஞர்களும் சேர்ந்து குற்றவாளிகளைப் பாதுகாப்பது குறித்தும், அப்பாவி விவசாயிகளை வழக்கில் சிக்க வைக்க முயற்சிப்பது குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் சிக்கிய விவசாயிகள் சிறையில் இருக்கும் போது, இந்தப் படுகொலையை நிகழ்த்திய, மத்திய அமைச்சரின் மகனுக்கு இவ்வளவு சீக்கிரம் ஜாமீன் கிடைத்தது ஆச்சரியமான விடயமாக இருக்கிறது. மோனு மிஸ்ராவின் விடுதலைக்குப் பிறகு இந்த வழக்கில் முக்கிய சாட்சி ஒருவர் தாக்கப்பட்டதாக வெளியான செய்தி குறித்து சம்யுக்தா கிசான் மோர்ச்சா கவலை தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்த சட்டப் போராட்டத்தில் தளர்வு இல்லை என்றும், விவசாயிகளின் குடும்பத்தினருக்கு மோர்ச்சா சார்பில் முழு சட்ட உதவி வழங்கப்படும் என்றும் மோர்ச்சா முடிவு செய்துள்ளது.

சம்யுக்த கிசான் மோர்ச்சாவிற்கு இந்திய அரசு அளித்த எழுத்துப்பூர்வ உத்தரவாதங்களை டிசம்பர் 9 அன்று மோர்ச்சா மீள்ஆய்வு (review) செய்தது. மூன்று மாதங்களுக்குப் பிறகும், அரசாங்கம் அதன் முக்கிய வாக்குறுதிகளின் மீது செயல்படவில்லை என்பதைக் கண்டறிந்தது. MSP தொடர்பாக ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்ற உத்தரவாதத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. அரியானாவைத் தவிர, மற்ற மாநிலங்களில் போராட்டத்தின் போது விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட காவல்துறை வழக்குகள் திரும்பப் பெறப்படவில்லை. சில வழக்குகளை மட்டும் திரும்பப் பெறுவதாக டெல்லி காவல்துறை கூறியுள்ளது. ஆனால் அது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை. நாடு முழுவதும் இரயில் மறியலின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் எதுவும் நடக்கவில்லை.

லக்கிம்பூர் கேரி சம்பவத்தில் அரசின் பங்கு மற்றும் விவசாயிகள் இயக்கத்திற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் துரோகம் செய்ததற்காகவும், மார்ச் 21ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தை நடத்த சம்யுக்தா கிசான் மோர்ச்சா முடிவு செய்துள்ளது.

மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தொழிற்சங்கங்கள் நடத்தும் பாரத் பந்த் அழைப்பை சம்யுக்த கிசான் மோர்ச்சா ஆதரிக்கிறது என்றும், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் இதில் தீவிரமாக பங்கேற்பார்கள் என்றும் SKM மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் ஒருங்கிணைப்புக் குழுவால் கூட்டப்பட்ட இந்த தேசிய கூட்டத்தில், பஞ்சாப், அரியானா, டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஜார்கண்ட், அசாம், திரிபுரா, ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் அமைப்புகளின் பிரதிநிதிகள், பங்கேற்றனர்.

அறிக்கையை வழங்கியவர்கள்:

டாக்டர். தர்ஷன் பால், ஹன்னன் மொல்லா, ஜக்ஜித் சிங் தலேவால், ஜோகிந்தர் சிங் உக்ரஹான், ஷிவ்குமார் சர்மா (கக்காஜி), யுத்வீர் சிங், யோகேந்திர யாதவ்.

சம்யுக்தா கிசான் மோர்ச்சா
மின்னஞ்சல்: samyuktkisanmorcha@gmail.com

வெளியீடு : ஐக்கிய விவசாயிகள் முன்னணி, தமிழ்நாடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here