ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தொடரும்
இலங்கை கடற்படையின் தாக்குதல்கள் – படுகொலை!


ஒன்றிய அரசே, கடற்படையை வைத்து ரமேஸ்வரம் மீனவர்களின் உயிருக்கு பாதுகாப்பு கொடு!
இல்லையேல் கடற்படையை கலைத்துவிட்டு மீனவர்களுக்கு துப்பாக்கிகளை கொடு!!!

இந்திய கடற்பரப்பில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் சில நேரங்களில் பாகிஸ்தான், வங்காளதேசம், மியான்மர் உள்ளிட்ட நாடுகளின் கடற்பரப்புக்குள் சென்றுவிடுவதுண்டு. அந்நாடுகள் நம் மீனவர்களை கொல்வதில்லை. ஆனால் இலங்கை கடற்படை மட்டும் தொடர்ந்து நம் மீனவர்களை கொன்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து 18.10.21 திங்கட்கிழமை காலையில் மீன்பிடிக்க அனுமதி சீட்டு பெற்று 118 விசைப்படகுகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர். இரவில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது வந்த இலங்கை ரோந்து கப்பல் நம் மீனவர்களின் படகுகளை விரட்டி வந்து மோதியதில் ஒரு விசைப்படகு கடலுக்குள் மூழ்கியுள்ளது. இருவர் மீட்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். ஒருவர் மூழ்கி பலியாகியுள்ளார். இப்படி நடுக்கடலில் மூழ்கடிக்கப்பட்டவர்களில் ஒருவரான ராஜ்கிரனுக்கு திருமணமாகி 40 நாட்களே ஆகியுள்ளது என்பதுதான் கொடுமை!

 

ராஜ்கிரண்

இது குறித்து BBC யிடம் பேசியுள்ள இலங்கை கடற்படையின் செய்தி தொடர்பாளர் கேப்டன் இந்திக்க டி சில்வா “இலங்கை கடல் பகுதியான கோவளம் கடற்பரப்பில் இந்திய படகுகள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக்கொண்டிருந்தது. ரோந்து பணியில் இருந்த கடற்படை வீரர்கள் இந்திய மீனவர்களை கைது செய்ய முற்பட்டனர். கைது நடவடிக்கைக்கு பயந்து இந்திய மீன்பிடி விசைப்படகுகள் நாலாபுறமும் சிதறி ஓடின. அதில் கடல் சீற்றம் காரணமாக இந்திய மீன்பிடி விசைப்படகு இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மீது மோதியது. இதனால் அப்படகு நடுக்கடலில் மூழ்கியது. இரண்டு மீனவர்களை உயிருடன் மீட்டோம். ஒருவர் மூழ்கிவிட்டார்.” என்று விளக்கம் தந்துள்ளார்.

இந்திய மீனவர்கள், அதாவது ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டுகின்றனர் என்பது உண்மைதான்! அப்படி இலங்கை எல்லைக்குள் சென்று மீன்பிடித்தால் கப்பலை விட்டு மோதி கொல்லாமா? இது இலங்கை செய்துள்ள படுகொலையே!

தரையைப்போல் கடலில் கப்பலோ, படகோ ஓரிடத்தில் நிற்காது. வீசும்காற்றின் வேகம், திசையைப் பொருத்தும், கடல் அலைகளின் சீற்றத்தைப்பொறுத்தும், கடல் நீரோட்டத்தைப் பொருத்தும் தொடர்ந்து இடம்பெயரும். இதனால்தான் பெரிய கப்பல்களை துறைமுகத்துக்கு வெளியே நங்கூரம் பாய்ச்சிய பின்னரும் அருகருகே நிறுத்தாமல் நீண்ட இடைவெளியை சுற்றுவட்ட வடிவில் விட்டு தள்ளி நிறுத்தி மோதலை தவிர்க்கிறாரகள். நங்கூரம் பாய்ச்சிய கப்பலே ஒரே இடத்தில் நிற்க முடியாது எனும்போது மீன்பிடி படகின் நிலை எப்படி இருக்கும்?

எனவே நடுக்கடலில் இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல்மீது நம் மீனவர் படகு மோதியதாக பழிபோடுவதே தவறு! வலைவிரித்து செல்லும் விசைப்பகுகளுக்கு நடுவில் கப்பலை விட்டால் மோதல் நிச்சயம் என்ற அறிவுகூடவா கடற்படையினருக்கு இல்லாமல் போகும்?

ஜன. குறுக்கே வந்த இலங்கை கடற்படை கப்பல்

ஏற்கனவே இந்த ஆண்டில் ஜனவரியில் 4 ராமேஸ்வரம் மீனவர்கள் கொல்லப்பட்டனர். அதிலும் நம் படகு இலங்கை கப்பல் மீது மோதியதால் அவர்கள் பதிலுக்கு மற்றொரு கப்பலை விட்டு நம் படகை மோதி மூழ்கடித்தனர். கடந்த டிசம்பரில் ராமதநாதபுரம், புதுக்கோட்டை மீனவர்கள் 40 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றதும் நடந்திருந்தது. இப்படி பிடிக்கப்படும் மீனவர்களை பின்னர் மீட்கமுடிந்தாலும் நம் விசைப்படகுகளை இலங்கை திருப்பித்தருவதில்லை இந்த படுகொலைகள் தொடர்கதையாக நீள்கிறது.

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்கள்

அழிக்கப்படும் மீன்வளமும்,
இலங்கை கடல் எல்லைக்குள் புகவேண்டிய நிலைமையும்;

நம் கடற்பரப்பில் மீன்வளம் குறைந்துவிட்டது. ஆற்றின் கழிமுகங்களில்தான் நன்னீரும், கடல்நீரும் கலக்கும் இடங்களில் தான் மீன்கள் முட்டையிட்டு வளம் பெருகும். இதற்காக வெளிநாட்டு கடலில் உள்ள சாலமன் மீன்கள் ஆற்றுக்குள் எதிர்நீச்சல் போட்டு முட்டையிட செல்வதை நாம் டிஸ்கவரியில் கூட பார்த்திருப்போம். மீன்வளத்தை அழிக்கும் ஜெல்லி மீன்களை ஆமைகள் உண்ணும். அந்த ஆமைகள் முட்டையிட கடற்கரைக்குதான் வரும். இங்குதான் ரிசார்ட்டுகளுக்கு அனைத்தையும் விற்கிறார்களே! தாதுமணல் நிறுவனங்கள் JCPயை வைத்து கடல்மணலை அள்ளிவிட்டு கதிர்வீச்சுள்ள கழிவு மணலாக கொட்டுகிறார்களே! பிறகு எப்படி ஆமைகள் பெருகும்? மீன் வளம் கூடும்? இதையும் நாம் சிந்தித்தாக வேண்டும்.

வைகுண்டராஜன் உள்ளிட்ட கனிம வளக்கொளையர்களும் கார்ப்பரேட்டுகளும் சுற்றுச்சூழலை, கடல் வளத்தை அழிக்கின்றனர். மீன் ஏற்றுமதியாளர்களின் வணிகத்தை பெருக்க நம் மீனவர்கள் பலிகடாவாக்கப்படுகின்றனர்

நம்நாட்டில் ஆற்றின் முகத்துவாரத்திற்கு மூக்கை பொத்திக்கொண்டுதான் செல்ல முடிகிறது. தொழில்வளர்சி என்று கார்ப்பரேட்டுகள் வெளியேற்றும் ரசாயனக்கழிவுகளும், பெரு நகரங்களின் சாக்கடைகளும் இதற்கு காரணம். சென்னையின் கூவம் மட்டுமல்ல! கொசஸ்தலையாறும் நாறுகிறது. எண்ணூரில் கொசஸ்தலை ஆற்றில் கடல்நீரை குடிநீராக்கிவிட்டு அதிலிருந்து பிரிக்கப்படும் மிக அதிக உப்புள்ள கழிவுநீரையும் சேர்த்தே கலக்கின்றனர்.

எண்ணூர் கடல்நீர் சுத்திகரிப்பு மையம்

அதேபோல் கல்பாக்கம், கூடங்குளம் அணுஉலைகளில் உள்ள கடின நீரை குளிர்விக்க கடல்நீரை உறிஞ்சி, அதையே வெந்நீராக கடலுக்குள் விடுகின்றனர். இது கடல்நீரின் சமநிலையை பாதித்து மீன்வளத்தையும் அழிக்கிறது அல்லது விரட்டுகிறது. கடல்வாழ் உயிரினங்களில் இதன் கதிர்வீச்சு தாக்கம் பற்றி தனியாகத்தான் எழுத வேண்டும். (மீன்வளத்தை அழிக்கும் இரட்டை மடி வலை உள்ளிட்ட பொருத்தமற்ற மீன்பிடிமுறைகள் குறித்து ஏற்கனவே எழுதியுள்ளோம்.) இப்படி மீன்வளம் குறையும் அதே நேரம் பயன்படுத்தப்படும் வலைகளின் செலவும், டீசலின் விலையும் அதிகரித்துவிட்டது. அதற்கேற்ப மீனின் விலை உயரவில்லை. ஒரு முறை கடலுக்கு சென்றுவரவே 30 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை செலவாகிறது. எனவே மேலும் அதிக அளவு மீன்களை தேடி பிடித்தாக வேண்டிய நிலையில்தான் எல்லை தாண்டுகின்றனர்.

படிக்க:
அதிகரிக்கும் மீனவர்கள் மோதலும், அழிக்கப்படும் கடல் வளமும்!!

”33 வருசத்துக்கு முன்னாடி தொழிலுக்கு வந்தேன். அப்போ ஒரு லிட்டர் டீசல் 3.36 ருபாய்தான். அன்னக்கி பிடிச்ச ஒரு கிலோ இராலை 700 ரூபாய்க்கு விற்றோம்.” என்கிறார் எடிசன் என்ற விசைப்படகு உரிமையாளர். இன்று டீசல் விலை 100 ரூபாயாக ஏற்றத்திலும், இரால் விலையோ 350 ரூபாய் என இறக்கத்திலும் உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்னர் நம்மூரில் தெருக்களிலும், உள்ளூர் சந்தைகளிலும் விற்கப்பட்ட மீன்களில் பலவும் இன்று ஏற்றுமதிக்கானதாகிவிட்டது. நவீன மேட்டுக்குடி கும்பல் தான் நட்சத்திர உணவகங்களில் ருசியாக உண்கிறார்கள்.

எல்லை தாண்டுவதல்ல;
அது குறுகலானதாக இருப்பது!

இயற்கை அமைப்பில் இந்தியாவும் இலங்கையும் ஒரே நிலப்பரப்பாக இருந்து கடல்மட்டம் உயர்ந்ததால் பிரிந்தவை. இப்பொழுதும் கோடியக்கரையில் படகில் ஏறினால் 30 நிமிடத்தில் இலங்கையின் வடமுனைக்கு சென்றுவிட முடியும். இந்த தொலைவில்தான் கச்சத்தீவு வருகிறது. அது இந்திரா ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு தானமாக தாரை வார்க்கப்பட்டது. அதனால் அது இலங்கை கடற்பரப்பாக மாற்றப்பட்டு விட்டது. இன்று அதிக அளவில் தாக்குதலுக்கு உள்ளாவதும், அதில் நம் மீனவர்கள் கொல்லப்படுவதும் இங்குதான் நடக்கிறது.

கடற்படை இந்திய மீனவனை பாதுகாக்காத மர்மம்;

உள்நாட்டு போரில் சீரழிந்தும், தொழில் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியும் உள்ள ஒரு குட்டி நாடு தான் இலங்கை. அது எந்த தைரியத்தில் இந்திய மீனவர்களின் மீது கைவைக்கிறது என்பது பரிசீலனைக்கு உரியது. கார்ப்பரேட்டுகளின் எடுபிடிகளும், கைக்கூலிகளும் தான் இரண்டு நாடுகளிலும் ஆட்சியதிகாரத்தில் உள்ளனர். இவர்களின் ஒத்துழைப்புடன். கடல் வளத்தை நேரடியாக பன்னாட்டு மீன்பிடி கப்பல்கள் சூறையாட ஆரம்பித்துள்ளன.

இவர்கள் நம் மீனவர்களை கடலை விட்டே விரட்டவுள்ளார்கள். கார்ப்பரேட் அடியாளான மோடியால் இந்தியாவில் அதற்கான மசோதாவும் போடப்பட்டுள்ளது. எனவே இந்திய மீனவர்களை, குறிப்பாக தமிழக மீனவர்களை பலிகொடுக்க இந்திய அரசும் உடன்படுகிறது. அதனால்தான் இவ்வளவு போர்க்கப்பல், ரோந்து கப்பல் இருந்தும் அவை வெறும் 100 கடல்மைல் தொலைவைக்கூட கண்காணிக்கவும், நம் மீனவர்களை பாதுகாக்கவும் கூட துப்பின்றி, மனமின்றி உள்ளது. அதனால்தான் இலங்கை துணிந்து தாக்குகிறது.

நமது மீனவர்கள் உயிருக்கு துணிந்துதான் கடலுக்குள் செல்கின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு தர வக்கில்லை என்றால் கடற்படை கப்பல்கள் எதற்கு என்று நாம் கேள்வி எழுப்பவேண்டும். கடற்படையை கலைத்து விட்டு பாதுகாப்பு கருவிகளை மீனவர்களிடமே ஒப்படைக்க கோர வேண்டும். பொருத்தமான படித்த மீனவ இளைஞர்களையே கடலோர காவல்படையில் நியமிக்க வேண்டும்.

மீனவர்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள துப்பாக்கிகளை வழங்கவேண்டும் என முழங்குவோம். கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டை, கடல் வளத்தை தாரை வார்ப்பதை முறியடிப்போம். கடலும், கடல் வளமும் மீனவர்களுக்கே சொந்தம் என்பதை நிலைநாட்டுவோம்.

  • இளமாறன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here