மெரிக்காவின் ஏகாதிபத்திய நடவடிக்கைகளால் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில், மோடி அரசு காட்டும் மென்மையான அணுகுமுறை மற்றும் அதன் பின்னணியில் உள்ள  ஏகாதிபத்திய அடிமைத்தனம் இந்திய மக்களை அவமானம் கொள்ள வைத்துள்ளது.

கடந்த சில தினங்களாக ஓமன் வளைகுடா பகுதியில் அமெரிக்கா நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள், சர்வதேசக் கடற்பரப்பில் அந்த நாட்டின் எதேச்சதிகாரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அதை மறைக்க இந்த தாக்குதலுக்குக் காரணம் ஈரான் என திசைமாற்றப் பார்த்தது.‌அதை ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது.

MT செட்டபெல்லோ (MT Settebello) என்ற வணிக கப்பலின் மீது கடந்த புதன்கிழமை(10.06.2026) அன்று அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர். அமெரிக்கா இக்கப்பலை ‘துல்லியமான ஆயுதங்களைக்’ (precision munitions) கொண்டு தாக்கியதாகக் கூறுகிறது.

MT மாரிவெக்ஸ் (MT Marivex): ஜூன் 8 அன்று 24 இந்திய மாலுமிகள் இருந்த இந்தக் கப்பல் மீது அமெரிக்காவின் F-18 சூப்பர் ஹார்னெட் போர் விமானம் தாக்குதல் நடத்தியது.

MT ஜல்வீர் (MT Jalveer): வியாழக்கிழமை அன்று 20 இந்தியர்களுடன் சென்ற இந்தக் கப்பல் மீது அமெரிக்கா இரண்டு ‘ஹெல்பயர்’ ஏவுகணைகளை ஏவியது.

அமெரிக்காவின் மத்திய கட்டளை மையம் (CENTCOM), தான் ஒரு உலகப் போலீஸ்காரரைப் போலச் செயல்பட்டு, ஈரான் மீதான அதன் தடையை மீறியதாகக் கூறி இத்தாக்குதல்களை நடத்தியுள்ளது.

மோடி அரசின்அடிமைத்தனமானமௌனம்

இந்தியக் குடிமக்கள் மூன்று பேர் ஒரு “நட்பு நாட்டு” ராணுவத்தால் கொல்லப்பட்ட பிறகும், இந்திய அரசின் எதிர்வினை வெறும் சடங்கு ரீதியிலானதாகவே உள்ளது:

வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்தத் தாக்குதல்களைக் கண்டித்துள்ளதோடு, அமெரிக்கத் தூதரக அதிகாரியை அழைத்துத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. ஆனால், அமெரிக்கா  இந்திய குடிமக்களைக் கொன்ற பிறகு காட்ட வேண்டிய ஆவேசமோ அல்லது கடுமையான பொருளாதார, தூதரக நடவடிக்கைகளோ இதில் காணப்படவில்லை.

படிக்க:

 அமெரிக்காவின் மேலாதிக்க போர்வெறி: பற்றியெரியும் நாடுகள்! அணையும் அடுப்புகள்!

♦ Iris Dena மூழ்கடிக்கப்பட்டதும் மோடி அரசின் மௌனமும்!

அமெரிக்கா இத்தாக்குதல்களை நடத்தும் முன் இந்தியாவிற்கோ அல்லது ஓமன் நாட்டுக்கோ எவ்விதத் தகவலும் தெரிவிக்கவில்லை. இந்திய மக்களின் உயிருக்கு ஆபத்து வரும் என்பதைத் தெரிந்தும் அமெரிக்கா தன்னிச்சையாகச் செயல்படுவது, இந்தியாவை தனது அடிமை நாடாக நடத்துவதையே காட்டுகிறது.

வல்லுநர்கள் கருத்துப்படி, அமெரிக்காவுடனான உறவில் விரிசல் ஏற்படும் என்றாலும், இந்தத் தாக்குதல்களால் இரு நாடுகளுக்கும் இடையிலான அடிப்படை உறவில் எந்த மாற்றமும் வராது என்று கூறப்படுகிறது. இது, மக்களின் உயிரை விட அமெரிக்காவுடனான ‘மூலோபாய உறவே’ (strategic partnership) முக்கியம் என மோடி அரசு கருதுவதை அம்பலப்படுத்துகிறது.

உயிரிழந்த குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதன் மூலம் தனது கடமை முடிந்துவிட்டதாக அரசு கருதுகிறது. ஆனால், உயிரிழப்பிற்கு காரணமான அமெரிக்காவை சர்வதேச அரங்கில் குற்றவாளியாக நிறுத்தத் தவறிவிட்டது. மக்களிடம் இருந்து எதிர்ப்பு வந்த பிறகு சடங்குக்கு ஒரு ‘கண்டனத்தைத்’ தெரிவித்துள்ளது.

2 நாட்களுக்கு முன்பு தொடர்ச்சியாக 4,399 நாட்கள் பிரதமர் பதவியில் பணியாற்றி இந்த ‘சாதனையை’ பிரதமர் மோடி படைத்துள்ளார்.. இதற்கு முன்பு முன்னாள் பிரதமர் நேரு, 4,398 நாட்கள் பணியாற்றியது சாதனையாக இருந்தது. இந்த சூழலில் ட்ரம்ப் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ‘நமது சாதனை பிரதமர்’ மோடி, “மதிப்பிற்குரிய டிரம்ப் அவர்களே, உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. இந்தியா-அமெரிக்கா இடையேயான விரிவான உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையை, நமது இரு நாடுகளுக்கும் உலகிற்கும் பயனளிக்கும் வகையில் மேலும் முன்னெடுத்துச் செல்ல உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்” என தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தியர்கள் மீதும் இந்தியாவின் வர்த்தக கப்பல்கள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறை. அப்படி இருக்கையில் அமெரிக்காவின் இந்த தாக்குதலை இதுவரை ஒன்றிய அமைச்சர்களோ அல்லது சாதனை பிரதமர் மோடியோ இதுவரை சிறு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. இப்படி இந்தியர்களை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்திற்கு பலி கொடுத்து தான், மேலாதிக்க வெறியன் ட்ரம்புடன் இணைந்து பணியாற்றப் போகிறீர்களா? இல்லை தன்னைவிட ட்ரம்ப் மோசமில்லை என்று மோடி கருதுகிறாரா?

அமெரிக்காவின் அத்துமீறிய தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் பலியான நிலையில், இன்று (13.06.2026) தொலைபேசி வாயிலாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர்,  “அனைத்து வணிகக் கப்பல்களும் அமெரிக்க உத்தரவுக்குக் கீழ்ப்படிய வேண்டும், மீறினால் சகித்துக் கொள்ள முடியாது” என அமைச்சர் ஜெய்சங்கரிடம் மார்கோ ரூபியோ திமிராக பேசியுள்ளார். இப்போதும் கூட ‘நான் உங்கள் அடிமை ஆலம்பனா’ என அமைதி காக்கிறார் மோடி.

எவ்வாறாயினும், இந்திய மாலுமிகள் 300,000 பேர் உலகளவில் கடற்பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், அமெரிக்கா போன்ற நாடுகளின் தன்னிச்சையான வன்முறையை எதிர்க்கத் தயங்குவது இந்திய அரசின் பலவீனத்தையே காட்டுகிறது..

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here