இதைத்தான் ‘தொட்டது துலங்காது’ என்பார்களோ?

0

ராமநவமி நாளன்று பாம்பன் ரயில்வே மேம்பாலத்தை துவக்கி வைத்த சில மணி நேரங்களில் தூக்குப்பாலம் இறக்கப்பட முடியாமல் ஒரு பக்கம் ஏற்றமாகவும் ஒரு பக்கம் இறக்கமாகவும் சிக்கிக்கொண்டது. பின்பு சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகள் முனைந்து பல மணி நேரங்கள் போராடி சரிப் படுத்தி உள்ளனர். இதுதான் இவர்களது ‘குஜராத் மாடல்’.

இதேபோன்று வெள்ளைக்காரன் கட்டிய நாடாளுமன்ற கட்டிடம் 100 ஆண்டுகள் கடந்தும் பழுதின்றி நிற்கும் பொழுது, இவர்களின் சண்டியர்த் தனத்தை – சாதனையாகக் காண்பித்துக் கொள்ள நூற்றுக்கணக்கான கோடிகளை மக்கள் வரிப்பணத்தில் இருந்து செலவழித்து காவி நிறம் பூசப்பட்ட நாடாளுமன்ற புதிய கட்டிடம் கட்டப்பட்ட ஒரு சில நாட்களி லேயே சிறு மழைக்கே சில இடங்களில் பாராளுமன்றத்துக்குள்ளையே தண்ணீர் புகுந்ததும், கட்டடத்தின் மேற்கூரை சில இடங்களில் பெயர்ந்து விழுந்ததும் ஊடகங்களில் வெளிவந்ததை பார்த்து ‘ரசித்தோம்’.

அதேபோன்று உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், சங்கியுமான சந்திர சூட்டின் தீர்ப்புரை காரணமாக அயோத்தியில் அநியாயமாக பல்லாயிரம் கோடி செலவில் எழுப்பப்பட்ட ராமர் கோவில் சிறு மழைக்கே ஒழுக ஆரம்பித்ததும், தண்ணீர் புகுந்ததும், பெயர்ந்து விழுந்ததும் நம் கண் முன் நிகழ்ந்த விடயங்களே ஆகும்.

ஆக மோடி கையால் திறக்கப்பட்ட பல பாலங்களும் கூட (குஜராத் உட்பட) குறுகிய காலத்தில் இடிந்து விழுந்துள்ளன. இதைத்தான் ‘தொட்டது துலங்காது’ என்பரோ?

கச்சத்தீவு மற்றும் மீனவர் பிரச்சினை பற்றி இலங்கையில் மோடி என்ன செய்து கிழித்தார்?

மேலும், இலங்கை சென்றபிரதமர் மோடி, தமிழ்நாட்டின் உரிமைக் குரலாக நீண்ட காலமாக எழுப்பப்படும் கச்சத்தீவு மீட்பு பற்றியோ, இலங்கையில் இன்றைய நாளில் சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் பிரச்சனை பற்றியோ, மீனவர்கள் இலங்கை கடற்படையால் அடிக்கடி கைது செய்யப்படுவதும், துப்பாக்கி சூடு நடத்தப்படுவதும், அடித்துத் துன்புறுத்தப்படுவதும், விலை மதிக்கத்தக்க படகுகளையும், வலைகளையும் பலவந்தமாக பறிமுதல் செய்து செல்வதையும் தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் குறிப்பாக ராமேஸ்வரம் மீனவர்கள் அனுபவித்து வரும் அவல நிலையில் இவை எதைப்பற்றியும் பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு காண முன்வராத இந்த மோடி…ஜ்ஜீ தான் தமிழர் நலன் காக்க வரிந்து கட்டிக்கொண்டு இருப்பது போல பாவனை செய்கிறார். ‘பாவப்பட்ட ஜென்மங்களாய்’ தமிழக மீனவர்கள் மோடியின் ஆட்சியில் தொடர்ந்து அல்லல் படுகின்றனர்.

இந்த லட்சணத்தில் மோடியை வரவேற்க தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் செல்லவில்லை என்பதற்காக அண்ணாமலை, தமிழிசை, வானதி உட்பட சங்கிக் கூட்டம் வானத்துக்கும் பூமிக்குமாக குதியோ குதி என்று குதிக்கின்றனர்!

(ஏன், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, பால்வளத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் கலந்து கொண்டது போதாதோ?) தமிழ்நாட்டின் உரிமைகள் அனைத்தையும் தனது மயிரளவுக்குச் சமமாக பாவித்து புறம் தள்ளும் ஒன்றிய அரசின் பிரதமருக்கு எதிராக தமிழ்நாடு அரசு குறைந்த பட்சம் கருப்புக் கொடி போராட்டம் நடத்தாமல் இருந்தது குறித்தே இந்த சங்கிகள் பெருமைப்பட்டு இருக்க வேண்டும். நல்ல வேளை குறைந்த பட்சம் காங்கிரசராவது சில இடங்களில் மோடிக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்தியுள்ளனர்.

பாம்பன் தரும் பாடம்:
புளுகுவதில் சீமானுக்கு அப்பனாக மோடி!

நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் பலமுறை மோடி தமிழ் மண்ணில் தடம் பதித்து பொய்களையும், புனைச்சுருட்டுக்களையும், போலி வாக்குறுதிகளையும் இரைத்துச் சென்றார். ஒரு ‘வணக்கம்’; தட்டுத் தடுமாறி ஒரு ‘குறள்’; அல்லது பார்ப்பன பாரதியின் கவிதைகளில் ‘அரை வரி’… இப்படி ஆரம்பித்து தமிழுக்கு உயர்வு கொடுப்பதான ஒரு பாவனையை காட்டிச் சென்றார். அவர் தமிழ் மண்ணில் தேர்தல் நேரத்தில் மட்டும் எட்டு அல்லது ஒன்பது முறை கலந்து கொண்டு பிரச்சாரம் செய்ததோடு ‘ரோடு ஷோவும்’ நடத்திக் காண்பித்தார். ஆனாலும் பாண்டிச்சேரி உட்பட தமிழ்நாட்டில் 40க்கு 40-ம் திமுக கூட்டணி வெற்றியைத் தட்டிச் சென்றுவிட்டது. பாஜக-வுக்கு மருந்துக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. அதன் பிறகு தற்போது தான் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்.

தற்போது 2026-ல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரவிருப்பதால் ராமநவமி நாளான 06-04-2025-ல் ராமேஸ்வரம் பாம்பனில் தேர்தல் பிரச்சாரத்தை மோடி துவங்கி விட்டார். ஆம், வழக்கம்போல வெளிநாட்டுப் பயணங்களில் ஒன்றாக இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு ராமேஸ்வரம் வந்த மோடி ஏக தடபுடலுடன் ராமநாத சுவாமி கோவிலில் அனைத்து பார்ப்பன அர்ச்சர்களாலும் வரவேற்கப்பட்டு தரிசனத்தை முடித்துக் கொண்டார். அதன் பின் ஹெலிகாப்டரில் ஒரு சுற்று சுற்றியுள்ளார்.

படிக்க:

♦  ராமநவமி என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் காலிகள் வெறியாட்டம்!

♦  நாடாளுமன்ற கூரை ஒழுகுகிறது! கட்டிடம் மட்டுமல்ல! அதன் உள்ளடக்கமும் பழுதடைந்து விட்டது!

இறுதியில் பாம்பன் ரயில்வே தூக்குப்பாலத்தை தலைமை யேற்று திறந்து வைத்தார். திறந்து வைத்து அவர் உரையாற்றும் பொழுது வழக்கம்போல தமிழில் ‘வணக்கம்’ கூறிவிட்டு, ‘ஹெலிகாப்டரில் நான் ராமேஸ்வரம் கடல் பகுதியை சுற்றிப் பார்த்த பொழுது ராமர் பாலத்தை கண்டு அதிசயத்துப் போனேன்; (அறிவியல் ரீதியான உண்மை(?)! வெளிநாட்டுக்காரன் கேட்டால் காரி உமிழ்வான்) நூறாண்டுகளுக்கு முன்னாள் இதே ராமேஸ்வரம் ரயில்வே மேம்பாலத்தை கட்டிய பொறியாளர் குஜராத்தி; தற்போது இந்தப் பாலத்தையும் திறந்து வைப்பதும் ஒரு குஜராத்தி (மோடி); தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு தமிழிலேயே கையெழுத்து போடத் தெரியாது; நாங்கள் தமிழ்நாட்டிற்கு அள்ளிக் கொடுத்த தொகை கொஞ்ச நஞ்சமல்ல; கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறைக்கு ஏழு மடங்கு நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது; லட்சம் கோடிக்கு மேல் செய்தும் சிலர் இங்கே அழுது கொண்டிருக்கிறார்கள்…’ என்ற பாணியில் வீரா வேசமாக பேசியுள்ளார். முழுமையும் பொய்களை கட்டவிழ்த்து விட்டுள்ளார். அவர் கடந்த தேர்தல் காலங்களில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை கீழே காணும் காணொளியை பார்த்தாலே உண்மையை புரிந்து கொள்ளலாம்! வாக்குறுதிகள் அனைத்திற்கும் நேர் எதிராக அவரது செயற்பாடுகள் அமைந்ததால் முழுமையும் பொய் சொல்வதே அவருடைய கொள்கையாக மாறிவிட்டது என்பதை உணரலாம். மேலும் ராம நவமி அன்று இந்த தூக்குப்பாலம் திறக்கப்படுவதை ஒட்டி ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று மூன்று முறை ஓலமிட்டு, கூட்டப்பட்ட அப்பாவி மக்களையும், பிழைப்புவாதத்தால் பீடிக்கப்பட்ட சங்கிகளையும் அதே ‘ஜெய் ஸ்ரீ ராம்’ ஓலத்தை திரும்ப எழுப்பச் சொல்லியுள்ளார். அவர்களும் ஏனோ தானோ என்று ஓலமிட்டனர்.

எத்துனை முறை தமிழ்நாடு அரசு நிதி கேட்டும் மறுத்து வருகிறது மோடி அரசு?

தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் உரிமை நிதி கோரினால் “எவ்வளவு கொடுத்தாலும் போதவில்லை என்று சிலர் ‘அழுகின்றார்கள்’ “ – என கிண்டல் அடித்து நீலிக் கண்ணீர் வடிக்கும் மோடி, குஜராத்தில் அவர் முதலமைச்சராக இருந்த தருணத்தில் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்-கிற்கு எழுதிய பல கடிதங்களில் ‘எங்கள் மாநில அரசு என்ன… பிச்சைக்கார மாநிலமா… கோருகின்ற நிதி தர மறுப்பதில் எந்த வகையில் நியாயமானது…’என்ற பாணியில் புலம்பித் தள்ளினாரே… பொங்கி எழுந்தாரே… அதுவும் அழுது புலம்பியதுதானோ?

வெள்ளத்தாலும் புயலாலும் தமிழ்நாட்டு மக்கள் சொல்லொண்ணாத் துயரத்தில் ஆட்பட்டதை உலகறியும். இதற்காக பேரிடர் நிதி மட்டும் இதுவரை தமிழ்நாடு அரசு கேட்டிருந்த ரூபாய் 67 ஆயிரம் கோடியில் ரூபாய் 552 கொடியை மட்டுமே வழங்கி உள்ளது மோடி அரசு; ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் ஓடோடிச் சென்று வாரிக் கொடுக்கிறார் மோடி. தமிழ்நாட்டு பேரிடர் நிகழ்வுகளை கூட நேரில் வந்து பார்ப்பதற்கு அவருக்கு நேரமில்லை; காரணம் அவருக்கு உலகம் சுற்றுவதற்கே நேரமில்லாமல் இருக்கிறது!

மேலும் இவ்வாண்டு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்விக்கான சுமார் ரூ 2152 கோடி நிதியை தர வேண்டும் எனில், ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை (இந்தி உட்பட மும்மொழிக் கொள்கை மற்றும் குலக்கல்வி முறையை) ஏற்றுக் கொண்டால் மட்டுமே தர முடியும் என ஆணவச் செருக்கோடு பதில் அளித்தார் ஒன்றிய கல்வி அமைச்சர்! ஏனெனில் நிதி ஆதாரம் முழுமையும் அவர்கள் அப்பன் வீட்டு சொத்து என்ற நினைப்பு! அது மட்டுமல்ல; பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையும், தமிழ்நாட்டு மக்களையும் நாகரீகம் அற்றவர்கள் என்ற பாணியில் பேசினார் அந்த கொழுப்பெடுத்த கல்வி அமைச்சர்; எதிர்ப்புக் குரல் வலுத்ததும் மன்னிப்பு கேட்டார்.

ஒன்றிய பட்ஜெட்டில் நிதி பகிர்வு என்பது பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளும் மாநிலங்களுக்குக் கூடுதலாகவும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்குப் பிச்சை போடுவது போன்று குறைவாகவும் வழங்குகிறது இந்த மோடி-நிர்மலா அரசு!

தமிழ்நாட்டில் இருந்து அளிக்கும்
ஜி எஸ் டி வரியை நிறுத்துவோம்!

ஜிஎஸ்டி வரியைப் பொருத்தமட்டில் இந்தியாவில் ஒன்றிய அரசுக்கு அதிகம் செலுத்தும் மாநிலங்கள் மூன்றில் தமிழ்நாடு முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் தமிழ்நாடு அளிக்கும் ரூ.1/-க்கு ஒன்றிய அரசு 0.29 பைசாவை மட்டுமே தமிழ்நாடு அரசுக்கு திரும்ப அளிக்கிறது. ஆனால் உ.பி., பீகார், உள்ளிட்ட வடமாநிலங்கள் பலவற்றிற்கும் குறிப்பாக பாஜக மற்றும் கூட்டணி ஆட்சி நடத்தும் மாநிலங்களுக்கு அள்ளிக் கொடுக்கிறது மோடி – நிர்மலா அரசு! அப்படி இருக்கின்ற பொழுது தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு ஜிஎஸ்டி வரியை செலுத்த மாட்டோம் என போர்க் குரல் எழுப்பி நடைமுறைப்படுத்தல் வேண்டும்! ஒன்றிய அரசின் அடிமைகள் நாம் அல்லர் என்பதை நிரூபிக்க வேண்டும்!

நீட், இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பு, வக்ஃப் பில் பற்றி மோடி வாய் திறக்காதது ஏன்?

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்பது குறித்து பல மாநிலங்கள் நொந்து போய் இருக்கக்கூடிய நிலையில் குறிப்பாக தமிழகம் தமது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ள நிலையில் அதைப் பற்றி மோடி இதுவரை வாய் திறக்கவில்லை பாம்பன் கூட்டத்திலும் அது பற்றி பேசவில்லை.

ஆர்எஸ்எஸ் வகுத்துக் கொடுத்த வழிகாட்டுதல்படி இந்தித் திணிப்பு, வக்ஃபு சட்டத்திருத்தம், நீட் முதலான வற்றை அமல் படுத்துவதில் மோடி அரசு கண்ணும் கருத்துமாக இருப்பதால் இவைகள் பற்றியும் தமிழ்நாட்டின் பாம்பன் பொதுக்கூட்டத்தில் தப்பி தவறி கூட வாய் திறக்க முன்வரவில்லை மோடி.

தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்தேயாக வேண்டும் – ஒற்றை இலக்கு பாஜகவினுடையது!

பாம்பன் பாலத்தை திறந்து வைத்து மோடி பேசுகின்ற பொழுது ‘ஜெய் ஸ்ரீ ராம்’ ஓலத்தை எழுப்பி, மக்களையும் ஓலமிடச் செய்தார் அல்லவா மோடி? அதே நேரத்தில் தான் உத்திரபிரதேசத்தில் ஆர்எஸ்எஸ் பாஜக – சங்கிகளான காவி(லி)க் கூட்டம் மசூதிகள் மேலேறி காவிக் கொடிகளுடன் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ ஓலமிட்ட கழிசடைத் தனத்தை ஊடகங்களில் பார்த்தோம்! இந்த யோக்கியவான்கள் தான் சிறுபான்மை இஸ்லாமியர்களின் நலன் காப்பதற்காகவே வக்ஃப் சட்டத்திருத்தத்தை நிறைவேற்றி இருக்கிறார்களாம்! அதை நாம் நம்ப வேண்டுமாம்!

பாம்பன் நிகழ்ச்சியில் மோடி தறிகெட்டு பேசியதன் மூலமாக தமிழ்நாட்டு மக்களிடம் நீலிக் கண்ணீர் வடித்து, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தமது பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க மறைமுகமாககோரிக்கை விடுத்துச் சென்றுள்ளார்! தப்பித்தவறி பாஜக கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சி கட்டிலில் அமர்ந்து விடுமேயானால் இங்குள்ள எச்ச. ராஜா, அண்ணாமலை, அர்ஜுன் சம்பத், வானதி, தமிழி(இந்தியி)சை, பொன்னார், கேடி .ராகவன்,  நாராயணன் திருப்பதி, ஆடிட்டர் குருமூர்த்தி, நைனார் நாகேந்திரன் இந்தக் காவிக் கூட்டம் சங்கிகளைத் திரட்டி அண்மையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடத்திய அடாவடித்தனத்தை போல, உ.பி. உட்பட வடமாநிலங்களில், வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் கலவரங்கள் அட்டூழியங்கள் போல் தமிழ்நாட்டிலும் பற்றி படரும் என்பதனை மட்டும் தமிழ்நாட்டு மக்கள் உணர்தல் வேண்டும்.

இன்று நாட்டில் உள்ள உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்டு இருக்க கூடிய வாழ்வாதார பிரச்சனைகள் கட்டுக்கடங்காதவை. அதற்குக் காரணம் மறு காலனியாக்கச் சூழலில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கான நாடாக இந்தியாவை தகவமைத்துக் கொடுத்துவிட்டது பாசிச பாஜக ஆர் எஸ் எஸ் இந்துத்துவக் கும்பல்!

அதுமட்டுமல்ல; மாநிலங்கள் அனைத்தையும் நகராட்சிக்கு சமமாக உருமாற்றிவிட்டு ஒட்டுமொத்த அதிகாரங்களையும் ஒன்றியத்தில் குவித்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் முனைந்து நிற்கிறது காவிக் கூட்டம்.

எனவேதான்,

தமிழகமே,

ஒன்றிய அதிகாரக் குவிப்பை தடுத்திடு!

தன்னாட்சி உரிமைக்கு போரிடு! என்ற முழக்கத்தை முன்னெடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

அத்துடன், கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை வீழ்த்துவோம்!

ஜனநாயக கூட்டரசை நிறுவுவோம்! என்ற முழக்கத்தின் அடிப்படையிலும் போராட்டக் களத்தில் சமர் புரிய வேண்டியவர்களாக இருக்கிறோம்.

அத்தகு இலட்சியத்தை அடைய ஐக்கிய முன்னணி கட்டி போர்க்களம் காண்போம்! பிரதான எதிரியான கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகள் ஆர் எஸ் எஸ் பாஜக கும்பலை வீழ்த்துவோம்!

  • எழில்மாறன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here