வல்லரசு அமெரிக்கா தொடர்ந்து தோற்பது ஏன்?

இஸ்லாமியர்களுக்குள் சகோதர யுத்தங்களை தூண்டி குளிர்காய எத்தணிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கடுமையாக எதிர்த்தனர். இதன் விளைவாக தான்வளர்த்த பின்லேடனை தானே போட்டு தள்ளும் நிலைக்கு வல்லரசான அமெரிக்கா சென்றது.

2

லக மேலாதிக்க வெறிபிடித்து அலையும் அமெரிக்க ஏகாதிபத்தியமானது, இரண்டாம் உலகப்போர் தொட்டு இன்றைய ஈரானுக்கு எதிரான போர் வரை எதிலும் முழுமையாக வெற்றி பெற முடியவில்லை; இனியும் கூட அப்படி வெற்றி பெற முடியப் போவதும் இல்லை. ஏன் இப்படி சொல்கிறோம் என்பதை சற்று விரிவாக பார்க்கலாம்.

அமெரிக்கா X ஆக்கிரமிப்புக்குள்ளாகும் நாடுகள்!

அமெரிக்கா ஒரு ஆக்கிரமிப்பாளனாகவும், பிற நாடுகள் அமெரிக்காவால் ஆக்கிரமிக்கப்படும் நாடுகளாகவும் களத்தில் மோதியுள்ளன.

ஆக்கிரமிக்கும் நாட்டின் படைகள் மட்டும் தான் யுத்தத்தில் நேரடியாக பங்கெடுக்கும். ஆனால் ஆக்கிரமிக்கப்படும் நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்களும் யுத்தத்திற்குள் தவிர்க்க முடியாதபடி இழுக்கப்படுவார்கள். அது அந்த நாட்டின் யுத்தமாக, அந்த நாட்டு மக்களின் யுத்தமாக படிப்படியாக விரிவடையும்.

எனவே தன் நாட்டிற்குத் தொடர்பு இல்லாத பிராந்தியங்களில் ஆயுத பலத்தைக் கொண்டு பலாத்காரமாக நுழைந்து ஆக்கிரமிக்க நினைக்கும் படையினரின் மனோ வலிமைக்கும், சொந்த நாட்டை, ஊரை காப்பாற்றியே ஆக வேண்டும் என்பதற்காக தற்காப்பு போரில் களமிறங்கும் ஆயுதப்படை மற்றும் மக்களுக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. இந்த வித்தியாசம் தான் மிகப்பெரும் வல்லரசான அமெரிக்காவை, ஆக்கிரமிப்பு போரில் வென்றாலும், அந்த நாட்டை அடக்கி ஆளவோ, போரின் பலன்களை முழுமையாக அனுபவிக்கவோ முடியாதபடி தொடர்ந்து தோல்விக்குள் தள்ளி வருகிறது. அப்படி அமெரிக்க ஏகாதிபத்தியமானது போரில் என்றும் தோல்வியை தழுவியுள்ள, அல்லது போரில் வெல்ல முடியாமல், உதைபட்டு பின் வாங்கிய வரலாறுகளை சுருக்கமாக பார்ப்போம்.

அமெரிக்க வியட்நாமிய யுத்தம் (1955-1975)!

அமெரிக்க-வியட்நாம் போர் (1955-1975) என்பது கம்யூனிச வடக்கு வியட்நாமுக்கும் (சோவியத்/சீன ஆதரவு) அமெரிக்க ஆதரவு பெற்ற தெற்கு வியட்நாமுக்கும் இடையே நடந்த பனிப்போர் கால மோதலாகும். கம்யூனிசப் பரவலைத் தடுக்க அமெரிக்கா நேரடியாகத் தலையிட்டு லட்சக்கணக்கான வீரர்களை அனுப்பியது, ஆனால், கொரில்லாத் தந்திரங்கள் மற்றும் உள்நாட்டு எதிர்ப்பால் 1973-ல் பின்வாங்கியது. 1975-ல் சைகோன் வீழ்ச்சியுடன் வியட்நாம் கம்யூனிசத்தின் கீழ் இணைந்தது.

20 ஆண்டுகாலம் அமெரிக்கா நேரடியாக தலையிட்டும் சின்னஞ்சிறு நாடான வியட்நாமின் வடக்கு பிராந்தியத்தை போரில் வெல்ல முடியவில்லை. ஏனென்றால், அமெரிக்க வீரர்கள் அந்நிய தேசத்தில் ஆக்கிரமிப்பாளர்களாக களம் கண்டனர். ஆனால், வியட்காங்குகளோ சொந்த மண்ணை மீட்டெடுத்தாக வேண்டும்; ஆக்கிரமிக்க விடாமல் தடுத்தாக வேண்டும் என்ற வகையில் துணிந்து களமிறங்கினர்.

ஆக்கமிப்பாளனான அமெரிக்க படைகளுக்கு எதிராக ஒட்டுமொத்த நாடே ஒன்றிணைந்து களம் கண்டது. அதனால்தான் அணுகுண்டை வீசி தனது பலத்தை நிரூபித்து காட்டிய அமெரிக்காவால், சின்னஞ்சிறு வியாட்நாமை வீழ்த்தவோ, விழுங்கவோ முடியவில்லை.

அமெரிக்க – ஆப்கானிஸ்தான் போர் (2001–2021)!

ஆப்கானிஸ்தானத்திற்குள் மேலாதிக்கம் செலுத்திய ரஷ்ய சமூக ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மறைமுகமாகவும், பின்னர் தலிபான்களுக்கு எதிராக பகிரங்கமாகவும் அமெரிக்கா களமாடியுள்ளது. ஆப்கானிஸ்தானை தமது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர தொடங்கப்பட்ட இது அமெரிக்காவின் மிக நீண்ட போராக (2001–2021) அமைந்தது. சோவியத் ரஷ்யாவின் செல்வாக்கின் கீழ் இருந்த ஆப்கானிஸ்தானை அடக்கி ஆள வேண்டும் என்று திட்டமிட்டு தாலிபான்களை அமெரிக்கா வளர்த்தது.

ரஷ்ய ஆதரவு அரசை அகற்றிவிட்டு தாலிபான்கள் தலைமையில் அரசமைந்தும் கூட அமெரிக்காவின் கனவு பலிக்கவில்லை. சுதாரித்துக் கொண்ட அவர்கள் இஸ்லாமிய நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போர்களை கண்டித்தனர்.

1996-ல் ஈராக் மற்றும் குவைத்துக்கு இடையிலான முதல் வளைகுடா போரைத் தூண்டிவிட்டு வழிநடத்திய சீனியர் புஷ்சை – அமெரிக்காவை எதிர்க்கவும் ஆரம்பித்தனர். இஸ்லாமியர்களுக்குள் சகோதர யுத்தங்களை தூண்டி குளிர்காய எத்தணிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கடுமையாக எதிர்த்தனர். இதன் விளைவாக தான்வளர்த்த பின்லேடனை தானே போட்டு தள்ளும் நிலைக்கு வல்லரசான அமெரிக்கா சென்றது.

ஆப்கானிஸ்தானுக்குள் நேரடியாக அமெரிக்க துருப்புகள் இறங்கி தாலிபான்களை ஓடவிட்டும் கூட, தனது பொம்மை ஆட்சியை நிறுவியும்கூட, அந்நாட்டில் நீடித்து நிற்கவோ, அந்நாட்டை தொடர்ந்து மேலாதிக்கம் செய்யவுவோ முடியாமல் அவமானகரமாக பின்வாங்கியது. பாகிஸ்தானுக்குள் அத்துமீறி நுழைந்து பின்லேடனை  தீர்த்துக்கட்டியும் கூட, அமெரிக்காவின் கனவு பலிக்கவில்லை. ஒட்டுமொத்த நாடும் எதிர்க்கும் நிலையில், தற்கொலைப்படை தாக்குதல்கள் தொடரும் நிலையில், ஆப்கானிஸ்தானத்திற்குள் தனது ராணுவப்படைகளை வைத்து பராமரிப்பதும் சாத்தியமாக இல்லை. எனவே தாலிபான்களிடமே ஆட்சியை ஒப்படைத்தது ஏகாதிபத்திய வல்லரசான அமெரிக்கா.

அந்நிய மண்ணில் அமெரிக்க துருப்புகள் அச்சத்துடன் தான் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தன. ஆனால் தாலிபான்களோ, அமெரிக்காவின் பகிரங்க ஆக்கிரமிப்பின் சாதகமான சூழலை பயன்படுத்தி மக்கள் ஆதரவுடன் எதிர் தாக்குதலில் இறங்கினர். எனவே மக்கள் ஆதரவுடன் களமாடிய தாலிபான்களின் கைக்கு அதிகாரம் சென்று சேர்ந்தது.

அமெரிக்க – ஈராக் போர் (2003–2011)! 

சதாம் உசேன் ஆட்சியை வீழ்த்த நடத்தப்பட்ட இந்தப் போர், ஒரு பெரிய ஆக்கிரமிப்பு நடவடிக்கையாக சர்வதேச அளவில் விமர்சிக்கப்பட்டது.

உலகின் மிகப் பழமையான நாகரிகத்திற்கு சொந்தக்காரர்களான ஈராக்கியர்களை அடக்கி ஆள வேண்டும்; அந்நாட்டின் எண்ணெய் வளங்களை கைப்பற்றி உறிஞ்சி கொழுக்க வேண்டும் என்ற வெறியுடன், சதாம் உசேனை வளர்த்து விட்டது அமெரிக்கா.

சதாம் உசேனை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தி தனது விருப்பம் போல் ஆட்டி படைக்கலாம் என்று அமெரிக்கா கண்ட கனவு பொய்த்து போனது. ஈராக்கிய எண்ணெய் வளங்களை அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு திறந்த விட மறுத்ததோடு மட்டுமில்லாமல், ஈராக்கின் எண்ணெய் ஏற்றுமதியை டாலரில் நடத்தாமல், அந்தந்த நாடுகளின் நாணயங்களுடன் வர்த்தகம் செய்ய சதாம் உசேன் முனைந்தார். அமெரிக்காவை மீறி வெனிசுலா உள்ளிட்ட நாடுகளோடு ஒரு எண்ணெய் கூட்டணியை உருவாக்கவும் முனைந்தார்.

வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக பதறிய அமெரிக்கா உடனடியாக சதாம் உசேன் ஆட்சிக்கு முடிவு கட்ட களம் இறங்கியது. சதாமின் ஈராக்கானது ரசாயன ஆயுதங்களை உற்பத்தி செய்து உலகத்தை அச்சுறுத்தலாக மாறுவதாக கதை அளந்தது. அதையே அடிப்படையாக வைத்து பகிரங்கமாக ஈராக்கிற்குள் நுழைந்து ஆக்கிரமித்தது. ஈராக்கின் தலைவரான சதாம் உசேனை தூக்கிலும் போட்டது. தலைவரை கொல்வது எளிதாக இருந்தது; ஆனால், அந்நாட்டை தொடர்ந்து அடக்கி ஆள்வதோ, சுரண்டுவதோ, அப்படி எளிதாக அமையவில்லை.

மக்கள் ஆதரவுடன் போராளி குழுக்கள் நடத்தி வரும் தாக்குதலை எதிர்கொண்டு நீடித்து நிற்க முடியாமல், ஆக்கிரமிப்பின் நோக்கம் முழுமை அடையாமல், மீண்டும் ஒரு பொம்மை ஆட்சியை உருவாக்கி, அதை ஆதரித்தபடி அவமானகரமாக தோற்றுப் பின் வாங்கியது.

தற்போதைய அமெரிக்க – ஈரானிய யுத்தம் (2026)!

“ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய பார்க்கிறது” என்ற பழியை போட்டு, கடந்த ஆண்டில் அந்நாட்டின் மலைகளின் மீது குண்டுகளை வீசிய அமெரிக்கா, நடப்பு ஆண்டில் (பிப்ரவரி 28 இல்) அந்நாட்டின் அதிஉயர் தலைவரான அயத்துல்லா கொமேனியை ஏவுகணைகளை வீசி படுகொலை செய்து, பகிரங்க போரை தொடங்கி விட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மொஜ்தபா காமேனி புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்; ஹார்மஸ் நீரிணையை முடக்கிப் போரையும் தொடர்கிறார்.

படிக்க:

 இந்தியாவின் துரோகத்தை புறந்தள்ளி இந்திய எண்ணெய் கப்பலை பாதுகாப்பாக அனுப்பும் ஈரான்!

 அமெரிக்கா ஏற்கனவே போரில் தோற்கடிக்கப்பட்டது! – பிரவீன் சாஹ்னி!

ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவு (Kharg Island) மீதான தாக்குதலில் அங்கிருந்த இராணுவ இலக்குகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானில் இனி அழிப்பதற்கு எதுவும் இல்லை என்கிறார் மறுநாளே இதனை அடக்குவதற்கு பிற நாடுகளும் போர்க்கப்பலை அனுப்ப வேண்டும் என்கிறார். NATO – வுக்கு எச்சரிக்கையும் விடுகிறார்.

ஈரானில் 3,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், இதில் 1,300-க்கும் அதிகமானோர் பொதுமக்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. 12 அமெரிக்க வீரர்கள் இந்தப் போரில் உயிரிழந்துள்ளனர் என்றது அமெரிக்கா. உண்மை இதைவிட மடங்குகளில் அதிகரித்திருக்கும்.

முந்தைய காலகட்டத்தை போல் இப்போரானது அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகள் சம்பந்தப்பட்டதாக மட்டும் இல்லாமல், அமெரிக்காவிற்கு ஆதரவு தந்து, அவர்களின் தாக்குதல்களுக்கு தளம் அமைக்க இடமும், உதவியும் செய்து இருக்கின்ற நாடுகளையும் நேரடியாகவே பாதித்துள்ளது. ஈரானின் கைக்கெட்டும் தூரத்தில் எங்கெல்லாம் அமெரிக்க ஏவுகணை தளங்களோ, விமான தளங்களோ, ரேடார்களோ இருக்கின்றனவோ அவை எல்லாம் ஈரானின் எதிர்த் தாக்குதல்களுக்கு இலக்காகின்றன. வளைகுடா பிராந்தியமே போர்ப்பதற்றத்தில் தவிக்கிறது.

இந்தப் போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஈரான் நாணயமான ரியால் (IRR) மதிப்பும் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதனால் இப்போருக்கு எதிராக குறிப்பாக உலக மேலாதிக்க வெறி பிடித்தலையும் அமெரிக்காவிற்கு எதிராக, உலக நாடுகளும், உலக நாட்டு மக்களும் கண்டன குரல்களை எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

இப்போரில் அமெரிக்கப் படைகள் நேரடியாக ஈரான் மண்ணிற்குள் நுழைய தயக்கம் காட்டி வருகின்றன. வியட்நாமில் எப்படி சுரங்கங்களை வெட்டி, கொரில்லா தாக்குதலில் அமெரிக்கப் படைகளை கதற அடித்தார்களோ, அதே போல் ஈரானிய படைகளும் சுரங்கங்களை அமைத்துள்ளன. சிறு சிறு குழுக்களாக சுயமாக வியூகம் வகுத்து தாக்குவதில் பயிற்சியையும் வலிமையையும் பெற்றுள்ளன.

இயற்கை அரணாக அமைந்துள்ள மலைகளையும், குன்றுகளையும் பயன்படுத்தி, குறுக்கும் நெடுக்குமாக சுரங்கங்களை வெட்டி, முழுமையாக அந்நிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போரை நடத்துகிறது ஈரான். அதாவது நீண்ட கால தயாரிப்புகளுடன் எதிர்வினையாற்றி வருகின்றன.

போரின் முடிவு என்னவாகும்? 

தன் நாட்டை காப்பதற்காக களம் காணும் போராளி குழுக்களுக்கு, ராணுவத்திற்கு, அந்நாட்டு மக்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும் என்பதால் கடந்த கால வரலாறு தான் மீண்டும் நிரூபிக்கப்படும். அதாவது அமெரிக்கா ஒரு நாட்டை அழிக்கும் வல்லமையை வேண்டுமானால் கொண்டிருக்கலாம். ஆனால், ஒரு நாட்டை பகிரங்கமாக காலனியாக்கி தொடர்ந்து அடக்கி ஆள்வது நடக்காத காரியம். பொம்மை ஆட்சி சிறிது காலம் தாக்குப் பிடிக்கும் தான். ஆனால் அந்நிய ராணுவம் நேரடியாக களத்தில் நிற்கும் வரை, அந்நிய நிறுவனங்கள் தனது நாட்டு வளங்களை தொடர்ந்து சூறையாடும் வரை, மக்களின் எதிர்ப்புணர்வும் கொழுந்து விட்டு எரிய செய்யும். இதன் விளைவாக நாட்டுப் பற்றாளர்களால் பொம்மை அரசு தூக்கியெறியவும் படும்.

ஏகாதிபத்தியங்கள் வெறும் காகிதப் புலிகள் தான் என்று கடந்த நூற்றாண்டில் வியட்காங்குகள் நிரூபித்தனர். நடப்பு நூற்றாண்டில் அத்தகைய வரலாற்றை உலக உழைக்கும் மக்களின் ஆதரவோடு ஈரானும் படைக்கட்டும்.

  • இளமாறன்.

2 COMMENTS

  1. ஈரான் வெல்லட்டும் நாம் அதற்கு துணை நிற்போம்…
    வரலாற்று ரீதியாக அமெரிக்கா கோழை என்பது நமக்கு நிரூபணம் ஆக்கி !

  2. காலம் முழுவதும் அமெரிக்கா ஏன் பல்வேறு நாடுகளால் செருப்படி பெறுகிறது என்பது குறித்தும், உலக மக்களால் காரி உமிழப் படுகிறது என்பது குறித்தும், இறுதி அடி தற்போது நடக்கும் அமெரிக்கா – இஸ்ரேல் Vs ஈரான் போரில்
    பெறப்போகும் பலத்த அடி அமையும் என்பது குறித்தும் கட்டுரையாளர் தோழர் இளமாறன் சிறப்பாகவே தோலுத்துள்ளார். பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here