
தாது மணல் முறைகேடு தொடர்பாக விவி மினரல்ஸ் நிறுவன உரிமையாளர் வைகுண்டராஜன் மீதும் அவருடைய நிறுவனம் தொடர்புடைய நிர்வாகிகள் மீதும் ரூ.5,832 கோடி தாது மணல் முறைகேடு விவகாரத்தில் சிபிஐ 7 வழக்குகளை பதிவு செய்துள்ளது.
ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்களும், புரட்சிகர அமைப்புகளும் நடத்தி வருகின்ற போராட்டத்தின் விளைவாக இப்போதாவது வைகுண்டராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் வைகுண்ட ராஜன் மீது சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அவையெல்லாம் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்வது தண்டனை கொடுப்பது என்பதை நோக்கி செல்லாமல் சவ சவத்துப் போனது.
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் தனி அரசாங்கத்தையே நடத்தி வருகின்ற ‘தெற்கத்தி வீரப்பன்’ என்று எமது அமைப்பினால் பெயர் சூட்டப்பட்ட வைகுண்டராஜன் மீதான வழக்கு பதிவிற்கும், அண்ணா திமுக, பாஜக கூட்டணி உருவாவதற்கும் நெருக்கமான உறவு உள்ளது என்றே கருதுகிறோம்.
2013 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் தாது மணல் கொள்ளையனும், கடற்கரையோர அரிய வகையிலான கனிம வளங்களை சூறையாடி வருகின்ற கிரிமினல் மாஃபியா கும்பலின் தலைவனும், ஜெயா டிவி உள்ளிட்ட தொலைக்காட்சி நிறுவனங்களின் பங்குதாரனுமான, விவி மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜனை எதிர்த்து மக்கள் உரிமை பாதுகாப்பு மையமும், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம் உள்ளிட்ட நக்சல்பாரி அமைப்புகளும் போராடிய போது எடுக்கப்படாத நடவடிக்கைகள் இன்று வைகுண்டராஜன் மீது எடுக்கப்பட்டுள்ளது. திடீரென்று ஏன் இந்த வழக்கு பதிவு?
“கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களின் கடற்கரையையே கரைத்து, விலையுயர்ந்த, அபூர்வமான தாதுமணலைக் கொள்ளையடித்தவர் வைகுண்டராஜன். சட்டவிரோதமாகத் தோரியம் உள்ளடங்கிய மோனோசைட் தாதுவை தூத்துக்குடி துறைமுகம வழியாக வெளிநாடுகளுக்குக் கடத்துவதற்கு உறுதுணையாக இருந்தததற்காகத்தான் சுப்பையா ஐ.ஏ.எஸ்க்கு ஏழரை கோடி லஞ்சம் கொடுத்துள்ளார் வைகுண்டராஜன். இதை ஆதாரபூரவமாக கண்டுபிடித்து 2012-ம் ஆண்டு வழக்கு தொடுத்த சி.பி.ஐ இதுவரை அவரைக் கைது செய்யவில்லை.”
“ தாது மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளையை விடப் பெரியது. 25 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. சுற்றுச் சூழல் மாசு, புற்றுநோய், மீன்பிடி தொழில் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளோடு, பல இலட்சம் கோடி மதிப்புள்ள மோனசைட் எனப்படும் தடை செய்யப்பட்ட கனிமம் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு எதிராகப் போராடிய மக்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டனர். அவர்களுடைய முறையீடுகள் அனைத்தும் குப்பைக் கூடைகளுக்குப் போயின.
மக்கள் தொடர்ந்து நேரடியாக பலமுறை முறையிட்டதால் மணல் கொள்ளையை ஆய்வு செய்து அரசுக்கு புகார் அனுப்பிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் மறுநாளே பந்தாடப்பட்டார்” என்று 2014 ஆம் ஆண்டிலேயே பிரசுரம் மற்றும் செய்தி வெளியிட்டு தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியது.
படிக்க:
♦ ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தொடரும் இலங்கை கடற்படையின் தாக்குதல்கள் – படுகொலை!
♦ ராம் சேது பாலம் மனிதனால் கட்டப்பட்டதா ? முனைவர் சேதுபதி | மீள்பதிவு
அதற்கு முன்னதாக 2013 ஆம் ஆண்டில் மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் சார்பில் தொடர்ச்சியாக இயக்கத்தையும் மேற்கொண்டோம்.
இந்த இயக்கத்தை ஒட்டி மூன்று மாத காலத்திற்கும் மேலாக கடற்கரையோர மீனவர் கிராமங்களிலும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பிரச்சாரத்தை மேற்கொண்ட போது “வைகுண்டராஜன் எதிர்த்து பிரச்சாரம் செய்கிறீர்களா எச்சரிக்கையாக இருங்கள்” என்று மக்கள் அன்புடன் உபசரித்தனர்.
அதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட கூட்டத்தில் கலவரம் செய்வதற்கு வைகுண்ட ராஜனின் குண்டர் படை இறக்கி விடப்பட்டது என்ற போதிலும் நக்சல்பாரி அமைப்புகளுக்கே உரிய முறையில் அந்த சலசலப்புகளை எதிர்கொண்டு முறியடித்து பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
வைகுண்டராஜன் கொள்ளை கடற்கரையோடு நின்று விடவில்லை. உள்நாட்டு மக்களையும் பாதிக்கும் வகையில் செம்மண்ணான தேரிமண்ணையும், பல ஆண்டுகளாக சூறையாடி வருகிறார். இதனால் பெருமளவில் பாதிக்கப்படுவது நாடார் சமூக மக்களும்தான். இவ்வாறு அனைத்து சமூக மக்களையும், அடுத்த தலைமுறையையும் பாதிக்கும் வகையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தனது ராஜாங்கத்தை நடத்தி வரும் வைகுண்டராஜன் மீது இதுவரை ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. தற்போது பதியப்பட்டுள்ள வழக்கம் இந்த அடிப்படையில் இல்லை.
வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ் ஆலையில், சுற்றுவட்டாரத்தில் வெட்டியெடுக்கப் படும் தாதுமணல் தரம் பிரிக்கப்படுகிறது. அப்போது கருப்பு மணல், சிகப்பு, மஞ்சள் கலர் என மூன்று பிரிவாகப் பிரிக்கப்படுகிறது. இதில் மஞ்சள் நிறம்கொண்ட தாதுமணல்தான் மோனோ சைட். இதில் அணு ஆயுத மற்றும் அணுசக்தி தயாரிப்பிற்கான யுரேனியம், தோரியம் அடங்கியுள்ளது. நாட்டின் பாதுகாப்பின் பொருட்டு இந்தப் பொருளைப் பயன்படுத்தக் கூடாது. அதனை இந்தியத் துறையான IREL எனப்படுகிற (INDIAN RARE EARTH LIMITED) இந்திய அரிய வகை மணல் ஆலை வசம் ஒப்படைத்துவிட வேண்டுமென்பது இந்திய அணுசக்தித் துறையின் ஆரம்ப கால உத்தரவு. அணுசக்தி உள்ளிட்ட கனிம வளங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்று சட்டமும் முன்வைக்கின்றது.
வைகுண்டராஜன் அதனை சட்டப்படி ஒப்படைக்காமல் பயன்படுத்துகிற வகையில் 2000-ஆம் ஆண்டிலிருந்தே சேமித்து வைக்கிறார். திசையின்விளையிலிருந்து ராதாபுரம் செல்கிற சாலையிலிருக்கும் திருவம்பலநாதபுரம் கிராமத்தில் ஏழு ஏக்கர் மத்தியில் பூமிக்கடியில் 500 அடி ஆழம், 500 அடி அகலம் கொண்ட பெரிய கான்கிரீட் தொட்டியமைத்து அதில் மோனோசைட்டை சேமித்துவந்திருக்கிறார்.
இந்தப் பகுதியை SPECIAL ECONOMIC ZONE எனப்படுகிற சிறப்புப் பொருளாதார மண்டலமாக்க முயற்சிசெய்கிற வி.வி. ஆரம்பக்கட்ட அனுமதி ஆணையை திசையன்விளை நிர்வாக அதிகாரிகளிடம் தனது வழக்கப்படி வாங்கி விடுகிறார். சிறப்புப் பொருளாதார மண்டலமாக்கி விட்டால் அந்த மோனோசைட்டைத், தானே கையாளலாம் என்பதே நோக்கம். இப்படி 82 ஆயிரம் டன் மோனோசைட் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றத்திற்குத் தகவலும் தரப்பட்டிருக்கிறது.
இவையெல்லாம் கடந்த 10 ஆண்டுகளாக புரட்சிகர அமைப்புகள் அம்பலப்படுத்தி வருகின்ற செய்திகள் தான் என்ற போதிலும் வைகுண்டராஜன் மீது எந்தவிதமான நடவடிக்கையும் பாயவில்லை.
குறிப்பாக அண்ணா திமுக ஆட்சியில் பங்குதாரர்களில் ஒருவராக இருந்ததால் அவரை ஆட்டோ அசைக்கவும் முடியவில்லை என்ற போதிலும் திமுக ஆட்சியிலும் இதுதான் நிலைமையாக நீடித்தது.
தற்போதுள்ள அரசியல் சூழலில் பாஜக தமிழகத்தில் அதிமுகவுடன் இணைந்து 2026 தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று கணக்கு போட்டுள்ளனர். இதற்காக அமித்ஷா துவங்கி நிர்மலா சீதாராமன் வரை பல்வேறு விதமான மட்டங்களில் பேசி வருகின்றனர் என்ற செய்தியும் வெளியாகி உள்ளது.
எடப்பாடி உறவினர் வீட்டில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை ரெய்டு தற்போது வைகுண்டராஜன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள சிபிஐ வழக்கு போன்றவை அதிமுகவிற்கு வைக்கப்படும் செக்குகள் ஆகும்.
தமிழகத்தை மொட்டை அடித்து சூறையாடிய கிரிமினல் குற்ற கும்பலின் தலைவியான பாசிச ஜெயாவால் வளர்க்கப்பட்ட அதிமுக என்ற கடைந்தெடுத்த கிரிமினல் கும்பல் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு துடித்துக் கொண்டுள்ளது.
இந்த துடிப்பை பயன்படுத்திக் கொள்ளும் பாசிச பாஜக வைகுண்டராஜன் மீது வழக்குகளை பதிவு செய்து ஒரு வழிக்கு கொண்டு வருகிறார்கள்.
என்ற போதிலும் தென் தமிழ்நாட்டில் தனி சாம்ராஜ்யத்தை நடத்தி வருகின்ற கிரிமினல் மாபியா கும்பலின் தலைவனான வைகுண்ட ராஜனை கைது செய்வது மட்டுமின்றி அவனது சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
அவன் செய்த கிரிமினல் குற்ற நடவடிக்கையில் ஒவ்வொன்றையும் பகிரங்கமாக விசாரித்து மீள முடியாத சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம்.
- மருது பாண்டியன்.