பீகார் அரசியலில் நீண்டகாலம் (20 ஆண்டுகள்) முதல்வராகப் பணியாற்றிய நிதிஷ் குமார், தனது பதவியைத் துறந்து ராஜ்யசபா எம்.பி-யாகச் செல்வது என்பது ஒரு தனிநபரின் பதவி மாற்றம் அல்ல; இது அம்மாநிலத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட பாஜக அரங்கேற்றியுள்ள ஒரு பேராபத்தான அரசியல் நகர்வாகும்.
2025 நவம்பர் மாதம் நடைப்பெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், பாஜக உட்பட 243 இடங்களில் 202 இடங்களை வென்ற பிறகு, அவர் 10வது முறையாக பீகாரின் முதலமைச்சராகப் பதவியேற்றார் .
மாநிலங்களவை உறுப்பினராக கடந்த 16 மார்ச், 2026 ஆம் தேதி தேர்வான அவர், அடுத்த 14 நாட்களுக்குள் எம்.எல்.சி பதவியைத் துறக்க வேண்டும் என விதிகள் உள்ளதால் இன்று மார்ச் 30-ல் பதவியை ராஜினாமா செய்தார். கூடிய விரைவில் ஒன்றிய அமைச்சராக பதவியேற்பார் என்றும் சொல்லப்படுகிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பீகாரின் அரசியலைத் தீர்மானித்த ஒரு தலைவர், இன்று பாஜகவின் திட்டமிட்ட அழுத்தங்களுக்குப் பணிந்து வெளியேறுவது, இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கும் பிராந்தியக் கட்சிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாகவே இடதுசாரிகளால் பார்க்கப்படுகிறது.
மாநிலக் கட்சிகளை ஒழித்துக்கட்டும் பாஜகவின் தந்திரம்
பாஜக கடந்த பத்தாண்டுகளில் மாநிலக் கட்சிகளைத் திட்டமிட்டுப் பலவீனப்படுத்தி வருகிறது. சிவசேனாவை உடைத்து ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்கிய பாஜக, 2024 ஆம் ஆண்டு NDA சட்டமன்ற தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல்வர் பதவி மறுக்கப்பட்டு, ஆறுதலாக துணை முதல்வர் பதவியை வழங்கினர். தற்போது ஐக்கிய ஜனதா தளத்தை (JDU) அதன் உள்ளிருந்தே பாஜக சிதைத்துள்ளது.
இதே நிலைமையை எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உருவாக்கப் முனைகிறது பாஜக. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சுவேந்து அதிகாரி, முகுல்ராய் போன்ற முக்கிய தலைவர்களுடன் 10க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்கியது. அதேபோல் மகாராஷ்டிராவில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரசை இரண்டாக உடைத்தது.
இதேநிலை நாளை அதிமுகவிற்கு-எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஏற்படலாம். A1 ஜெயா இறந்ததை பயன்படுத்திக் கொண்டு கட்சியை மூன்றாக உடைத்து கிட்டத்தட்ட அதிமுகவை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது பாசிச பாஜக. ஒருவேளை நாளை அதிமுக ஆட்சி அமைந்தாலும் நிதிஷ் குமாரின் நிலைமை தான் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஏற்படும். இதனை பல அரசியல் கட்சி தலைவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
“பாஜக ஐக்கிய ஜனதா தளத்தை விழுங்கிவிடும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் எச்சரித்திருந்தது இன்று உண்மையாகியுள்ளது.
நிதிஷ் குமாரின் உடல்நிலை மற்றும் அரசியல் சூழலைப் பயன்படுத்தி அவரைச் சாமர்த்தியமாக ஓரங்கட்டிய பாஜக, தற்போது பீகாரில் தனது சொந்த முதல்வரை அமர்த்தத் துடிக்கிறது.
இதன் மூலம் பீகாரின் தனித்துவமான அரசியல் அடையாளத்தை அழித்து, அதைத் தனது கட்டுப்பாட்டிற்குள் பாஜகவின் இலக்காகும்.
படிக்க:
♦ பீகாரில் முழு சங்கியாக பரிணமிக்கும் நிதிஷ்குமார்!
♦ பீகார் தேர்தல் முடிவுகள்: எதிர்கட்சிகளுக்கு அடித்துள்ள எச்சரிக்கை மணி!
பாசிச பாஜகவின் பிடியில் நிதிஷ் குமார்
மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நீடிப்பதற்கு ஐக்கிய ஜனதா தளத்தின் 12 எம்.பி-களின் ஆதரவு மிக அவசியமானது.
“மோடியின் குடுமி நிதிஷ் குமார் கையில் உள்ளது” என்று சொல்லத்தக்க நிலையில் இருந்தும், நிதிஷ் குமார் பாஜகவின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து செல்வது அவரது தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனாலேயே, அவர் ராஜ்யசபா தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்தபோது, ஆத்திரமடைந்த ஜேடியு ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தைச் சூறையாடினர். “நிதிஷ் குமாரை மட்டுமே முதல்வராகப் பார்க்க விரும்புகிறோம்” என்று கூறி அவர்கள் பாஜகவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இந்துத்துவவாதிகளின் பிடியில் பீகார்?
பாஜக நேரடியாக ஆட்சி அமைக்கும் பட்சத்தில், பீகார் மாநிலம் முழுமையாக இந்துத்துவவாதிகளின் கட்டுப்பாட்டிற்குச் செல்லும் என்ற அச்சம் எழுந்துள்ளது. பாஜகவின் நேரடி ஆட்சியை பீகார் மக்களும் விரும்பவில்லை.
ஏற்கனவே மாநிலத் துணை முதல்வர் விஜய் குமார் சின்கா மாமிச விற்பனைக்குத் தடை விதிப்பது போன்ற நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளார், இது சிறுபான்மையினரை இலக்கு வைக்கும் செயலாகும்.
படிக்க:
♦ பாசிச பாஜக ஆட்சிக்கு விசுவாசமாக குரைக்கும் ’பல்டி மாமா’ நிதிஷ்குமார்!
மேலும், அமித் ஷா சீமாஞ்சல் பகுதிகளில் “குஸ்பேஸ்தியாக்கள்” (ஊடுருவல்காரர்கள்) விவகாரத்தைத் தொடர்ந்து கிளப்பி வருவது, இந்து-முஸ்லிம் மக்களிடையே பிளவை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியாகும்.
நிதிஷ் குமார் பின்பற்றி வந்த சோசலிச மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளைச் சிதைப்பதே பாஜகவின் புதிய முதல்வரின் முதல் வேலையாக இருக்கும்.
பொம்மை அரசுகளின் உருவாக்கம்
உத்தரபிரதேசத்தைத் தவிர்த்து, பாஜக ஆளும் பிற மாநிலங்களில் (மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், ஒடிசா) மோடி-ஷா கூட்டணிக்குக் கட்டுப்பட்ட ‘பொம்மை’ அரசுகளே உருவாக்கப்பட்டுள்ளன. அதே போன்ற ஒரு நிழல் அரசாங்கத்தைப் (Proxy Government) பீகாரிலும் அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது.
நிதிஷ் குமாரின் வெளியேற்றம் என்பது வெறும் பதவி விலகல் அல்ல, அது பீகாரின் சமூக நீதி அரசியலுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும்.
இந்தச் சூழலில், பீகாரின் ஏழை மக்கள், சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் உரிமைகளைப் பாதுகாக்க இடதுசாரிகளும் பிற எதிர்க்கட்சிகளும் இணைந்து ஒரு வலுவான மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
- நந்தன்







நிதீஷ் குமாரின் சரணாகதியும்
மாநில கட்சிகளின் அழிவும் !
20 ஆண்டுகளாக பீகாரில் முதல்வராக இருந்த நிதிஷ்குமார் படிப்படியாக பாஜக பிடியில் சிக்கி இன்று மார்ச் 30 ஆம் தேதி தனது முதல்வர் பதிவை ராஜினாமா செய்துள்ளார் பீகாரின் சமூக நீதி அரசியலுக்கு இழுக்கப்பட்ட அநீதி
பீகாரில் இனி பாஜக தனது முழு பலத்தையும் கொண்டு அதிகாரத்தை தக்க வைத்து பீகாரில் சிறுபான்மையர் தலித் மக்களை வேட்டையாடும் !
தமிழகத்தில் ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக கட்சியை மூன்றாக உடைத்து பிளவு ஏற்படுத்தி தனது பிடியில் வைத்துள்ளது பாஜக. இன்று பீகாரில் நித்திஷ் குமார் நாளை தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி.
சரியான உதாரணங்களை ஒப்பிட்டு பல மாநிலங்களில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது ஆட்சியைக் கவிழ்ப்பது மாநில கட்சிகளை உடைப்பது பாசிச பாஜகவின் திட்டமாக உள்ளது .
கட்டுரை சிறப்பு. நந்தன் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.