பாலஸ்தீனத்தில் 166 நாட்களைக் கடந்து இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போர் நடந்து கொண்டிருக்கிறது. நேற்றைய முதல் நாள் காசாவின் அல் ஷிபா மருத்துவமனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டதாக அல்ஜசீராவின் செய்தி கூறுகிறது.

ஹமாஸ் படையினரை அழிப்பதாக கூறிக்கொண்டு பொதுமக்களையும், குழந்தைகளையும் குறி வைத்து தாக்கி அளிக்கிறது. இஸ்ரேலிய இனவெறி ராணுவம். அவர்களின் இலக்கு ஹமாஸ் மட்டுமல்ல. பாலஸ்தீனர்களே இல்லாமல் அழித்தொழிப்பதற்காக இந்த போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

போரில் குண்டுகள் விழுந்து சாவது ஒரு புறம் என்றால், பசி பட்டினியால் கொல்லப்படுவதும் அதிகரித்து வருகிறது. “காசாவில் குழந்தைகள் கதறி அழுவதற்கு கூட உடம்பில் போதுமான சக்தி இல்லை” என்கிறார் unicef chief கேத்தரின் ரசல்.

கடந்த 24 மணி நேரத்தில் (19.03.2024) இஸ்ரேலின் விமான தாக்குதலில் 92 பேர் உயிரிழந்தனர், 142 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதிலிருந்து நாம் ஒன்றை புரிந்து கொள்ள முடியும் நடப்பது போர் அல்ல இனப்படுகொலை என்று.

இந்நிலையில் காசாவிற்கு வரும் உணவு மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இஸ்ரேல் கொடுங்கோல் அரசு தடுத்து நிறுத்துவதால் பாலஸ்தீனம் பேரழிவை நோக்கி செல்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

போர் தொடங்கிய பின்னர் காசாவுக்கு செல்லும் உணவு, தண்ணீர், மருந்து ஆகியவை செல்லும் பாதைகளை இஸ்ரேல் மூடியது. தெற்கு பகுதியில் உள்ள இரண்டு பாதைகள் வழியாகத்தான் லாரிகளை அனுமதிக்கிறது.

இது திட்டமிட்டு வடக்கு காசாவை குறி வைத்து நடத்தப்படும்  மனிதாபிமானமற்ற தாக்குதல் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் போதிய ஊட்டச்சத்து கிடைக்காததால் குழந்தைகள் பெருமளவில் இறக்கத் தொடங்கியுள்ளன.

இஸ்ரேல் படைகளால் வடக்கு காசா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. உணவு வினியோகம் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் பட்டினியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கமல் அத்வான் மற்றும் சிஃபா மருத்துவமனையில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக 20 பேர் இறந்துள்ளதாகவும், இறந்தவர்களில் பெரும்பாலும் குழந்தைகள் என்றும் காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தெற்கு காசாவில் உதவிப்பொருட்கள் கிடைத்தாலும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் உயிரிழக்கத் தொடங்கியுள்ளனர். ரபாவில் உள்ள எமிரிதி மருத்துவமனையில் கடந்த ஐந்து வாரங்களில் குறைமாதத்தில் பிறந்த 16 குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு தொடர்புடைய நோயினால் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் மாதங்களில் காசாவில் ஏற்படும் பஞ்சத்தால் 11 லட்சம் மக்கள் மிகக் கடுமையான பட்டினியை எதிர்கொள்ள நேரிடும் என்று தி நியூயார்க் டைம்ஸ் தனது இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

திங்கட்கிழமை வெளியான அறிக்கையின் படி வடக்கு காசாவில் உள்ள 3,00,000 பாலஸ்தீனிய குடிமக்களுக்கு பஞ்சம் உடனடியாக உடனடியாக ஏற்படும் என்று கணித்துள்ளது. அங்கு மே மாத இறுதிக்குள் இந்த நிலைமை உருவாகும் என்றும் ஜூலையின் நடுப்பகுதியில் காசாவில் உள்ள 11,00,000  மக்கள் மிக மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றும் ஒருங்கிணைந்த உணவு பாதுகாப்பு கட்ட வகைப்பாடு உலகளாவிய முழு முயற்சியின் அறிக்கை தெரிவித்துள்ளது. (Integrated food security base classification global initiative).

இந்த பஞ்சத்தால் தீவிரமான உணவு பற்றாக்குறை, கடுமையான பட்டினி மற்றும் வறுமை, கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு அதனை தொடர்ந்து இறப்பு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:

இதற்கு முன்பு 2011-இல் சோமாலியாவிலும் 2017-இல் தெற்கு சூடானிலும் சில பகுதிகளில் ஏற்பட்ட பஞ்சமானது அந்த நாட்டு மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவு விகிதாச்சாரமே மக்களை பாதித்தது.

ஆனால் காசாவில் ஏற்பட உள்ள பஞ்சமானது வடக்கு காசாவில் வசிக்கும் 13 சதவீதத்திற்கும் அதிகமான மக்களை பாதிக்கும் என்று தி நியூயார்க் டைம்ஸ்  செய்தி தெரிவிக்கிறது.

IPC-யின் தரவுகளின் படி குறைந்தது 20% வீடுகள் உணவு பற்றாக்குறை இருந்தால் பஞ்சம் ஏற்படும் என்கிறது. ஆனால் இங்கு பெரும்பாலான மக்களுக்கு வீடுகளே இல்லாமல் டென்ட்டுகளிலும் மருத்துவமனைகளிலும் வாழ்கிறார்கள்.

இந்த பஞ்சம் மழை வெள்ளத்தினாலோ, அல்லது வறட்சியினாலோ ஏற்பட்டது அல்ல. மாறாக மனிதனால் உருவாக்கப்பட்டது. பாலஸ்தீன மக்கள் அழிய வேண்டும் என்ற எண்ணத்தினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது இதற்கு முழு பொறுப்பு இஸ்ரேலும் அமெரிக்காவுமே.

ஒருபுறம் குண்டு மழைகளால் மக்கள் கொல்லப்படுவதும், மறுபுறம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை தடுப்பதினால் ஊட்டச்சத்துக் குறைபாடு, பசி, பட்டினி மூலம் மக்கள் கொல்லப்படுவதும் என நரவேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறது இஸ்ரேல்.

தொண்டு நிறுவனமான ஆக்ஸ்பாம் கூறுகையில் காசா எல்லையில் நுழைவதற்கு முன்பு சோதனை செய்யும் இஸ்ரேலிய அதிகாரிகள் ஆக்ஸிஜன், இன்குபேட்டர்கள், மற்றும் தண்ணீர் உள்ளிட்ட பொருட்களை அனுமதிக்காமல் நிராகரிப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள்.

ஐந்து மாதங்களை கடந்து மனிதாபிமானமற்ற முறையில், குறைந்த பட்ச போர் விதிகளை கூட கடைபிடிக்காமல் இனப்படுகொலையை நடத்திக் கொண்டிருக்கிறது இஸ்ரேல். உலக நாட்டாமைகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டும், அமெரிக்க ஏகாதிபத்திய கும்பல் போரை தூண்டிவிட்டும் கொண்டிருக்கிறது.

சமூகவலைதளங்களில் குறிப்பாக டிவிட்டரில்,  காசாவில் குழந்தைகள் உடல் வற்றி அழக் கூட முடியாமல் இரண்டு நாட்களில் மரணமடைவதை காணொளிகளில் பார்க்கும் போது நெஞ்சம் பதறுகிறது.

ஏகாதிபத்திய கொலைகார கும்பலால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த போரழிவானது வடக்கு காசாவை பஞ்சத்தில் தள்ளும் நடவடிக்கையை கண்டிப்போம்.

பாலஸ்தீன மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து உலகளவில் நடத்தப்படும் மக்கள் போராட்டங்களே அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளுக்கு நெருக்கடியைக் கொடுக்கும். இந்தியாவிலும் இதுபோன்ற போராட்டங்களின் மூலம் இஸ்ரேல் யூத இனவெறி பாசிச கும்பலுக்கு நெருக்கடி ஏற்படுத்துவோம்.

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here