ஆர் எஸ் எஸ் கைக்கூலி ஆளுநர் ஆர்.என்.ரவியை
தமிழகத்திலிருந்து வெளியேற்றுவோம்!

ஜனநாயக விரோத ஆளுநர் பதவியை ஒழிப்போம்!!

மே 10 கவர்னர் மாளிகை முற்றுகை !


மிழக ஆளுநராக ஆர்.என்.ரவி என்கிற ஸ்ரீ ரவீந்திரநாராயண் ரவி தி மு க அரசுக்குத் தொல்லை கொடுக்க திட்டமிட்டு தமிழ்நாட்டில் மோடி அமித்ஷா கும்பலால் திணிக்கப்பட்டுள்ளார்.முன்னாள் காவல் துறை அதிகாரியான ஆளுநர் ரவி பொறுப்பேற்ற நாள் முதல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில ஆட்சியில் குறுக்கிட்டு மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தார்.

குறிப்பாக ,வழக்கத்துக்கு மாறாக சட்டம் ஒழுங்கு மற்றும் உளவுத் துறை டிஜிபிக்களை நேரில் அழைத்து பேசியும், தலைமைச் செயலரை தனக்கு நேரடியாக அறிக்கையளிக்கும்படி உத்தரவிட்டும் தனது அதிகார வரம்புகளை மீறினார்.

தமிழக சட்டப் பேரவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு, எழுவர் விடுதலை உள்ளிட்ட 19 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டு, தமிழக அரசை குறுக்கு வழியில் முடக்கும் செயலிலும் ஈடுபட்டு வருகின்றார்.

பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் நியமனத்தில், தனது அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டு செயல்பட்டும், உயர் கல்வி துறை அமைச்சருக்கு தெரிவிக்காமல் துணை வேந்தர் மாநாட்டை நடத்தியும் அரசியல் அமைப்பு சட்டத்தை தன் கால் தூசுக்கு சமமாக கருதி அடாவடியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்திய மக்களின் உள்ளத்தில் ராமன் குடியிருக்கிறார்,
இந்தியர்களின் ஒரே கடவுள் சிவன் என்றும், தேச வளர்ச்சி தான் முக்கியம், மாநிலத்தின் தனிப்பட்ட வளர்ச்சி தேச வளர்ச்சியை பாதிக்கும் என தமிழக மக்களின் உணர்வுக்கும் கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கும் எதிராகப் பேசுகிறார்.

ஆளுநர் மாளிகையில் சனாதன அறக்கட்டளை என்ற தனியார் மத அமைப்பின் விழாவை நடத்தி அரசு பங்களாவை பஜனை மடமாக மாற்றியுள்ளார். அந்த விழாவில் சனாதன தர்மம் சரி என வெளிப்படையாகவே அரசியல் சட்டத்திற்கு எதிராகப் பேசுகிறார். இப்படி, தனது பேச்சுக்கள் மற்றும் செயல்கள் மூலம், பார்ப்பன இந்து மதத்தின் சித்தாந்தத்தை வலியுறுத்தி பிரச்சாரமும் செய்து வருகிறார்.
இதன் மூலம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக பாஜகவின் மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்த அதிகார வர்க்கங்களைக் கொண்ட ஒரு தனி அரசை,போட்டி அரசை நடத்துகிறார்.ஆளுநரின் இந்த செயல்பாடுகளை உச்சநீதிமன்றமே கண்டித்துள்ளது.

தனது பதவியை முறைகேடாகப் பயன்படுத்தி மாநிலத்தின் உரிமைகளுக்கும், மாநில மக்களது நலன்களுக்கும் எதிராகச் செயல்படும் ஆளுநர் ரவியை எமது மக்கள் அதிகாரம் மிக வன்மையாக கண்டிக்கிறது.

மத்தியில் ஆர்.எஸ்.எஸ். மோடி கும்பல் ஆட்சியதிகாரத்திற்கு வந்த பின்னர், பார்ப்பனமயமாக்கம் மற்றும் கார்ப்பரேட் நலன்களுக்கு ஏற்ப மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து மத்தியில் அதிகாரத்தைக் குவித்து வருகின்றனர்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எம்,எல்.ஏ க்களை விலை பேசியும் ஆட்சிக்கவிழ்ப்புக்களை நடத்தியும் எடுபிடி அரசை நிறுவிக்கொள்கின்றனர். இவை ஒத்துவராத நிலையில், ஆளுநர் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். அடியாட்களை ஆளுநர்களாக அனுப்பி, ஆட்சியை முடக்குகின்றனர்.

பல தேசிய இனங்கள், பல மொழிகள், பல பண்பாடுகள் என்ற பன்முகத்தன்மையையும், மொழிவழி மாநிலங்கள் என்ற கூட்டாட்சி முறையையும் ஒழித்து மத்திய அதிகாரத்தின் கீழ் மக்களை ஒரே தேசம், ஒரே பண்பாடு என்ற ஒற்றை அதிகாரக்குவிமையத்தின் கீழ் அடிமையாக்குவது தான் கார்ப்பரேட் – காவி பாசிசஅடக்குமுறைகளின் ஒரு முக்கிய வடிவம்.

ஆர்.எஸ்.எஸ்.-ன் நூற்றாண்டான 2025-க்குள் இந்த அதிகார மையத்தை உருவாக்குவதை நிலைநாட்டிட வேண்டும் என்பதை நோக்கி நகர்ந்து வருகின்றது இந்து மதவெறி சனாதன காவிக் கும்பல்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்ட பெயரளவிலான ஜனநாயக அமைப்பு முறையைக் கூட, ஆளுநர்களை வைத்து சல்லி, சல்லியாக நொறுக்கி வருகிறது பாஜக பாசிச கும்பல்.

ஆளுநர் பதவி அடிப்படையில் ஜனநாயக விரோதமானது.காலனிய ஆட்சியாளர்களால் திணிக்கப்பட்டது.இது மாநிலங்களின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாகும். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது ஆளுநர் பதவி ஒழித்துக்கட்டப்படவேண்டும்.

மாநில உரிமைகளை பாதுகாக்கவும், குறைந்த பட்ச ஜனநாயகத்தை பாதுகாக்கவும், ஆளுநர் ரவியை வெளியேற்றியே தீரவேண்டும். அத்துடன், ஆளுநர் பதவியை நிரந்தரமாக ஒழிக்க மக்களாகிய நாம் வீதிகளில் இறங்கி போராடுவது தான் ஒரே வழி..

மக்கள் அதிகாரம்.
தமிழ்நாடு-புதுச்சேரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here