வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்களுக்கு  போலீஸ் பாதுகாப்பு கேட்டு மகஇக கோரிக்கை மனு!
வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
கரூரில் மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்களுக்கு  போலீஸ் பாதுகாப்பு கேட்டு மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக  மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு!

மதுரை திருப்பரங்குன்றதில் தீபம் ஏற்றுவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி  ஜி ஆர் சுவாமிநாதன் அவர்கள் பிறப்பித்த உத்தரவிற்கு பின்னிட்டு திருப்பரங்குன்றத்தில் ஆர்எஸ்எஸ் பிஜேபி சங் பரிவார கும்பல்கள் மத கலவரத்தை ஏற்படுத்தும் எண்ணத்துடன் செயல்பட்டு வருவதை  எமது அமைப்பின் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்.

இதில் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின்  மாநில ஒருங்கிணைப்பாளரும், மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின்  மதுரை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திரு.வாஞ்சிநாதன் அவர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் திருப்பரங்குன்றம் பிரச்சனை சம்பந்தமாக  வழக்கு நடத்தி வருகிறார். மேற்படி வழக்கில் மக்களின் பிரதிநிதியாக சட்டரீதியான போராட்டம் நடத்தி  உரிமையைப் பெற்றுத் தருவதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆர்எஸ்எஸ், பிஜேபி கும்பல்களால் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் பிஜேபி கும்பல்கள்  வட மாநிலங்களில்  இந்து மதத்தின் பெயரால் சமூக ஆர்வலர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள், முற்போக்கு சிந்தனை வாதிகள் என  பலரையும் கருத்தியல் ரீதியாக  எதிர்கொள்ளாமல் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது, பொய் வழக்கு பொய் வழக்கு போட்டு  சிறைப்படுத்துவது, கொலை செய்வது போன்ற கொடிய செயல்களில்   ஈடுபடுவதை நாடே அறியும்.

படிக்க: வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் நடைப்பெற்ற போராட்டங்கள்!

அதேபோல் தமிழகத்திலும் மக்கள் உரிமைக்காக போராடிவரும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கையாக கருதி மக்கள் உரிமை போராளிகளையும் பாதுகாக்க தமிழக அரசின் சார்பில்  வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்களுக்கு  துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க  தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தும், மக்கள் உரிமை போராளிகளை, மனித உரிமை போராளிகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி இன்று (15.12.2025) காலை 11 மணியளவில் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக கரூர் மாவட்ட சட்ட ஆலோசகர் வழக்கறிஞர்  ஜெகதீசன் தலைமையில்  கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்வதாக  ஒப்புதல் அளித்தார்.

இதில் ம.க.இ.க மாவட்ட செயற்குழு உறுப்பினர் விக்னேஷ்வரன், பொதுக்குழு உறுப்பினர்கள் சின்னமணி,  பத்மநாபன், பன்னீர்செல்வம் மற்றும்  வீரக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல் :

மக்கள் கலை இலக்கியக் கழகம்
கரூர் மாவட்டம்.
தொடர்புக்கு : 99446 33347.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here