படு பிற்போக்குத்தனமான மகரிஷி சரக் சப்த் சமஸ்கிருத உறுதி மொழி ஒன்பது மருத்துவ கல்லூரிகளில் எடுக்கப்பட்டது குறித்து, ” யார் மீதும் நடவடிக்கை இல்லை” என்று  கவுத்தி மூடி விட்டால் எப்படி? இதே சமாச்சாரம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்ட நிகழ்விலும் நடந்தது எப்படி?

கடந்த மூன்றாம் தேதி சர்சைக்குரிய மகரிஷி சரக் சப்த் உறுதிமொழியை  ஏற்ற விவகாரம் தொடர்பாக அறம் இதழில் கட்டுரை வெளியானது.

அதில், ‘சர்ச்சைக்குரிய மகரிஷி சரக் சப்த் உறுதிமொழியை ஏற்கவேண்டாம் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் எவ்வித கடிதத்தையும், மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பவில்லை’ என்று சுட்டிக் காட்டி இருந்தோம்!

இதற்கு எதிர்வினையாக, ”பிப்ரவரி 11 ம் தேதியே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுவிட்டது’’ என்று மருத்துவக்கல்வி இயக்குநரகம் சார்பில் ஒரு கடிதம் பத்திரிக்கைகளுக்கு அளிக்கப்பட்டது. ஆனால், அதில் “முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கான சேர்க்கை நடவடிக்கைகள் சென்ற ஆண்டு இருந்ததை போலவே தொடரும் என்றும்மருத்துவக் கல்வி இயக்குநரகம் அல்லது மருத்துவத் துறையின் அனுமதி இல்லாமல் எவ்வித கூட்டங்களும்/விழாக்களும் மருத்துவக் கல்லூரிகளுக்குள் நடத்தப்படக் கூடாது”  என்றும் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை வைத்து மருத்துவக்கல்வி இயக்குநரகத்தின் இவ்வுத்தரவை மதுரை மருத்துவக்கல்லூரி டீன் மீறிவிட்டார் என்று பிரச்சனை திசை திருப்பப்பட்டது.

இதனையடுத்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்களிடம் இக்குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பியபோது அவரும் DME இன்பிப்ரவரி 11 ம் தேதியிட்ட கடிதத்தை மேற்கோள் காட்டியே ஊடகங்களுக்கு பதிலளித்துள்ளார்.

மருத்துவக்கல்லூரி இயக்குநரகம் (DME) அனுப்பியுள்ள இக்கடிதத்தில் என்னென்ன குறைபாடுகள் என்று ஒவ்வொன்றாக கீழே விவாதிக்கலாம்.

  1. இக்கடிதத்தின் பொருள் (Subject), தேசிய மருத்துவ ஆணையத்திடம்(NMC) இருந்து பிப்ரவரி 11 ஆம் தேதி, மருத்துவக்கல்லூரி இயக்குநரகத்தில் பெறப்பட்ட  கடிதத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப் படுத்துவது தொடர்பாக, மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு எழுதப்பட்ட கடிதமாகும். அதன் காரணமாக NMC வலைதளத்தில் அக்கடிதம் பதிவேற்றம் செய்யப்படவில்லை.  மேலும், சர்ச்சைக்குரிய மகரிஷி சரக் சப்த் உறுதிமொழியை தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரைத்து சுற்றறிக்கை வெளியிட்டதே மார்ச்சு 31 ஆம் தேதியன்று தான். அந்த சுற்றறிக்கை NMC இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் பதிவேற்றம் செய்யப்படுள்ளது. (தேசிய மருத்துவ ஆணையத்தின் சுற்றறிக்கையை வாசிக்க: https://www.nmc.org.in/MCIRest/open/getDocument?path=/Documents/Public/Portal/LatestNews/Implementation.pdf)

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மருத்துவ கல்லூரிகளீல் இந்த சமஸ்கிருத உறுதி மொழி ஏற்பு வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது குறித்து ஏன் இது நாள் வரை மெளனம் சாதிக்கப்பட்டது? அக்கூட்டத்தை ஏற்பாடு செய்த மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது இயல்பாகவே எழும் கேள்வி.

மருத்துவக்கல்வி இயக்குநரகம் ‘பொய்’ சொல்கிறது என்று மேற்குறிப்பிட்ட விடயங்களை மருத்துவக்கல்வி இயக்குநரகம் அனுப்பிய 11.02.2022 தேதியிட்ட கடிதம் தமிழகத்தில் COVID-19 லாக் டவுன் கட்டுப்பாடுகள் இருந்த சமயத்தில், பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி அமுலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகளை மீறக்கூடாது என்ற அடிப்படையில் அனுப்பப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம் தொடர்பாக தமிழக அரசு தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவேற்றயுள்ள சமீபத்திய உத்தரவு 15.02.2022  ஆம் தேதியிட்டது.( அந்த உத்தரவை படிக்க Disaster management G.O ( G.O. (Ms) no. 75 (Revenue and Disaster Managment (DM-IV) Department) dated 15/02/2022  : https://cms.tn.gov.in/sites/default/files/go/revenue_e_75_2022.pdf)

ஆம், மருத்துவக்கல்வி இயக்குநரகம் அப்போது நடைமுறையில் இருந்த  கொரோனா கட்டுப்பாடுகளை அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் பின்பற்ற வேண்டும் என்று கடிதம் அனுப்பிய நான்காவது நாளிலேயே கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதை தொடர்ந்தே, அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் whitecoat ceremony/ induction programme நடத்தப்பட்டது.

சரி, இந்த சர்ச்சைக்குரிய உறுதி மொழி விவகாரத்திற்கு வருவோம். மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் பதவி நீக்கம் செய்யப்பட பின்னர் 3/05/2022 ஆம் நாள் மருத்துவ க்கல்வி இயக்குநர் மருத்துவர் நாராயணபாபு அவர்கள் மதுரை மருத்துவக்கல்லூரியில் விசாரணை நடத்தினார். அப்போது பத்திரிகையாளர்களிடம் அவர், “இந்த சர்ச்சைக்குரிய உறுதிமொழி எடுக்கப்பட்ட அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்களும் விசாரிக்கப்பட்டு, நடவடிக்கைகளுக்கு உள்ளாவர். மதுரை மருத்துவக்கல்லூரி முதல்வர் குறித்து விசாரணை அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும்” என்று பதிலளித்ததாக நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.

அமைச்சர் மா.சுப்ரமணியன்

அதன் பின்னர் அமைச்சர் அவர்கள் அளித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், “விசாரணையின்போது மரு. இரத்தினவேலு அவர்கள் தனக்கு தெரியாமல் இந்த தவறு நடைபெற்றதாக வருத்தம் தெரிவித்ததை கருத்தில்கொண்டு இவ்விவகாரத்தில் அவர்மீது மேல் நடவடிக்கைகள் கைவிடப்படுகின்றன. இதனை மேலும் சர்ச்சையாக ஆக்க வேண்டாம்”என்று தெரிவித்தார்.  ஏற்கனவே உள்ள சர்ச்சையை மேலும் சர்ச்சைக்கு உள்ளாக்குவதே அமைச்சர் அவர்களின் இந்த கூற்றுதான். அமைச்சர் அவர்களை பொறுத்தவரை “தவறு நடந்திருக்கிறது. ஆனால் நாங்கள் மதுரை டீன் மீதான நடவடிக்கைகளை கைவிடுகிறோம்” என்று சொல்லாமல் சொல்லிருக்கிறார். மேலும் தவறுக்கு யார் பொறுப்பு என்று விசாரணை செய்யும் எண்ணம் அவருக்கு இல்லையோ என்னவோ?

(சட்டமன்ற உரை விடியோவை பார்க்க : https://www.youtube.com/watch?v=b9-DcJu6ves&ab_channel=PuthiyathalaimuraiTV

தேசிய மருத்துவ ஆணையம் 31 மார்ச்சு அன்று வெளியிட்ட சுற்றறிக்கையில் ‘மாற்றியமைக்கப்பட’மகரிஷி சரக் சப்த் (Modifed Maharshi CharkShapath) உறுதிமொழியை   பரிந்துரைப்பதாக கூறியுள்ளது. அதாவது, ஆயுர்வேத மருத்துவ முறையில் பரிந்துரைக்கப்படும் மகரிஷி சரக் சப்த் உறுதிமொழி அல்ல அது. ‘மாற்றியமைக்கப்பட்ட’ உறுதிமொழியாகும்.  சரி, இந்த சரக் சப்த் உறுதி மொழியை யார் மாற்றியமைத்தார்கள்? அதற்கான தேவைகள் என்ன என்பதெல்லாம் தேசிய மருத்துவ ஆணையத்திடம் தனியாக தமிழக அரசு எழுப்பியிருக்க வேண்டிய கேள்விகள். எழுப்பினார்களா? இதுவரை இல்லை.

மதுரை மருத்துவக் கல்லூரியில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பங்கேற்ற விழாவில், மாணவர்கள் இந்த ‘மாற்றியமைக்கப்பட்ட’ மகரிஷி சரக் சப்த் உறுதி மொழிக்கு பதிலாக உண்மையான திருத்தப் படாத மகரிஷி சரக் சப்த் ஐ ஆங்கிலத்தில் படிக்கவே உடனடியாக அமைச்சர் கவனித்து விட்டதால் தனது ஆட்சேபணையை அவர் தெரிவித்தார். அவர் மட்டும் அன்று அதை கவனிக்காமல் போயிருந்தால், இவ்விடயம் எப்பொழுதுமே வெளியே வந்திருக்காது.

இது எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், மார்ச்சு 4 ஆம் தேதி யூடியுப் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள, திருவள்ளூர் மருத்துவக் கல்லூரியின்white coat ceremony நிகழ்வில் சுகாதாரத் துறை அமைச்சரே பங்கேற்று உள்ளாரே!

28.02.2022 அன்று திருவள்ளூர் மருத்துவக்கல்லூரியில் நடந்த நிகழ்வில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அவர்கள் கலந்துகொண்டு உள்ளார்கள். வீடியோவை பார்க்க,

https://www.youtube.com/watch?v=zD6MN4blQ0Y&ab_channel=Dr.Mesmerizer

அதாவது, மதுரை மருத்துவக் கல்லூரியில்  white coat ceremony ஏற்பாடு செய்து மரு. இரத்தின வேலு அவர்கள் எப்படி தவறிழைத்தாரோ, அதே போன்றதொரு நிகழ்வில் , அத்துறையின் அமைச்சர் மா. சுப்ரமணியன் அவர்களே கலந்துகொண்டுள்ளார். அவர் தவிர, அந்த மாவட்டத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். அன்றைக்கு இது தவறு என்று யாருக்குமே தோன்றவில்லையா?

மருத்துவக் கல்லூரி இயக்குநரகம் இத்தகைய விழாவை நடத்தக் கூடாது என்று உண்மையில் எந்தவொரு கடிதமும் 31 மார்ச்சிற்கு பிறகு அனுப்பவே இல்லை. தன்னை காப்பாற்றிக் கொள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் மீதும் குற்றச்சாட்டை திருப்பப் பார்க்கிறார் மருத்துவக் கல்வி இயக்குநர் மரு. நாராயணபாபு அவர்கள்.

ஆனால், மருத்துவக் கல்லூரி இயக்குநரகத்தின் 11.02.2022 தேதியிட்ட கடிதம் துறை செயலாளர். மரு. இராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் அனுப்பப்பட்டதாக கடிதத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. இராதாகிருஷ்ணன் அவர்கள் அனுமதி அளிக்காமல் தான் திருவள்ளூர் மருத்துவக் கல்லூரியில் இந்த நிகழ்வு நடந்ததா?

தன் கண் முன்னால் நடந்த நிகழ்வை தடுக்காமலும், கண்டிக்காமலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அமைதி காத்தது ஏன்?

யாருடைய தவறுக்காக மருத்துவக்கல்வி இயக்குநரிடம், மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் இரத்தினவேலு அவர்கள் வருத்தம் தெரிவித்தார்?

யாரை காப்பாற்றுவதற்காக இரத்தினவேலு அவர்கள் மன்னிக்கப்பட்டு பணியில் மீண்டும் சேர்க்கப்பட்டார்?

யாரை காப்பாற்ற அமைச்சர் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில், இவ் விவகாரத்தை இத்தோடு முடித்துக் கொள்ளுமாறு வேண்டினார்?

நடந்த தவறுக்கு காரணமானவர்கள் யார்? என்று அரசு உரிய விசாரணை நடத்தி மக்களுக்கு தெரிவிக்கவேண்டும்.

மருத்துவக் கல்வி இயக்குநர் மரு. நாராயணபாபு அவர்களுக்கு இத்தனை கல்லூரிகளில் நடந்த தவறுக்கு ‘Vicarious Responsibility’ என்ற அடிப்படையில் பொறுப்பு இல்லையா என்ன? அல்லது அமைச்சர் தானே கலந்து கொண்டும் அமைதி காத்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

மேற்கண்ட கேள்விகள் இக் கட்டுரையை படிக்கும் யாருக்குமே எழக்கூடும். அந்த கேள்விகளுக்கான தேடலுக்கு  விடை தெரிந்தால், மேலும் விவாதிப்போம்.

குறிப்பு : இக்கட்டுரையில் இங்கு குறிப்பிட்டுள்ள youtube வீடியோக்கள் ஒருவேளை சம்மந்தப்பட்டவர்களால் நீக்கப்படும் பட்சத்தில், கீழே குறிப்பிட்டுள்ள எனது கூகிள் டிரைவ் பக்கத்திலிருந்து அந்த விடியோக்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

https://drive.google.com/drive/folders/1FrSAZ48sd-POkkHgZDMGsaDziHV6J6zP?usp=sharing  அல்லது https://tinyurl.com/tnoathcontroversy)

கட்டுரையாளர்; முகமது காதர் மீரான்

மருத்துவர்,

Patients’ Rights India இந்தியாவில் நோயாளிகளின் உரிமைகள்  உள்ளிட்ட  நூல்களின் ஆசிரியர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here