சம்யுக்தா கிசான் மோர்ச்சா
பத்திரிகைச் செய்தி


19 ஜூலை 2022

MSP மற்றும் பிற பிரச்சனைகள் மீது அரசாங்கம் அமைத்த குழுவை, சம்யுக்தா கிசான் மோர்ச்சா நிராகரிக்கிறது; மோர்ச்சா இந்தக் குழுவில் எந்த பிரதிநிதிகளையும் நியமிக்காது !

அரசாங்கப் பிரதிநிதிகள் மற்றும் அதன் விசுவாசிகள் நிறைந்த இந்தக் குழுவின் நிகழ்ச்சி நிரலில், MSP சட்டத்தைப் பற்றி விவாதிக்க வாய்ப்பில்லை !

இந்தக் குழுவைப் பற்றி எஸ்கேஎம் கொண்டிருந்த அனைத்து அச்சங்களும் உண்மையாகிவிட்டன; விவசாயிகளுக்கு எதிரான இத்தகைய குழுக்களுடன் மோர்ச்சாவுக்கு எந்த தொடர்பும் இருக்க முடியாது !

MSP மற்றும் பிற பிரச்சனைகளில் இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட குழுவை சம்யுக்தா கிசான் மோர்ச்சா நிராகரித்துள்ளது. மேலும் இந்தக் குழுவில் தனது பிரதிநிதியை நியமிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது. நவம்பர் 19 அன்று மூன்று கறுப்புச் சட்டங்களை ரத்து செய்வதோடு, பிரதமரால் அறிவிக்கப்பட்ட அந்தக் குழு பற்றிய சந்தேகங்களை மோர்ச்சா பகிரங்கப்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில், இந்தக் குழுவிற்கான பிரதிநிதிகள் பெயர்களை அரசாங்கம் மோர்ச்சாவிடம் கேட்டபோது, ​​​​ குழு பற்றி அரசாங்கத்திடம் மோர்ச்சா விளக்கம் கேட்டது. அதற்குப் பதில் கொடுக்கப்படவில்லை. ஜூலை 3 அன்று, சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் தேசியக் கூட்டம் “இந்தக் குழுவின் அதிகார வரம்பு மற்றும் குறிப்பு விதிமுறைகளை அரசாங்கம் தெளிவுபடுத்தாத வரை, சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் பிரதிநிதியை இந்தக் குழுவிற்கு நியமிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை” என்று ஒருமனதாக முடிவு செய்தது. இந்தக் குழு குறித்த சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் சந்தேகங்கள் அனைத்தும் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் மூலம் நிஜமாகியுள்ளன. சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் பிரதிநிதிகளை, விவசாயிகளுக்கு எதிரான மற்றும் அர்த்தமற்ற இந்தக் குழுவிற்கு அனுப்புவதில் எந்த நியாயமும் இல்லை.

இந்தக் குழுவிற்கான பெயர்களை அரசாங்கம் மோர்ச்சாவிடம் கேட்டபோது, ​​அதற்கு பதிலளிக்கும் விதமாக, 24 மார்ச் 2022 அன்று வேளாண் செயலாளருக்கு அனுப்பிய மின்னஞ்சலில், மோர்ச்சா அரசாங்கத்திடம் கீழ்க்கண்ட விளக்கங்களைக் கேட்டது:

i) இந்தக் குழுவின் TOR (குறிப்பு விதிமுறைகள்) என்னவாக இருக்கும்?

ii) சம்யுக்த கிசான் மோர்ச்சாவைத் தவிர வேறு எந்த அமைப்புகள், தனிநபர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் இந்தக் குழுவில் இடம்பெறுவார்கள்?

iii) குழுவின் தலைவர் யார் மற்றும் குழுவின் செயல்பாடு என்ன?

iv) தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க குழுவிற்கு எவ்வளவு கால அவகாசம் கொடுக்கப்படும்?

v) குழுவின் பரிந்துரைகளுக்கு அரசாங்கம் கட்டுப்படுமா?

இந்தக் கேள்விகளுக்கு அரசு பதிலளிக்கவில்லை. சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் பிரதிநிதிகளின் பெயர்கள் வராததால் குழு அமைப்பது தடைபட்டதாக வேளாண்துறை அமைச்சர் தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டார்.

நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்பாக இந்தக் குழுவை அறிவித்து, அதற்கான ஆவணங்களை முடிக்க அரசு முயற்சித்துள்ளது. ஆனால், இந்தக் குழுவின் பின்னணியில் உள்ள அரசாங்கத்தின் தவறான நோக்கங்களையும், குழுவின் பொருத்தமின்மையையும் இந்த அறிவிப்பு தெளிவுபடுத்துகிறது. அவை :

1. இந்தக் குழுவின் தலைவர் முன்னாள் வேளாண் துறை செயலாளர் சஞ்சய் அகர்வால் ஆவார். அவர், மூன்று விவசாயிகள் விரோத சட்டங்களையும் உருவாக்கியவர். இவரோடு இந்த மூன்று சட்டங்களின் முக்கிய வழக்கறிஞராக இருந்த NITI ஆயோக் உறுப்பினரான ரமேஷ் சந்த் உடன் இருக்கிறார். நிபுணர்களாக, பொருளாதார வல்லுநர்கள்தான் MSP க்கு சட்ட அந்தஸ்து வழங்குவதற்கு எதிராக உள்ளனர்.

2. இந்தக் குழுவில் சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் 3 பிரதிநிதிகளுக்கு இடம் விடப்பட்டுள்ளது. ஆனால் மற்ற இடங்களில், விவசாயி தலைவர்கள் என்ற பெயரில், மூன்று விவசாயிகள் விரோத சட்டங்களையும் வெளிப்படையாக ஆதரித்த 5 விசுவாசிகளை அரசாங்கம் நியமித்துள்ளது. இவர்கள் அனைவரும் பாஜக-ஆர்எஸ்எஸ் உடன் நேரடியாக தொடர்பில் உள்ளவர்கள் அல்லது அவர்களின் கொள்கைகளை ஆதரிப்பவர்கள். கிருஷ்ணா வீர் சவுத்ரி இந்திய விவசாயிகள் சங்கத்துடன் தொடர்புடையவர் மற்றும் பாஜகவின் தலைவராக உள்ளார். சையத் பாஷா படேல் மகாராஷ்டிராவை சேர்ந்த முன்னாள் பாஜக எம்எல்சி ஆவார். பிரமோத் குமார் சௌத்ரி, ஆர்.எஸ்.எஸ்., பாரதீய கிசான் சங்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஆவார். ஷேட்காரி அமைப்புடன் தொடர்புடைய குன்வந்த் பாட்டீல், உலக வர்த்தக அமைப்பின் வழக்கறிஞர் மற்றும் சுதந்திர பாரத் பக்ஷ் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார். குனி பிரகாஷ் விவசாயிகள் இயக்கத்தை எதிர்ப்பதில் முன்னோடியாக இருந்தவர். இந்த ஐந்து பேரும் விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களுக்கும் ஆதரவாக வெளிப்படையாகப் பேசினார்கள் மற்றும் அவர்களில் பெரும்பாலோர் விவசாயிகள் இயக்கத்திற்கு எதிராக விஷத்தைக் கக்கி கொண்டிருப்பவர்கள்.

3. MSP குறித்து சட்டம் இயற்றுவது பற்றி இந்தக் குழுவின் நிகழ்ச்சி நிரலில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதாவது இந்த MSP பிரச்சினை, குழுவின் முன் வைக்கப்படாது. ஏற்கனவே அரசாங்கத்தால் முடிவு செய்யப்பட்டுள்ள சில விடயங்கள், இந்தக் குழுவின் நிகழ்ச்சி நிரலில் வைக்கப்பட்டுள்ளன. வேளாண் சந்தை சீர்திருத்தங்கள் என்ற பெயரில், மூன்று கறுப்புச் சட்டங்களை மீண்டும் கொண்டு வருவதற்கு அரசாங்கம் முயற்சிக்கக்கூடிய ஒரு விடயம் செருகப்பட்டுள்ளது.

இந்த உண்மைகளின் பின்னணியில், சம்யுக்தா கிசான் மோர்ச்சா தனது பிரதிநிதிகளை இந்தக் குழுவிற்கு அனுப்புவதற்கு எந்த நியாயமும் இல்லை. விவசாயிகளின் விளைச்சலுக்கு நியாயமான விலையை உறுதி செய்வதற்கானச் சட்டப்பூர்வ உத்தரவாதமான MSPக்கான போராட்டம் தொடரும்.

அறிக்கையை வழங்கியவர்

டாக்டர். தர்ஷன் பால், ஹன்னன் மொல்லா, ஜோகிந்தர் சிங் உக்ரஹான், யுத்வீர் சிங், யோகேந்திர யாதவ்.

சம்யுக்த கிசான் மோர்ச்சா

மின்னஞ்சல்: samyuktkisanmorcha@gmail.com

வெளியீடு : ஐக்கிய விவசாயிகள் முன்னணி தமிழ்நாடு.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here