ந்துத்துவத்தின் சோதனைச் சாலையாக கருதப்படுகின்ற குஜராத் மாநிலத்தில் காங்கிரசை முற்றாக ஒழித்துக் கட்டும் இலக்கு வைத்து களமிறங்கியுள்ளது ஆர் எஸ் எஸ்.

இந்த முறை அவர்கள் கையில் எடுத்திருக்கும் துருப்புச் சீட்டு ஆம் ஆத்மி கட்சி. பஞ்சாபில் ஆட்சி அதிகாரத்திலிருந்து காங்கிரசை விரட்டிய அதே பார்முலாவை குஜராத்தில் கடைபிடிக்க ஆர்எஸ்எஸ்-பாஜக தயாராகிவிட்டது என்பதை ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் பேச்சு நிரூபிக்கிறது.

குஜராத் மாநிலத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள கெஜ்ரிவால் அங்கு எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை முற்றாக துடைத்தெறிய வேண்டும் என்று மக்களிடம் பிரச்சாரம் செய்துள்ளார்.

பாஜகவிற்கு வாக்களிக்க விரும்பாதவர்கள் மற்றும் காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்க விரும்புகிறவர்கள் அனைவரும் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

அது மட்டுமன்றி, காங்கிரஸ் கட்சிக்கு நீங்கள் ஓட்டு போட்டு எம்எல்ஏக்களை தேர்ந்தெடுத்தாலும், அந்த கட்சியில் இருந்து விலகி ஓடி விடுவார்கள். நீங்கள் போட்ட ஓட்டு வீணாகிவிடும். அப்படி தான் சென்ற தேர்தலில் நீங்கள் தேர்வு செய்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 57 பேர் காங்கிரஸ் கட்சியை விட்டு ஓடி விட்டனர். எனவே ஆம் ஆத்மி கட்சியை நம்பி எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று பிரச்சாரம் செய்துள்ளார்.

ஊழல் ஒழிப்பு, தேசிய மாற்று, சாமான்ய மனிதன் கட்சி என்றெல்லாம் கதையளந்து கொண்டு என்ஜிஓக்கள் மற்றும் பாஜகவின் பினாமி கும்பலாக செயல்பட்டு வரும் ஆம் ஆத்மி திடீரென்று மக்கள் மத்தியில் வளர்ந்து வருவதற்கு என்ன காரணம்?

ஆளும் வர்க்கக் கட்சிகளுக்கு மாற்றாக, ஜனநாயக இயக்கங்களோ அல்லது புரட்சிகர அமைப்புகளோ வளர்ந்து விடக்கூடாது என்பதை ஆளும்வர்க்க சித்தாந்தவாதிகளான சிந்தனை குழாம்கள் (think tanks) முன்கூட்டியே யோசிக்கின்றனர்.

குஜராத் மாநிலமோ அல்லது வேறு எந்த மாநிலமாக இருந்தாலும், ஆட்சி செய்கின்ற அரசின் மீது ஏற்படுகின்ற அவநம்பிக்கை மற்றும் கோபம், அவர்கள் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக செய்கின்ற வளர்ச்சி திட்டங்களினால் பாதிப்படைகின்ற மக்களின் எதிர்ப்பு போன்ற அனைத்தையும் அறுவடை செய்கின்ற வகையில் ஆளும் வர்க்கத்தின் முகாம்களுக்கு உள்ளேயே பதிலிகளை (proxy), அதாவது பினாமிகளை (B டீம்களை) உருவாக்கி மக்கள் மத்தியில் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுகிறார்கள்.

படிக்க

குறிப்பாக, ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் முதலில் உருவானபோது அதன் தலைவர்களில் ஒருவராக இருந்த யோகேந்திர யாதவ் முன்வைத்த மாற்று திட்டங்கள் அனைத்தும் கார்ப்பரேட்டுகளுக்கு நெருக்கடி கொடுக்கும் என்பதை உணர்ந்த கெஜ்ரிவால் அவரைக் கட்சியை விட்டு நீக்கினார்.

அதுமட்டுமின்றி குறுகிய காலத்தில் பல்வேறு மாநிலங்களில் வேலை செய்வதற்கு ஆம் ஆத்மி கட்சிக்கு என்ன அடிப்படை உள்ளது. பாஜக எதிர்ப்பு என்ற பெயரில் அவர்களுக்கு விசுவாசமாகவும், எதிர்ப்பு ஓட்டு களை பிரித்து பாஜகவின் வெற்றி உறுதிப்படுத்தவும் ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் செயல்படுகின்றன.

அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேல் செயல்படுகின்ற பிராந்திய கட்சிகள் ஒன்றிரண்டு மாநிலங்களை தாண்ட முடியாத போது ஆம் ஆத்மியின் திடீர் வளர்ச்சி அவர்களின் பின்னணியின் மீது வலுவான சந்தேகத்தை எழுப்புகிறது.

தற்போது குஜராத் பிரச்சாரத்தில் அங்கும், மத்தியிலும் ஆளுகின்ற பாரதிய ஜனதா கட்சியை விமர்சித்து பேசுவதைக் காட்டிலும் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசியுள்ளது அவர்களின் பின்னணி மீது உள்ள சந்தேகத்தை உறுதி செய்கிறது.

பாரதிய ஜனதா கட்சியை பல்வேறு கட்சிகளில் ஒன்று, பிற அரசியல் கட்சிகள் போல அதுவும் ஒன்று என்று கருதிக் கொண்டு காங்கிரசு அல்லது இடதுசாரிகள், பிராந்திய கட்சிகளுக்கு இணை வைத்து பேசுகிறவர்கள் அனைவரும் ஒருவகையில் பாஜகவின் நிகழ்ச்சிநிரலுக்கு (Agenda) ஒத்துப் போகிறார்கள்.

அவர்களை நேரடியாக பாஜக பணம் கொடுத்து உருவாக்கினாலும் சரி! அல்லது பாஜகவின் நிகழ்ச்சி நிரலை இவர்கள் ஒத்துப்போனாலும் சரி! விளைவு ஒன்றுதான்.

2016 தமிழக தேர்தலில் திமுக வெற்றி பெறுவதை தடுப்பதற்கு மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் ஐந்தாம் படை ஒன்று உருவானது. இதன் மூலம் அதிமுகவிற்கு எதிரான வாக்குகள் சிதறுண்டு, திமுகவின் வெற்றியை கேள்விக்கு உள்ளாக்கியது. தற்போது வரை தமிழகத்தில் திமுக வெற்றி பெற்று விடக்கூடாது, ஆட்சியில் நீடிக்கக் கூடாது என்பதுதான் பாரதிய ஜனதா கட்சியின் ஒரே நோக்கமாக உள்ளது.

மக்கள் நலக் கூட்டணி போன்ற அமைப்புகள் செய்கின்ற அதே பாணி வேலையை தான் தற்போது ஆம் ஆத்மி செய்து வருகிறது.

பாஜகவின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளின் மீதும், ராமராஜ்ஜியம் என்ற பெயரில் நடத்துகின்ற பார்ப்பன பயங்கரவாத ஆட்சியின் மீதும் கோபம் கொள்கின்ற மக்களை சரியான மாற்று நோக்கி செல்லவிடாமல் தடுக்கின்ற சதித்தனத்தில் இது போன்ற பினாமி கட்சிகள் செயல்படுகின்றன.

நாட்டின் உண்மையான பொருளாதார, அரசியல் பிரச்சினையை மக்கள் புரிந்து கொண்டு விட்டால் ஆளும் வர்க்கக் கட்சிகள் மட்டுமின்றி பினாமிகளும் தூக்கி எறியப்படுவார்கள் என்பது திண்ணம்.

  • சண்.வீரபாண்டியன்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here