
ஈரான் நாட்டின் கட்டமைப்புகளை முழுவதுமாக அழித்து அந்த நாட்டை கற்காலத்திற்கு தள்ளுவோம் என்று சூளுரைத்திருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ஆனால் ‘அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் செய்தது என்ன? என்ன காரணத்திற்காக அமெரிக்கா ஈரான் மீது போர்த் தொடுத்திருக்கிறது? இது தேவையற்ற அநியாயமான போர்’ என்று அமெரிக்க மக்கள் கொந்தளிக்கிறார்கள்.
வளைகுடா நாடுகளை அடக்கி ஒடுக்கி கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காகவே அமெரிக்கா, மேற்கு ஆசியாவின் பேட்டை ரவுடியாக இஸ்ரேலை வளர்த்து வைத்திருக்கிறது. இஸ்ரேலும் அமெரிக்காவின் கட்டளைக்கு ஏற்ப வேட்டை நாயாக அந்தப் பகுதியில் உள்ள பல நாடுகளின் மீது பாய்ந்து குதறிக் கொண்டிருக்கிறது.
வளைகுடா நாடுகளையும் அதன் எண்ணெய் வயல்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்காவிற்கு அடிபணியாமல் தொடர்ந்து தனித்து இயங்கி வந்த ஈரானை மண்டியிட வைப்பதற்காக அமெரிக்கா பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சிரியாவில் உள்ள ஈரான் தூதரக கட்டடத்தை இஸ்ரேல் ஏவுகணையை வீசி தாக்கி தகர்த்தது. இந்த தாக்குதலில் ஈரான் ராணுவ அதிகாரிகள் பலர் உயிரிழந்தனர். இதன் எதிர்வினையாக ஈரான் இஸ்ரேலின் மீது தனது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பிறகு இஸ்ரேல் அதே மாதத்தில் ஈரான் நாட்டில் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியது.
இதன் தொடர்ச்சியாக அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே அணுசக்தி தொடர்பாக ஏப்ரல் 2025 முதல் ஜூன் 2025 வரை பல சுற்றுகள் பேச்சுவார்த்தை நடந்ததாலும் அதில் எந்தவிதமான ஒப்பந்தமும் ஏற்படவில்லை. இந்த பேச்சு வார்த்தையின் போது அணு ஆயுதம் தயாரிக்கும் நோக்கில் யுரேனியத்தை சுத்திகரிப்பு செய்யவில்லை என்றும் ஆக்கப்பூர்வமான பயன்பாடுகளுக்காக மட்டுமே யுரேனியத்தை சுத்திகரித்து வருவதாகவும் ஈரான் பலமுறை வலியுறுத்தி கூறியது. அமெரிக்கா இதனை ஏற்க மறுத்தது யுரேனியத்தை சுத்திகரித்து செறிவூட்டும் வேலையை உடனடியாக கைவிட வேண்டும்; ஏற்கனவே சுத்திகரிக்கப்பட்டு வரும் யுரேனியத்தை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. எனவே பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் தொடுத்தது.
இந்த நிலையில் பிப்ரவரி 6, 2026 அன்று மீண்டும் அமெரிக்கா – ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை தொடங்கி நடந்து வந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது அமெரிக்கா கூறியபடி தன்னிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் அனைத்தையும் அமெரிக்காவிடம் ஒப்படைப்பதாகவும் ஈரானின் அணுசக்தி நிலையத்தை சர்வதேச அணுசக்தி முகமை பார்வையிடவதற்கு ஒப்புக் கொள்வதாகவும் ஈரான் கூறியது.
அமெரிக்காவின் நிபந்தனைகளை ஈரான் ஏற்றுக் கொள்வதாக கூறியிருந்த நிலையில், பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த பொழுதே, பிப்ரவரி 28, 2026 அன்று ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனி -யை (Ayatollah Ali Khamenei) இஸ்ரேல் ஏவுகணை வீசி கொலை செய்துவிட்டது. இந்த தாக்குதலின் போது காமெனியின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் சிலரும் ஈரான் நாட்டின் உயரமட்ட அதிகாரிகளில் பலரும் கொல்லப்பட்டனர்.
ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனி -யை கொன்றுவிட்டால் ஈரான் நாட்டு மக்கள் வீதிக்கு வந்து அந்த நாட்டின் அரசுக்கு எதிராக பெரும் போராட்டங்கள் செய்வார்கள். இதை பயன்படுத்தி அந்த நாட்டிற்குள் புகுந்து அமெரிக்காவின் சொல்படி நடந்துகொள்ளும் ஆட்களை ஆட்சியில் அமர்த்தி அந்நாட்டின் எண்ணெய் வளங்களை கொள்ளையடிக்கலாம் என்று திட்டமிட்டு இருந்த ட்ரம்ப்பின் எண்ணம் மண்ணோடு மண்ணாகிவிட்டது. ஈரான் நாட்டின் அரசுக்கு எதிராக மக்கள் எவ்வித போராட்டமும் நடத்தவில்லை.
படிக்க:
♦ இந்தியாவின் துரோகத்தை புறந்தள்ளி இந்திய எண்ணெய் கப்பலை பாதுகாப்பாக அனுப்பும் ஈரான்!
♦ ஈரான் மீது கொலை வெறியாட்டம்! இஸ்ரேல்-அமெரிக்கா-இந்தியா பாசிச கொலைகார கூட்டணி!
இப்படி ஒரு நிலை வரும் என்று பல தசாப்தங்களாக தன்னை தயார்படுத்திக் கொண்டு வந்திருந்த ஈரான் உடனடியாக இஸ்ரேலின் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
எந்த ஏவுகணைகளாலும் தாக்க முடியாத வகையில் இரும்பு கூரை (Iron Dome) பாதுகாப்பை கொண்டிருக்கும் நாடு என்று இஸ்ரேல் தன்னைப் பற்றி சுயத்தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த நிலையில் அந்த பாதுகாப்பு அமைப்பு தகர்க்கப்பட்டு ஈரானின் ஏவுகணைகள் இஸ்ரேல் நாட்டில் உள்ள நகரங்களை அடித்து துவம்சம் செய்துவருகின்றன. இஸ்ரேல் நாட்டின் அணுசக்தி நிலையத்தையும் அந்த நாட்டு விஞ்ஞானிகள் தங்கி இருந்த நகரையும் ஈரான் தாக்கியது. இந்த தாக்குதலில் இஸ்ரேல் நாட்டின் விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் படைத்தளங்களின் மீதும் ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திவருகிறது. இந்த தாக்குதலை தாக்கு பிடிக்க முடியாமல் அமெரிக்கா தனது இராணுவ தளங்களை கைவிட்டுவிட்டு ஓடிவிட்டது. அதுமட்டுமின்றி அமெரிக்கர்கள் தங்கி இருக்கும் கட்டடங்களையும் ஈரான் குறி வைத்து தாக்கி வருகிறது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானில் எந்தெந்த இடங்களை தாக்கி அளிக்கின்றனவோ அதே போன்ற இடங்களை, அதாவது, “ஈரானின் மின்நிலையங்கள் தாக்கப்பட்டால் வளைகுடா நாடுகளில் உள்ள மின்நிலையங்களை தாக்குவோம்; எண்ணெய் நிறுவனங்கள் தாக்கப்பட்டால் வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் நிறுவனங்களை தாக்குவோம்” என்று அறிவித்து அதன்படி ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
அதுமட்டுமின்றி ஈரான் நாட்டிற்கு மிக மிக அருகில் உள்ள ஹர்மோஸ் நீரிணையை மூடிவிட்டது. அந்த நீரிணை நெடுகிலும் கடலுக்கு அடியில் கண்ணி வெடிகளை ஈரான் வைத்துள்ளது. எனவே ஈரானின் அனுமதியின்றி எண்ணெய் மற்றும் எரிவாயு கொண்டு செல்லும் எந்த ஒரு கப்பலும் அந்த நீரிணையை கடந்து செல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் எண்ணெய் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
படிக்க:
♦ அமெரிக்க மேலாதிக்கத்துக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கும் ஈரான்!
♦ ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவர் படுகொலை: அமெரிக்க-இஸ்ரேல் பயங்கரவாதம்!
ஈரான் மீது தொடுக்கப்பட்ட இந்த அநியாயமான போருக்கு எதிராக உலகம் முழுவதும் கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன.
ஆனால் ‘அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் செய்தது என்ன? என்ன காரணத்திற்காக அமெரிக்கா ஈரான் மீது போர் தொடுத்திருக்கிறது? இது தேவையற்ற அநியாயமான போர்’ என்று அமெரிக்க மக்கள் கொந்தளிக்கிறார்கள்.
அமெரிக்கா நடத்தி வரும் இந்த அநியாயமான போருக்கு எதிராக அதிபர் ட்ரம்பை கண்டித்து அமெரிக்கா முழுவதும் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
அமெரிக்காவில் மன்னர்கள் யாரும் இல்லை!… அமெரிக்கா ஒரு ஜனநாயக நாடு!... என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பிடித்துக் கொண்டு மக்கள் வீரியத்துடன் அதிபர் ட்ரம்ப்பிற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்க ராணுவ தலைமையிடமான பென்டகனில் இருந்தும் அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகளின் மத்தியில் இருந்தும் இந்தப் போருக்கு எதிராக வெளிப்படையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

“உலகையே கட்டி ஆண்டு வரும் மாபெரும் வல்லரசு நான்” என்று மார்தட்டிக் கொண்டு இருந்த அமெரிக்கா ஈரான் நாட்டிடம் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கும் நிலையில் ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் ஐரோப்பிய நாடுகள் இணைய வேண்டும் என்று டிரம்ப் அழைப்பு விடுத்தார். இது எங்களைக் கேட்காமல் அமெரிக்கா ஆரம்பித்த போர். இதில் நாங்கள் இணைய விரும்பவில்லை என்று ஐரோப்பிய நாடுகள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த அழைப்பை நிராகரித்து விட்டன. அமெரிக்க ஒற்றைத் துருவ வல்லரசானது உலக நாடுகளில் இருந்து மட்டுமல்ல தமது சொந்த நாட்டு மக்களிடமிருந்தும் தற்பொழுது தனிமைப்பட்டு நின்று கொண்டிருக்கிறது.
ஈரான் போரிலிருந்து கௌரவமான முறையில் வெளியேறி வருவதற்கான வழியைக் கண்டறிய முடியாத வெறியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக – முதல் நாள் சொன்னதற்கு நேர் எதிராக அடுத்த நாளிலும் அதற்கும் மாறாக அதற்கடுத்த நாளிலும் மாற்றி மாற்றி – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பைத்தியம் போல பொதுவெளியில் உளறிக் கொண்டிருக்கிறார்.
– குமரன்







அமெரிக்க அதிபர் பாசிச ட்ரம்பின் அடாவடி கோமாளித்தனத்திற்கு தக்க பதிலடியை ஈரான் தொடர்ச்சியாக கொடுத்து வருகிறது.
அமெரிக்காவுக்கு எதிராக ஈரானோடு கைகோர்த்து மற்ற நாடுகளும் அமெரிக்காவை ஆதரிக்கும் இஸ்ரேல் மீதும் திருப்பி அடித்தால் பாசிஸ்டுகளின் கொட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வரலாம்.