கேள்விகள்!

காலைவரும் அந்திமாலைவரும்
கோயிலுக்கே கடவுள்சிலை என்றுவரும் ?
படிச்சட்ட * மாலைகளோ அழுகிவரும் !

ஓயாமல் தட்டுச் சுமைதூக்கும்
கூலிவேலைகளோ நடந்துவரும்.
குடமுழுக்கு வரும்வரைக்கும்
உழைப்பு தொடர்ந்துவரும்.
தம்உழைப்பு அந்நியமாய்ப் போனதென
அவர் அறியும்நாள் என்று வரும் ?

எந்நாளும் பின்னணியில்
ஒப்பந்தக்காரர் கணக்குவரும்.
வெள்ளையும் சொள்ளையுமாய்
ஆள்மாறும் வித்தைவரும்.
குலம்நாசமென்றாலும்
சிவன்சொத்து கைமாறும்
கருப்பு வெள்ளையாகும்
கூட்டணி பேரமும்மாறும் —
அதிகாரி, அர்ச்சகன், எம்மெல்லே
முக்கூட்டு பிறப்பெடுக்கும்!
பையப்பைய வந்தாலும்
பொய்க்கணக்கு காரில்வரும்!


இதையும் படியுங்கள்:  இலக்கிய தாகம்! – புதியவன்


ஓர்நிமிடம் !
கடவுள்சிலைவராத ரகசியம் அறிவீரோ ?

“ஊரில் சொல்கிறார், அதைச் சொல்வேன்,
வேறு ஒன்றும் அறியேன் பராபரமே ! —
என்றும் கண்திறவாத சிலைக்கு
கண்ணை எப்படித் திறப்பது என்று
இளஞ் சிற்பி திகைத்தாராம்;
‘சிலை தயாரில்லை, வேறு சிற்பி
கிடைப்பார் பார்த்துக்கொள் ‘ என்று
சொல்லி அனுப்பிவிட்டாராம் !
பஞ்சாயத்து நடக்கிறதாம், பணமூட்டை பறக்கிறதாம்.
போதுமா, வேறுஎதும் வேண்டுமா ?
ரகசியம் இதுவே.
ஆக, சிலை இல்லை,
கொட்டு அடியோ, நாயனமோ, ஊர்வலமோ இல்லை.”

இன்னம் ஒன்று,
ஊர்பூரா மறியல்களாம், அறிவீரோ ?

” முக்காலமும் அறிவோம் —
கோயில் ஊழல் அதிகாரம்
தெருவெங்கும் அதேபேச்சு.
எதிர்கால ‘அட்சய பாத்திரம்’
பறிபோகும் பீதியில்
அர்ச்சகப் பார்ப்பார் பலபடி ஏறிஇறங்கி
பித்துப்பிடித்து சுறாபானம் அருந்தி
அலையுறார், அறியீரோ !
இப்போது அவ்வளவே, ஆளைவிடும் !”

மீண்டும் பொழுதெப்போ விடியும் ?
பூவெப்போ மலரும் ?
சிலை எப்போ கோயில் வரும் ?
உலகம் நலம்பெற வரமெப்போ தரும் ?

“காலநதியில் ஓடம் வரும்,
மண்டைஎழுத்து மாற்ற
ஓர் அவதாரம் வரும்” என்று
மெகா புராணம் எழுதி, ‘2024 பஜனை’ பாடி
‘சாய் ரிக்சா’ போல ரதம் வலம் வருதாம்,
சொல்கிறார்கள் கேட்டீரோ ?


இதையும் படியுங்கள் : சூ , தந்திரம் !

வரட்டும் நமக்கென்ன ?
காலமெல்லாம் காத்திருக்க.
ஏமாளிகளா நாம் ?
காலைவரும் மாலைவரும் என்று
காத்திராமல் இன்றே களம் புகுவோம்.
எரிமலை சீறிவரும்
குழம்பைத் தொடுவோம்.
இல்லாத சாமியைச்சுற்றிக்
கும்மியடிக்கும் பார்ப்புக்கூட்டத்தைத்
தூக்கி எறிவோம்.
எழாத கோயிலுக்குள்ளே
ஒன்றுமில்லை என்றே புள்ளிவைப்போம்,
கோலம்போட அல்ல,
கேள்விகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளிவைக்க.

சரிதானே மக்களே ??

புதிய புத்தன்

* ‘ படிச்சட்டம்’ என்பது வீதி ஊர்வலங்களில் ‘கோயில் விழாச்சாமி’யை உழைப்பாளிகள் அடிமை போலத்தூக்கிவரப் பயன்படுத்தும் கருவி; இதற்கே திருவாச்சி, தோளுக்கினியான், திருவாழத்தண்டு, கேடயம் என்று வேறுபல பெயர்களும் உண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here