ந்த மாதம் 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் அவரது வீட்டுக்கு வெளியிலேயே மர்மக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். படுகொலை தொடர்பாக பிரபல ரௌடியான கடந்த ஆண்டு கொல்லப்பட்ட ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 08 பேர் சரணடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து, 03 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த படுகொலையை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததுடன் கொலைக்கு காரணமான உண்மையான குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் எனக் குரலெழுப்பி வருகின்றனர்.

இதற்கிடையில், ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் அரசு மெத்தனமாக நடந்து கொள்கிறது. சிபிஐ விசாரணை வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

போலீசின் கையாலாகாத்தனமும்! ஆருத்ரா கோல்டு கம்பெனி பின்னணியும்!

கொலைக்கான புலனாய்வு முழுமையாக துவங்காத நிலையில் சென்னை காவல்துறை ஆணையர் திரு.சந்தீப்ராய் ரத்தோர், இக்கொலையில் அரசியல் நோக்கமில்லை என்றும், ஆற்காடு சுரேஷ் கொலையில் ஆம்ஸ்ட்ராங்கின் பங்கு உள்ளதா என்பதை உறுதிப்படுத்த நாங்கள் மீண்டும் விசாரிக்கிறோம்” என்றும் அவசர அவசரமாக அறிவித்தார். புலனாய்வு முழுமையாக தொடங்காத நிலையில் கொலையில் சரணடைந்தவர்கள் கூறும் காரணத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு இப்படி ஒரு செய்தியை காவல்துறையின் உயரதிகாரியே வெளியிடுவது தமிழக போலீசின் கையாலாகாத்தனத்தையே காட்டுகிறது. இதன் பிறகு சென்னை காவல் துறை ஆணையர் மாற்றப்பட்டாலும் உண்மை நிலையை நோக்கி வழக்கு நகரவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

கொலைக்கான பின்னணியில் ஆருத்ரா கோல்டு கம்பெனி இருக்கிறது என பலரும் சந்தேகம் எழுப்பியுள்ளனர். சந்தேகத்தை உறுதி செய்யும் விதமாகவே படுகொலைக்கு முன்னும்- பின்னும் நடந்த நிகழ்வுகள் உள்ளன.

ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற பெய்ரில் சென்னை அமைந்தக்கரையில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் முதல் கிளை துவக்கப்பட்டது. அதன் பின்னர் இந்தக் கம்பெனி சென்னை, ஆரணி, காஞ்சிபுரம், செய்யாறு, செங்கல்பட்டு உள்ளிட்டு 25க்கும் மேற்பட்ட கிளைகளைத் தொடங்கியது. ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செலுத்தினால் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வட்டி என 12 மாதங்களுக்கு வழங்கப்படும். அதோடு தங்கக் காசுகளும் பரிசாகக் கிடைக்கும் என ஆருத்ரா மக்களுக்கு பேராசை காட்டியது.

இதை நம்பி பல நடுத்தர மற்றும் ஏழை மக்களும், அரசு ஊழியர்கள், பிசினஸ் புள்ளிகள் என சுமார் 1,09,255 பேரிடம் ரூ.2,438 கோடி வரை முதலீடு செய்தார்கள். ஆனால் குறித்த காலத்தில் அவர்களுக்கு தருவதாக சொன்ன வட்டிப் பணமோ, அசல் பணமோ எதையும் தராமல் சுருட்டி கொண்டது ஆருத்ரா. இந்த பகற் கொள்ளையில் பா.ஜ.க பிரமுகர்கள் பின்னணியில் இருப்பது அம்பலமானது. அதாவது தமிழ்நாடு பா.ஜ.க விளையாட்டுப் பிரிவு செயலாளராக இருந்த ஹரீஷ் கைதும் செய்யப்பட்டார். இதேபோல் பா.ஜ.க பிரமுகரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷும் விசாரிக்கப்பட்டார்

இந்நிலையில் ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்களில் சிலர் பணத்தை வாங்கித் தருமாறு பி.எஸ்.பி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை அணுகியிருக்கிறார்கள். அவரும் அதற்கான முயற்சியை எடுத்துள்ளார். மறுபக்கம் நிறுவனத்திற்கு ஆதரவாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் களமிறங்கி உள்ளார். இதனால் ஆற்காடு சுரேஷ் மற்றும் ஆம்ஸ்ட்ராங் இருவருக்கும் இடையில் பகை உருவானது மட்டுமின்றி, ஆருத்ரா நிறுவனத்திற்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்குமான பகையும் கூர்மையடைந்துள்ளது.

இந்த சூழலில்தான் கடந்த ஆண்டு பட்டினப்பாக்கத்தில் கூலிப்படையினரால் ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டார். இது குறித்து பட்டினப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் பிரபல ரவுடி பாம் சரவணன் சகோதரர் தென்னரசு கொலைக்கு பழிதீர்க்கும் வகையில் இந்த கொலை நடந்தது தெரியவந்தது. கொலை நடந்த மறுநாளே அரக்கோணம் ஜெயபால், சைதை சந்துரு, யமஹா மணி ஆகிய மூன்று பேர் வழக்கறிஞர் மூலம் மயிலாப்பூர் போலீசாரிடம் சரணடைந்தனர்.

அதேபோல நெல்லை ராமையன்பட்டியை சேர்ந்த ரவுடிகள் செந்தில்குமார் முத்துக்குமார், அரக்கோணம் மோகன், நவீன், போஸ், சுரேஷ், கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தை சேர்ந்த ரவுடி எட்வின் உள்ளிட்டோர் நெல்லை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்தியபோது கைது செய்யப்பட்ட 11 பேர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த அதிமுக 111வது வட்டச் செயலாளர் சுதாகர் மற்றொரு அதிமுக நிர்வாகி ஜான் கென்னடி ஆகிய இருவருக்கும் ஆற்காடு சுரேஷ் வழக்கில் தொடர்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் கிழக்கு கடற்கரை சாலை பகுதி பங்களாவில் பதுங்கி இருந்தவர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்” இந்த வகையில் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு காரணமானவர்கள் போலீசால் கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் உள்ளார்கள்.

ஆனால் திடீரென்று ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ”எனது அண்ணன் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துள்ளோம்” என்று கூறியுள்ளது சந்தேகத்தை கிளப்புகிறது. ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் கூலிப்படையினர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில், ஆற்காட்டு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே கொலை செய்தோம் என கூறுவதை புலனாய்வு செய்யாமல் ஏற்றுக் கொள்ளும் நிலையிலேயே தமிழக காவல்துறை இருக்கிறது.

இந்த முரண்பட்ட தகவல்களை பார்க்கும் போது, ”பாஜக பிரமுகர்கள் மூலம் நடத்தப்பட்ட ஆருத்ரா நிறுவன நிதி மோசடிக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த தலித் தலைவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார் என்பதும், ஆருத்ரா நிறுவனத்தின் பங்குதாரர்களான பாஜகவினருக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பு இருப்பதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது என்கின்ற பின்னணி தமிழக காவல்துறையால் மறைக்கப்படுகிறது” என்றே அனுமானிக்க முடிகிறது. இது பற்றிய புலன் விசாரணையை போலீசு மேற்கொண்டு உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கட்டும்.

அவதூறு தொடங்கியது பாஜக! பரப்பியது திமுக!

பி.எஸ்.பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட சமயத்தில் அவரை இழிவு செய்யும் பதிவுகளை முதன்முதலில் பாஜகவின் ஐ.டி விங் தான் தொடங்கியது. இது ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னணியில் ஆருத்ரா நிதி நிறுவன மோசடி இருக்கிறது என்கின்ற உண்மை வெளிவந்து விடக்கூடாது என்பதற்காக பரப்பப்பட்டதாக இருக்கலாம். ஆனால் சென்னை மாநகர காவல் ஆணையரின் பேட்டிக்கு பிறகு திடீரென அந்த பதிவுகள் நீக்கப்பட்டன. சில மணி நேரத்தில் பாஜக பரப்பிய அதே பதிவுகள் திமுகவின் ஐ.டி-விங் குழுவினர் சிலரின் ட்விட்டர், பேஸ்புக்கில் வெளிப்பட ஆரம்பித்தன.

அனைத்துக் கட்சிகளும் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்ற கண்ணோட்டத்தில் பேச ஆரம்பித்த உடன் தனது பக்கத்து நியாயத்தை விளக்காமல், இறந்த பி.எஸ்.பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் மீதான அவதூறு ட்ரோல்களை  திமுகவின் சில  சமூகவலைதள கும்பல்கள் தீவிரமாக செய்து உண்மையான குற்றவாளிகளை தங்களுக்கே தெரியாமல் மறைக்க தொடங்கிவிட்டது.

திமுக சார்பு ஐடி விங் என்று செயல்படும் சிலர் கண்மூடித்தனமாக திமுகவை ஆதரிப்பதின் மூலம் மக்களுக்கு துரோகம் இழைக்கின்றனர். சில பொய்களை, தற்போதைய சூழலில் பொருத்தமற்ற பழைய பதிவுகளை ட்ரோல் செய்கின்றனர். சில நேரங்களில் இவர்களின் செயல் திமுகவின் தவறுகளை மட்டுமல்ல, பாஜகவின் அயோக்கியத் தனங்களையும் தவறுகளையும் சேர்த்தே மறைக்கின்றன. இது பி.எஸ்.பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் அப்பட்டமாக வெளிப்பட்டு விட்டது.

ஆம்ஸ்ட்ராங் அரசியல் வாழ்க்கை  அடையாள அரசியலின் தொடர்ச்சி!

ஆம்ஸ்ட்ராங் தனது அரசியல் வாழ்க்கையை 2000 ஆம் ஆண்டில் பூவை மூர்த்தி தலைவராக இருந்த புரட்சி பாரதம் கட்சியில் இணைந்து தொடங்கினார். 2002ஆம் ஆண்டு பூவை மூர்த்தி இறந்த பிறகு, அக்கட்சியில் இருந்து விலகி ‘அம்பேத்கர் தலித் ஃபவுன்டேஷன்’ என்ற அமைப்பு ஒன்றைத் துவங்கிச் செயல்பட்டு வந்தார்.

கடந்த 2006ஆம் ஆண்டு நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் 99வது வார்டில் யானைச் சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து பி.எஸ்.பி கட்சியில் இணைந்து 2007 ஆம் ஆண்டில் அதன் மாநில தலைவராக பொறுப்பேற்றார். மாயாவதியைச் சென்னைக்கு அழைத்து வந்து மிகப் பெரிய பேரணி- மாநாடு ஒன்றையும் ஆம்ஸ்ட்ராங் நடத்தி தனது அரசியல் செல்வாக்கை உயர்த்தினார்.

2009 ஆம் ஆண்டு திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் எல்எல்பி பட்டம் பெற்று, சென்னை நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டார். தனது ஆரம்பகால வாழ்க்கை செயல்பாடுகள் காரணமாக ஆம்ஸ்ட்ராங் மீது ஏழு கிரிமினல் வழக்குகளால் பதிவு செய்யப்பட்டது. ரவுடிகள் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டது. வழக்குகளில் குற்றம் எதுவும் நிரூபிக்கப்படாததால் அனைத்திலும் இருந்து விடுவிக்கப்பட்டார். நீதிமன்ற உத்தரவை பெற்று 2012ல் ரவுடிகள் பட்டியலில் இருந்தும் வெளியில் வந்தார்.

வட சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிறைய உதவிகளைச் செய்து வந்துள்ளார். டாக்டர் அம்பேத்கர் சட்ட கல்லூரியில் படித்து வந்த ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஒரு பிரச்னை என்றால், அதற்காக இரவு பகல் பார்க்காமல் செயல்பட்டும், பணம் இல்லாத தலித் மாணவர்களுக்கு கட்டணம் செலுத்துவது போன்ற காரியங்களையும் செய்து வந்துள்ளார். தலித் மக்களின் குழந்தைகள் படிப்புக்கு தேவையான நோட்டு, புத்தகம் உள்ளிட்ட உதவிகளையும் செய்து வந்துள்ளார். அதாவது, வடசென்னை சுற்றியுள்ள தலித் மக்களின் தலைவராக வளர்ந்து வந்துள்ளார் ஆம்ஸ்ட்ராங்.

ஆம்ஸ்ட்ராங் போன்ற தலைவர்கள் அடையாள அரசியலை தூக்கிப் பிடித்து உருவாவதற்கு முக்கியமான அடிப்படை என்னவென்றால், இந்திய சமூக அமைப்பில் வெகு நீண்ட காலமாக சாதி தீண்டாமை கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் தலித் மக்கள் மீதான தாக்குதல்களை கம்யூனிச அமைப்புகள் கண்டு கொள்வதில்லை என்ற உண்மைக்கு விரோதமான பொய்யான பரப்புரைகள்தான்.

90களில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகள் அமல்படுத்த துவங்கிய காலகட்டத்தில் அதற்கு எதிராக போராடுகின்ற மக்கள் ஒன்றிணைந்து போராடக் கூடாது; ஒரு வர்க்கமாக திரண்டு மறுகாலனியாதிக்கத்தை முறியடித்து விடக்கூடாது என்பதற்காகவே ஏகாதிபத்திய கும்பலால் கொண்டுவரப்பட்டது தான் அடையாள அரசியல்.

இந்த அடையாள அரசியல் வர்க்கமாக ஒன்று திரண்டு போராடுவதற்கு எதிராக சாதி, பெண்கள், விளிம்புநிலை மக்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் என்று வெவ்வேறு அடையாளங்களுடன் தனித்தனியாக போராடுவதை ஊக்குவிக்கிறது. புரட்சிகர அமைப்புகளில் தாக்குப் பிடிக்க முடியாமல் வெளியேறிய பேராசிரியர் கல்யாணி, பேராசிரியர் பழமலை. எழுத்தாளர் ரவிக்குமார் போன்ற  ‘மாஜி புரட்சியாளர்கள்’ இது போன்ற அடையாள அரசியலில் முன்னிலை வகித்தனர். பின் நவீனத்துவத்தின் நுண் அரசியலானது, சாதி, உட்சாதி, இனக்குழு, பாலினம் போன்ற அடையாளங்களை முதன்மைப்படுத்தி, வர்க்கப் போராட்டம் என்ற கருத்தாக்கத்தையும் கம்யூனிசத்தையும் தூற்றியது.

படிக்க: உயர்கல்வி நிறுவனங்களில் சாதிய வன்மத்தால் தொடரும் தற்கொலைகள்!

இதேபோன்று 1984 வாக்கிலேயே வடநாட்டில் முன்னாள் ராணுவ வீரரான கான்ஷிராம் பகுஜன் சமாஜ் கட்சி என்ற கட்சியை துவங்கி தலித்துகளை அமைப்பாக்குவதற்கு முயற்சித்து வந்தார். இந்த சூழலில் 2000-ல் அரசியலுக்கு வந்த ஆம்ஸ்ட்ராங் தேர்தல் அரசியல் கட்சிகளின் தலித்துகளுக்கு போராடுகின்ற விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் போன்ற கட்சிகளுக்கு அப்பால் செயல்பட்டு வந்த பூவை மூர்த்தியின் புரட்சி பாரதம் கட்சியில் இணைந்ததும், அவரது இறப்புக்கு பின்னால் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்ததும் தற்செயலாக நடந்தவை அல்ல.

பகுஜன் சமாஜ் கட்சி இன்று வரை பாசிச பாஜகவிற்கு ஆதரவாக பி டீமாக செயல்பட்டு வருகிறது என்பதை சமீபத்திய உத்திர பிரதேச தேர்தலில் கூட பார்த்தோம். தலித்துகளை சாதி ரீதியாக ஒடுக்கி வருகின்ற பாசிச பாஜகவிற்கு பி டீம் வேலை செய்ததன் மூலம் பாஜகவிற்கு எதிரான சக்திகள் வளர்வதற்கும், வெற்றி பெறுவதற்கும் தடையாகவே இருந்தது. இதே நோக்கத்தை தமிழகத்தில் திமுக மற்றும் இந்திய கூட்டணிக்கு எதிராக ஆம்ஸ்ட்ராங் செய்து வந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.

சித்தாந்த ரீதியாக பாசிச பாஜகவுடன் ஒரே அணியில் இருந்தாலும், தொழில் ரீதியாக ஆருத்ரா கோல்ட் நிறுவனத்திற்கு எதிராக செயல்பட்டதால் கூலிப்படையினர் மூலம் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தான் தற்போது வரை கிடைத்துள்ள விவரங்கள் தெரிவிக்கும் உண்மையாகும்.

ஆம்ஸ்ட்ராங் வடசென்னை சுற்றியுள்ள தலித் மக்களுக்காக உதவிகளை செய்துள்ளார், ஆருத்ரா நிதி நிறுவனம் மோசடிக்காக எதிராக குரல் கொடுத்தார் என்ற போதிலும் பாஜகவின் ஐந்தாம் படையாக செயல்படும் மாயாவதி கட்சியின் தமிழகத்தின் மாநில தலைவராக இருந்தார் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். பிறப்பால் தலித், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை செய்துள்ளார் என்பதாலேயே இவர் ஏற்றுக் கொண்ட அரசியல் சரியானது என சுருக்கி பார்க்கவும் முடியாது. பார்க்கவும் கூடாது.

ஆம்ஸ்ட்ராங் ஏற்றுக்கொண்ட அடையாள அரசியல் பாட்டாளி வர்க்க அரசியலுக்கு நேர் எதிரானது என்றாலும் அவரது படுகொலையை ஆதரிக்க முடியாது. படுகொலைக்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க  தமிழகத்தை ஆளும் திமுக அரசுக்கு நிர்பந்தம் கொடுப்போம்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் உண்மை குற்றவாளிகளை போலீசு கண்டுபிடிக்கவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் விமர்சிப்பதாலேயே திமுகவிற்கும் உரசல் என்றும் செய்திகளை பரப்புவது உள்நோக்கம் கொண்டதாகும். திமுக ஆட்சியில் தலித் தலைவர்கள் மற்றும் மக்களின் மீது தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

  • இரணியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here