மிழக அரசு புதிதாக 11 அரசுக் கல்லூரிகளைத் திறக்க அறிவிப்பு விடுத்துள்ளது. அரசு கல்லூரிகள் திறக்கப்படுவது வரவேற்கத் தக்கதே! ஆனால் அதற்கான ஆசிரியர்கள் நியமனம் என்பது எப்படி இருக்கப் போகின்றது என்பதே எங்கள் கவலையாக உள்ளது. எற்கனவே அரசு கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அவற்றில் கெளரவ விரிவுரையாளர்கள் என்ற பெயரில் ஆசிரியர்கள் மிக்க்க் குறைந்த ஊதியத்தில் பணி புரிந்து வருகின்றனர். அவர்கள் பணி நிரந்தரமுமின்றி, நியாமான ஊதியமு இல்லாமல் போராடி வருகின்றனர். அது தவிர பகுதி நேரக் கல்லூரி ஆசிரியர்களின் வேதனைகளும் சொல்ல இயலாதது. இவற்றுக்கெல்லாம் அப்பால் பல அரசுப் பல்கலைக் கழகங்களில் ஊதியம் வழங்குவது என்பதே பெரும் பிரச்சினையாகி உள்ளது. குறிப்பாக மதுரைக் காமராசர் பலைகலைக் கழக ஆசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்கள் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறைதான் ஊதியம் பெறும் அவல நிலை உள்ளது. சென்னை பல்கலைக் கழகத்திலும் இம்மாதம் ஊதியம் வழங்கப்பட இயலாத நிலை தோன்றியுள்ளது. பல பல்கலைக் கழக்கங்கள் நிதி பற்றாக்குறையால் அவதியுற்று வருவது அரசிற்குத் தெரியாதா? பல்கலைக்கழகங்களின் நிதி சிக்கலை தீர்க்க மாணவர் கட்டணத்தை உயர்த்த எண்ணினாலும் அது தீர்வல்ல.

அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் பல இலட்சம் ரூபாய்கள் இலஞ்சம் பெறப்பட்டு ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கடந்த ஆண்டுகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து எந்த நடவடிக்கைகளும் அரசு ஏன் எடுக்கவில்லை, பல கோடி ரூபாய் இலஞ்சம் புரண்டுள்ள உயர்கல்வி பற்றி எந்த அரசியல் கட்சியும் ஏன் பேசுவதில்லை என்பதும் புரியவில்லை. இதற்கிடையில் தமிழக அரசு வெளியிடுவதாகச் சொன்ன தமிழ் நாடு கல்விக் கொள்கை அதற்கான குழுவினால் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு பல காலம் ஆன போதும், அரசு ஏன் அதைக் கிடப்பில் போட்டுள்ளது என்ற கேள்விக்குப் பதில் இல்லை. ஏற்கனவே பணியில் உள்ள கல்லூரி, மற்றும் பல்கலைக் கழக ஆசிரியர்களுக்கு வழக்கமாக வழங்கக்கூடிய பணி நிலை உயர்வும் வழங்கப்படாமல் அவர்களும் போராடி வருகின்றனர். தனியார் கல்லூரிகளில் மட்டுமின்றி அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் கட்டணக் கொள்ளை என்பது தலைவிரித்தாடுகின்றது. இது குறித்தும் அரசு மெளனமாகவே உள்ளது.

இப்படி உயர்கல்வித் தளத்தில் பல தீர்க்கவேண்டிய பிரச்சினைகள் மலை போல குவிந்துள்ள வேளையில், புதிய கல்லூரிகளை அவசர அவசரமாகத் திறப்பது என்பது மேலும் ஆசிரியர்களையும், ஊழியர்களையும் சொற்ப ஊதியத்தில் அவர்களின் வாழ் நாள் முழுவதும் அல்லல் படும் நிலையையே உண்டாக்கும். ஒரு கல்லூரி என்றால் அதற்குத் தேவையான வகுப்பறைகள் மட்டுமின்றி,விளையாட்டு மைதானம், அரங்கங்கள், விடுதிகள், உணவகம் உட்பட பல அம்சங்களை உருவாக்க வேண்டும்.

அரசு இம்மாதிரி அவசரச் செயல்பாடுகளை செயல்படுத்துவதைத் தவிர்த்து, ஏற்கனவே உயர்கல்விப் பரப்பில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்து, புதிய கல்லூரிகளை, தரமுள்ள கல்வித் தளங்களாக நிரந்தரப் பணியில் அமர்த்தப்பட்ட ஆசிரியர்களை நியமித்து, உருவாக்க வேண்டுகின்றோம். இப்படிப்பட்ட நிரந்தரத் தீர்வுகளே தமிழகத்தில் உயர் கல்வியை உண்மையில் உயர்த்தும்.

ஒருங்கிணைப்பாளர்கள்
பேரா. இரா.முரளி ll பேரா. வீ. அரசு ll பேரா. ப.சிவகுமார் ll கண குறிஞ்சி ll சு.உமா மகேஸ்வரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here