ஜெயிலர் தமிழ் சினிமாவின் வரலாற்றிலேயே முதல் வாரத்தின் முடிவில் அதிகபட்ச வசூல் வேட்டையை நடத்தியுள்ளதாகக் கூறியுள்ளது. உலகம் முழுவதும் தோராயமாக 375 கோடியே நாற்பது லட்சம் ரூபாய் மொத்த வசூல் எனக் குறிப்பிட்டுள்ளது. அதோடு, “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தி ரெக்கார்ட் மேக்கர்” என்றும் குறிப்பிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
அரசியல் ரீதியாக ஆர்எஸ்எஸ் பாஜகவின் ஊடக அடியாளான ரஜினியை வைத்து திரைப்படம் தயாரிப்பதற்கு சன் பிக்சர்ஸ் வெட்கப்படவில்லை. தொழில் வேறு அரசியல் வேறு என்ற சந்தர்ப்பவாத மொழிக்கு இணங்க,.’ நாய் விற்ற காசு குறைக்காது’ என்பதை போல ரஜினியை வைத்து எடுக்கப்பட்ட படம் வசூலில் அள்ளி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
ஜெயிலர் திரைப்படத்தை வெளியிட்ட பிறகு ரஜினி கொரோனா காலகட்டத்தில் கைவிட்டிருந்த ஆன்மீக பயணமான இமயமலையில் உள்ள பாபா குகைக்கு சென்றுள்ளதாக நிமிடத்திற்கு நிமிடம் அப்டேட் கொடுத்துக் கொண்டுள்ளது பார்ப்பன கும்பலின் ஊடக மாமாக்களின் படை.
“இப்பயணத்தின்போது, ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு அவர் சென்றார். முதலில் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்துக்கு சென்று,துறவிகளை சந்தித்து உரையாடினார். பின்னர் உத்தராகண்டில் வியாசர் குகைக்கு சென்று வழிபட்டார்.
இதையடுத்து, துவாரஹட்டில் உள்ள மகாவதார் பாபாஜி குகைக்குசென்றார். கையில் குச்சியை ஊன்றியபடி கரடுமுரடான பாதையில், நண்பர்களுடன் அவர் பயணம் மேற்கொண்டார். பாதுகாப்புக்காக போலீஸாரும் உடன் சென்றனர்.
இமயமலை பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு முறையும் பாபாஜி குகையில் ரஜினிகாந்த் தியானம் செய்வது வழக்கம். இந்த முறையும் குகைக்குள் அவரும், அவரது நண்பர்களும் தியானத்தில் ஈடுபட்டனர்.
ஆளுநருடன் சந்திப்பு: இந்நிலையில், இமயமலை பயணத்தை முடித்துக்கொண்டு, அங்கிருந்து திரும்பிய ரஜினிகாந்த், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேற்று சந்தித்தார். அவரது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
பின்னர் ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரம தலைமையகத்துக்கு சென்று, அங்குள்ள துறவிகளை சந்தித்தார். அந்த ஆசிரமத்துக்கு நன்கொடையும் வழங்கியுள்ளார். அங்கு காலை உணவை முடித்துக்கொண்டு, ஜார்க்கண்ட் ராம்கர் மாவட்டத்தில் உள்ள சின்னமஸ்தா காளி கோயிலுக்கு சென்று வழிபட்டார்.” என்று நியூஸ் அப்டேட் கொடுக்கிறது தமிழ் இந்து தினசரி.
டீ குடித்த கடையில் காசு வாங்கவில்லை என்பதில் துவங்கி யோகதா ஆசிரமத்தின் சாமியார் நேரில் வந்து வரவேற்றார் என்பது வரை செய்திகளாக வெளியிட்டு ரசிகர்களின் ‘மனதை கொள்ளையடித்து’ வருகின்றனர். சந்தடி சாக்கில் ஆர் எஸ் எஸ் பாஜக கும்பலின் பாசிச சன்னியாசியான உத்தர பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்க இருப்பதாக செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
72 வயது கிழவரான ரஜினி, 30 வயது கதாநாயகி மரின்னா மேனனுடன் நடிப்பதை பற்றி உலகமெங்கும் உள்ள ரஜினி ரசிகர்களுக்கு வெட்கமே இல்லை. 200 முதல் 250 கோடி முதல் போட்ட பணத்தை அதிகாரப்பூர்வ லாபமாக ரூபாய் ஆயிரம் கோடிக்கும், அதிகாரப்பூர்வமற்ற முறையில் பல்லாயிரம் கோடிக்கும் விற்பனை செய்ய துடித்துக் கொண்டிருக்கும் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் ஜெயிலர் திரைப்படத்தை தமிழர்களின் தலையில் கட்டுவதற்கு பல கோடி விளம்பரத்தை செய்து வருகிறது.
ஊடக மாமாக்களோ ரஜினியின் நரைத்த மயிர் துவங்கி டெம்பர் ஆன உடம்பு ரகசியம் வரை திடுக்கிடும் தகவல்களை எழுதி ரசிகர்களை கிளுகிளுப்பூட்டிக் கொண்டிருக்கின்றன. இந்த புரமோட்டுகளுக்கு மத்தியில் முதல் வாரத்திலேயே 400 கோடியை வசூலித்து சமீபத்தில் வந்த திரைப்படங்களில் முன்னணியில் இருக்கிறது ஜெயிலர் திரைப்படம்.
இதையும் படியுங்கள்:
- வெற்றி நடைபோடும் ஜெயிலரின் யோக்கியதை என்ன?
- துக்ளக்: பார்ப்பன முட்டாள்கள் மற்றும் சங்கிகளின் அறிவுக்கு பொருத்தமான பத்திரிக்கையே!
நினைவிருக்கிறதா? 2ஜி அலைக்கற்றை ஊழலில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை ஊழல் செய்து விட்டதாகவும், திமுகவின் ஆ ராசா, கனிமொழி முதற்கொண்டு காங்கிரசின் மன்மோகன் வரை அனைவரின் மீதும் பல கோணங்களில் துல்லிய தாக்குதல் நடத்தியது பார்ப்பனக் கும்பலின் கையில் சிக்கியுள்ள ஊடக மாமாக்கள் படை.
ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று பெயரிட்டு அலைக்கற்றை ஊழலில் பல கோடி ஆதாயம் அடைந்திருப்பதாக திமுகவின் மீது குற்றம் சுமத்தி ஆட்சியையும் கவிழ்த்தனர். சிபிஐ மூலம் விசாரணை பதிவு செய்து பல ஆண்டுகள் இழுத்தடித்தனர். இறுதியில் சி ஏ ஜி அறிக்கையே தவறு என்று நிரூபணம் ஆனது.
அலைக்கற்றை மூலம் பல ஆயிரம் கோடிகளை சம்பாதித்த டாட்டா நிறுவனம், ரிலையன்ஸ் அம்பானி, ஏர்டெல் மிட்டல் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் எந்த சேதாரமும் இன்றி பவனி வந்தது.
தற்போது சிஏஜியின் 2023 ஆம் ஆண்டு அறிக்கை வெளியாகி உள்ளது. சாலை போடுவது துவங்கி பல்வேறு துறைகளில் ஏழு லட்சத்தி ஐம்பதாயிரம் (7,50,000) கோடி ஊழல் நடந்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இமயமலைக்குச் சென்று பாபாவை தரிசித்த ரஜினியை பற்றியும், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெற்றி நடை போடும் ஜெயிலர் பற்றி பக்கம் பக்கமாக எழுதும் ஊடக மாமாக்களின் கவனம் சிஏஜி ரிப்போர்ட் பக்கம் திரும்புமா அல்லது மோடி அமித்ஷா கும்பலின் மிரட்டலுக்கு பயந்து பம்மிப் பதுங்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
- பா. மதிவதனி