தலையங்கம்


அரசியலமைப்பை பாதுகாப்பது அம்பேத்கரின் நோக்கத்துக்கு நியாயம் செய்யுமா?

டிசம்பர் 6 – 1956 இந்தியாவின் மிக முக்கியமான சமூக சீர்திருத்தவாதி, மாபெரும் அறிவுஜீவி டாக்டர் அம்பேத்கர் நிரந்தர ஓய்வெய்திய நாள்!

இந்த நாளில் பல கட்சிகளும், அமைப்புகளும், வழக்கறிஞர்களும் அம்பேத்கரின்  படத்துக்கும், சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்படி செலுத்தியவர்களில் பலரும் அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் என முழங்கினர். இதே அரசியலமைப்பை விதந்தோதி பிரதமர் மோடியும் கடந்த நவம்பர் 26 அரசியலமைப்பு தினத்தன்று “இளைஞர்கள் அரசியலமைப்பு சட்டத்தின் அருமையை புரிந்து கொள்ள வேண்டும்” என்று பேசினார்.

அவரது ஆர்.எஸ்.எஸ் முன்னோடிகள் இந்த அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த போது மனு தர்மம் போன்ற இந்த நாட்டிற்குரிய மரபுகளை இந்திய அரசியலமைப்பு சட்டம் கணக்கில் கொள்ளவில்லை என எதிர்த்தது உண்மை தான். பின்னாட்களில்  அதனை தங்கள் நோக்கங்களுக்கு பயன்படுத்த முடியும் என்பது அறிந்துகொண்டனர். அதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் அரசியலமைப்பு சட்டத்தில் பொதிந்து இருந்ததை கண்டு கொண்டனர்.

இதே அரசியலமைப்பு சட்டத்தை ‘முற்போக்காளர்களும்’ பயன்படுத்த வேண்டும் என்று கருதுகின்றனர். அவசரநிலை பாசிசம் கொண்டு வந்த  இந்திரா காந்தி ஆட்சி காலத்தில்  அரசியலமைப்பு சட்டத்தின் முகப்பில் சேர்க்கப்பட்ட மதசார்பின்மை, சோசலிசம்‌ ஆகிய சொற்களை பிடித்து தொங்குகின்றனர். மாநில உரிமை பேசுபவர்கள்‌ பலரோ இந்திய அரசியலமைப்பு சட்டம் கூட்டாட்சியை வலியுறுத்துவதாக கருதுகின்றனர். சாதி ஒழிப்புக்காக வேலை‌ செய்பவர்களோ அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டம் இயற்றுவதில் பங்காற்றினார்‌ எனபதற்காகவே அதனை பாதுகாக்க வேண்டும் எனக் கருதுகின்றனர்.

தேசிய இன உரிமை, சாதி ஒழிப்பு, மதசார்பின்மை ஆகிய மூன்று பிரச்சினைகளை மட்டும் எடுத்துக் கொண்டு ஆராய்ந்தாலே இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தன்மையை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.


இதையும் படியுங்கள்: அம்பேத்கர் விருதை முடக்கி விட்டு அவரின் சிலைக்கு மாலை அணிவிக்க வரும் கயவர்கள்!


அரசியைமைப்பின் முதல் பிரிவு, மாநிலங்களின் ஒன்றியம் என்று சொன்னாலும் அதற்கேற்ற வகையில் பிற பிரிவுகள் உள்ளனவா? தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமையோ, தனது மொழியை பாதுகாக்கும் உரிமையோ உள்ளதா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இயற்றும் சட்டத்தை கவர்னர் என்ற அதிகாரபீடம் தடுக்க முடிகிறதே. ‌இதுதான் இந்திய ஒன்றியத்தின் அவல நிலை.

மாநில மொழிகளை வளர்த்தெடுக்க என்ன‌ பிரிவு உள்ளது. இந்தியை தானே பரப்ப வேண்டும், முன்னேற்ற வேண்டும் என அரசியலமைப்பு சொல்கிறது. அதையே ஒன்றிய‌ அரசு தொடர்ந்து செய்கிறது.

தீண்டாமையை குற்றம் எனச் சொல்லும் அரசியலமைப்பு அதற்கு அடிப்படையான‌ சாதியை ஒழிக்க வேண்டும் என எங்கெனும் வழிகாட்டுகிறதா? அனைத்தும் சாதியினரும் அர்ச்சகராவது சட்டப்பூர்வமாக 50 ஆண்டுகள் தடுக்கப்பட்டுள்ளதே.

அம்பேத்கரின் நினைவு நாளான அதே டிசம்பர் 6 யில் தொன்மை வாய்ந்த பாபர்‌ மசூதி சங்கி கும்பலால் இடிக்கப்பட்டு,  அந்த இடத்தில் சட்டப்பூர்வமாகவே ராமர் கோயில் கட்டப்படுகிறது.  காசி, மதுரா என அடுத்தடுத்த மசூதிகளுக்கு சங்கிகள் படையெடுக்கின்றனர். இதனை தடுக்க அரசியலமைப்பின் முகப்பில் மதசார்பின்மை சொல் அலங்காரம் போதாது.

இந்த அம்சங்களை தாண்டி பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த நிலப் பகிர்வு குறித்து  அரசியலமைப்பு சட்டத்தில் என்ன உள்ளது?

இதற்கெல்லாம் மேலாக, 2014 ஆம் ஆண்டு மோடி தலைமையில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அரசு கட்டமைப்பை பாசிசமயப்படுத்தும் வேலையை இந்த‌ அரசியலமைப்பு வைத்துக் கொண்டே நடத்தி வருகிறது.

மாநில உரிமை பறிப்பு, சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கை, விவசாயிகள், தொழிலாளர்கள் வாழ்வை சூறையாடுவது என மேலும் தீவிரமாக நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 104 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. அவற்றில் சில மக்கள் போராடி பெற்றவை; மற்றவை, ஆளும் வர்க்கங்கள் தனது தேவைக்கேற்ற வகையில் செய்து கொண்டவை. இத்தகைய அரசியலமைப்புச் சட்டத்தை என்ன செய்வது? அதற்கும் அம்பேத்கர் வழிகாட்டுகிறார்.

“இந்திய அரசமைப்புச் சட்டம் நிறைவேறிய பின்னர், அரசியல் உத்தியாகக் கூட எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தக்கூடாது என்று தன்னுடைய தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். கோரிக்கைகளை நிறை வேற்றிக் கொள்ள அரசமைப்பு வழங்கியுள்ள சட்ட நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கூறினார். ஆனால், மிக விரைவிலேயே இந்த அரசமைப்புச் சட்டம் யாருக்கும் பயன் தராது என்று வெளிப்படையாக அறிவித்தார். “அரசமைப்புச் சட்டத்தை எழுதுவதில் நான் ஒரு வாடகைக்காரன் போல் பயன்படுத்தப்பட்டேன். இதை எரிக்கின்ற முதல் ஆளாக நான் இருப்பேன்” என்று 2-9-1953 இல், மாநிலங்கள் அவையில், முழங்கினார். (ஆனந்த் டெல்டும்டே, EPW)

இறுதியாக, சுதந்திரம், சமத்துவம், சகோதரதத்துவம் என்ற ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கைகளுக்காகவே தன் வாழ்நாள் முழுதும் போராடினார். அதற்கு எதிராக இருந்த‌ புராணங்களை, சாத்திரங்களை தோலுரித்தார்; சாதியை உயர்த்திப் பிடிக்கும் மனு தர்மத்தை கொளுத்தினார்;  தீண்டாமைக்கு எதிராக குளத்தில் நீரெடுத்தார்; சாதியை ஒழிக்க அதன் வேர்களை தேடினார்; மதமாற்றம் மூலம் தீர்வு  காண முயற்சித்தார். அரசியலமைப்புச் சட்டம் மூலம் தீர்வு காண முயற்சித்தார். அனுபவங்களில் இருந்து கற்றறிந்தார்; தயக்கமில்லாமல் மாற்றிக்கொண்டார்.

தான் முன்னகர்த்தி கொண்டு வந்த ஜனநாயகத் தேரை முன்னோக்கி இழுத்த செல்ல கூறினார். ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பலோ அதை பின்னோக்கி நகர்த்துகிறது. நாம் முன்னோக்கி இழுப்பதன்‌ அதனை எதிர்கொள்ள முடியும்; அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பது என தேங்கி நிற்பதன் மூலம் அது சாத்தியப்படாது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here