நவம்பர் – 7 : ரசிய சோசலிசப் புரட்சி நாள் சூளுரை!
பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியைக் கட்டியமைப்போம்!
கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்துவோம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

நவம்பர் – 7, ரசிய சோசலிசப் புரட்சிக்கு 104 – ஆம் ஆண்டு! ஆம், தோழர். லெனின் தலைமையிலான ரசிய பாட்டாளி வர்க்கம், முதலாளித்துவத்தின் பலவீனமான கண்ணியை சரியான தருணத்தில் கண்டறிந்து, அதனை இறுகப்பற்றி கொடுங்கோலன் ஜார் ஆட்சியை தூக்கியெறிந்து, உலகில் முதல் பாட்டாளி வர்க்க ஆட்சி அதிகாரத்தை நிறுவிய நாள்தான் நவம்பர் – 7, 1917. ரசியப் புரட்சியானது உலகெங்கிலும், அடிமைப்படுத்தப்பட்டும், ஒடுக்கப்பட்டும் கிடந்த பல நாடுகளின் சுதந்திரத்துக்கான கலங்கரை விளக்காக ஒளியைப் பாய்ச்சியது.

உலகின் மூன்றில் ஒரு பகுதி அதாவது சீனா, கிழக்கு ஜெர்மனி போன்ற ஆசிய, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளுக்கு ரசியப் புரட்சி வழிகாட்டியது. இந்த நாடுகள் அனைத்தும் கம்யூனிசத்தை இறுதி லட்சியமாகக் கொண்டு, சோசலிசத்தைக் கட்டியமைத்து சுரண்டலற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்கின. மறுபுறம் தனது நிதி மூலதனத்தின் லாப வேட்டைக்காக ஆக்கிரமிப்புப் போர்களை நடத்தியது ஏகாதிபத்திய முதலாளித்துவம். முதல் உலகப் போரின் மாபெரும் அழிவைக்கண்ட பின்னும் அடங்காமல், அடுத்த இருபதாண்டுகளிலேயே இரண்டாம் உலகப் போரையும் துவக்கி வெறியாட்டம் போட்டது. உலகத்தையே அழிக்க முற்பட்டது முதலாளித்துவம். இதைத்தடுத்து உலகைக்காத்து நின்றது ரசிய சோசலிசம். ஏகாதிபத்திய முதலாளித்துவம் பெற்றெடுத்த போக்கிரிக் குழந்தைகளான, பாசிசத்தின் பிதாமகர்கள் இட்லர், முசோலினியோடு சேர்த்து பாசிசத்தையும் சவக்குழிக்கு அனுப்பியது. இதற்காக தனது நாட்டின் 2 கோடி மக்களை இழந்தது சோவியத் நாடு.

”அழுக்கு சட்டைக்காரனுக்கு ஆளத் தெரியாது”என முதலாளித்துவம் கேலி செய்து, இழிவுபடுத்திய போதும், அந்த அழுக்குச் சட்டை தொழிலாளிகள்தான் மக்கள் நல அரசை உருவாக்கி உலகத்திற்கே வழிகாட்டினார்கள். நமது நாட்டில் 8 மணி நேர வேலை உரிமையும், தொழிலாளர் நலச்சட்டங்களும், என்.எல்.சி, பி.எச்.இ.எல் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் உருவாகவும் காரணமாக அமைந்ததும் இந்த நவம்பர் புரட்சிதான்.

தீராத முதலாளித்துவ நெருக்கடி!

ஜனநாயகத்தை ஒழிக்கும் பாசிச ஆட்சி!

முதலாளித்துவம் தோன்றியதிலிருந்து ஒவ்வொரு பத்தாண்டுக்கு ஒரு முறையும் நெருக்கடிகள் முற்றி, நீர்க்குமிழி போல் வெடித்து, புதிய நெருக்கடிகளைத் தோற்றுவித்தது. தனது நெருக்கடிகளுக்கு காரணம் தேடாமல் பாட்டாளி வர்க்கத்தை கொடூரமாக சுரண்டும் வழிமுறைகளை கலர் கலராக இறக்கியது ஏகாதிபத்தியம். பிரிட்டனின் தாட்சரிசம், அமெரிக்க ரீகனிசம், ஜான் மேனர்டு கீன்ஸ் முன்வைத்த கீனீசியம் போன்ற மாற்றுகளை முன் வைத்து உலக மக்களின் மதியை மயக்கியது. ஆனால் இந்த நைலான் கனவுகள் நீண்டகாலம் நீடிக்கவில்லை.

2008-ல் ஏற்பட்ட ஏகாதிபத்திய முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி, இன்றுவரை மீளவே முடியாத முட்டுச்சந்தில் வீழ்ந்து கிடக்கிறது. இந்த நெருக்கடிகளை மக்கள் மீது திணிக்கவும், நவீன வடிவங்களில் தனது லாப வேட்டையைத் தொடரவும், சுரண்டலை அதிகரிக்கவும்தான் ஏகாதிபத்திய முதலாளித்துவம் முயற்சிக்கிறது. இதற்காக, உலகெங்கும் வலதுசாரிகளின் ஆட்சியின் மூலம், மீண்டும் பாசிசத்தைப் புகுத்தி வருகிறது. இந்த அடிப்படையிலேயே உலகம் முழுவதிலும் உள்ள மத, இன, நிற வெறியர்களை  ஊக்குவிக்கும் வகையில் அவர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, பாசிஸ்டுகளை உருவாக்குகிறது. நாட்டை வழிநடத்தும் திறன் கொண்ட ’நல்ல மேய்ப்பர்களை’ அடையாளம் கண்டு வளர்ப்பதும், அரியணை ஏற்றுவதும் நடந்தேறி வருகிறது. அதன் இந்திய வடிவம்தான் கார்ப்பரேட் – காவி பாசிசம்!

வருண - சாதி அமைப்பை வலுப்படுத்தும் காவி!
நிதி மூலதனத்தை கீழிறக்கும் கார்ப்பரேட்!

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் உள்ளிட்ட மறுகாலனியாக்கக் கொள்கைகளை காங்கிரசு தீவிரமாக அமுல்படுத்தி வந்த போதிலும், கார்ப்பரேட் முதலாளிகள், தங்களது சுரண்டலுக்கும், லாப வேட்டைக்கும் ஏற்ற வேகத்தில் செயல்படவில்லை என்று கருதினர். செயல் படாத பிரதமர் என சர்வதேச ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்தனர். அன்னா ஹசாரேக்களை முன்னிறுத்தி ஊழல் ஒழிப்பு என்றனர். தனது அகோரப்பசிக்கு படையல் வைக்கும் பொருத்தமான அடியாளான, பாசிச பாஜக – வையும், இனப்படுகொலை செய்த மோடியையும் ஊதிப்பெருக்கி ஆட்சிக்குக் கொண்டு வந்தனர்.

2014-ல் பாஜக, ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி உள்ளிட்டவற்றை அமல்படுத்தி இந்தியப் பொருளாதாரத்திற்கு உயிர்நாடியான சிறு, குறு தொழில்களை அழித்து இந்தியப் பொருளாதாரத்தை தலைக்குப்புற கவிழ்த்துப் போட்டார்கள். மக்களை கொத்துக் கொத்தாக கொல்லுவதற்கு உரிய சட்டங்களை, ‘பாராளுமன்ற ஜனநாயகத்தின்’ வழியே தனது பெரும்பான்மை பலத்தைக் காட்டி நிறைவேற்றிக் கொண்டார்கள்.பொருளாதார சரிவெல்லாம் ஒன்றுமில்லை என ஊடகத்தைக் கையில் வைத்துக் கொண்டு வாய்ச்சவடால் அடித்தும், பாகிஸ்தான் தீவிரவாதிகள் உள்ளே நுழைந்ததாக கதைகட்டியும், தேசவெறியூட்டியும் 2019-ல் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்கள். 2019-களின் இறுதியில் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்த கரோனா வைரஸ் தொற்று உருவாகி மிகப்பெரிய அளவில் மரணங்கள் நிகழும் வரை வேடிக்கை பார்த்ததுடன், மணியடிக்கவும், கைதட்டவும் சொன்னதுடன், மாட்டுமூத்திரமும், சாணமும் சர்வரோக நிவாரணியாக ஒன்றிய அமைச்சர்கள் தொடங்கி பாஜக ஆளும் மாநில அமைச்சர்கள் வரை அறிவியலுக்குப் புறம்பாக அடி முட்டாள்தனமான மத-மூட நம்பிக்கைகளையே மருத்துவ முறையாக பரிந்துரைத்தார்கள்.

அறிவியல் கண்டுபடிப்புகளை காசுக்கு விற்கும் சாவு வியாபாரிகள், தான் கண்டறிந்த தடுப்பூசியைத் தயாரிக்கும் உரிமையைக் கூட தனியாருக்குக் கொடுத்தும், அரசு நிறுவனங்களை முடமாக்கியும் தனது கார்ப்பரேட் விசுவாசத்தை எவ்வித கூச்சமிமுன்றி வெளிக்காட்டியது. காசிருந்தால் உயிர் வாழலாம். இல்லையென்றால் செத்துப்போ என 2-ஆம் அலையில் மக்களைக் காக்கத் தவறி படுகொலை செய்தது பாசிச பாஜக-வின் மோடி – அமித்ஷா கும்பல். மக்கள் தடுப்பூசி இல்லாமல் இறந்த போதும், ஏற்றுமதிக்கு முன்னுரிமை தந்து தடுப்பூசிகளை விற்றனர்.

மக்களின் ஒற்றுமையைப் பிளக்கவும், பார்ப்பன, மேல்சாதிகளின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் மீது தாக்குதல்களை அதிகரித்தனர். மாட்டுக்கறி உண்பதை முன்னிறுத்தி கும்பல் கொலைகளை நிகழ்த்தினர். இசுலாமியர்கள், கிறித்தவர்களின் மீது வெறுப்பை விதைத்தனர். தேசிய இனங்களின் உரிமைகளை நசுக்கும் வகையில் காசுமீரை இரண்டாக உடைத்து, மாநில அந்தஸ்தைப்பறித்து, மக்களைத் திறந்த வெளிச் சிறையில் தள்ளினர். வடகிழக்கு மாநிலங்களில் பூர்வகுடி மக்களிடம் ஐந்தாம் படைகளை உருவாக்கி ஆட்சிகளைக் கைப்பற்றினர். நாகா, மிசோரம், அஸ்ஸாம், திரிபுரா மக்களிடம் பிளவை உண்டாக்கினர். மொத்தத்தில் நாட்டை பார்ப்பன இந்து ராஷ்டிர சிறைச்சாலையாக்கினர்.

பாஜக – வின் மோசமான பொருளாதார நடவடிக்கை காரணமாக கொரோனா வருவதற்கு முன்பே, 2015-16 ஆம் ஆண்டுகளில் இருந்தே இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை சந்தித்திருந்தது.  இந்நிலையில் கொரோனாவைக் காரணம் காட்டியும், அதற்கு முன்னரும் சுமார் 10 லட்சம் கோடிக்கும் மேலாக இந்தியத் தரகு முதலாளிகளுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் வரித் தள்ளுபடி, கடன் தள்ளுபடி சலுகைகள் வழங்கப்பட்டது.

இது போதாதென்று இந்த நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களாகிய விவசாயிகளை விவசாயத்தில் இருந்து விரட்டியடிக்கும் வகையிலான மூன்று வேளாண் சட்டங்களைக் கொரோனா நெருக்கடி காலகட்டங்களிலேயே அவசர சட்டமாக அமல்படுத்தியது. அதே காலகட்டத்தில் தொழிலாளர் சட்டங்களும் முதலாளிகளுக்கு ஏற்ற வகையில் திருத்தம் செய்யப்பட்டது. கார்ப்பரேட் நலன் சார்ந்த திட்டங்களை நாலுகால் பாய்ச்சலில் அமல்படுத்துகிறார்கள் போலி தேச பக்தர்களான ஆர்.எஸ்.எஸ், மோடி – அமித்ஷா கும்பல்.

போர் விமானங்கள் தயாரிக்கும் உரிமை அனில் அம்பானிக்கும், எண்ணெய்க் கிணறுகள் மற்றும் சுத்திகரிக்கும் உரிமை முகேஷ் அம்பானிக்கும்,  இந்தியாவின் துறைமுகங்கள் மற்றும் உணவுப்பொருட்களை சட்டப்பூர்வமாக பதுக்கும் உரிமை (திருத்தப்பட்ட வேளாண் சட்டங்களிலின் மூலம்) கௌதம் அதானிக்கும், மலைகள் மற்றும் சுரங்கங்கள் ஜிண்டாலுக்கும், இரும்பு, மின்சாரம், பயணிகள் விமானம், தேயிலை போன்றவை டாடாவிற்கும், கனரகத் தொழில்கள், உரம் ஆகியவை பிர்லாவுக்கும், வங்கி கடனெல்லாம் நீரவ்மோடி, மல்லையாவுக்கும், கடல்வளம் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் என இந்தியாவை கார்ப்பரேட்டுகளுக்கு பிரித்துக் கொடுத்தனர்.

இவை போக மிச்சமிருக்கும் பொதுத்துறை நிறுவனங்களான எல்ஐசி, ரயில்வே, தொலைத் தொடர்பு, பொதுத்துறை வங்கிகள், பாரத் பெட்ரோலியம், மின்சாரம், விமானம் என அனைத்தையும் உள்நாட்டு, வெளிநாட்டு தனியார் முதலாளிகளுக்கு தாரைவார்ப்பதற்காக தேசிய பணமாக்கல் திட்டத்தைக்கொண்டு வந்துள்ளனர்.

“வர்த்தகம் செய்வதை முதலாளிகள் பார்த்துக் கொள்வார்கள். வர்த்தகம் செய்வது அரசின் வேலையல்ல” என்பதை தாரக மந்திரமாக முழங்கினார்கள். அதே சமயம் அரசுக்கு வருவாயை ஈட்டித் தந்த அனைத்து பொதுத்துறைகளையும் தனியாருக்கு விற்றனர். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு சேவை நோக்கத்தோடு அரசால் உருவாக்கப்பட்டு லாபமாக இயங்கி வந்த பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கூறு போட்டு விற்றுவிட்டு நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை என இவர்கள் பிதற்றுவது கேலிக்கூத்தாக உள்ளது.

கார்ப்பரேட்- காவி பாசிசத்தை வீழ்த்து!ஜனநாயக கூட்டரசை நிறுவு!

உத்திரப் பிரதேசத்தில் வேளாண் சட்டத் திருத்தத்திற்கு எதிராக நடந்த கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் காரை ஏற்றிக் கொல்கிறான் ஆஷிஷ் மிஸ்ரா. இதனைப் படம் பிடித்த பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்த கொடூர சம்பவம் குறித்து இதுவரை வருத்தம் கூட தெரிவிக்கவில்லை நாட்டின் பிரதமர் பொறுப்பிலிருக்கும் கொலை பாதக மோடி. இந்தப்படுகொலைக்கு சாட்சியங்கள் இருந்த போதும், வீடியோ ஆதாரங்கள் இருந்த போதும் கொலைகாரன் ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்யாமல் இழுத்தடித்து, உச்சநீதிமன்றம் கண்டித்த பிறகே கைது செய்தது உ.பி அரசு. இவனது தந்தை அஜய் மிஷ்ரா இன்று வரை மத்திய உள்துறை இணையமைச்சராக நீடிக்கிறார். பதவி நீக்கம் கூட செய்யப்படவில்லை. ஆனால், சமூக செயல்பாட்டாளராகிய ஜே.என்.யூ மாணவர் உமர்காலித் ஆதாரங்கள் ஏதும் இன்றி 365 நாட்கள் கடந்தும் சிறை வைக்கப்பட்டுள்ளார். நாட்டில் இருக்கின்ற மொத்த கிரிமினல் கும்பல்களின் கட்சியாக, பாஜக இருப்பதால் வெளியில் இருக்கின்ற கிரிமினல்களும் பாஜக – வில் தஞ்சமடைந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். மக்கள் விலைவாசி உயர்வுக்காக போராடிய காலம் போய், உயிர் வாழ்ந்தால் போதும் என்கிற அச்சத்தில் மௌனம் காக்கின்றனர். இவ்வளவுக்குப்பின்னும் ’தானுண்டு தன் வேலையுண்டு’ என்று மக்கள் இருப்பதால், பாசிச பாஜகவை ஆதரிப்பதாக பொருள் கொண்டு கனவில் மிதக்கிறார்கள் முதலாளிகள்.

பாசிச பாஜக-வின் அராஜக செயல்களை கேள்விக்குள்ளாக்கிய படித்த அறிவுஜீவிகள், சமூக செயல்பாட்டாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்களை, RSS குண்டர் படைகளை ஏவிவிட்டு பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது அல்லது, ஆண்டுக்கணக்கில் சிறையில் தள்ளி, பிணைமறுத்துக் கொல்வது என்கிற பாசிச கட்டாட்சிதான் நடக்கிறது. அரசால் மக்களுக்கு உண்டாக்கப்படும் கேடுகளை யாரும் கேள்வி எழுப்பக் கூடாது என்பதற்காகவே  NIA, UAPA  போன்ற ஆள்தூக்கி சட்டங்களை மேலும் கடுமையாக்கி, கூர்தீட்டி அமல்படுத்தி வருகிறது மோடி அரசு.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கையை அமலாக்கத் தொடங்கியதிலிருந்து வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகளின் தற்கொலைகள், பட்டினிச் சாவுகள் கொடூரமானதாகி விட்டது. தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், சிறுதொழில் முனைவோர், சில்லறை வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் வாழ்வுரிமையை இது ஒழித்து வருகிறது. அதற்கு எதிராகப் போராடுகின்ற மக்களைத் தடுக்க ஆர்.எஸ்.எஸ் – மோடி கும்பலின் கையில் உள்ள ஆயுதம் பாசிச பயங்கரவாதம் மட்டுமே! இதை நாடாளுமன்ற ஆட்சியதிகாரம், சட்டபூர்வமான வழிமுறைகள் மூலமே அரங்கேற்றி வருகிறது.

இன்று நாட்டு மக்களின் பொது எதிரியாக மாறியுள்ள பாசிசத்தை ஒழித்துக் கட்ட நமக்குள் ஒற்றுமை வேண்டும். விவசாயிகள் டெல்லியில் மாபெரும் போராட்டத்தைத்தொடங்கி வீரியத்துடன் நடத்தி வருகின்றனர். அதனை பற்றிக்கொண்டு மக்களை ஒன்றிணைக்கின்ற வகையில் பாசிசத்திற்கு எதிராகப் போராடுகின்ற அரசியல் கட்சிகள், இயக்கங்கள், தனிநபர்களை கொண்ட ஐக்கிய முன்னணியையும், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு தொழில் முனைவோர், நாட்டின் மீது அக்கறை கொண்ட உள்நாட்டு முதலாளிகள் அனைவரையும் இணைக்கும் மக்கள் முன்னணியையும் கட்டியமைத்து விரிவாக்கி இந்தியாவைப் பீடித்திருக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்துவோம். இந்த வல்லமையுடன் உண்மையான ஜனநாயக கூட்டரசை நிறுவுகின்ற திசையில் முன்னேறுவோம்!

கார்ப்பரேட் – காவி பாசிச கும்பலை வீழ்த்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை காத்திருக்கத் தேவையில்லை. அந்த காத்திருப்பு பாசிசம் வளர்ந்து முற்றாளுமை பெறுவதற்குத்தான் வழி வகுக்கும். பாசிசத்தை அதன் தயாரிப்புக் கட்டத்திலேயே வீழ்த்த வேண்டும் என்கிறார் தோழர் டிமிட்ரோவ். 2014 – ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்ததை அனுமதித்து, வேடிக்கை பார்த்ததே நாம் செய்த வரலாற்றுத் தவறு! இனியும் மோடி கும்பல் ஆட்சியில் தொடர அனுமதிப்பதும், மௌனம் காப்பதும் நாட்டை மோசமான இருண்ட காலத்திற்கு தள்ளவே உதவும். எப்படியாவது வாழ்ந்து விடலாம் என்ற கனவுடன் அமைதி காக்கும் மௌனத்தைக் கலைப்போம். கார்ப்பரேட் – காவி பாசிசத்திற்கு எதிராக மக்கள் எழுச்சியை உருவாக்கும் நாளாக நவம்பர் புரட்சி நாளை மாற்றுவோம்!

களத்தில் இறங்கிப் போராடுவோம்! இந்தியாவிலும் நவம்பர் புரட்சிகளை தோற்றுவிப்போம்!!

ரசியப் புரட்சி நாள் சூளுரை!

  • நிதி மூலதனத்தைக் கொண்டு உலகைச் சூறையாடும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டுவோம்!
  • கார்ப்பரேட் நலன்களுக்காக சொந்த நாட்டு மக்களையே கொல்லும் கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்துவோம்!
  • மக்கள் எழுச்சியை உருவாக்குவோம்!  பாசிச பாஜக-வை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கியெறிவோம்!
  • ஐக்கிய முன்னணி – மக்கள் முன்னணியை உருவாக்கி ஜனநாயக கூட்டரசை நிறுவுவோம்! புதிய ஜனநாயக இந்தியாவைப் படைப்போம்!
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி தமிழ்நாடு.
தமிழகம்-புதுச்சேரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here