பராசக்தி: மொழிப்போர் தியாகிகளின் போராட்ட உணர்வை நமக்கு கடத்துகிறதா?
கேரளா ஸ்டோரி, காஷ்மீர் பைல்ஸ் என சங்கிகளால் அடுத்தடுத்து மத வெறியை கக்கும் பிளவுவாதப் படங்கள் வரும் சூழலில் இப்படம் அதற்கு நேராக இந்திய ஒருமைப்பாட்டை உயர்த்திப் பிடிக்கிறது.  

லைஞரின் கதை வசனத்தில், சிவாஜி கணேசனின் நடிப்பில் வந்த பராசக்தி படம் தமிழ்த் திரையுலகில் ஏற்படுத்திய தாக்கம் மகத்தானது.  தற்போது அதே பராசக்தி பெயருடன் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகி உள்ளது. ஒன்றிய மோடி அரசின் தணிக்கைக் குழுவால் 25க்கும் மேற்பட்ட வெட்டுக்காயங்களுடன் திரைக்கு வந்தது. வெட்டப்பட்ட காட்சிகளும் வசனங்களும் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.

மொழிப்போர்ரலாற்று கதைக்களம்!

தமிழக அரசியலில் இந்தி திணிப்புக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் மறக்க – மறைக்க முடியாத ஒன்று. அதே நேரம் அப்போது ஆட்சியில் இருந்த ஒன்றிய, மாநில அரசாங்கங்களால் திட்டமிட்டு நசுக்கப்பட்டு, இருட்டடிப்பு செய்யப்பட்ட போராட்டங்களில் ஒன்று.

மாநிலம் முழுக்க பற்றி எரிந்த போராட்ட களத்தில், காவல்துறையால் கட்டுப்படுத்த முடியாத அளவு எழுச்சி இருந்த நிலையில், ராணுவம் களம் இறக்கப்பட்டு பல ஊர்களில் துப்பாக்கிச்சூடுகள் நடந்துள்ள நிலையில், உயிர்ப்பலி  கணக்கு 10, 20 தான் என்றால் அதை நம்ப முடியாது.  மொழிப்போர் தியாகிகளின் எண்ணிக்கை 200 தொடும் என்கிறது படக்குழு. அத்தகைய கதைக்களத்தை எடுத்து பராசக்தி திரைப்படமாக தந்துள்ளது.

படத்தின் டிரைலர் வெளியான உடனேயே படத்திற்கான ஆதரவும் எதிர்ப்பும் வந்து குவிய தொடங்கியது. தற்போது மோடி தலைமையிலான பாசிச பாஜக இந்தியைத் திணித்து வரும் நிலையில் இந்த கருப்பொருள் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது.

காங்கிரஸ் ஆட்சியானது தமிழகத்திலிருந்து துடைத்தெறியப்பட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி  தொடங்கியதை இப்படம் சுட்டுகிறது.   அந்த வகையில் திரைப்படமானது, ஆர்எஸ்எஸ் சங்கிகளுக்கும் ஆத்திரத்தையும், காங்கிரசாருக்கு மறக்க நினைப்பதை மீண்டும் நினைவுப்படுத்துவதாக சங்கடத்தையும் தரும்.

இதற்கு ஏற்பவே ட்ரைலர் மீதான ஆதரவு, எதிர்ப்பு என்று இரு பிரிவுகளாக கருத்து மோதல்கள் தொடர்கின்றன. இப்பொழுது படமும் ரிலீஸ் ஆகிவிட்டது. இனி மேலும் விரிவான விமர்சனங்கள் வரக்கூடும். அதிலும் குறிப்பாக ஜனநாயகன் ரிலீஸ் முடக்கப்பட்டு, பராசக்தி பல வெட்டுக்களுடன் ரிலீஸ் ஆகிவிட்ட சூழலில் விமர்சனங்களை எதிர்பார்க்கலாம் தான்.

ஹிந்தி பேசாத மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களை நசுக்கும் வகையில் ஒன்றிய அரசின் தேர்வுகள் ஹிந்தியில் இருந்ததையும், அன்று ஒன்றிய அரசு நிறுவனங்களில் இந்தி மட்டுமே அலுவல் மொழியாக திணிக்கப்பட்டதையும் கதாநாயகன் எதிர்கொள்வதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வருபவர்கள் மொழிப் பற்றாளர்களாகத்தான் உள்ளனர்; மொழி வெறியர்களாக அல்ல.

இப்படம் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக பிற மொழி பேசும் இந்தியர்களையும் ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்பவே நடிகர்களையும் தேர்வு செய்துள்ளனர்.

ஒற்றுமையை விரும்பாத பாசிஸ்டுகள் பிளவுபடுத்துவதற்காக முன்வைக்கும் விமர்சனம் எது? இது தெலுங்கர்களால், தெலுங்கு, கன்னட நடிகர்களைக் கொண்டு, தெலுங்கு இயக்குனரை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் என்ற விமர்சனம்தான் சங்கிகளின் கண்ணோட்டத்தில் உள்ளது.

இப்படி பிற மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தமிழ் வாழ்க என்று முழங்கும் படத்தை எடுத்தால், தமிழர்கள் கொண்டாட தானே செய்வார்கள். இதிலும் தனது விஷமத்தனத்தை காட்ட சங்கிகள் முயற்சிக்கிறார்கள்.

ஆந்திராவில் திரையிடப்படும் பராசக்தி படத்தில் தமிழ் வாழ்க என்பதற்கு பதிலாக தெலுங்கு வாழ்க என்று போடுகிறார்கள். இது எப்படி சரி? என்று பொங்குகிறார்கள். இப்படி கேள்வி எழுப்பும் அவர்களுக்குத் தமிழ்ப் பற்றோ, அல்லது தாய்மொழிப் பற்றோ கிடையாது. அவர்கள் இந்தி சமஸ்கிருதப் பற்றுடையவர்கள். அதாவது காவிப் பாசிஸ்டுகள்.

எனவே தான் தமிழனுக்கு எதிராக தெலுங்கனை நிறுத்தப் பார்க்கிறார்கள். இந்த விமர்சனத்திற்கான பதில் திரைப்படத்தின் வசனத்திலும் உள்ளது. சங்கிகளின் சதிப் பிரச்சாரத்தால் குழம்புபவர்கள் இப்படத்தை பார்த்து பற்றுக்கும் வெறிக்குமான வேறுபாட்டை  புரிந்து கொள்ளவும். தமிழ் வாழ்க என்பதற்கும், அவரவர் தாய் மொழியை அவர் அவர்கள் கொண்டாட வேண்டும் என்பதன் தர்க்கத்தையும் புரிந்து கொள்ளுங்கள்.

இரு மொழிக் கொள்கையைத்தான் திராவிட கட்சிகள் உயர்த்திப் பிடித்தன. இந்தி திணிப்புக்கு எதிராக போராடியும் வந்தன. அதே நேரம் ரத்த சகதியில் மூழ்கடிக்கப்பட்ட இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்களை திராவிட முன்னேற்றக் கழகம் களம் இறக்கவோ, வழிநடத்தவோ இல்லை. இதை அண்ணா  கதாப்பாத்திரத்தின் மூலமாக சரியாகவே பதிவு செய்துள்ளனர்.

அதிகார வர்க்கத்தின் வலிமை எத்தகையது? மக்களால் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கும் அமைச்சரவையின் அதிகார வரம்பு எத்தகையது? என்பதை திரைப்படம் நன்றாகவே காட்சிப்படுத்தி உள்ளது. எதற்காக ஆயுதப் படைகளை மொழிவாரியாக பிரித்து உருவாக்கி பயன்படுத்துகிறார்கள் என்பதை, இப்படத்தில் வில்லனாக வரும் ரவி மோகனின் செயல்பாடுகளின் மூலம் போகும் போக்கில் அம்பலப்படுத்தியும் செல்கிறது.

தமிழர்கள் முன்னெடுத்த இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் மலையாளிகள், கன்னடர்கள் தெலுங்கர்கள், வங்காளிகள், ராஜஸ்தானியர்கள் என பலரும் கரம் கோர்ப்பதாக திரைக்கதை உள்ளது. அதாவது திராவிடம் என்ற இன அடிப்படையிலான தென்னிந்திய மக்களின் ஒன்றிணைவையும் கடந்து, இந்திய அளவிலான ஐக்கியத்தை இப்படம் கனவு காணச் செய்கிறது. ஆட்சியாளர்களுக்குப் புரியும் வகையில் அதிரடியாக கதாநாயகன்  டெல்லியில் நடத்தும் போராட்டம் மிகை எதார்த்தம் தான் எனினும், அத்தகைய போராட்டம்தான் ஆட்சியாளர் செவிகளை எட்டும்.

வரலாற்றில் கொண்டாடப்பட வேண்டிய, மதிக்கப்பட வேண்டிய, போற்றப்பட வேண்டிய, முன்னுதாரணமிக்க மாணவர்களின் எழுச்சியை சரியாக பதிவு செய்யவோ, அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கவோ இதுவரை எந்த திரைப்படமும் வரவில்லை என்பதே வெட்கக்கேடானது.  இன்று ஆங்கில மோகம் தலைவிரித்து ஆடிவரும் சூழலில், அரசுப் பள்ளிகளிலேயே ஆங்கில வழிக் கல்வி முதன்மைப்படுத்தப்பட்டு,  தாய்மொழி தமிழ்வழி கல்வி  இரண்டாம் பட்சமாக்கப்பட்டு வரும், நிலையில் இப்படம் வரவேற்பைப் பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

படிக்க:

 ஆண் பாவம் பொல்லாதது | சினிமா விமர்சனம் | முகநூல் பதிவு

 பாலியல் வக்கிரவெறியில் திளைத்து நிற்கும் சினிமா கழிசடைகளை எவ்வாறு தண்டிப்பது?

அரசோ ஆளும் வர்க்கங்களோ நினைத்தால், வரலாற்றில் இருந்தே மறைக்கச் செய்ய முடியும்; சுடர்விட்டு பிரகாசிக்க வேண்டியதை மங்கி இருளடையச் செய்ய முடியும் என்பதையும், கலைப்படைப்புகளால் வரலாற்றுக்கு மீண்டும் உயிர் தர முடியும். இதை உணர்ந்து வெற்றிக்காக உழைத்திருக்கிறார்கள் படக்குழுவினர்.

கேரளா ஸ்டோரி, காஷ்மீர் பைல்ஸ் என சங்கிகளால் அடுத்தடுத்து மத வெறியை கக்கும் பிளவுவாதப் படங்கள் வரும் சூழலில் இப்படம் அதற்கு நேராக இந்திய ஒருமைப்பாட்டை உயர்த்திப் பிடிக்கிறது.

படத்தின் துவக்கத்திலேயே இப்படம் சரி, மத ரீதியாக யாரையும் குறிப்பிடுவன அல்ல; இதில் வரும் பெயர்கள் பொருந்தினால் அது தற்செயல் நிகழ்வு தான் என்று ஸ்லைடு  போட்டு அதைப் படித்தும் காட்டினர். சென்சார் போர்டு அழுத்தமாக இருக்கலாம். அதேபோல் திரைக்கதையில் வணிக / கலை ரீதியாக சில கற்பனைகளையும் கலந்து ஈர்க்கும்படி படமாக்கியும் உள்ளார்கள்.

சூலூர் விமான நிலையத்திற்கு தீ வைத்த காலனிய எதிர்ப்பு போராட்டங்களில் இருந்தும், சங்கம் வைக்கும் உரிமைக்காக சின்னியம்பாளையம் தியாகிகளின் – பஞ்சாலை தொழிலாளர்களின் வர்க்க போராட்டத்தில் இருந்தும் கோவையின் சிறப்பை நாம் அறிவோம். ஆனால் இதுவும் கூட அனைவரிடமும் கொண்டு சேர்க்கப்படவில்லை. அதற்கு ஏதேனும் தனியாக திரைப்படம்தான் எடுத்தாக வேண்டும். போராட்ட வரலாற்றை படித்தவர்கள் மதிப்புடன் பார்த்து வந்த கொங்கு மண்டலத்தை மேலும் பிரகாசிக்கும் வகையில் இப்படம் வெளிவந்துள்ளது.

இது கோவையில் கால் பதிக்க துடிக்கும் சங்கிகளுக்கு கசப்பாகவே இருக்கும். மேற்கு மண்டலத்தில் அரசாங்கமானது உரிமை கேட்பவர்களை அச்சத்துடன் பார்த்து, குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளை கூட அனுமதிக்க மறுப்பதை  களமாடும் இயக்கங்கள் அறிவர். இப்படம் அம்மண்னை மேலும் சிறப்பிக்கும் வகையில், மொழிப்போர் தியாகிகளின் போர்க்குணத்தை சிறப்பாக பதிவு செய்துள்ளது.

ரத்தம் தோய்ந்த போராட்டக் களத்தின் வரலாற்றை ‘பொழுதுபோக்கு அம்சங்களுடன்’ கொடுக்க முயற்சித்ததில் முழுமையாக வெற்றி பெறவில்லை.

அதேபோல், 50 ஆண்டுக்கு முந்திய கதைக்களத்தை ஈர்ப்புடன் காட்சிப்படுத்தவும், வசனத்தின் மூலம் பதிய வைக்கவும் கவனம் தந்து இருக்கிறார்கள். பாடலின் சில வரிகள் தான் எளிதாக புரிவதில்லை.

படத்தில் தணிக்கை குழுவினரின் குறுக்கீடுகள் பல இடங்களில் உறுத்தல்களாகவே உள்ளன. ஆங்காங்கே வசனங்கள்  – ஒலி  தடுக்கப்பட்டுள்ளன.  அவை படத்திற்கு வீரியம் ஊட்டுவதாக இருந்திருக்கும் பார்ப்பவர்களுக்கும் உணர்வூட்டுவதாக அமைந்திருக்கும் என்பது புரிகிறது.

“தீ பரவட்டும்” என்ற தலைப்பு “நீதி பரவட்டும்” என்பதாக வலிந்து திணிக்கப்பட்டுள்ளது. சென்சாரின் கத்திரிகளுக்கு தப்பி வந்த படமே இப்படி இருந்தால், முழுமையாக சேதாரம் இன்றி வந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.  நம் முந்தைய தலைமுறையினரின் மொழிப்பற்றையும், மொழியை இழந்தால் அந்த இனத்தின் எதிர்காலம் என்னவாகும் என்ற விழிப்புணர்வையும் ஆதரிப்போம்.  சரியான தருணத்தில் வெளிவந்துள்ள பராசக்தி போன்ற முயற்சிகளுக்கு நமது ஆதரவைத் தருவோம்.

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here