“என் மனதில், உலகின் துணிச்சலான சிலரை ஆதரிப்பதை விட பெரிய மரியாதை எதுவும் இல்லை, மேலும் இந்த வீரர்களை ஆண்டுதோறும் கொண்டாடவும் ஆதரிக்கவும் அனுமதித்ததற்காக IDF நண்பர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். இந்த வீரமிக்க வீரர்கள் தனியாக இல்லை என்பதைக் காட்ட நாம் நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்”. என்று திருவாய் மலர்ந்துள்ள உத்தமர் யார் என்று தெரியுமா?
இஸ்ரேல் காசாவின் மீது நடந்து வருகின்ற இனப்படுகொலை மற்றும் முற்றிலுமாக பாலஸ்தீன மக்களை அவர்களின் வசிப்பிடங்களில் இருந்து துரத்தி அடிக்கின்ற கொடூரமான பயங்கரவாத நடவடிக்கையை ஊக்குவிக்கின்ற இந்த கொடூரனின் பெயர் லாரி எலிசன்(Oracle CEO) என்ற பன்னாட்டு முதலாளி தான்.
இவர் இஸ்ரேலின் பிரதமரான பாசிச நெதன்யாகுவின் நெருக்கமான நண்பர் என்பது மட்டுமின்றி அமெரிக்காவின் ட்ரம்ப்புக்கும் நெருக்கமான தொழிலதிபர் ஆவார்.
இவர் நடத்தி வருகின்ற ஆராக்கிள்(Oracle)என்ற மென்பொருள் நிறுவனம் உலகில் நான்காவது பெரிய மென்பொருள் நிறுவனமாகவும், உலக அளவில் மிகப் பெரிய பணக்காரர்களின் ஒருவராகவும் இந்த செல்வ சீமான் திகழ்ந்து வருகின்றார்.
பாலஸ்தீன மக்களை முற்றாக அழித்தொழித்து அதன் மீது உருவாக்கப்படும் கட்டடங்களையும், அங்கு உருவாக்கப் போகின்ற பல்வேறு விதமான புதிய நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட நாட்டை, அதாவது புதிய வகையான பாலஸ்தீனத்தை உருவாக்குவதற்கு ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு கூட்டணி ஒன்று சேர்ந்து பாலஸ்தீன மக்களை கொன்றொழித்து வருகிறது.
பலரும் எண்ணிக் கொண்டிருப்பதைப் போல ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய காரணத்தினால் தான் ஹமாஸ் இயக்கத்தினரை ஒழித்துக் கட்டுவதற்கு காசாவின் மீதும், பாலஸ்தீனத்தின் மீதும் தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகிறது என்பதெல்லாம் ஊடகங்களாலும், முதலாளித்துவ அறிஞர்களாலும் பரப்பப்படுகின்ற பொய்ச் செய்திகள் ஆகும்.
இஸ்ரேல் என்று உருவாக்கப்பட்ட யூத ஜியோனிச இன வெறி பிடித்த கும்பல் தங்களுக்கென்று ஒரு நாட்டை நிறுவிக் கொண்டு அதனை உலகின் முதல் பெரிய நாடாக வளர்ப்பதற்கு, அதாவது மத்திய கிழக்கு நாடுகளில் மிகப்பெரிய வல்லரசாக தன்னை நிலைநாட்டிக் கொள்வதற்கு அனைத்து விதமான கேடான நடவடிக்கைகளையும் செய்து கொண்டிருக்கின்ற ஒரு பயங்கரவாத பின்னணி கொண்ட நாடாகும் என்பது தான் உண்மையாகும்..
பாலஸ்தீனத்தை படிப்படியாக ஆக்கிரமித்து இஸ்ரேல் வளர்ந்தது போல தற்போது இறுதி கட்டத்தில் பாலஸ்தீன மக்களை கொன்றொழிப்பதற்கு அனைத்து வகையான தாக்குதல்களையும் நடத்தி வருகிறது என்பது உலகின் பல்வேறு நாட்டின் அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்ற சோகமான,, ஆனால் அவமானகரமான நிகழ்வாகும்.
அமெரிக்க பயங்கரவாதிகளும் குறிப்பாக அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேலின் பிரதமரான நெதன்யாகு உடன் நெருக்கமான தொடர்பு வைத்துள்ளார் என்பதுதான் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இந்த போரில் இதுவரை உலகம் அறிந்த அம்சமாக இருந்தது தற்போது ஆரக்கிள் நிறுவனத்தின் CEOவாக லாரி எலிசன் முன் வைத்துள்ள அறிக்கைகளின் படி இந்த போருக்கு பின்னணியாக இருப்பது இதுபோன்ற விரல் விட்டு எண்ணக்கூடிய பன்னாட்டு முதலாளிகள் தான் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
ஆரக்கிள் தொடங்கியது . உண்மையில், இது எலிசன் பணியாற்றிய 1970களின் CIA நடவடிக்கையான Project Oracle இன் பெயரிடப்பட்டது. சிறிது காலம், அமெரிக்க தேசிய பாதுகாப்பு அரசின் பிற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களைப் பெறத் தொடங்கும் வரை, CIA ஆரக்கிளின் ஒரே வாடிக்கையாளராக இருந்தது. இன்று, ஆரக்கிளின் வாடிக்கையாளர் தளம் மிகவும் பரந்ததாக இருந்தாலும், CIA இன் தனியார்மயமாக்கப்பட்ட முகமாக அதன் பங்கை அது பராமரிக்கிறது.
படிக்க: போர்களைத் தூண்டும் அமெரிக்காவின் அடாவடி, இஸ்ரேலின் போர்வெறி !
இருப்பினும், ஆரக்கிள் வாஷிங்டன் மற்றும் லாங்லிக்கு நெருக்கமாக இருந்தாலும், அது இஸ்ரேல் அரசுடன் இன்னும் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. ஒரு உறுதியான சியோனிஸ்ட், எலிசன் இஸ்ரேலின் அரசியல் திட்டத்தை முன்னேற்றுவதற்கு அயராது உழைத்துள்ளார். அவரது நெருங்கிய தனிப்பட்ட நண்பர்களில் பெஞ்சமின் நெதன்யாகுவும் ஒருவர், அவருடன் அவர் ஹவாயில் உள்ள தனது தனியார் தீவில் விடுமுறை கழித்தார். எலிசன் இஸ்ரேலிய பிரதமரின் மீது மிகவும் ஈர்க்கப்பட்டு நம்பிக்கையுடன் $450,000 சம்பளம் பணத்தை வழங்கினார்.
இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு அரசுடன் ஆரக்கிள் பல இலாபகரமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருந்தாலும், எலிசன் தானே இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுக்கு தனிப்பட்ட முறையில் நிதியுதவி அளித்து, இஸ்ரேலிய இராணுவத்திற்கான உபகரணங்களை வாங்கும் அமைப்பான ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் தி ஐடிஎஃப்-க்கு பல மில்லியன் டாலர்களை வழங்கினார்.எலிசன் விளக்கியது போல் இதில் “எங்கள் வீடு “ என்று அவர் அழைத்ததைப் பாதுகாக்கும் வீரர்களுக்கு ஒரு புதிய பயிற்சி வசதியை உருவாக்க $16.6 மில்லியன் உறுதிமொழி (குழு பெற்ற மிகப்பெரிய ஒற்றை நன்கொடை) அடங்கும்.
படிக்க: இஸ்ரேல் இனப்படுகொலைக்கு உதவிய மைக்ரோசாப்ட்! எதிர்த்து முழங்கிய அதன் ஊழியர்!
ஏகாதிபத்தியங்கள் நீடிக்கின்ற வரை போர் ஒருபோதும் ஓயப் போவதில்லை. எனவே இந்த அநீதியான போருக்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள பாட்டாளி வர்க்கம் எவ்வாறு அணி திரண்டு போராடி வருகிறதோ அதேபோல ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அரசாங்கத்தை நிர்ப்பந்தப்படுத்தி, இஸ்ரேலுடன் தாங்கள் வைத்திருக்கும் அனைத்து விதமான உறவுகளையும் வர்த்தக ஒப்பந்தங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடுவது அவசியமாக மாறி உள்ளது.
ஆராக்கில் நிறுவனத்தின் அதிபர் திருவாளர் லாரி எலிசன் தனது லாபவெறிக்காக பல லட்சம் மக்களை கொன்று ஒழிக்கின்ற பயங்கரவாத நடைமுறையை நாம் கண்ணெதிரே பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இன்னமும் முதலாளித்துவ சமூக அமைப்பு சரியானது என்று பேசிக் கொண்டிருக்கின்ற பல்வேறு வகையான முதலாளித்துவ அறிஞர்கள், முதலாளித்துவத்திற்கு எதிராக கம்யூனிசம் பரவி விடக்கூடாது என்பதை தடுத்து நிறுத்துகின்ற போலியான தாராளவாத ஜனநாயகவாதிகள் அனைவரும் லாரி எலிசன் போன்ற பல முதலாளிகளின் கொள்ளைக்கும், சூறையாடலுக்கும் உலகை அனுமதிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பம்.
அதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. கூடாது.
◾கணேசன்
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி






