டந்த 2022 மே மாதத்தில் 4 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி வகிதம் ஓராண்டுக்குள் 2.5 சதவீதமாக உயர்த்தப்பட்டு 6.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி வகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து ரெப்போ வட்டி விகிதம் 6.25 இல் இருந்து 6.5 சதவீதமாக உயர்ந்தது. இதனை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.

ரெப்போ வட்டி விகித உயர்வால் தனிநபர், வீடு, வாகன கடன்கள் வட்டி விகிதம் உயரக் கூடிய வாய்ப்புள்ளது. ரெப்போ வட்டியை தொடர்ச்சியாக 6வது முறையாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.

பணவீக்கம், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவே ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் விளக்கம் அளித்துள்ள அதேவேளையில், உலக பொருளாதாரம் அத்தனை கவலையளிக்கும் விதமாக தற்போது இல்லை. பணவீக்கமும் குறைந்து வருகிறது. 2023 -24 ஆம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.4 சதவீதமாக இருக்கும், உலக நாடுகள் பலவற்றின் பொருளாதார நிலை, கொந்தளிப்பாக இருக்கும் நிலையில், இந்திய பொருளாதாரம் நெகிழ்ச்சியுடன் இருக்கிறது. சில்லறை பணவீக்கம் நான்காவது காலாண்டில் 5.6 சதவீதமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இவர் கூறியுள்ள இரண்டு கூற்றுக்கும் பாரிய முரண்பாடு உள்ளது. அதாவது பணவீக்கம், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவே ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படுவதாக கூறும் சக்திகாந்த தாஸ் பணவீக்கம் குறைந்து வருவதாகவும் கூறுவது ஏற்புடையதாக இல்லை. இது மக்களை ஏமாற்றும் நடவடிக்கையே!

மிடில் கிளாஸ் மக்களின் தலையை மொட்டையடிக்கும் ரிசர்வ் வங்கி;

வீடு கட்டுவதற்காக வாங்கப்படும் கடன், இரண்டு சக்கர வாகனங்கள் வாங்குவதற்காக வாங்கப்படும் வாகனக் கடன், தனது திருமணத்திற்காகவோ, தங்கையின் திருமணத்திற்காகவோ, தாய் தந்தையின் மருத்துவ செலவிற்காகவோ வாங்கப்படும் தனிநபர் கடன் என அனைத்து கடன்களின் வட்டி விகிதங்களையும் உயர்த்தியுள்ளது. ஏற்கனவே கட்டி வந்த கடன் தொகையை விட அதிகமாக கட்ட வேண்டி இருப்பதால் அவர்களின் மாத செலவு அதிகரித்துள்ளது. இதனால் அவர்கள் ஒன்று கூடுதலாக உழைக்க வேண்டும் அல்லது அத்தியாவசிய தேவைகளை குறைத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே அதிகரித்துள்ள விலைவாசி, வேலையின்மை ஆகியவற்றால் அவதிப்பட்டு வரும் மக்கள் தலையில் மீண்டும் சுமையை கூட்டியுள்ளது ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி உயர்வு.

அதானிகளுக்கு சாமரம் வீசும் அரசு இயந்திரம்:

இந்தியாவின் பொருளாதாரம் இந்த அளவுக்கு சரிய முக்கிய காரணமே, கார்ப்பரேட் முதலாளிகள் தாங்கள் வாங்கிய கடன்களை திருப்பி கொடுக்காமல் பிராடுதனம் செய்தது தான். கடந்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி வராக்கடனை தள்ளுபடி செய்துள்ளதாக மத்திய அரசின் அறிக்கையே தெரிவித்துள்ளது. இது வராக்கடன் மக்களின் பணம்.

இதில் உழைக்கும் மக்கள் தங்களால் கட்ட முடியாத லட்சம் ரூபாய் கல்விக் கடனையோ, விவசாயக் கடனையோ வாராக்கடனாக தள்ளுபடி செய்யவில்லை. மாறாக கார்ப்பரேட்டுகள் வாங்கிய ஆயிரக்கணக்கான கோடிரூபாய்க்கான வராக்கடன்களை தான் தள்ளுபடி செய்துள்ளது.

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாவதற்கு முன்னால், உலகின் மூன்றாவது பணக்காரனாக இருந்த கௌதம் அதானியை எச்சரித்தது credit sights என்ற நிறுவனம். “அதானி குழுமத்தின் பெருகி வரும் விரிவாக்க ஆர்வத்தை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம். அது பெரும்பாலும் கடனில் இருக்கிறது” என்ற ‘அதிர்ச்சி’ தகவலை வெளியிட்டது. அது அந்த நிறுவனத்திற்கு தான் ‘அதிர்ச்சி’. நமக்கல்ல, இது நாமறிந்ததே!

இதையும் படியுங்கள்: அதானியின் எழுச்சி! இந்திய மக்களுக்கு வீழ்ச்சி!!

2016 ஆம் ஆண்டிலேயே அதானி குழுமத்திற்கு 1 லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்தது. அது கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச்சில் 2 லட்சத்தி 20 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு புதிய நிறுவனங்களை வாங்கும் போதும், பிற நிறுவனங்களை வாங்கி தன் குழுமத்தில் இணைக்கும் போதும், அதனை கடன் வாங்கியே, அதானி குழுமம் செய்துள்ளது.

அம்பானியும் கடனில் தான் உள்ளார். அவரின் கடன் அதானியின் கடனை விட அதிகம். அதாவது 3 லட்சம் கோடி. அதானியை விட 70 ஆயிரம் கோடி அதிகமாக கடன் வாங்கியுள்ளார். அதானிக்கும், அம்பானிக்குமான கடன் வித்தியாசம், மோடி 2014 ஆட்சிக்கு வந்த பிறகு இந்த குறுகிய காலத்தில் அதானிக்கு பெரும் கடன் அளிக்கப்பட்டுள்ளது.

அதானிக்கு பாசக்கயிறு! மக்களுக்கு தூக்கு கயிறு!

இந்த குறுகிய காலத்தில் அதானியின் 84,000 கோடி கடன் தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளது. இது அனைத்தும் வங்கிகளில் உள்ள மக்களின் சேமிப்பு பணமே! உங்களுக்கு நினைவிருக்கலாம் மதுரையை சேர்ந்த லெனின் என்ற மாணவன் தான் வாங்கிய கல்விக் கடனை கட்ட முடியாததால் எஸ்பிஐ வங்கி,ரிலையன்ஸ் மூலம் ‘கூலிப்படையை’ ஏவி மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டான். விவசாயி, வாங்கிய கடனை கட்டாததால் டிராக்டரை ஏற்றி கொன்ற சம்பவமும் இதே இந்தியாவில் தான் நடந்துள்ளது. இப்படி எத்தனை விவசாயிகள்?, பொதுமக்கள்? மிரட்டப்பட்டுள்ளார்கள்! கொல்லப்பட்டுள்ளார்கள்!

ஆனால் அம்பானி, அதானிகளின் நிலையோ வேறு! அதிகாரத்தில் வீற்றிருக்கும் இவர்களின் சேவகனோ, முதலாளியின் ஆணைக்கிணங்க இதுவரை கடந்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் கோடிகளை தள்ளுபடி செய்து அவர்களை பாதுகாத்து வருகிறார்.

இப்போது உயர்த்தப்பட்டிருக்கும் ரெப்போ வட்டியும் அதன் மூலம் வரும் வருமானமும் அம்பானி, அதானிகளுக்கு படியளக்கவே! மாறாக மக்களுக்கு இதனால் எந்த பயனும் வரப்போவதில்லை.

பணவீக்கத்தை கட்டுப்படுத்த, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, பொருளாதாரத்தை பாதுகாக்க கார்ப்பரேட் கும்பல்களின் கடன்களையும், வாரக்கடன்களையும் வட்டியுடன் சேர்த்துப் பிடுங்க வக்கில்லாமல், ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியும், வரியை உயர்த்தியும் சாமனிய நடுத்தர மக்களின் வாழ்வை பறிக்கிறது இந்த அரசும், அதிகார மையமும். இந்தியாவில் வாங்கிய கடனை கட்டாமல் ஓடிப்போய் வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கும் முதலாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யாமல், இந்திய மக்களை வாழும் போதே கொல்கிறது இந்த பாசிச அரசு!

அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் தரகு முதலாளி கும்பல் வாழ நாம் ஏன் வட்டிக் கட்டி அழ வேண்டும். நம் மக்களின் சேமிப்பு பணத்தில் கடனை வாங்கி வட்டி கட்டாமல் ஏமாற்றி பிழைக்கும் இந்த கும்பலின் சொத்துக்களை பறிமுதல் செய்யச் சொல்லி போராடுவோம். இவர்களுக்கு சாமரம் வீசும், மக்களை போராடவிடாமல் பிரித்தாளும் காவி பாசிச கும்பலை அதிகாரத்தில் இருந்து தூக்கியெறிவோம்!

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here