லித் பெண் ஒருவர் தாக்கப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த கொடூரம் நடந்தது கர்நாடகாவின் கொப்பல்  மாவட்டம். அந்த வீடியோவில், ஒரு நபர் அந்த பெண்ணை மோசமாக அடிக்கிறார். அந்தப் பெண்ணை செருப்பால் அடித்ததோடு, சாதிவெறி வார்த்தைகளாலும் அழைப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் பிப்ரவரி 3-ம் தேதி நடந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொப்பல் மாவட்டம் கனகிரி தாலுகாவில் உள்ள ராம்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அம்ரீஷ் குமார் என்ற ஆணின் வயலுக்குள் ஒரு தலித் பெண்ணின் பசு நுழைந்ததால் தான் இந்த கொடூரம் நடந்துள்ளது.

தலித் சமூகத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் சோபம்மா. தாக்குதல் நடத்திய அம்ரீஷ் கும்பர் என்பவன்  ‘உயர்சாதி’ சமூகத்தை சேர்ந்தவனாம். சோபம்மாவின்  பசு வயலுக்குள் நுழைந்துள்ளது,  அதனை ஓட்டி வரச் சென்ற சோபம்மாவைத் தான் சாதி வெறி தலைக்கேறிய அம்ரீஷ்குமார் முதலில் செருப்பால் அடித்துள்ளான். பின்னர் அவரின் சாதியை குறிப்பிட்டு தகாத வார்த்தைகளால் தாக்கியுள்ளான். அவரை வீட்டிற்கு வெளியே உள்ள கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்துள்ளனர், அவனை சேர்ந்த சாதிவெறி கும்பல்.

சாதிவெறியனால் தாக்கப்படும் சோபம்மா

அம்ரீஷ் குமார் பல ஆண்டுகளாக இதைச் செய்து வருவதாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்,இது அவனைப் பொறுத்தவரையில்  ‘சகஜமான’ விசயம்.  இதையடுத்து அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தை அடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கனகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால், அந்த நபர் கைது செய்யப்பட்டது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

தலித் பெண் தாக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலித் சமூகத்துடன் தொடர்புடைய அமைப்புகள் கோரி வருகின்றன.

கர்நாடகாவில் கடந்த ஒரு வருடமாக மத மோதல்களும், சாதிவெறி தாக்குதல்களும் அரங்கேறி வருவதை பார்க்க முடிகிறது. பாஜக,  காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து மக்களிடம் பிரிவினைவாத அரசியலை செய்து வருகிறது.  இது சாதியவாதிகளுக்கு சாதகமாகவும் உள்ளது.

தனக்கு ஒரு பிரச்சினை என்றால்,   “இந்துக்களே ஒன்று சேருங்கள்!”   என்று சமூக பதற்றத்தை  உண்டாக்கும் பார்ப்பனிய கும்பல், தலித் சமூகத்தினர் மீதான தாக்குதல் நடக்கும் போதெல்லாம் வேடிக்கை பார்க்கிறது. அவர்களை பொறுத்தமட்டில் சூத்திரர்களை அதாவது தலித் மக்களை இந்துக்களாகவே கருதுவதில்லை.

இந்தியாவை ஆளும் ஆர்.எஸ்.எஸ், பாஜக கும்பலும் தலித் மக்களை கலவரம் செய்வதற்கு அடியாட்களாக மட்டுமே பயன்படுத்தி வருகிறது. தலித் சமூகத்தை சேர்ந்த சில தலைவர்களும்  பாஜகவை அண்டிப் பிழைக்க, பணம் சம்பாதிக்க தலித் சமூகத்தையே அடகு வைக்கிறார்கள். இது போன்ற தலித் மக்களின் மீதான தாக்குதல்களையும் கேள்விக் கேட்பதில்லை. மாறாக மடைமாற்றவே பார்க்கிறார்கள்.

பிஜேபி ஆளுகின்ற மத்தியப்பிரதேசம், உத்திரபிரதேசங்களில் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் கட்டற்று நடந்து வருகிறது. குறிப்பாக உத்திரபிரதேசத்தில் நடந்த உன்னாவ்  பாலியல் வல்லுறவு  வழக்கில் பாஜகவின் எம்.எல்.ஏ கைதும், ஹத்ராஸ் பாலியல் கொலையும்  இதற்கு உதாரணங்கள். ஒருபுறம் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடரும் போதே, தலித் மக்களின் மீதான தாக்குதல்களையும் நடத்துகிறது பாஜக.

இதையும் படியுங்கள்:மனுதர்மத்தின் ஆட்சியும், பாலியல் கொலை குற்றவாளிகள் விடுதலையும்!

நாங்கள் தலித் மக்களுக்கும், பழங்குடி மக்களுக்கும்  சமூகத்தில் அங்கீகாரம் அளிக்கிறோம் எனக் கூறும் பாஜக, பாருங்கள் நாட்டின் உயரிய பதவியான குடியரசுத் தலைவர் பதவியிலேயே பழங்குடி சமூகத்தை சேர்ந்த பெண்ணைத் தான் அமர வைத்துள்ளோம் என்று ஓட்டு பிச்சை எடுக்கிறார்கள். உண்மை தான், இந்தியாவின் குடியரசுத் தலைவர் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர் தான். ஆனால் அவரது சித்தாந்தம், ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம்ஆயிற்றே! இவர் என்றாவது தலித், பழங்குடி மக்கள் மீதான தாக்குதலுக்கு குரல் கொடுத்திருக்கிறாரா? இல்லையே!.

முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கோவிலுக்குள் நுழைந்து விட்டார் என்பதற்காக தீட்டு கழித்து யாகம் வளர்த்தது பார்ப்பன கும்பல். இது பற்றி வாயைக் கூடத் திறக்கவில்லை, இந்திய பிரதமர் மோடி! இவர்கள் இந்த அளவுக்கு தான் பழங்குடி, தலித் மக்களை நடத்தும் விதம்.

கர்நாடகாவில் மட்டும் இந்த சம்பவம் நடக்கவில்லை. இந்தியா முழுவதும் இது நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. தமிழ்நாட்டில்கூட தலித் இளைஞனை ஆதிக்க சாதியை சேர்ந்த திமுகக்காரர் தகாத வார்த்தைகளில் பேசியதும் அது சமூக வலைத்தளங்களில் வைரலானதும் நடந்தது.

இந்தியா முழுவதும் பரவியிருக்கும் பார்ப்பனிய சாதிவெறி மனநோய் ஒடுக்கப்படும் மக்கள் மீது தாக்குதல் தொடுக்கிறது. இந்த நோய்க்கு வலுசேர்க்கும் வேலையை ஆர்.எஸ்.எஸ் – பாஜக காவி கும்பல் செய்கிறது. இந்த கும்பல் வாழ இந்த நோய் தேவைப்படுகிறது. பாஜகவில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களே சிந்தியுங்கள்!  இந்த நோயை ஒழிக்காமல் ஒடுக்கப்பட்டவர்களுக்கு விடுதலை இல்லை.

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here