ங்கதேச மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி, கடந்த 18ம் தேதி இவர் அவாமி லீக் கட்சியினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஷெரீப் உஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் மீண்டும் பயங்கர கலவரம் வெடித்தது. இரண்டு பத்திரிகை அலுவலகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன், இந்திய தூதரகம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

அச்சத்தில் சிறுபான்மையினர்!

வங்கதேசத்தில் நடக்கும் படுகொலைகளுக்குப் பின்னே இந்தியா உள்ளது என்று பலரும் நம்புகின்றனர். அதனால் அந்நாட்டில் வசிக்கும் இந்துக்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.

மைமென்சிங் நகரில் ஜவுளி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தீபு சந்திர தாஸ் என்ற இந்து மதத்தைச் சேர்ந்த இளைஞர் இஸ்லாம் மதத்தை பற்றி அவதூறாக பேசியதாக கூறி, ஒரு கும்பல் அவரை அடித்துக் கொன்று, உடலை மரத்தில் கட்டி தொங்கவிட்டு தீ வைத்து எரித்தனர்.

இந்த படுகொலையை இந்தியா கண்டித்துள்ளது. இந்நிலையில், வங்கதேசத்தில் திபு சந்திர தாஸ் கொல்லப்பட்டதை கண்டித்து விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகள் டில்லியில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பு போராட்டம் நடத்தின. போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்தும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், இந்த போராட்டம் நடந்தது.

நிலையற்ற அரசு! 

கடந்த 2009 முதல் 2024-ம் ஆண்டு வரை வங்கதேசப் பிரதமராக ஷேக் ஹசீனா பதவி வகித்தார். கடந்த ஆண்டு அரசுக்கு எதிராக மாணவர் அமைப்புகள் நடத்திய போராட்டத்தால் அவர் பதவி விலகி, இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

தற்போது வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சி செய்து வருகிறது. அந்த நாட்டில் 2026 பிப்ரவரி 12-ம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து தேசிய மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளன. இந்த கட்சி பொதுத்தேர்தலை முதல்முறையாக எதிர்கொள்கிறது. இந்த சூழலில் மாணவர் இயக்கத்தின் தலைவர்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர்; படுகொலை செய்யப்படுகின்றனர்.

கடந்த 12-ம் தேதி இன்கிலாப் மஞ்சா என்ற மாணவர் போராட்டக் குழுவின் மூத்த தலைவரும், டாக்கா-8 தொகுதியின் வேட்பாளருமான ஷெரீப் உஸ்மான் ஹாதி மீது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். தலையில் பலத்த காயமடைந்த அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, கடந்த 18-ம் தேதி உயிரிழந்தார்.

அதேபோல், வங்கதேசத்தின் 3-வது பெரிய நகரான குல்னாவில் தேசிய மக்கள் கட்சி சார்பில் பிரம்மாண்ட பிரச்சார கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. கட்சியின் மூத்த தலைவரும் மாணவர் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான மொடாப் சிக்தர், கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்.

குல்னாவில் உள்ள சிக்தரின் வீட்டில் டிசம்பர் 22 இன் மதிய வேளையில் நுழைந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர் உடனடியாக குல்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். “சிக்தரின் இடது காதில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. அதனால், மிகப்பெரிய பாதிப்பு இல்லை.

ஹாடியை தொடர்ந்து, மற்றொரு மாணவர் தலைவரான சிக்தர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பது வங்கதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல்கள், கொலைப்பழிகள் இந்தியாவின் மீது சுமத்தப்படுகிறது.

தலையெடுக்கும் இஸ்லாமிய தீவிரவாதம்! 

அவரைச் சுட்டதாக சந்தேகிக்கப்படும் பைசல் கரீம் என்பவர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளதாக வலைதளங்களில் தகவல் பரவியது. இதைத் தொடர்ந்து தேசிய மக்கள் கட்சித் தொண்டர்கள், வங்கதேசம் முழுவதும் வன்முறை, கலவரத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, சிறுபான்மையினரான இந்துக்கள் மீது கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மைமன்சிங் மாவட்டம் பலுகா பகுதியை சேர்ந்த தீபு சந்திர தாஸ் (30) அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

இந்தியாவில் கலவரங்களுக்கும், சதிகளுக்கும் பின்னே மதச் சிறுபான்மையினர் தான் உள்ளனர் என்றும், குறிப்பாக இஸ்லாமியர்கள் தான் உள்ளனர் என்றும் காவி பாசிஸ்டுகளும், அவர்களின் ஊடக ஊதுகுழல்களும் ஓங்கி அடித்து சாதிக்கின்றனர்.

படிக்க:

 வங்கதேசம் மாணவர்கள் எழுச்சி: துரோகிகள் தப்பி ஓடுகிறார்கள்!

 வங்கதேசத்தில் என்ன நடக்கிறது?

அதேபோல், வங்கதேசத்தில் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளில் சிலர் அங்கு நடக்கும் அனைத்து கலவரங்களுக்கும் இந்தியா தான் காரணம் என்று சாதிக்கின்றனர். இதில் உண்மை இல்லாமலும் இல்லை.

கோவில்கள் மற்றும் மடங்களை தாக்குவதும், துறவிகள் அல்லது நெற்றியில் திலகம் இட்டு வரும் பெண்களை தாக்குவதும் தொடங்கியுள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாத கும்பலால் வங்கதேசத்து இந்துக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்.

இந்தியாவில் இந்து மதவெறி எப்படி சிறுபான்மையினரை அச்சுறுத்துகிறதோ அதுபோல், பங்களாதேஷில் இஸ்லாமிய மதவெறி இந்துக்களை அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது. பிரச்சனையை அணுகும் ஒவ்வொருவரும் இந்த மதவெறி சக்திகளின் பின்னே ஆதாயம் அடையும் வர்க்கங்கள் எவை என்ற கோணத்தில் இருந்து பரிசீலிக்கும் போதுதான் முழு உண்மையையும் புரிந்து கொள்ள முடியும்.

இந்தியா என்றால் ஒட்டுமொத்த இந்துக்களும் இந்தியாவில் பலனடைகின்றனர் என்றோ, பங்களாதேஷ் என்றால் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும் அங்கு பலனடைகின்றனர் என்றோ பார்ப்பது கூடாது. எந்த ஒரு நாட்டை எடுத்துக் கொண்டாலும், நடக்கும் ஆட்சியாளர்களால், அங்கு அதிகாரத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளால், அங்கு அரசின் நிர்வாக பொறுப்புகளில் உள்ள அதிகார வர்க்கத்தினரால் ஒட்டுமொத்த மக்களும் பலனடைவது சாத்தியமே இல்லை.

இந்தியாவில் அனைத்து துறைகளிலும் அரசிலும் மேலாதிக்கம் செய்பவர்களாக இருப்பவர்கள் தேசம் கடந்த தரகு முதலாளிகள் தான். அரசு எந்திரத்தைப் பொறுத்தவரை ஆதிக்கம் செய்வது அதிகார வர்க்கத்தினர் தான். இத்தகைய கார்ப்பரேட்டுகள், பாசிச கட்சிகள், அதிகார வர்க்கத்தினர் உள்ளடங்கிய முக்கூட்டுதான் இந்தியாவில் உள்ள ஆகப் பெரும்பான்மையான இந்துக்கள் உள்ளிட்டவர்களை நசுக்கி அழிக்க நிற்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது இஸ்லாமிய பயங்கரவாதம்தான் என்று காதில் பூ சுற்றவும் எத்தணிக்கிறது.

இப்படி இந்தியாவில் உள்ள இந்துக்களுக்கு எதிரான சக்திகளான, உழைக்கும் மக்களுக்கு எதிரான வர்க்கத்தினரான, தேசங்கடந்த கார்ப்பரேட்டுகளும் அதிகார வர்க்கத்தினரும் பங்களாதேஷ் உள்ளிட்ட அண்டை நாடுகளில் மேலாதிக்கம் செய்வதையும் விரும்புகின்றனர். இந்திய ஜவுளி முதலாளிகள் பங்களாதேஷில் கால் பதிப்பதையே எதிர்நோக்கி உள்ளனர்.

இத்தகைய புற நிலைமைகளை பங்களாதேஷின் மாணவர் அமைப்புகள் கணக்கில் எடுத்தாக வேண்டும்.

டாக்காவில் செய்தியாளர்களிடம் இன்கிலாப் மஞ்சா மாணவர் அமைப்பின் செயலாளர் அப்துல்லா அல் ஜாபர் நேற்று கூறும்போது, “ஹாடி கொல்லப்பட்ட சம்பவத்தில் இதுவரை முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அமெரிக்காவின் எஃப்பிஐ புலனாய்வு அமைப்பு அல்லது பிரிட்டனின் ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் மூலம் கொலை வழக்கை விசாரிக்க வேண்டும். எங்கள் தலைவரின் மரணத்துக்கு நீதி கிடைக்காவிட்டால், யூனுஸ் அரசை கவிழ்ப்போம்’’ என்றார்.

ஏகாதிபத்தியங்களில் புலனாய்வு அமைப்புகள் தங்களுக்கான நீதியைப் பெற்றுத் தரும் என்று நம்புவது அப்பாவி தனமானது. உலகின் எந்த ஒரு நாட்டிலும் நடக்கும் வன்முறை கலவரங்களுக்கு பின்னே ஏகாதிபத்தியங்களின் சதித்திட்டங்கள் அடங்கியே உள்ளன. பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் வர்க்க நலன்கள் பின்னிப் பிணைந்து நிற்கின்றன. இந்த உண்மையை காணத் தவறுவது பிரச்சினையின் ஆணிவேரை இலக்கு வைத்து தாக்க தவறுவதாக அமையும்.

எது சரியான பார்வை? 

பங்களாதேஷ் இளைஞர்கள் நாட்டுப் பற்றாளர்களும் இப்பிரச்சினையை எப்படி அணுக வேண்டும்? இந்தியாவில் உள்ள உழைக்கும் மக்களின் எதிரிகள் தான் தற்போது பங்களாதேஷின் எதிரியும் கூட.

அந்த வகையில் அண்டை நாடுகளை உறிஞ்சி, சுரண்டி, மேலாதிக்கம் செய்து கொழுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவில் உள்ள இந்துக்களும், பங்களாதேஷில் உள்ள இஸ்லாமியர்களும் நாட்டுப்பற்றாளர்களாக, உழைக்கும் வர்க்கமாக ஒன்றிணைந்து போராட வேண்டிய தேவையை உணர வேண்டியுள்ளது.

மாறாக வங்கதேசத்தில் வசித்து வரும் இந்துக்களுக்கு எதிரான படுகொலை வன்முறை வெறியாட்டங்களை கட்டவிழ்த்து விடுவது என்பது உண்மையிலேயே இந்தியாவில் உள்ள தரகு முதலாளிகளின் மேலாதிக்கத்தை பங்களாதேஷில் மேலும் உறுதிப்படுத்தவே உதவும். இதுதான் அங்கு கலவரத்தை முன் நின்று நடத்தும் அமைப்புகளின் இலக்கா என்று வங்கதேசத்தவர்கள் கேள்விக்கு உள்ளாக்க வேண்டும்.

பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிரான வன்முறையைக் காரணம் காட்டி இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டும் சங்கிகளின் முயற்சிகளை இந்திய உழைக்கும் மக்கள் இனம் கண்டு ஒதுக்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள இந்துக்கள் சாவதையோ நசிவதையோ பற்றி துளிகூட கவலைப்படாமல் மோடிக்கு தோள் கொடுத்து நிற்கும் சங்க பரிவார கூட்டங்களை நாம் அம்பலப்படுத்தி முறியடிப்போம். பங்களாதேஷில் உள்ள மத அடிப்படைவாதிகளை இஸ்லாமிய தீவிரவாதிகளை தனிமைப்படுத்துவதை அங்குள்ள ஜனநாயக சக்திகளும் உழைக்கும் மக்களும் முன்நின்று செய்யட்டும்.

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here