ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சிபிஐ வழக்கு விசாரணை:
நீதிமன்றத்தில் இன்று (01.06.22) நடந்தது என்ன?

மதுரை தலைமை குற்றவியல் நீதி மன்றத்தில் மூன்று கட்டங்களாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

சி.பி.ஐ ஆல் இந்த வழக்கில் மொத்தம் 101 நபர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள். இவர்களில் முதலாவதாக தாக்கல் செய்யப்பட்ட குற்ற அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட 27 நபர்கள் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜராகி கொண்டு வருகிறார்கள்.

தற்போது 2வது, 3வதாக தாக்கல் செய்யப்பட்ட குற்ற அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட 74 நபர்களில் 71 நபர்களுக்கு சம்மன் சார்வு செய்யப்பட்டு 64 நபர்கள் இன்று ஆஜராகியுள்ளனர். ஆயிரக்கணக்கில் கலந்து கொண்ட பொது மக்களில் 101 நபர்கள் சட்டவிரோதமாக ஒன்று கூடி பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினார்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மக்களை சுட்டது யார்? அவர்களுக்கு என்ன தண்டனை? என்ற கேள்விக்கு சி.பி.ஐ அறிக்கையில் பதில் இல்லை.

நீதிபதியவர்கள் இறுதி குற்றப் பத்திரிக்கைத் தான் இதுவா? என்றார். அதற்கு சி.பி.ஐ தரப்பில் முழு புலன் விசாரணையும் முடித்துவிட்டதாகவும், இது தான் இறுதி குற்றப்பத்திரிக்கை என்றும் கூறினர்.

காலை 6.00 மணிக்கே தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வேன் மற்றும் காரில் கிளம்பிச் சென்றோம். ஒருவரை ஒருவர் பார்த்ததில் மகிழ்ச்சியை பகிர்ந்து நலம் விசாரித்தனர். இந்த வழக்கை சந்திப்பதில் பெருமை தான் எனவும், இது போல எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் தூத்துக்குடி மண்ணுக்காக துணிவுடன் ஏற்றுக்கொள்வோம் என்றும் தெரிவித்தனர். வாகன, சாப்பாடு செலவுகளை அவர்களுக்குள்ளாக பகிர்ந்து கொண்டனர். நமது மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த பெண்களும் மதுரை நீதிமன்றத்திற்கு உடன் வந்திருந்தனர். அவர்கள் கேனில் டீ தயாரித்து வந்து பயணத்தில் அனைவருக்கும் பரிமாறினர்.

நமது கூட்டமைப்பின் வழக்கறிஞர் குழு வழக்கறிஞர் கட்டணம் இல்லாமல்
இந்த வழக்கை நடத்துகிறது.

போலீஸை காப்பாற்றும், மோசடியான சி.பி.ஐ குற்ற அறிக்கையை கண்டித்து நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலையிட வேண்டும். துப்பாக்கிச் சூட்டை விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும், நீதிமன்ற கண்காணிப்பில் மறு விசாரணை நடத்தப்பட வேண்டும், இதற்காக உயர் நீதிமன்றத்தை நாடுவது குறித்து அனைத்து வழக்கறிஞர்களுடனும் கலந்து பேசி முடிவெடுக்கப்படும், என்று நமது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கொல்லப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here