ஹிஜாப் தீர்ப்பு: ஆர்எஸ்எஸ்! காவி கும்பல் பிடியில் நீதித்துறை!

கடந்த செவ்வாய்க் கிழமை கர்நாடகா உயர்நீதிமன்றம் ஹிஜாப்புக்கு எதிரான தீர்ப்பை வழங்கியுள்ளது. ஹிஜாப் இஸ்லாத்தின் இன்றியமையாத அங்கம் அல்ல என்றும் மாணவர்களை சீருடை அணியச் சொல்வது அவர்களின் கருத்து மற்றும் தனியுரிமையை மீறுவதில்லை என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மாநில அரசுக்கு கல்வி நிறுவனங்களின் ஆடைகளை ஒழுங்குபடுத்தும் உரிமை உள்ளது. இது தனிப்பட்ட நபரின் உரிமையை தடுப்பதாக கருத முடியாது. இது தான் நேற்றைய தீர்ப்பின் சாராம்சம்.

கர்நாடகாவில் ஆளும் பாஜகாவுக்கு இஸ்லாமிய பெண்களின் மீது திடீரென கரிசனம் வந்து நீதிமன்றத்தில் ஹிஜாப் அணிவது பெண்கள் மீதான  அடக்குமுறை என்று வாதிட்டுள்ளது. சிறுபான்மை மக்கள் மீது எவ்வளவு அக்கறை கர்நாடக பாஜக அரசுக்கு?!!!

உணவு உடை பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்படுவது சிறுபான்மை மக்களே!. பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு சிறுபான்மை மக்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடந்த வண்ணம் உள்ளது. மாட்டிறைச்சியால் நடந்த கும்பல் படுகொலைகள் ஏராளம். இவை அனைத்தையும் தேர்தலுக்காகவும் இந்து மதவெறியை ஊட்டி வளர்க்கவும் பயன்படுத்தி கொண்டது ஆளும் பாஜக அரசு.

படிக்க:

♦ ஹிஜாப் பிரச்சனை அல்ல !
பள்ளிகளில் ஹிஜாப் அணிவது குற்றமா?

இது தென்னிந்திய மாநிலங்களில் குறைவாகவே இருந்தது. இதனை ஹிஜாப் பிரச்சினை மூலம் வளர்க்கிறது கர்நாடக பாஜக. பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே மதவெறியினை தூண்டும் விதமாக, ஹிஜாப் அணியும் மாணவிகளுக்கு எதிராக இந்து சூத்திர மாணவர்களுக்கு காவித் துண்டுகளையும், காவி தலைப்பாகைகளையும் அணிவித்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷம் போடச் சொல்கிறது.

கல்வி நிறுவனங்களும் ஹிஜாப் அணிந்தவர்களுக்கு தடை விதித்து வெளியே நிற்க வைக்கிறது. காவித்துண்டு அணிந்தவர்களை உள்ளே அனுமதிக்கிறது. இது திட்டமிட்டே மதமோதல்களை உருவாக்கும் எண்ணத்தில் கட்டமைப்படுகிறது. இத்தனை நாட்களாக நண்பர்களாக, தோழிகளாக பழகிய மாணவர்களிடையே மதவெறுப்பை உண்டாக்கியுள்ளது.

இதற்கு தூபம் போடும் விதமாக கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துள்ளது. இனி பள்ளிக் கல்லூரிகளை தாண்டி நாளை பொதுவெளிகளில் ஹிஜாப் அணிந்த பெண்கள் மீதும், குல்லா அணிந்த ஆண்கள் மீதும் சீண்டல்களை உண்டாக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

ஹிஜாப் மத அடையாளம் எனக்கூறும் உயர்நீதிமன்றம் பூணூல், திருநீறு, குங்குமம், இன்ன பிற மத அடையாளங்களுடன் வரும் மாணவர்களையும், ஆசிரியர்களையும் என்ன செய்யப்போகிறது. காவிக் கண்ணாடி அணிந்து பார்க்கும் நீதிபதிகளிடம் இதை எதிர்பார்த்தால் அது நமது தவறு.

பெரும்பாலான அரசு, தனியார் கல்விக்கூடங்களில் கோவில்களும், சர்ச்சுகளும் இல்லையா? அல்லது இதனை மத அடையாளமாக பார்க்க முடியாதா? அரசு அலுவலகங்களில் இன்றும் இந்து மத கடவுள்களின் படங்கள் இருந்துக் கொண்டு தான் உள்ளது. அரசு அலுவலகம் என்பது அனைத்து சமூக மக்களுக்கும் பொதுவானதே, அனைவரும் வந்து போகும் இடமும் கூட. இப்படி பல்வேறு இடங்களில் மத அடையாளங்கள் இருக்கதான் செய்கிறது. இதற்கு எதிராக நீதிமன்றங்கள் என்ன செய்யப் போகிறது?

பள்ளிக் கல்லூரிகளில் இன்றும் சாதி, மதம் கேட்கும் நடைமுறை தொடர்கிறது. இதெல்லாம் நீதிமன்றங்களுக்கு தெரியாதா? தெரியும். ஆனால் காவிக் கண்ணாடி அணிந்தவர்களுக்கு ஹிஜாப் மட்டும் தான் கண்ணில் தெரிகிறது.

அவரவர் என்ன உடை உடுத்த வேண்டும், என்ன உணவு உண்ண வேண்டும் என்பது தனிப்பட்ட உரிமை. அதில் தலையிடுவது இந்திய அரசியலைப்புக்கே எதிரானது. உடலில் ஒட்டு துணியில்லாமல் திரியும் காட்டுமிராண்டி அகோரிகளை தடுக்க துப்பில்லாத அரசு தான் ஹிஜாப் மீது தாக்குதல் தொடுக்கிறது. ஹிஜாப் பெண்கள் மீதான வன்முறை என்றால் அதை அவர்களாக உணர்ந்து இந்த உடை தேவையில்லை என முடிவுக்கு வரவேண்டும். ஆனால் இங்கு திணிக்கப்படுகிறது.

Jain monk in India addresses Haryana state parliament naked | Metro News

காவி கும்பல்களுக்கு மதமோதல்கள் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது. அதற்காக தான் மாட்டிறைச்சியும், ஹிஜாப் பிரச்சினையும் திட்டமிட்டே தூண்டிவிடுகிறார்கள். இதை அனைத்து மக்களும் உணர வேண்டும். மத மோதல்களை உருவாக்க நினைக்கும் காவிக்கூட்டத்தையும் அதற்கு துணை புரியும் (அ)நீதிமன்றங்களையும் மக்களிடம் அம்பலபடுத்துவோம்.

  • நந்தன்

source
scroll.in

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here